Home

Thursday 26 July 2018

இசைத்தெய்வத்தின் மேடை - நகலிசைக்கலைஞன்



திருவிழா மேடைகளிலும் திருமணக்கூடங்களிலும் உற்சாகக்களை சூழ நிகழும் பாட்டுக்கச்சேரிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். காதுகொடுத்துக் கேட்கிறவர்களும் கேட்காதவர்களுமாக நிரம்பிவழியும் மக்கள் தொகைக்கிடையே நின்று பாடுவது அவ்வளவு எளிமையான செயலல்ல. ஆழமான கனவுகளோடு தன்னையே இன்னொரு மனிதனாக மாற்றிக்கொள்பவர்களால் மட்டுமே அந்த மேடையில் நிற்பது சாத்தியம். தனக்குத் தேவையான விசையை தன் நெஞ்சிலிருந்து திரட்டியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். எம்.எஸ்.வி., இளையராஜா, எஸ்.பி.பி., டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், மலேசியா வாசுதேவன், பி.சுசிலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, சொர்ணலதா, வாணி ஜெயராம் ஆகியோராக தம்மையே உருவகித்துக்கொண்டு பாடவோ இசைக்கவோ தொடங்கும்போது, அவர்கள் சிறகு முளைத்தவர்களாக மாறுகிறார்கள். தமக்கென ஒரு வானத்தையே உருவாக்கிக்கொண்டு, அதில் வட்டமடிக்கிறார்கள். நள்ளிரவுக்குப் பிறகோ, அதிகாலையிலோ அவர்கள் மெல்ல மெல்ல கீழிறங்கி வண்டி பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்கிறார்கள்.

கல்யாண்ஜியின் ’அந்தரப்பூ’ - விண்ணும் மண்ணும்




 சமீபத்தில் இயல் விருது ஏற்புரையின்போது வண்ணதாசன் தன்னைசின்ன விஷயங்களின் மனிதன்என்ற அடைமொழியோடு முன்வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே தலைப்பில் அவர் எழுதிய ஒரு கட்டுரைத்தொகுதி கூட வெளிவந்தது. அவருடைய இணையதளமானசம்வெளியில் அவர் ஒராண்டு காலத்தில் அவ்வப்போது எழுதிய அனுபவக்கட்டுரைகளின் தொகுதி அது. ’சின்னஎன அவர் முன்வித்திருக்கும் சொல்லுக்குரிய பொருள் புழங்குதளத்தில் உள்ள பொருளல்ல. மாறாக விரிவுக்கு நேரெதிராக உள்ள ஒன்று என்பதே பொருளாகும். எடுத்துக்காட்டாக பிரம்மாண்டமான செதுக்குவேலைகளோடும் சிலைகளோடும் ரகசிய இணைப்புகளோடும் கூடிய மாபெரும் அரண்மனைக்கதவுகளை அவர் தன் படைப்புகளில் முன்வைக்க முயற்சி செய்யவில்லை. அதற்கு மாறாக உருக்கிய தங்கத்திலிருந்து மிகச்சிறிய மூக்குத்தியை பிசிறேயில்லாமல் நுட்பமான வேலைப்பாடோடு செய்யும் கலைஞனைப்போல சின்னஞ்சிறு காட்சித்துண்டுகளை மட்டும் தேடித்தேடிக் கண்டடைந்து தன் படைப்புகளில் முன்வைக்கிறார் அவர். மேலதிகமாக, அந்த அரண்மனைக்கதவுகளின் நிழலை மூக்குத்தியின் பளபளப்பில் தேடிக் கண்டுபிடிக்கும் விழைவும் அவர் ஆழ்மனத்தில் நிறைந்திருக்கும்.

Saturday 21 July 2018

விடுபட்டவர்களின் வரலாறு - நாவல் அறிமுகம்




அறுபதுகளில் நம்மைச்சுற்றி என்னென்ன நடந்தன என்பதை ஒரு சுருக்கமான பட்டியலாக எழுதினால் எப்படி இருக்கும்? முதலாவதாக, ஏறத்தாழ 450 ஆண்டுகளாக போர்த்துகீசிய இந்தியப்பகுதியாக அறியப்பட்ட கோவா அறுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பிறகு, சீன அதிகாரத்தை ஏற்க மறுத்து தலாய்லாமா சீனாவை விட்டு வெளியேறியபோது அடைக்கலம் கொடுத்ததற்காகவும் எல்லைச்சிக்கல் காரணமாகவும் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையே போர் மூண்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. அதையொட்டி தேசிய அளவில் இயங்கிவந்த அஞ்சல் தொலைபேசி ஊழியர் சங்கமும் இரண்டாகப் பிரிந்தது. அறுபதுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பஞ்சமேற்பட்டது. மக்கள் உணவுப்பொருட்களுக்காகத் திண்டாடினார்கள். இந்தித்திணிப்பை எதிர்த்து மாபெரும் போராட்டம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அண்ணா என மக்களால் பேரன்போடு அழைக்கப்பட்ட அண்ணாதுரையின் தலைமையிலான கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. நீண்ட காலம் அவரால் முதல்வராக நீடிக்கமுடியாதபடி அவர் மறைந்துபோனார். இவை அனைத்தும் அரசியல் களத்தில் நிகழ்ந்தவை. அதனாலேயே இன்றும் சமூகமனத்தில் அழியாமல் நிற்பவை. வரலாற்றில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இச்சம்பவங்கள்.

Saturday 14 July 2018

கதவு திறந்தே இருக்கிறது – எளிமையும் மேன்மையும்


சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் .இலெ.தங்கப்பா. தமிழின் முக்கியமான மரபுக்கவிஞர். தனித்தமிழில் ஈடுபாடு கொண்டவர். அவர் கவிதை என்னும் சொல்லுக்கு இணையாக பாடல் என்னும் சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆங்கிலத்திலும் இவர் புலமை பெற்றவர். பல சங்கப்பாடல்களை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவை ஏற்கனவே சிறுசிறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கலிங்கத்துப்பரணியையும் மொழிபெயர்த்திருக்கிறார். வள்ளலாரின் சில தேர்ந்தெடுத்த பாடல்களும் பாரதிதாசனின் சில பாடல்களும் கூட தங்கப்பாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

என் ஆசிரியர் தங்கப்பா - கட்டுரை



புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிதப்பிரிவில் (பட்டப்படிப்பு) நான் சேர்ந்தேன். கணிதப்பாடங்கள் தனிவகுப்பிலும் மொழிப்பாடங்கள் பொதுவகுப்பிலும் நடத்தப்பட்டன. கணிதப்பிரிவு மாணவர்களோடு விலங்கியல், தாவரவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் மொழிப்பாடவேளையில் இணைந்துகொள்வார்கள். முதல்நாள் காலைநேரத்துப் பாடவேளைகள் அனைத்தும் கணிதப்பாடங்களாகவே அமைந்தன. உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் பாடவேளையில் ஆங்கில ஆசிரியர் வந்துபோனார். அதற்குப் பிறகு தமிழ்ப்பாடவேளை. அப்போது எங்களுக்குப் பாடம் எடுக்க வந்தவர் மதனப்பாண்டியன் இலெனின் தங்கப்பா என்கிற .இலெ.தங்கப்பா. அன்றுதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன்.

சுவரொட்டி - சிறுகதை



எங்கள் ஊரில் பார்க்கும் இடங்களிலெல்லாம் தென்பட்ட சின்னச்சின்ன வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளைப் படித்தபோது, என் இளம்மனத்தில் உருவான உத்வேகம்தான் என்னைக் கவிஞனாக்கியது. அந்த வாசகங்களை புயல்வேகத்தில் எழுதியவர் ஓர் ஆலைத்தொழிலாளி. அவர் நெஞ்சில் ஒரு மகாகவியே குடியிருந்தான். சுவரொட்டி சொக்கலிங்கம் என்பது அவர் பெயர். ஆனால் ஊர்க்காரர்கள் எல்லோரும் செல்லமாக அவரைப் பெரியப்பா என்று அழைப்பதுபோல நானும் பெரியப்பா என்றுதான் அழைத்துவந்தேன்…..”