Home

Sunday, 7 December 2025

மகிழ்ச்சி வெள்ளம்

 

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவரும் இலக்கியத்தின் மீது வற்றாத ஆர்வம் கொண்டவருமான நடராசன் அவர்களே. பாவை விருதுகள் விழாவை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களே. என்றென்றும் ஆன்றோர் விருது பெற்றிருக்கும் முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களே. மூத்த படைப்பாளி சிறப்பு விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் கலாப்ரியா அவர்களே. சக விருதாளர்களாக இம்மேடையில் வீற்றிருக்கும் அபிஷன் ஜீவிந்த், கவிஞர் வெய்யில், சு.தமிழ்ச்செல்வி, தமிழ்மகன், ஆதி வள்ளியப்பன், ரம்யா வாசுதேவன், கடற்கரய் ஆகிய தோழைமை உள்ளங்களே. பேராசிரியப் பெருமக்களே. அவையில் நிறைந்திருக்கும் அன்பு உள்ளங்களே, மாணவச் செல்வங்களே. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் வாசகர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1982இல் நான் என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன். அந்தக் கதையை எழுதும்போது நான் உணர்ந்த பதற்றமும் பரவசமும் இன்னும் என் நெஞ்சில் பசுமையான அனுபவம் நிறைந்துள்ளது. என் வாழ்வில் அது ஒரு மகத்தான நாள். தவழ்ந்துகொண்டிருந்த ஒரு குழந்தை கைகளை ஊன்றி முட்டி போட்டு இடம்பெயரவும் பிறகு கால்களை ஊன்றி எழுந்து நிற்கவும்  அறிந்துகொள்வது போல, அதுவரை கவிதைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நான் அன்றுமுதல் சிறுகதைகளை எழுதுபவனாக மாறினேன். அந்தப் பயணம் இன்றுவரை சோர்வின்றி வெற்றிகரமாகத் தொடர்ந்தபடி இருக்கிறது. இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருந்தாலும் ஒவ்வொரு கதையையும் எழுதத் தொடங்கும் தருணத்தில் என் மனம் முதல்  கதையை எழுதும் போது உணர்ந்த மனநிலையே எனக்குள் நிறைகிறது. அதே பதற்றம். அதே தவிப்பு. அதே வேகம். அதே நிறைவு. அதே பரவசம். எதுவும் மாறுவதில்லை. எதனாலோ ஆட்கொள்ளப்பட்டவனாக வாழ்ந்து மீளும் அந்த அனுபவம் இனிமையானது. மகத்தானது. மகிழ்ச்சி நிறைந்தது.

இத்தருணத்தில் கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் நாட்டுப்படலத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலொன்று நினைவுக்கு வருகிறது. கோசலநாட்டின் செல்வச்செழிப்பை உணர்த்தும் விதமாக அமைந்த பாடல் கற்பனை வளம் நிறைந்தது.

 

வரம்பெலாம் முத்தம், தத்து

மடையெலாம் பணிலம் மாநீர்க்

குரம்பெலாம் செம்பொன், மேதிக்

குழியெலாம் கழுநீர்க் கொள்ளை

பரம்பெலாம் பவளம், சாலிப்

பரப்பெலாம் அன்னம், பாங்கர்க்

கரும்பெலாம் செந்தேன், சந்தக்

காவெலாம் களிவண்டீட்டம்

 

என்பதுதான் அந்தப் பாடல். கோசலை நாட்டில் உள்ள நீர்நிலைகள், வயல்வெளிகள், மலர்பூத்துக் குலுங்கும் சோலைகள், தேன்கூடுகள் நிறைந்த மரத்தோப்புகள் என பார்க்கும் இடங்களெல்லாம் வளமோடும் செழிப்போடும் காணப்பட்டது என்று குறிப்பிடுகிறார் கம்பர். அந்தச் செழிப்பான காட்சியை ஒரு சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்.

ஒரு கதையை எழுதி முடித்ததும் மனம் உணரக்கூடிய மகிழ்ச்சி என்பது ஏறத்தாழ அந்தச் செழிப்பான காட்சிக்கு இணையான அனுபவம். எவ்வளவு துயரமான தருணங்களை எழுத நேர்ந்தாலும், அதைச் சரியான வடிவமைப்பில் எழுதி முடித்ததும் அந்த மகிழ்ச்சி அரும்பத் தொடங்கிவிடுகிறது.

பாவை விருது பெறும் மகிழ்ச்சி மிக்க இத்தருணத்தில் அந்த மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நம் முயற்சிகள் எங்கோ சிலரால் கவனிக்கப்படுகின்றன என்பதை அறியும்போது உண்மையிலேயே மனம் மகிழ்ச்சியடைகிறது. பாவை விருதைப் பெறும் இக்கணத்தில் என் மகிழ்ச்சி பல மடங்காகப் பெருகி நிறைகிறது. பாவை நிறுவனத்துக்கும் இந்த ஆண்டுக்குரிய சிறுகதை விருதாளராக என்னை முன்வைத்த நடுவர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விருதைப் பெறும் இக்கணத்தில் என்னை இலக்கியத்தை நோக்கி ஆற்றுப்படுத்திய என் ஆசிரியர்கள் அனைவரையும் என் நெஞ்சில் நிறுத்தி வணங்குகிறேன். என்னை எப்போதும் உற்சாகப்படுத்தி, என் படைப்புகளின் முதல் வாசகராக விளங்கும்  என் மனைவி, மகன், பெற்றோர், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் இக்கணத்தில் நினைத்து மனமார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அவையில் நிறைந்திருக்கும் நட்புக்கூட்டத்தினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

(நாமக்கல்லைச் சேர்ந்த பாவை கல்வி நிறுவனம் 29.11.2025 அன்று ஆன்றோர் முற்றம் சார்பாக பாவை விருது வழங்கிய சமயத்தில் ஆற்றிய ஏற்புரையில் எழுத்துவடிவம்)