Home

Monday, 22 December 2025

சோர்வறியாத் தொண்டர் சுவாமி ஆனந்த தீர்த்தர்

 

1915இல் காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்தவுடன் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றங்கரையையொட்டி ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்தி, அதையே தன் செயல்பாடுகளுக்கான களமாக அமைத்துக்கொண்டார். அவரோடு ஆசிரமத்தில் சேர்ந்து வசிக்கவும் பாடுபடவும் பலருக்கும் அழைப்பு விடுத்தார். ஆசிரமத்தில் இணைய வருபவர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்கவேண்டியவை என பதினோரு விரதங்களின் பட்டியலை அறிவித்தார். அவற்றை உளமார ஏற்றுப் பின்பற்றுகிறவர்களை மட்டுமே ஆசிரமத்தில் இணைத்துக்கொண்டார். அதுவே அங்கு எழுதாத விதியாக அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடமையின்மை, உடலுழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை, தீண்டாமை, சமய நல்லிணக்கம், சுதேசி ஆகியவையே அவர் குறிப்பிட்ட பதினோரு விரதங்கள். அவருடைய அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவரும் அந்தப் பதினோரு விரதங்களை ஆசிரமத்தில் வசித்த காலத்தில் மட்டுமன்றி, தம் வாழ்நாள் முழுதும் பின்பற்றினார்கள். மேலும் தம்மைச் சுற்றி அமைந்திருக்கும் சமூகத்தின் மீது செல்வாக்கைச் செலுத்தி அவர்களையும் பின்பற்றவைத்தனர். அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் செயல்பாடுகளும் இன்று வரலாறாக மாறியிருக்கின்றன.

தீண்டாமையைக் கைவிடும் வரையில் இந்தியரின் வாழ்வில் ஆன்ம முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைந்த  விவேகானந்தர் மனம்கசந்து கூறிய கூற்று மெல்ல மெல்ல இந்தியரிடையில் பரவி வேரூன்றத் தொடங்கியது.  அதன் பிறகு நாட்டின் பல பகுதிகளில் தீண்டாமைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு இடங்களில் பல சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றி தீண்டாமையை அகற்றி அனைவரும் சேர்ந்து வாழும் எண்ணத்தையும் நம்பிக்கையையும் விதைத்தார்கள். சபர்மதி ஆசிரமத்தைத் தொடங்கிய காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்பை ஒரு விதியாகவே வகுத்து சுதந்திர இயக்கத்தோடு இணைத்து தீவிரமாகப் பரப்பத் தொடங்கினார்.

நாடெங்கும் நிகழ்த்திய சுற்றுப்பயணங்களில் எல்லா மேடைகளிலும் தீண்டாமைக்கு எதிரான தன் கருத்தை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து மக்கள் மனத்தில் பதியும்படி செய்தார். தேச நிர்மாணப்பணித்திட்டத்தில் தீண்டாமை ஒழிப்பையும் ஒரு திட்டமாக இணைத்து அதற்கென தனி அமைப்புகளையும் உருவாக்கினார். பொது அரசியலுக்குள் வராமல், தீண்டாமை ஒழிப்புக்காகவும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காகவும் அந்த அமைப்புகள் செயல்பட்டன.

தீண்டாமைக்கு எதிரான காந்தியடிகளின் பரப்புரையின் தீவிரம் பெருகப்பெருக, அச்சமூகச்செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை நோக்கி வந்து அவருடைய செயல்பாடுகளோடு இணைந்துகொண்டனர்.  தேசமெங்கும் பல கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆதரவு  பெருகி வந்த அதே நேரத்தில் அவருடைய நடவடிக்கைகள் மீது ஒவ்வாமை கொண்டவர்களின் எதிர்ப்பும் பெருகி வந்தது.

ஒருமுறை 25.07.1934 அன்று புனே நகரத்தில் உள்ள நகராட்சி அரங்கத்தில் தீண்டாமைக்கு எதிரான ஒரு கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொழுது அடங்கியதும் ஏழரை மணியளவில் ஒரு கார் அந்த அரங்கத்தை நோக்கி வந்தது. அது காந்தியடிகளை ஏற்றிக்கொண்டு வந்த கார் என நினைத்து, அரங்கத்தில் காத்திருந்த இசைக்குழுவினர் வரவேற்பு இசையை முழங்கத் தொடங்கினர். கார் நின்றதும் காந்தியடிகள் கதவைத் திறந்து வெளியே வரும் தருணத்துக்காக அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் காரிலிருந்து இறங்கியவர் வேறொருவர். அதே நேரத்தில் எங்கிருந்தோ காரை நோக்கி வீசப்பட்ட ஒரு வெடிகுண்டு காருக்கு அருகில் விழுந்து வெடித்தது.

அந்த விபத்தில் ஒரு காவலரும் அருகில் நின்றிருந்த ஐந்து தொண்டர்களும் படுகாயமடைந்தனர். அதற்குள் குண்டு வீசிய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காந்தியடிகளின் தீண்டாமைப் பிரச்சாரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரைச் சாய்ப்பதற்குத் தீட்டிய திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. உயிர் பற்றிய அச்சமெதுவும் இல்லாத காந்தியடிகள் தம் வாழ்நாள் முழுதும் தம் கருத்தில் உறுதிகொண்டவராக தம் செயல்களில் ஈடுபட்டிருந்தார்.

நம் நாட்டில் தீண்டாமை தொடர்பான காந்தியடிகளின் செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஒரு கூட்டம் வாழ்ந்ததுபோலவே, தீண்டாமை ஒழிப்பையொட்டிய காந்தியடிகளின் கருத்தாலும் செயல்பாட்டாலும் ஈர்க்கப்பட்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் காந்தியடிகளின் சொல்லையே தம் வாழ்நாள் கட்டளையாகக் கருதி தாம் வசிக்கும் பகுதிகளில் நேரிடையாகவே தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட்டு பலருக்கும் முன்னோடியாக வாழத் தொடங்கினர். அவர்களின் ஒருவர் கேரளத்தில் மலபார் பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஷெனாய் என்கிற சுவாமி ஆனந்த தீர்த்தர்.

ஆனந்த தீர்த்தர் சாரஸ்வத பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றபோதும் குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டுக்கு வெளியே பிற வகுப்புகளைச் சேர்ந்த பிள்ளைகளோடு பேதம் பார்க்காமல் சேர்ந்து விளையாடிப் பழகும் பழக்கம் உள்ளவராகவும் இருந்தார். அந்தப் பழக்கமே அவருடைய நெஞ்சில் நல்லிணக்க எண்ணம் உருவாகக் காரணமாக இருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் படிக்கத் தொடங்கிய யங் இந்தியா இதழ்களும் அவருடைய எண்ணங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தன.

ஆனந்த தீர்த்தர் காந்தியடிகளை மதித்த அதே அளவுக்கு  துறவி நாராயண குருவையும் மதித்து அவருடைய கருத்துகளையும் படித்து வந்தார். ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்னும் கொள்கையோடு ஆன்மிக வழியில் சமூகச் சீர்திருத்தத்தை மேற்கொண்டிருந்த நாராயண குருவின் இயக்கம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. கோவை நகருக்கு நாராயண குரு வருகை புரிந்தபோது அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போது அவர் சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தார். அதையடுத்து, பல முறைகள் நாராயண குருவுடைய ஆசிரமத்துக்குச் சென்று உரையாடி சீர்திருத்தம் தொடர்பான தெளிவை அடைந்தார். அவர் நடத்திவந்த தர்ம பரிபாலன சங்கத்தில் துறவியாவதற்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தபோதும், அவற்றையெல்லாம் தளர்த்தி ஆனந்த தீர்த்தரை நேரிடையாகவே தன் சீடராக்கிக்கொண்டார் நாராயண குரு. ஆனந்த ஷெனாய் என்னும் பெயர் அன்று முதல் சுவாமி ஆனந்த தீர்த்தர் என மாறியது. அதற்குப் பின் தீண்டப்படாதவர்களுக்காக உழைப்பதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார் அவர். காந்தியடிகள், நாராயண குரு ஆகிய இருவருடைய கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த தீர்த்தர் திகழ்ந்தார்.

கேரளத்தில் தீண்டப்படாதவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்வதிலும் அவர்களுக்குக் கிட்டவேண்டிய சமூக உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் ஆனந்த தீர்த்தர் தொடர்ந்து கவனம் செலுத்தி உழைத்தார். மலபார் பகுதியில் பையனூரில் ஸ்ரீ நாராயண வித்யாலயம் என்னும் பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். தீண்டப்படாதவர்களுக்கு ஆதிக்க சாதியினரால் மறுக்கப்பட்ட பொதுப்பாதைகளைப் பயன்படுத்துதல், பொதுநீர்நிலைகளில் நீர் எடுத்தல், முடிதிருத்த நிலையங்களில் முடிவெட்டிக்கொள்தல், விடுதிகளில் சாப்பிடுதல், கோவில் நுழைவு போன்ற பல உரிமைகளுக்காக தீண்டப்படாதவர்களோடு இணைந்து நின்று அன்றைய தினங்களில் நிலவிய சமூகக்கட்டுபாடுகளை உடைத்தார். எல்லா இடங்களிலும் காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியிலேயே போராட்டங்களை நடத்தினார்.

ஆனந்த தீர்த்தர் மேற்கொண்ட பல போராட்டங்களைப்பற்றிய செய்திகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் காட்டிய உறுதியைப்பற்றியும் பல கள ஆய்வுகளுக்குப் பிறகு செய்திகளைத் திரட்டி ஆய்வாளர் ஏ.எம்.அயிருக்குழியில் மலையாள மொழியில் எழுதிய முக்கியமானதொரு நூலை மொழிபெயர்ப்பாளரான நிர்மால்யா தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆனந்த தீர்த்தர் சட்டத்தின் துணையோடு மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களையும் அவற்றுக்காக அவர் அலைந்த அலைச்சல்களையும் அவமானங்களையும் இந்தப் புத்தகத்தின் வழியாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. 

மதுரையை ஒட்டிய மேலூர் பகுதியிலும் ஆனந்த தீர்த்தர் பல ஆண்டுகள் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர் என்றபோதும், தமிழில் அவரைப்பற்றி ஒருசில கட்டுரைகளுக்கப்பால் தனித்ததொரு நூலாக எதுவும் ஆவணமாக்கப்படவில்லை. அது தமிழகத்தின் பெருந்துயரம். நல்லூழாக, மலையாளத்தில் ஆனந்த தீர்த்தரைப்பற்றிய நூலை ஆய்வாளர் ஏ.எம்.அயிரூக்குழியில் எழுதியிருக்கிறார். அவர் பாடுபட்டுத் திரட்டியிருக்கும் பல்வேறு குறிப்புகள் ஆனந்த தீர்த்தர் தம் வாழ்நாளில் சந்தித்த பல்வேறு சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு நின்ற அவருடைய மன உறுதியையும் உணர்த்துகின்றன. ஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை முழுக்க முழுக்க ஒரு சாகசப்பயணத்துக்கு நிகரானதாக உள்ளது. நிர்மால்யாவின் முயற்சியினால் அந்த மாபெரும் மனிதரின்  வாழ்க்கை வரலாற்றை இப்போது தமிழிலேயே படிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் புத்தகத்தில் பின்னிணைப்பாக, ஆனந்த தீர்த்தர் நடத்திவந்த ஸ்ரீநாராயண வித்தியாலயத்தில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் சிலர் எழுதிய அனுபவக்குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் சுவாமியிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் சுவைபடக் கோர்வையாக முன்வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் சுவாமியின் சாதனைகளையும் முயற்சிகளையும் சித்தரிக்கின்றன. அனைத்தும் இணைந்து ஒரு மாபெரும் வாழ்க்கை வரலாற்றைப் படித்த மனநிறைவை அளிக்கிறது. எல்லா விதங்களிலும் முக்கியமானதொரு நூலைத் தமிழ் வாசக உலகத்துக்கு மொழிபெயர்த்து அளித்திருக்கும் நிர்மால்யாவுக்கு வாழ்த்துகள்.

 

(நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பில் பரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ஏ.எம்.அயிரூக்குழியில் எழுதிய ‘ஆனந்ததீர்த்தர் : தலித் உரிமையின் தனிக்குரல்’ என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை)

 

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் : புதுமையும் புன்னகையும்

 

எங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ராஜசேகர். என்னைவிட சற்றே உயரமானவன். நன்றாக மரம் ஏறுவான். அதைவிட நன்றாக கதைசொல்வான். நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவனையே சூழ்ந்திருப்போம். அவன் சொல்லும் கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டதும் தெரியாது, வந்து சேர்ந்ததும் தெரியாது. நேரம் பறந்துவிடும். அவன் சொல்லும் கதைகள் அந்த அளவுக்கு சக்தி கொண்டவை.

புதிர்த்தருணங்களின் காட்சி

 

சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். நற்றிணையில் பாலைத்திணைப் பாடலொன்று ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை’ என்னும் புதிரோடுதான் தொடங்குகிறது. தலைவியின் குரலில் அமைந்த அப்பாடல் இளமை அழிந்த முதுவயதில் இளமையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்பதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருப்போம் என ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் ஏன் இந்தத் தலைவனுக்குத் தெரியவில்லை, இன்பம் துய்க்கவேண்டிய தருணத்தில் இவன் ஏன் பிரிந்துசெல்கிறான். இது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறதே என புலம்பும் தலைவியின் மனக்குறையைத்தான் அப்பாடல் எதிரொலிக்கிறது. புரிந்துகொள்ள முடியாத புதிர்த்தருணங்கள் ஆதிகாலத்திலிருந்தே படைப்புக்களமாக விளங்கி வந்திருக்கின்றன.

Saturday, 13 December 2025

கவித்துவமான முடிவு

  

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் புனைவு வெளிப்படும் வடிவம் மாற்றமடைந்தபடி வருகிறது. சமீப ஆண்டுகளில் பலர் குறுங்கதைகள் என்னும் வடிவத்தில் எழுதிவருகிறார்கள். அவ்வரிசையில் சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி போன்றோர் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள்.

எதிர்பாராமையும் தற்செயலும்

 

 

ஒரு நிகழ்ச்சி. கடந்த வாரத்தில் ஒருநாள் ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் தோல்வியுற்ற அவர் பேராசிரியர் பதவி வரை வந்து சேர்ந்த  தன்  வாழ்க்கைப்பயணத்தைப்பற்றி விவரித்தார்.

Sunday, 7 December 2025

மகிழ்ச்சி வெள்ளம்

 

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவரும் இலக்கியத்தின் மீது வற்றாத ஆர்வம் கொண்டவருமான நடராசன் அவர்களே. பாவை விருதுகள் விழாவை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களே. என்றென்றும் ஆன்றோர் விருது பெற்றிருக்கும் முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களே. மூத்த படைப்பாளி சிறப்பு விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் கலாப்ரியா அவர்களே. சக விருதாளர்களாக இம்மேடையில் வீற்றிருக்கும் அபிஷன் ஜீவிந்த், கவிஞர் வெய்யில், சு.தமிழ்ச்செல்வி, தமிழ்மகன், ஆதி வள்ளியப்பன், ரம்யா வாசுதேவன், கடற்கரய் ஆகிய தோழைமை உள்ளங்களே. பேராசிரியப் பெருமக்களே. அவையில் நிறைந்திருக்கும் அன்பு உள்ளங்களே, மாணவச் செல்வங்களே. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் வாசகர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பி.எஸ்.குமாரசாமி ராஜா: கறை படியாத கரங்கள்

 

முதலாம் உலகப்போரில் இந்தியரை ஈடுபடுத்தும்போது அளித்த வாக்குறுதிகளையெல்லாம் போர் முடிந்ததும் பிரிட்டன் அரசு புறக்கணிக்கத் தொடங்கியது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் சுதந்திரத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கக்கூடும் என எதிர்பார்த்து, முன்னெச்சரிக்கையாகத் தன்னை ஆயத்தம் செய்துகொள்வதற்கு இசைவாக, இந்தியாவில் நிலவும் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளைப்பற்றி ஆய்ந்து அறிக்கையளிக்கும் வகையில் ரெளலட் என்பவருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் இந்தியாவெங்கும் பயணம் செய்து தன் அறிக்கையை அளித்தது. அதன் பரிந்துரையை ஏற்ற அரசு, உடனடியாக அதையே சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

அற்புத மனிதர், அற்புத வாழ்க்கை

 

ஒருமுறை  விட்டல்ராவ் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என் மனைவி காய்கறிகள் வாங்கி வருவதற்காகக் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்று கூடத்தில் அமரவைத்தேன். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு மேசையில் இருந்த புதிய பத்திரிகைகளை அவரிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு “கொஞ்ச நேரம் புரட்டிகிட்டே இருங்க சார். டீ போட்டு எடுத்துட்டு வரேன்”  என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குச் சென்றேன். ஐந்து நிமிடங்களில் அவருக்கும் எனக்குமாகச் சேர்த்து தேநீர் தயாரித்து இரு கோப்பைகளில் நிரப்பி எடுத்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்குத் திரும்பினேன்.

Sunday, 30 November 2025

எஸ்.எல்.பைரப்பா : உண்மையின் அழகு

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் என்னும் நோய் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது.  ஓராண்டு காலம் நீண்ட தீவிரமான மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக் தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும்  பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கி கிராமங்களிலும் நகரங்களிலும் பல உயிர்களைப் பலி வாங்கத் தொடங்கியது.

மின்மினிகளின் காலம்

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்றப்பட்டனர். தேயிலைத்தோட்ட வேலை என்பது கிட்டத்தட்ட மரணக்குழியில் இறங்கிச் செல்வதற்கு இணையான ஒன்றாக இருந்த காலம் அது. ஆயினும் ஒவ்வொரு நாள் உழைப்புக்கும் கூலி கிடைக்கும் என்னும் உத்தரவாதத்தை மட்டுமே நம்பி பலர் அங்குக் குடியேறினர்.

மகத்தான அனுபவத்தை நோக்கி

 

ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டு ஒளிரும் ஆற்றலையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அந்த அழகியல் வழியாகவே அக்கவிதை இம்மண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. அவ்வழகியலால் தூண்டப்பட்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழும் எண்ணங்கள் வெவ்வேறு தளங்களைத் தொட்டுத்தொட்டு அலையும்தோறும் உருவாகும் மன எழுச்சி, கவிஞரின் மன எழுச்சிக்கு இணையானதொரு அனுபவம். கவிஞரும் கவிதை வாசகரும் இணைந்து நிற்கும் அபூர்வமான புள்ளி அது.

Sunday, 23 November 2025

இலக்கிய வாசிப்பைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்

 

 பாவண்ணன் நேர்காணல்

 கேள்விகள் : ஜி.மீனாட்சி

          

 எழுத்தாளர் பாவண்ணன் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி, தனி முத்திரை பதித்து வருபவர். ஆழமான, நுணுக்கமான விஷயங்களை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது அவரது வழக்கம்.

சத்திரம்

  

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் ஓடும் எல்லாப் பேருந்துகளும் எங்கள் கிராமமான வளவனூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிவிட்டும் செல்லும். ஆனால் அந்த நிறுத்தத்தின் பெயரை ஒருவரும் வளவனூர் என்று சொல்வதில்லை. வளவனூர் சத்திரம் என்று சொல்வதுதான் வழக்கம். அந்த அளவுக்கு சத்திரம் என்னும் பெயர் மக்களின் மனத்தில் இன்றளவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.

சு.வேணுகோபால் : ஒளியும் இருளும்

 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்கு ஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் மண்ணையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கைப்போக்குகளையும் முன்வைத்து எண்ணற்ற சிறுகதைகளைப் படைத்தவர். முன்னொரு காலத்தில் தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து வெளியேறி கரிசல் காட்டில் குடியேறி, நிலம் திருத்தி ஒரு சமூகமாக நிலைகொண்டு வாழத்தொடங்கிய ஒரு காலட்டத்தை கோபல்ல கிராமம் என்னும் நாவலாக எழுதி ஒரு முக்கியமான வகைமைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தவர்.

சா.கந்தசாமியின் படைப்புலகம்

 

தமிழ் நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர் சா.கந்தசாமி.  அதைத் தொடர்ந்து அவர் எழுதிய தொலைந்து போனவர்கள், அவன் ஆனது, சூரிய வம்சம், விசாரணைக்கமிஷன் ஆகிய நாவல்கள் அவரை தமிழின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக நிலைநிறுத்தின. அவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 31.08.2020 அன்று கொரானா சமயத்தில் இயற்கையெய்தினார்.

Sunday, 9 November 2025

ஒரே ஒரு சிறுகதை - விட்டல்ராவ் உரையாடல்கள் - புதிய புத்தகத்தின் முன்னுரை


ஒருநாள் நண்பரொருவரைச் சந்திப்பதற்காக வெளியே சென்றிருந்தேன். இருவரும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து இரண்டுமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு அவரை அனுப்பிவைத்துவிட்டு,  வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். நீண்ட நேரமாகியும் எங்கள் குடியிருப்பு வழியாகச் செல்லக்கூடிய பேருந்து வரவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக மழை வந்துவிட்டது.

ஒரு போராட்டக்காரரின் நிகழ்ச்சிக்குறிப்புகள்

 

கடந்த நூற்றாண்டில் இருபதுகளின் தொடக்கத்திலேயே காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகள் தோற்றுவித்த எல்லா இயக்கங்களிலும் கலந்துகொண்டவர் ஆக்கூர் அனந்தாச்சாரி. நீல் சிலை அகற்றும் சத்தியாகிரகம் ,கள்ளுக்கடை மறியல், அந்நியத்துணி புறக்கணிப்பு, கதர்ப்பிரச்சாரம், உப்பு சத்தியாகிரகம், சைமன் குழு எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என தமிழகத்தில் நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார் அவர். அரசு வழங்கிய தண்டனையை ஏற்று இருபது முறைகளுக்கும் மேல் சிறைக்குச் சென்று திரும்பிய் அனுபவம் அவருக்கு உண்டு

அலகிலா விளையாட்டு

 

இமயமலையை ஒட்டியிருக்கும் ஆலயங்களில் சார்தாம் என அழைக்கப்படுகிற நான்கு கோவில்கள் (கேதாரிநாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி) மிகமுக்கியமானவை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டுவரும் மக்கள் அந்த ஆலயங்களில் வழிபட்டுச் செல்கிறார்கள். இவையனைத்தும் கடுமையான குளிரும் பனியும் சூழ்ந்த இடங்கள் என்பதால் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே அந்த ஆலயங்கள் திறந்துவைக்கப்படுகின்றன.

Sunday, 2 November 2025

வாழ்க்கையின் இலக்கணம்

 

இந்திய இலக்கியத்துக்கு கன்னடமொழியின் மாபெரும் கொடை என வசன இலக்கியத்தைக் குறிப்பிடலாம். வசன இலக்கியத்தின் மூலவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி ஆகியோர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆயினும் சிவசிந்தனை அனைவரையும் ஒன்றிணைக்கும் கண்ணியாக விளங்கியது.  கல்யாண தேசம் அவர்கள் அனைவருக்கும் இயங்குதளமாக அமைந்தது.

கற்பனையில் எழும் உலகம்

 

சிறார்களுக்கென பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் குறிப்பிடத்தக்க கவிஞராக குருங்குளம் முத்து ராஜாவைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள் பாடநூல்களில் இடம்பெறவில்லை என்றாலும் இணைய உலகில் வலம் வருகின்றன. அதன் வழியாக எப்போதும் சிறார்களுக்கு நெருக்கமானவராகவே அவர் இருந்து வருகிறார்.

Sunday, 26 October 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - புத்திசாலி மருமகள் -1

 

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன் மருமகளை ஒரு  சர்வாதிகாரியைப்போல ஒவ்வொரு நாளும் ஆட்டிப் படைத்துவந்தாள்.  உட்கார் என்றால் உட்கார வேண்டும். எழுந்திரு என்றால் எழுந்திருக்கவேண்டும். சொன்ன வேலையைச் செய்யவேண்டும். அந்த வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். அதை மீறி ஒருவர் கூட ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாது.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - புத்திசாலி மருமகள் -2

( தொடர்ச்சி....)

மாமியார் அரைமனத்தோடு மருமகள் சொன்ன செய்தியை மணியக்காரருக்குச் சொல்லி அனுப்பினாள். மணியக்காரரும் அப்போதே சம்மதம் தெரிவித்துவிட்டார். கோவில் ஆள் மாமியாரின் வீட்டுக்கு வந்து செய்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

Sunday, 19 October 2025

உப்பு - சிறுகதை

 

முத்துக்கண்ணு விழுப்புரம் போகத் தொடங்கிவிட்டான். தரகுக்காரன் வீட்டுக்கும், வியாபாரி ரங்கசாமி வீட்டுக்கும் நடையாய் நடந்து மண்டியில் சேர்த்து விட்டாள் அம்மா.

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும்

 

தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர்.

Saturday, 11 October 2025

ஒரு குடிசை காத்திருக்கிறது

 

பள்ளிக்கூட அனுபவமொன்று நினைவில் எழுகிறதுஎங்கள் ஆசிரியர் ஒருமுறை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த வீடூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்கடல்போல தளும்பிய அந்தத் தண்ணீர்ப்பரப்பை அன்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம்பொழுதுபோவது தெரியாமல் மாலை வரைக்கும் விளையாடிவிட்டு ஊருக்குத் திரும்பினோம்.

பேராசையின் அழிவுப்பாதை

  

திருஞானசம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அவற்றின் பெயர்கள் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம் ஆகும். கால ஓட்டத்தில் எலிவிருத்தமும் கிளிவிருத்தமும் காணாமல் போயின. எஞ்சியிருப்பது நரிவிருத்தம் மட்டுமே.

ஒரு வெற்றிக்குப் பின்னால்

 

எண்பத்தைந்து வயதைக் கடந்த எழுத்தாளரான சுப்ர.பாலன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், ஆன்மிகக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள் என பல இதழ்களில் இடம்பெற்று வருகின்றன.

Sunday, 5 October 2025

இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்

  

புதுச்சேரியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அந்த நூலகத்துக்குச் சென்று படிப்பேன். அவ்விதமான வாசிப்பில் என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று ஜீவன்லீலா.  சாகித்திய அகாதமி வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எழுதியவர் காகா காலேல்கர். ஆங்கிலம் வழியாக, பி.எம்.கிருஷ்ணசாமி என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.

நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம்




சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும்.

மகத்தான இயற்கை ஆர்வலர் : கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு அஞ்சலி

 

பள்ளிக்கூடத்தில் நான் படித்துவந்தபோது, காடு, விலங்குகள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்துவந்தேன். ஐம்பது, நூறு மரங்களைக் கொண்ட தோப்பைப் பார்த்தாலே பரவசமுறும் வயதிலிருந்த எனக்கு காட்டைப்பற்றிய சித்திரங்களை அளித்த படைப்புகள் என் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்தன. அன்று முழுதும் கற்பனையில் திளைத்திருக்க அச்சித்திரங்களே போதுமானவையாக இருக்கும். 

Monday, 29 September 2025

கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை

 

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறுதித்தேர்வு விடுமுறைக்காகக் காத்திருப்பேன். அந்த விடுமுறையில்தான் தாத்தா வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். போகும்போது அம்மாவோ அப்பாவோ யாராவது ஒருவர் எனக்குத் துணையாக  வந்து தாத்தா வீட்டில் விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். ஒரு வாரமோ, பத்து நாட்களோ கழிந்ததும் தாத்தா என்னைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைப்பார். நானாகவே ஊருக்கு வந்து சேர்ந்துவிடுவேன். 

பொறியற்ற விலங்குகள்

 

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுவந்த காலத்தில் நிர்வாக வசதிக்காக தமிழகம் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தாறு. தமிழ்ப்பாளையங்கள் பதினாறு. பதினாறு தமிழ்ப்பாளையங்களுக்கும் தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் பாளையம் திகழ்ந்தது. 

கன்னடத்தில் எழுதிய இந்திய நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு அஞ்சலி

  

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் ‘ஆதான் பிரதான்’ என்னும் திட்டத்தின் கீழ் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்ததாக விளங்கிய செவ்வியல் நாவல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டது. அவ்வகையில் பத்துக்கும் மேற்பட்ட பிறமொழி நாவல்கள் தமிழில் வெளிவந்தன. 1987இல் எச்.வி.சுப்பிரமணியன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ என்னும் நாவலும் அவற்றில் ஒன்று. அதன் மூல ஆசிரியர் கன்னட மொழியின் தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா. தமிழ்ச்சூழலில் அவருடைய அறிமுகம் அப்போதுதான் தொடங்கியது.

வாசலைவிட்டு அகன்றுசென்ற யானை : ரமேஷ் பிரேதனுக்கு அஞ்சலி


1995ஆம் ஆண்டில் புதுச்சேரியில் நடைபெற்ற ஓர் இலக்கியக்கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது, கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த வளாகத்தில் ஒருவர் மேசையின் மீது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் அடுக்கிவைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். வழக்கத்தில் இல்லாத ஒரு வடிவத்தில் ஒரு புத்தக அடுக்கு அங்கு இருந்தது. அதன் தோற்றத்தாலேயே ஈர்க்கப்பட்டு நான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதன் பெயர் ’புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ பிரேமும் ரமேஷும் சேர்ந்து எழுதிய புத்தகம். அந்தப் பெயர் அப்படித்தான் எனக்கு முதன்முதலாக அறிமுகமானது.

Sunday, 21 September 2025

அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்

 

சந்தியா பதிப்பகம் நடராஜனின் மகனுடைய திருமண நிகச்சியில் கலந்துகொள்வதற்காக பெங்களூரிலிருந்து  விட்டல்ராவ், மகாலிங்கம், அவர் மனைவி, நான், அமுதா, திருஞானசம்பந்தம் என ஆறு பேர் சென்னைக்குச் சென்றிருந்தோம். வழிநெடுக விட்டல்ராவுடன் உரையாடிக்கொண்டே சென்றோம். எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் அதையொட்டிப் பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் சில கதைகளும் பழைய நினைவுகளும் இருந்தன. அந்த உரையாடல்களை மட்டுமே தொகுத்தால் ஒரு தனி புத்தகமாக எழுதிவிடலாம். அவற்றைக் காதாரக் கேட்டு சுவைத்தபடி சென்றதால், ஏழுமணி நேரப் பயணம் ஏதோ அரைமணி நேரத்துப் பயணத்தைப்போல  அமைந்துவிட்டது. புறப்பட்டதும் தெரியவில்லை, இறங்கியதும் தெரியவில்லை, சென்னையை அடைந்துவிட்டோம்.

இராசபாளையம் என்னும் தகவல் களஞ்சியம்

 

இராசபாளையம் என்னும் நகரத்தின் பெயரைச் சொன்னதுமே, நான்கு செய்திகள் உடனடியாக ஒரு பொதுவாசகனின் நினைவைத் தொட்டுச் செல்லும். ஒன்று, தமிழ்மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமிராஜா. இரண்டு, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில். மூன்று ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயங்கிவரும் பென்னிங்டன் நூலகம். நான்கு, வீட்டுக்காவலுக்குப் பேர்போனது என எல்லோராலும் பாராட்டப்படும் கோம்பைவகை நாய்.  இதுவரை மேலோட்டமாக மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருந்த இச்செய்திகளை வரலாற்றுப்பின்னணியில் மிக விரிவாக தன் ‘இராசபாளையம்’ என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார் நரேந்திரகுமார்.

Sunday, 7 September 2025

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

 

இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும் மிக இயல்பாகவே எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. காலம் காலமாக வாய்மொழிக் கதையாக மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ராமனின் கதையே, அதன் செல்வாக்கு காரணமாக ஒவ்வொரு மொழியிலும் வரிவடிவம் பெற்றிருக்கிறது. வால்மீகி, துளசிதாசர், கம்பர், எழுத்தச்சன் ஆகியோர் அனைவரும் ஒரே மையக் கதையைக் காவியமாக வடித்தாலும் எழுதப்பட்ட காலம், சூழல், பண்பாடு, கலைக்கோட்பாடு சார்ந்து நுட்பமான வித்தியாசங்களைக் கொண்டவையாகவே மலர்ந்தன.

நான் யாரையும் வெறுக்கவில்லை

 

பட்டப்படிப்பு முடித்த பிறகு போக்கிடமற்ற நானும் என் நண்பர்களும் சத்திரத்துக்குப் பக்கத்தில் உள்ள மகிழ மரத்தடியிலும் ஏரிக்கரையிலும் வேலங்காட்டிலும் திரிவதும் பேசிக்கொண்டிருப்பதுமாகக் காலத்தைக் கழிப்போம். மகிழமரம் என்பது சந்திப்புப் புள்ளி. தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்து விட்டால் ஒரு சுற்று முடிந்ததாகக் கணக்கு. ஏன் அப்படி சுற்றினோம், அப்போது என்ன பேசினோம் என்பதெல்லாம் பெரிய கதை.

சிறப்பான சிறுகதைகள்

  

வாழ்க்கையிலும் கதைகளிலும் நிகழும் எதிர்பாராத திருப்பங்களைப்போல, கிருஷ்ணன் சந்தரின் பதினான்கு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு தற்செயலாக உருவாகிவிட்டது. இரண்டு மாதங்கள் முன்புவரையில் கூட இப்படி ஓர் எண்ணம் யாருடைய நெஞ்சிலும் இல்லை. உரையாடலின் போக்கில் எதிர்பாராத விதமாக கருக்கொண்டு வேகவேகமாக ஒரு தொகுதியாக மலர்ந்துவிட்டது.

Sunday, 31 August 2025

நான் கண்ட குற்றாலம்

 

தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தில் நான் தணியாத ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியர்களாக இருந்த நவநீதம் டீச்சர், கண்ணன் ஐயா, கிருஷ்ணன் ஐயா ஆகியோர். பாட்டு, கதை, பாடம் எதுவாக இருந்தாலும் அவற்றைச் சொல்லும் விதத்தாலேயே கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லச்சொல்ல பாடல்வரிகளும் கதைக்கூறுகளும் நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்.  எல்லா ஆசிரியர்களும் பாடம் படிப்பதை ஒரு விளையாட்டுக்குப் பயிற்சி கொடுப்பதைப்போல மாற்றிவிடும் திறமை கொண்டவர்கள்.

சின்னச்சின்ன கதைச்சித்திரங்கள்

 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடி முடித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் அந்த அரங்கத்திலிருந்த ஒருவர் தயக்கத்தோடு என்னை நெருங்கிவந்து புத்தகவாசிப்பில் ஒருவருக்கு எப்படி ஆர்வம் பிறக்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டார். நான் அவருக்கு விரிவாகவே பதில் சொன்னேன்.

Sunday, 24 August 2025

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 : நிறைவும் நெகிழ்ச்சியும்

 

கன்னட இலக்கியச் செயல்பாடுகளை இணையம் வழியாக உலக அளவில் விரிவாகக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடு 2021இல் புக் பிரம்மா டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிக்கெ. கடந்த நான்கு ஆண்டுகளாக புக் பிரம்மா ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பல புத்தக வெளியீடுகளையும் எழுத்தாளர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும்  நடத்திவருகிறது. 

சங்கொலிப்பாதையில் பறக்கும் பறவை

  

1982ஆம் ஆண்டில் நான் கர்நாடகத்தில் பணிபுரியத் தொடங்கினேன். அப்போது எனக்குத் தேவையான புத்தகங்களையெல்லாம் அஞ்சல் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும் பெற்றுப் படித்துவந்தேன். ஒருமுறை அன்னம் பதிப்பகம் வழியாக வந்து சேர்ந்த புத்தகக்கட்டில் ’தீபாவளிப்பகல்’ என்னும் சின்னஞ்சிறு கவிதைத்தொகுதி இருந்தது. அதன் ஆசிரியர் இரா.மீனாட்சி. எனக்கு அந்தச் சொற்சேர்க்கை மிகவும் பிடித்திருந்தது. 

Sunday, 17 August 2025

முத்து - சிறுகதை

 

’முத்தூ முத்தூ என இரண்டு தரம் கூப்பிட்டுப் பதில் வராமல் போகவே எரிச்சலுடன் முனகியபடியே நாலு எட்டு நடந்து பின்கட்டு இறவாணத்தைப் பிடித்தவாறே சாணம் பிசைந்து கொண்டிருந்த ருக்குவிடம் ‘எங்கடி போயி தொலைஞ்சிது ஒன் சிகாமணி? என்றான் ராமசாமி.

அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை

 பாவண்ணன் நேர்காணல்

கேள்விகளும் தொகுப்பும்: கமலாலயன்

 

கமலாலயன்: நீங்கள் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறார் பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள். சிறுகதை, நாவல், நூல் விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என உங்களுடைய பன்முகச் செயல்பாடுகளின் வரிசையில் சிறார்களுக்கான பாடல்களும் கதைகளும் அடங்கும். இத்துறையில் நீங்கள் இவ்வளவு கவனம் செலுத்தி எழுதிவரும் முறை வியப்பளிக்கிறது.  சிறார்களுக்கான பாடல்களை எழுதும் உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? 

Sunday, 10 August 2025

இனிய தாளம், இனிய பாடல்

 

இந்த உலகத்தில் பிறருடைய கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்க்கவும் அந்தச் சிந்தனைகளைச் சித்தரிக்கவும் தெரிந்தவர்கள் எழுத்தாளர்கள்.  கண்ணிமைக்கும் நேரங்களில் எல்லாப் பாத்திரங்களாகவும் உருமாறிச் சிந்தித்துப் பேசும் ஆற்றல் அவர்களுக்குக் கைவந்த கலை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருடைய பேச்சிலும் ஒரு தர்க்கம் இருக்கிறது. அது ஒரு கண்ணாடியைப்  போல. அதன் வழியாக ஆழ்நெஞ்சில் இருப்பவற்றை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அத்தகு எழுத்தாளர்களுக்குக் கூட சவாலான ஒரு விஷயம் இருக்கிறது. அது குழந்தைகளைப்போல சிந்திப்பது மற்றும் குழந்தைகளுக்காக எழுதுவது.

திருக்குறள் மன்றம் நல்லபெருமாள் : ஒரு தனிமனித இயக்கம்

 

நான் பெங்களூருக்கு 1989ஆம் ஆண்டில் குடியேறினேன். அப்போது பெங்களூரில் எனக்கு அறிமுகமான ஒரே நண்பர் காவ்யா சண்முகசுந்தரம். அவர்தான் எனக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுடைய வீட்டுக்கும் ஐந்து நிமிட நடை தொலைவு மட்டுமே.  அவர் வழியாகத்தான் பலர் எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் நல்லபெருமாள். அந்த நாள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நினைவிலுள்ளது.

Sunday, 3 August 2025

வளவ.துரையன் நேர்காணல் – பகுதி - ஒன்று

 

மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை 

வளவ.துரையனுடன் ஒருநேர்காணல்

( வளவ. துரையன் என்கிற புனைபெயரில் எழுதும் .. சுப்பிரமணியனின் சொந்த ஊர் வளவனூர். வளவனூரை விரும்பி தன் பெயருடன் இணைத்துக்கொண்ட இவரால் தொடர்ந்து வளவனூரில் தங்கியிருக்கமுடியவில்லை. கிருஷ்ணாபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்ததால் போக்குவரத்துக்கு வசதியாக கடலூரில் வசிக்கத் தொடங்கி, பணி ஓய்வுக்குப் பிறகும் அவர் வாழ்க்கை கடலூர் முகவரியோடு தொடர்கிறது. கடுமையான நிதிச்சிக்கலைச் சமாளித்துசங்குஎன்கிற பெயரில் ஒரு சிற்றிதழை நடத்தி வருகிறார்.