Home

Monday 30 March 2015

பள்ளிக்கூடம்


முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் வாழ்ந்திருந்த ஊரோடு மறுபடியும் ஓர் உறவு துளிர்க்கும் என்று நினைத்ததே இல்லை. அப்பாவோ அம்மாவோ இருந்திருந்தால் என்னைவிட மிகவும் அதிகமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். என் மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளையுடைய குலதெய்வம் அந்த ஊரில் இருந்தது. அவருடைய தாய்வழி உறவினர்களும்கூட அந்த ஊரில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு என்னால்தான் யாரையும் நினைவுக்குக் கொண்டுவரமுடியவில்லை. நான் சொன்ன விவரங்கள்மூலமாக அவர்களாலும் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஊரோடு புதிதாக ஓர் உறவு என நினைப்பதே எனக்கு ஆனந்தமாக இருந்தது.
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பிறகுதான் மற்ற கடமைகளைக் கவனிக்கமுடியும் என்று சம்பந்தி கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். மூன்று கார்களில் கிளம்பி இரவே வந்து தங்கிவிட்டோம். காலையில் வழிபாடு முடிந்து மதிய விருந்து உறவினர் வீட்டிலேயே தடபுடலாக நடந்துமுடிந்தது. ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு நான் மட்டும் கிளம்பினேன். மனைவியையும் அழைத்துச் சென்று காட்டவேண்டும் என ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு அடிக்கடி மூட்டுகள் வீங்கும் பிரச்சினை இருந்ததால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
மாறியிருந்த ஊரின் அமைப்பு ஒருகணம் குழப்பி திகைக்கவைத்தது. பல இடங்களில் புரியாமல் நின்றுவிட்டேன். தோப்புபோல இருந்த மரங்கள் எதுவும் இல்லை. மாட்டுவண்டிப் பாதைகள் சிமெண்ட் சாலைகளாக மாறியிருந்தன. ஏராளமான கடைகள். வாகனங்கள். நடமாட்டம். உணவு விடுதிகள். மூன்று ஏ.டி.எம்.கள். நான்கு வங்கிகள். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கவாட்டில் இருந்த பிள்ளையார் கோயிலை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முதலில் கோயிலைத் தேடி, அதற்குப் பிறகு தெருவைக் கண்டுபிடித்தேன். முன்பக்கமும் பின்பக்கமும் தென்னந்தோப்பும் மாந்தோப்புமாக இருந்த எங்கள் வீட்டுப்பகுதியில் நிழலுக்குக்கூட ஒரு மரம் இல்லை. எங்கெங்கும் வீடுகள் அடைத்துக்கொண்டிருந்தன.

Monday 23 March 2015

சேவை என்னும் வழிபாடு

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. எங்கள் சிற்றூரின் ஏரி எங்கள் வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஏரி. அக்கம்பக்கமிருந்த பத்துப்பதினைந்து பாளையங்களில் உள்ள நிலங்களுக்குத் தேவையான நீரை அந்த ஏரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் வழங்கிவந்தன. அந்த ஏரிக்கும் ஏழெட்டு மைல்கள் தள்ளிப் பாய்ந்துகொண்டிருந்த தென்பெண்ணை ஆற்றுக்கும் ஆழங்கால் இணைப்பு இருந்தது. தென்பெண்ணை அப்போது வளமான ஆறு. ஆறுமாதம் ஓடிக்கொண்டே இருக்கும். நீரற்று வறண்டுபோன சமயத்திலும் ஒரே ஒரு அடி அளவுக்கு ஆழமாகத் தோண்டினாலேயே நீர் சுரந்து பள்ளத்தில் நிரம்பிவிடும். பொங்கலையொட்டி வரும் ஆற்றுத் திருவிழா சமயத்தில் பள்ளம் தோண்டி நீரைக் கண்டுபிடிப்பதுதான் சிறுவர்களான எங்களுடைய பொழுதுபோக்கு. இன்று எல்லாமே பழங்கனவுகள். மணல்கொள்ளைக்குப் பேர்போன இடமாக மாறிவிட்டது தென்பெண்ணை. இப்போது அழிந்துகொண்டிருக்கும் ஆறு அது. ஆண்டுமுழுக்க மணலைச் சுரண்டிக்கொண்டே இருப்பதால் ஆற்றில் நீரோட்டமே இல்லை. மழைக்காலத்தில் பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரைமட்டுமே பார்க்கமுடியும். ஆறே நீரற்றுப் போனதால் ஆழங்கால் தூர்ந்துபோனது. ஆற்றைச் சுரண்டிய மக்கள் வறண்டுபோன ஏரியை வளைத்தெடுத்துக்கொண்டார்கள். ஒருபங்கு விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக  மாறின. இன்னொரு பங்கு விவசாய நிலங்கள் முந்நூறு அடி ஆழத்துக்கும் கீழே சென்று விட்ட கிணற்றுநீரை நம்பி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன.

Friday 13 March 2015

காட்சிச் சித்திரங்கள் - கலாப்ரியாவின் ‘தண்ணீர்ச்சிறகுகள்’

ழீன் காக்தே பிரெஞ்சு மொழியில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். ஓவியத்திலும் திரைப்படத்திலும் அளவற்ற நாட்டம் கொண்டவர்.கவிஞனின் குருதிஎன்னும் பெயரில் வெளிவந்த திரைப்படம் அவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தது. கடந்த நூற்றாண்டில் அறுபதுகளில் மறைந்துபோன அக்கலைஞன்  எழுதிய வாக்கியமொன்றை கலாப்ரியா தன்னுடைய கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் பயன்படுத்தியிருக்கிறார்.கவிஞன் கண்டுபிடிப்பதில்லை, அவன் கவனிக்கிறான்என்னும் அந்த வாக்கியம் அவர் நெஞ்சில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்துபோயிருக்கிறது என்பதற்கு இத்தொகுதியின் கவிதைகளே பொருத்தமான சான்றுகளாகும். காக்தேயின் வாக்கியத்தை ஒட்டி அவர் எடுத்துக்காட்டாகச் சொல்லியிருக்கும் சம்பவமும் அதையொட்டி அவர் எழுதியிருக்கும் கவிதைவரிகளும் மறக்கமுடியாதவை.

தமிழகத்துக்கு வெளியே


இந்திய மொழிகளின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களும் உலக மொழிகளின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களும் கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பாரதியார், க.நா.சு., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்.ஷண்முகசுந்தரம், திருலோக சீதாராம், கரிச்சான் குஞ்சு, சுந்தர ராமசாமி போன்ற பல இலக்கியப்படைப்பாளிகள் தம் சொந்த இலக்கிய முயற்சிகளைக் கடந்து மொழிபெயர்ப்பிலும் அக்கறை கொண்டிருந்தனர்.  த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி.ராம்னாத், தி.சு.சதாசிவம்,  சு.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் மொழிபெயர்ப்புகாகவே வாழ்ந்தவர்கள். ஆர்.ஷண்முகசுந்தரம் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாளுமைகளால் தமிழுக்குக் கிடைத்த படைப்புகள் ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் தமிழிலிருந்து பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கை பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. தமிழ்ப்படைப்புகள் ஏன் தமிழகத்துக்கு வெளியே பிறமொழிகளுக்குச் செல்வதில்லை என்பது முக்கியமான ஒரு கேள்வி.
இந்திய மொழிகளில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும்கூட தமிழிலக்கியம் பற்றித் தெரியவில்லை. இலக்கியம் கற்பிக்கும் அயல்மொழி ஆசிரியர்களுக்கும்கூட அதிக அளவு தெரியவில்லை. திருவள்ளுவர், பாரதியார் என்கிற ஆளுமைகளைமட்டுமே அவர்கள் பெயரளவில் தெரிந்துவைத்திருக்கிறார்கள். திருக்குறள்பற்றியோ, பாரதியாரின் படைப்புகள் பற்றியோ ஆழமாகத் தெரிந்துவைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். இது ஏமாற்றத்துக்குரிய உண்மை.

Thursday 5 March 2015

பெரியம்மா (சிறுகதை)

வரட்டுமா பெரீம்மா. ராதிகா வந்துட்டா. காலையில நான் கஞ்சி எடுத்துகினு வரேன். எத நெனச்சியும் பயப்படக்கூடாது, தெரியுதா?” என்று சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்தார் அம்மா. புடவைச் சுருக்கங்களை நீவிச் சரிப்படுத்தியபடி, சரிவாக வைத்திருந்த தலையணையில் பொம்மைபோல படுத்திருந்த பெரியம்மாவின் மெலிந்த தோளைத் தொட்டு சில கணங்கள் அழுத்தினார். பிறகு, தலைமுடி உதிர்ந்து மொட்டையாகிவிட்டிருந்த தலையை மெதுவாக வருடிக் கொடுத்தார். அப்புறம், விரல்களைத் தாழ்த்தி ஒட்டிப் போயிருந்த வலது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி புன்னகைத்தார்.
நீங்க கெளம்புங்கம்மா. பெரீம்மாவ நான் பார்த்துக்கறேன்என்றபடி ஓரமாக வைத்திருந்த கைப்பையை எடுத்துக் கொடுத்தேன் நான். அதை உடனே வாங்கிக்கொண்டார் அம்மா.
இன்னும் ஒரு சிட்டிங்தான் பெரீம்மா. பல்ல கடிச்சிகினு தாங்கிக்குங்க. அப்பறமா நம்ம வீட்டுக்கு போயிடலாம். சரியா? ஐயனாரு, திரோபதயம்மா, முருகரு, பிள்ளையாருலாம் உங்கள சுத்தி காவலுக்கு நிக்கறாங்கன்னு நெனச்சிக்குங்க. என்ன புரியுதா?”

Monday 2 March 2015

ஊரும் சேரியும்

சித்தலிங்கையாவின்ஊரும் சேரியும்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கன்னடக் கவிஞரும் தலித் சங்கர்ஷ சமிதியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான சித்தலிங்கையாவின் தன்வரலாற்று நூல்ஊரும் சேரியும்என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை உடனே நான் தமிழில் மொழிபெயர்த்தேன். 1996 ஆம் ஆண்டில் அது விடியல் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.கிளாஸிக் தன்வரலாறு வரிசைஎன்கிற வரிசையின் கீழ் நல்ல ஓவியங்களுடன் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக இப்போது வெளிவந்துள்ளது.



நூல் கிடைக்குமிடம்
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629 001
விலை. ரூ.160

‘ஊரும் சேரியும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள் எங்கள் முகாமிலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியில் நாற்பது ஐம்பது பேர் வட்டமாகக் கூடியிருக்க ஒருவர் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவருக்கு நல்ல குரல்வளம் இருந்தது. அவருடைய வசீகரமான குரலும் பாடலின் வரிகளும் தொடர்ந்து செல்லவிடாமல் என்னை அங்கேயே தடுத்துவிட்டன. கூட்டத்தில் ஒருவனாக நின்று நானும் அந்தப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன். ஆறேழு பாடல்களைப் பாடி முடிப்பதற்குள் நூறு பேருக்கு மேல் சேர்ந்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து வீதி நாடகமொன்று நடைபெற்றது. ஏறத்தாழ அரைமணி நேரம். அது ஒரு சாதாரணமான பிரச்சார நாடகம். ஆனாலும், ஒருவர்கூட அங்கிருந்து நகராமல் அனைவரும் நாடகத்தைப் பார்த்தார்கள். நாடகத்திலும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. நாடகம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் தருணத்தில் நாடகக்குழுவினரிடம் சிறிது நேரம் பேசினேன். கர்நாடகத்தில் அக்காலத்தில் வீதி நாடகங்களுக்குப் பேர்போன சமுதாயா குழுவின் பாதிப்பால் அவர்கள் ஒரு குழுவைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார்கள். பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் கவிஞர் சித்தலிங்கையா எழுதியவை என்றும் குறிப்பிட்டார். அங்கேயேஹொலெமாதிகர ஹாடுஎன்னும் சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அன்றைய பயணம் முழுக்க அவருடைய பாடல்களைப் படிப்பதிலும் நாடகக்குழுவினர் பாடிய தாளக்கட்டுக்கு இசைவாக அவ்வரிகளை வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதிலும் கழிந்தது.யாருக்கு வந்தது, எங்கே வந்தது, நாற்பத்தியேழின் சுதந்திரம்?’ என ஆவேசமும் அப்பாவித்தனமும் இணைந்து தொனிக்க, அன்று நான் கேட்ட பாட்டின்  குரல் இன்னும் என் நெஞ்சில் ஒலித்தபடியே உள்ளது. சித்தலிங்கையா என்னும் ஆளுமையின் பெயரையும் அவருடைய கவிதையையும் இப்படிப்பட்ட ஒரு கணத்தில்தான் நான் தெரிந்துகொண்டேன்.