தனபாலுக்கு சட்டைதான் பெரிய பிரச்சனை.
வேறு ஏதாச்சும் சொல்லி கலாட்டா செய்தால் கூட பரவாயில்லை. கழுதை, குதிரை, தீவட்டி என்று கிண்டல் செய்தால் கூட பதிலுக்குப் பதில் மாடு, பன்றி, புண்ணாக்கு என்று கிண்டல் செய்துவிட்டு விடலாம். பதில் கிண்டல் செய்வதில் இஷ்டம் இல்லாவிட்டால் கூட போனால் போகட்டும் என்று தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ‘போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ்’ என்று கூப்பிட்டு கலாட்டா செய்வது தான் தாங்கமுடியாத அசிங்கமாயும் ஆத்திரமாயும் இருந்தது. அதுவும் கண்ட கண்ட பேப்பர்களையெல்லாம் மடித்து தபால் போடுகிற மாதிரி சட்டைக் கிழிசலுக்குள் கை விட்டு பிள்ளைகள் போடும் போது அளவுக்கு மீறி வேதனையாய் இருந்தது.