உடலழகும் மனஅழகும்
சி.ஆர்.ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சுதேசமித்திரன், கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வாசகர்களிடையில் கவனம் பெற்றார். நகரத்தில் வாழும் நடுத்தட்டுக் குடும்பங்களின் சிக்கல்களையும் தடுமாற்றங்களையும் அவருடைய படைப்புகள் மையக்கருவாகக் கொண்டிருந்தன. குறுகிய சித்தரிப்போடு ஒரு தருணத்தை மிகையின்றிக் கடந்துபோவதை அவருடைய எழுத்தின் சிறப்பியல்பு என்று குறிப்பிடலாம். இறுதிக்காலம் வரையில் தனக்குத் தெரிந்த எழுத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தார்.
அவருடைய முதல் நாவல் நீர்க்கோயில்கள். அவர் தம் வாழ்நாளில் ஏறத்தாழ
எழுபது நாவல்களை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றைய வாசகர்களுக்கு ஒருசில
நாவல்கள் மட்டுமே வாசிக்கக் கிடைக்கின்றன. அவர் எழுதிய படைப்புகளின் பட்டியலைக்கூடத்
தயாரிக்கமுடியாதபடி அனைத்தும் மறைந்துவிட்டிருக்கின்றன.
ராஜம்மாவின் முக்கியமான நாவல் ஊமத்தம்பூ. எழுதப்பட்ட காலத்தில்
அந்த நாவலை வெளியிட்டவர் யார் என்பது தெரியவில்லை. சென்னையைச் சேர்ந்த வி.மாணிக்கம்
கம்பெனி என்னும் நிறுவனம் 1975இல் ஒரு புதிய பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது.
*
மாத வருமானம் என ஒரு சிறிய தொகையை கோபாலன் சம்பாதித்துக்கொண்டிருந்த
காலத்திலேயே கோபாலன் தன் மூத்த மகள் சாருவுக்கு வெளியூரில் சுராஜ் என்கிற மாப்பிள்ளையைப்
பார்த்து திருமணத்தை முடித்துவிட்டார். துரதிருஷ்டவசமாக அவள் நீண்டகாலம் உயிருடன் வாழவில்லை.
சுராஜுடன் வாழ்ந்த இல்லறவாழ்க்கையின் அடையாளமாக ஓர் ஆண்குழந்தையை ஈன்றெடுத்த பிறகு
இந்த உலகத்தைவிட்டு மறைந்துவிட்டாள் சாரு. கைக்குழந்தையான ரகு கோபாலன் குடும்பத்திலேயே
வளர்ந்தான்.
இரண்டாவது மகளான அனுபமா பட்டப்படிப்பை முடித்துவிட்டு அலுவலகமொன்றில்
வேலை செய்துவருகிறாள். அவளுடைய வருமானமே குடும்பத்தைத் தாங்கும் தூணாக விளங்குகிறது.
அக்குடும்பத்தில் அவளுடைய சம்பளப்பணம்தான் அனைவருக்கும் தேவைப்படுகிறதே தவிர, அவளுடைய
ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்க ஒருவரும் தயாராக இல்லை.
அது சரியில்லை, இது சரியில்லை என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லிக்கொண்டிருக்காமல்
கிடைக்கும் வேலைக்குப் போகுமாறு சொல்லும் தங்கையை வசந்தனுக்குப் பிடிக்கவில்லை. அவள்
ஏதாவது பேசத் தொடங்கினாலே எரிச்சலடைகிறான். இறுதியாண்டு பட்டப்படிப்பு படிக்கிற தங்கையிடம்
கவனமாகப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற முயற்சி செய்யுமாறு சொல்வது அவளுக்கும்
பிடிக்கவில்லை. எந்த நேரமும் வானொலியில் திரைப்படப்பாடல்கள் கேட்பது, கைக்குக் கிடைக்கும்
சினிமாப்பத்திரிகைகளைப் படிப்பது, விடுமுறை நாட்களில் ஒப்பனை செய்துகொண்டு ஊரைச் சுற்றுவது
என பொழுதைக் கழிப்பதுதான் அவளுக்குப் பிடித்திருக்கிறது.
மகளுடைய வருமானத்தை எதிர்பார்த்துக் குடும்பத்தை நடத்தும் கோபாலன்
எதையும் ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தவிக்கிறார். குடும்பத்தில்
தன் குரலுக்குரிய மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதை அவர் உணர்ந்திருந்தபோதும் அதை
மீட்டெடுக்கும் எந்த முயற்சியிலும் இறங்காமல் விட்டேற்றியாக வாழ்கிறார். அந்த வீட்டில்
வளரும் குழந்தை ரகு அனுபமாவையே தன் தாய் என நினைத்து வலம் வருகிறது. அதனுடைய மழலைக்கொஞ்சலைக்
கேட்டு மகிழ்ச்சியடையும் அனுபமாவும் அக்குழந்தைக்கு உண்மைத்தாயாகவே நடந்துகொள்கிறாள்.
திருமண வயதைக் கடந்து முதிர்கன்னியாக வாழும் மகள் அனுபமாவைப்
பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சியால் நாணம் கொண்டு தலைகுனிகிறாள் அவளுடைய தாயார்
ஜயா. கோபாலனின் முயற்சியால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் அனைவரும் அவளுடைய கரிய
நிறத்தையும் உடல்பருமனையும் காரணமாகச் சொல்லி நிராகரித்துவிட்டுச் செல்கிறார்கள். அக்குறைகளைக்
கடந்து அவளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பவர்கள் அவளுடைய மாத வருமானத்தை இலக்காகக்
கொண்டவர்களாக இருக்கின்றனர். அவளோ, தன் வருமானம் தன் குடும்பத்துக்கே செல்லவேண்டும்
என்பதில் உறுதியான நிலைபாடு கொண்டவளாக இருக்கிறாள். ஆகவே அவர்களும் அவளை நிராகரித்துவிட்டுச்
செல்கிறார்கள்.
அனுபமாவின் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக
மங்கிக்கொண்டே வருவதை அவளும் உணர்கிறாள். அவளோடு படித்த பெண்கள், அவளுடன் பணிபுரியும்
தோழிகள் ஆகியோருடைய திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு தருணத்திலும்
அவளுடைய மனமும் சற்றே கலக்கத்தில் ஆழ்கிறது. பல நேரங்களில் தன் துயரத்துக்கொரு மீட்சியில்லையா
என நினைத்து பெருமூச்சு விடுகிறாள். சிறிது நேரத்திலேயே அதிலிருந்து வெளியேறி தினசரிச்செயல்களில்
மூழ்கித் தன்னைத்தானே மீட்டெடுத்துக்கொள்கிறாள்.
*
ஒருநாள் அனுபமாவின் அக்காவுடைய கணவன் சுராஜ் அவர்களுடைய வீட்டுக்கு வருகிறான். குழந்தையைப் பார்க்க வந்திருப்பதாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் அனுபமாவிடம் தனிமையில் சந்தித்து உரையாட விரும்புவதாகத் தெரிவிக்கிறான். அவளுடைய அலுவலகத்துக்கு அருகிலேயே ஒரு உணவு விடுதியில் மாலை நேரத்தில் சந்திக்கலாம் என அவளும் தெரிவித்துவிட்டு அலுவலகத்துக்குச் செல்கிறாள்.
தன்னிடம் தனிமையில் என்ன பேசப் போகிறான், என்ன கேட்கப் போகிறான்
என அன்று பகல்பொழுது முழுவதும் எதைஎதையோ நினைத்துப் பதற்றத்தில் தவிக்கிறாள் அனுபமா. சில நாட்களுக்கு முன்பு சந்தித்த அவளுடைய தோழியொருத்தி,
மறைந்துவிட்ட தன் சகோதரியின் குழந்தையின் பாதுகாப்பைக் கருதி அக்காவின் கணவரையே திருமணம்
செய்துகொண்டதாகச் சொன்ன செய்தியை ஒருகணம் நினைத்துக்கொள்கிறாள். ஒருவேளை அப்படிப்பட்ட
ஒரு கோரிக்கையோடுதான் சுராஜ் தன்னைத் தனிமையில் சந்திக்க விழைகிறானோ என்னமோ என அவள்
மனம் அலைபாய்கிறது. திருமணம் தொடர்பான ஏற்பாடுகளில் பல ஆண்டுகளாக தோல்வியையே சந்தித்துவந்த
அவளுடைய மனத்துக்கு அந்த எண்ணம் ஓர் ஆறுதலாக இருக்கிறது. அப்படியாவது தன் திருமணம்
நடைபெற்றால் சரி என்கிற முடிவை அடைகிறாள்.
அன்று மாலை, ஏற்கனவே திட்டமிட்டபடி அவளைச் சந்திக்க சுராஜ் வருகிறான்.
ஆனால் அவன் தெரிவித்த செய்திதான் வேறொன்றாக இருக்கிறது. தான் வசிக்கும் நகரத்திலேயே
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் தான் ஒரு குழந்தைக்குத்
தந்தை என்கிற செய்தியை அவளிடம் தெரிவிக்காமல் மறைத்திருப்பதாகவும் திருமணத்துக்குப்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவளிடம் உண்மையைத் தெரிவிக்க நினைத்திருப்பதாகவும் அதுவரை
குழந்தை தொடர்பான செய்தி ரகசியமாக வைத்திருக்கவேண்டிய ஒன்றெனவும் அதற்கு அனுபமாவின்
ஒத்துழைப்பு தேவையென்றும் சொல்கிறான்.
அவள் மனத்தில் கட்டியெழுப்பி வைத்திருந்த மனக்கோட்டை ஒரே கணத்தில்
சரிந்துவிழுகிறது. ஒருவேளை அவன் தேர்ந்தெடுத்திருக்கும் மணமகள் எதிர்காலத்தில் அத்திட்டத்துக்கு
உடன்படவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்கிறாள் அனுபமா. அப்படி ஒரு நிலை ஏற்படுமெனில்,
குழந்தையை ஒரு விடுதியில் சேர்க்கவிருப்பதாகத் தெரிவிக்கிறான் சுராஜ். திருமணம் செய்துகொள்வது
தொடர்பான அவனுடைய ஆர்வத்தை அவளால் புரிந்துகொள்ளமுடிகிறது. அதனால், யாரும் அக்குழந்தைக்குப் பொறுப்பேற்கவேண்டிய தேவையில்லை என்றும் அந்தப் பொறுப்பைத்
தானே ஏற்பதாகவும் உறுதியான குரலில் தெரிவித்துவிட்டு உணவுவிடுதியிலிருந்து வெளியேறுகிறாள்
அனுபமா.
*
பட்டப்படிப்பில் தோல்வியுற்ற சுபா தேர்ச்சிபெற முயற்சி எடுப்பதற்கு
மாறாக, அடிக்கடி தனக்கு அறிவுரைகள் சொல்லும் அனுபமாவை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறாள்.
எங்கோ ஒரு அலுவலகத்தில் வரவேற்பறைப்பெண்ணாக வேலைக்குச் செல்கிறாள். வாங்கும் சம்பளத்தில்
ஆடம்பரமாகச் செலவு செய்யத் தொடங்குகிறாள். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துசென்று தன்னை
ஒரு செல்வந்தரின் மகளாக வெளியுலகத்துக்குக் காட்டிக்கொள்கிறாள். தன்னைச் சந்திக்க வீட்டுக்கு
வருபவர்களை அக்கா அனுபமா சந்திக்கக்கூடாது என்றும் அந்நேரத்தில் வீட்டு மாடிக்குச்
சென்றுவிடவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள்.
ஏதோ ஒரு நிறுவனத்தில் வசந்தனுக்கும் வேலை கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட
தொகையை முன்பணமாகக் கட்டவேண்டும் என்கிற நிபந்தனைக்காக பணம் திரட்டுவதற்கு அவன் தடுமாறுகிறான்.
கடைசியில் தன் சகோதரி அனுபமாதான் தனக்காகப் பணம் திரட்டிக் கொடுத்தவள் என்கிற உண்மை
தெரியாமலேயே வேலைக்குச் செல்கிறான். அவனும் தன்னைத் தேடி வருபவர்கள் முன்னிலையில்
’அண்ணா கிண்ணா’ என்று அழைத்துக்கொண்டு வரவேண்டாம் என்றும் அந்நேரத்தில் வீட்டு மொட்டைமாடிக்குச்
சென்றுவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறான்.
குடும்பத்தைத் தன்னுடைய வருமானத்தால் தாங்கிக் காக்கும் அனுபமா
தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விதிக்கும் விசித்திரமான நிபந்தனைகளுக்கு வேறு வழியில்லாமல்
கட்டுப்படுகிறாள். பல சமயங்களில் தன் உருவத்தையும் அழகின்மையையும் நினைத்து தன்னிரக்கத்தில்
மூழ்கிவிடுகிறாள்.
சுரேஷ் என்பவன் அனுபமா வேலை செய்யும் அலுவலகத்திலேயே வேலை செய்கிறான்.
ஏமாற்றுப் பேர்வழி. வாய்ச்சவடாலில் வல்லவன். பல பெண்களோடு நெருங்கிப் பழகி ஏமாற்றுவதையே
வழக்கமாகக் கொண்டவன். தன் தங்கை சுபா அவனுடைய வலையில் விழுந்திருப்பதை அவள் மிகவும்
தாமதமாகவே உணர்ந்துகொள்கிறாள். அவனைப்பற்றி அனுபமா எடுத்துரைக்கும் சொற்கள் எதுவும்
அவளுடைய செவியைத் தொடவில்லை.
*
ஒருநாள் தற்செயலாக அனுபமா ஏற்கனவே தன் குடும்பத்துக்கு அறிமுகமாகியிருந்த
சாந்தம்மா – ரங்கையா என்கிற பாட்டி தாத்தாவை ரயில்நிலையத்துக்கு வெளியே சந்திக்கிறாள்.
காசி வரைக்கும் சென்றுவிட்டு அப்போதுதான் அவர்கள் திரும்பிவருகிறார்கள். அவர்கள் அனுபமாவைத்
தன் வீட்டுக்கே அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுடைய வீடு மிகவும் பெரியது. அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவருகிறார்கள். பாட்டியும்
தாத்தாவும் மட்டும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள்.
அனுபமாவின் நிலையை அறிந்து தாத்தாவும் பாட்டியும் பரிவு கொள்கிறார்கள். தம்மோடு வந்து இருக்கும்படி அவளிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.
தம் பேத்தியாகவே அவளைக் கருதி பாசத்தைப் பொழிகிறார்கள். சகோதர சகோதரிகளின் வெறுப்புக்கிடையில்
வசிப்பதைவிட தாத்தா பாட்டியிடம் வசிப்பது மேல் என்கிற முடிவுக்கு வருகிறாள் அனுபமா.
பெற்றோரிடம் உண்மையைத் தெரிவித்துவிட்டு குழந்தை ரகுவை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டு
தாத்தா வீட்டுக்கு வந்துவிடுகிறாள். மாதம் தவறாமல் ஒன்றாம் தேதி அன்று வீட்டுக்குச்
சென்று சம்பளப்பணத்தைக் கொடுத்துவிட்டு வரும் பழக்கத்தைத் தொடர்கிறாள்.
சுபா தான் ஆசைப்பட்ட சுரேஷையே திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால்
அவளுடைய இல்வாழ்க்கை இனிமையானதாக இல்லை. அவளைப் பணம்காய்ச்சி மரமென நினைப்பவனாக இருக்கிறான்
சுரேஷ். தேவைப்படும் நேரத்திலெல்லாம் பணம் கொண்டுவந்து தருமாறு அவளுக்கு நெருக்கடி
கொடுக்கிறான். அதுவரை அக்கா என்கிற உறவு தேவைப்படாத அவளுக்கு பணம் தேவைப்படும் கணத்தில்
அக்காவின் நினைவு வருகிறது. அடிக்கடி அவளைச்
சந்தித்து பணம் பெற்றுக்கொண்டு செல்கிறாள்.
அனுபமாவின் அலுவலகத்தில் ரங்காச்சாரி என்பவன் புதிதாக வேலைக்குச்
சேர்கிறான். அனுபமாவின் மேலாண்மைக்குணம் அவனுக்குப் பிடிக்கிறது. அவளிடம் வேலை செய்யும்
வழிமுறைகளை மெல்ல மெல்ல கற்றுக்கொள்கிறான். அவளிடம் ஒருவித பணிவோடும் அன்போடும் எப்போதும்
நடந்துகொள்கிறான். அவளை மதிப்புடன் நடத்தும் விதம் கண்டு அனுபமாவுக்கும் அவன் மீது
மதிப்பு ஏற்படுகிறது.
ஒருநாள் ரங்காச்சாரி அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறான்.
“உங்களைத் தனிமையில் சந்தித்துப் பேச விழைகிறேன். எப்போது உங்களுக்கு வசதியாக இருக்கும்
என்று தெரிவிக்கவும்” என்று அக்கடிதத்தில் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதைப்
படித்ததும் அனுபமாவின் மனம் பரபரப்படைகிறது. ஒரு தாளில் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்து
மாலை ஏழுமணியளவில் வந்து சந்திக்கும்படி கூறிவிட்டுப் புறப்படுகிறாள்.
வீட்டுக்குத் திரும்பிய அனுபமா நிலைகொள்ளாமல் தவிக்கிறாள். என்ன
பேசுவான் என்று புரியாமல் தடுமாறுகிறாள். கூடுமானவரைக்கும் தவிர்க்க நினைத்தாலும் அவள்
மனம் அவளை அறியாமல் பரபரக்கிறது.
ஏழு மணிக்குச் சரியாக அவன் வந்துவிடுகிறான். எப்படித் தொடங்குவது
என்று தெரியாமல் இருவருமே தடுமாறுகிறார்கள். “தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்” என்று
மெதுவாகத் தொடங்குகிறான் அவன். “என்ன சொல்லப் போகிறீர்கள் என்று தெரியாமலேயே எப்படி
உறுதிமொழி அளிப்பது?” என்று அவளும் சொல்கிறாள். தன்னுடைய தங்கை ஹரணியை நாளை ஒருவர்
பெண் பார்க்க வர இருப்பதாகவும் எடுப்பாக அணிந்துகொள்ள தங்கநகை என எதுவும் அவளிடம் இல்லையென்றும்
ஒருசில நகைகள் இரவலாகக் கொடுத்தால் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரும் சமயத்தில்
அணிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்றும் அவர்கள் புறப்பட்டுச் சென்ற மறுகணமே கொண்டுவந்து
திருப்பிக் கொடுப்பதாகவும் அவன் திணறித்திணறிச் சொல்லிமுடிக்கிறான்.
அதைக் கேட்ட அனுபமாவின் காதுக்குள் குப்பென்று அடைப்பதுபோல இருக்கிறது.
அவன் தன்னை மணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கப்போவதாக அவளாகவே நினைத்திருந்ததால்
ஒருகணம் சற்றே தடுமாறி பிறகு இயல்புநிலைக்குத் திரும்புகிறாள். ”நாளைக்கு தேவைப்படும்போது
வந்து வாங்கிச் செல்லுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவைக்கிறாள்.
அடுத்து சில நாட்களில் தாத்தாவை மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய
சூழல் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் மாலையில் அலுவலகம் முடிந்த கையோடு மருத்துவமனைக்குச்
சென்று தாத்தாவைப் பார்த்துவிட்டு வருகிறாள் அனுபமா. அதே மருத்துவமனையில் தாத்தாவுக்கு
அருகில் படுக்கையில் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இன்னொரு நோயாளியான ஸ்ரீவத்சன் என்பவனுக்கும்
அவள் சில உதவிகள் செய்யவேண்டியதாக இருக்கிறது.
அடுத்தநாள் அவனுக்குத் தன்னுணர்வு திரும்பிய பிறகே அவன் யார்
என்பதை அவள் தெரிந்துகொள்கிறாள். ஏற்கனவே அவன் காதலில் விழுந்து தோல்வியடைந்ததையும்
வீடு புகுந்து திருட வந்த திருடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும்
விரிவாகவே தெரிவிக்கிறான் அவன்.
அனுபமாவுக்கும் ஸ்ரீவத்ஸனுக்கும் இடையில் மருத்துவமனையில் தொடங்கிய
பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைக்கு வெளியேயும் தொடர ஆரம்பிக்கிறது. ஒரு காதல்
தோல்வியாலும் மருத்துவமனை வாசத்தாலும் அழகுக்கும் உடலமைப்புக்கும் அப்பால் ஒரு பெண்ணின்
மனத்தைக் காணும் கண்களை ஸ்ரீவத்ஸன் அடைகிறான்.
இருவரும் கருத்தொருமித்த காதலர்களாகி, சில நாட்களுக்குப் பிறகு திருமணமும் செய்துகொள்கிறார்கள்.
*
ராஜம்மா விரும்பியிருந்தால் இந்த நாவலுக்கு நடைமுறைக்கு ஏற்ற
வகையில் வேறு ஏதேனும் தலைப்பைச் சூட்டியிருக்கலாம். ஆனால் ஊமத்தம்பூ என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்துச் சூட்டியிருக்கிறார்.
அந்தத் தலைப்பின் உருவகத்தன்மை அவர் சொல்ல விழைகிற கதையின் சாயலைச் சொல்லாமல் உணர்த்திவிடுகிறது.
ஒரு தோட்டத்தில் ஒவ்வொருவரும் பலவித பூச்செடிகளை வளர்க்கிறார்கள்.
சிலர் ரோஜா வளர்க்கிறார்கள். சிலர் மல்லிகையை வளர்க்கிறார்கள். சிலர் கனகாம்பரத்தையும்
வளர்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்தச் செடியில் அரும்பு விட்டிருக்கிறதா, அரும்பு
மலராக மலர்ந்துவிட்டதா என்று கண்காணிக்கிறார்கள். நன்றாக மலரும் நாள் வரையில் காத்திருந்து
பறித்துச் சூடி மகிழ்கிறார்கள்.
அந்தத் தோட்டத்துக்குப் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த வேலியோரத்தில்
யாரும் விதைபோட்டு வளர்க்காமலேயே எதிர்பாராத விதமாக ஓர் ஊமத்தைச்செடியும் வளர்ந்துவிடுகிறது.
தோட்டத்தில் ரோஜாவும் மல்லிகையும் கனகாம்பரமும் மலரும்போது ஊமத்தம்பூவும் பூத்து கண்ணைக்
கவர்கிறது. ஆனால் ஒரு ரோஜாவைப் பறித்து சூட்டிக்கொண்டு அழகு பார்ப்பதுபோல யாரும் ஊமத்தம்பூவை
நெருங்குவதில்லை. ஒருவேளை பார்த்தாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை.
ஒருவரும் பொருட்படுத்தவில்லை என்பதால் அது வீணாகப் படைக்கப்பட்டதா
என்றொரு கேள்வி எழலாம். ஆனால் இயற்கையின் படைப்பில் எதுவும் வீணாகப் படைக்கப்படவில்லை.
ஊமத்தம்பூவுக்கும் ஒரு பயன் இருக்கிறது. அது ஒரு கடுமையான நோய்க்கு மருந்தாகும் பூ.
மருந்துக்கான தேவை உள்ளவர்கள் ஊமத்தம்பூவை நாடிச் செல்கிறார்கள்.
மூன்று சகோதரிகளைக்
கொண்ட குடும்பத்தில் பிறந்த அனுபமா பிற சகோதரிகளைப்போல இல்லை. அழகில்லாதவள், உடல்வாகு
இல்லாதவள் என்பதாலேயே பிறருடைய புறக்கணிப்புக்கு ஆளாகிறவள். ஆனால் அவள் ஒருவரையும்
புறக்கணிப்பதில்லை. அனைவரையும் தன் அன்பால் தாங்கியபடியே இருக்கிறாள். பலமுறை ஏமாற்றங்களால்
நிலைகுலைந்து வாடினாலும் ஒவ்வொரு முறையும் மிகவிரைவாக வாட்டத்தைத் துறந்து கனிவையும்
மலர்ச்சியையும் கவசமாகக் கொண்டு நடமாடத் தொடங்குகிறாள்.
நாவலில் இடம்பெற்றிருக்கும் பிற இளம்பெண்கள் அனைவரும் மற்றவர்களால்
விரும்பப்படுகிறவர்களாக இருக்கும் சூழலில்
அனுபமா தொடக்கத்திலிருந்தே ஊமத்தம்பூவைப்போலவே பிறரால் ஒதுக்கிவைக்கப்படுபவளாகச்
சித்தரிக்கப்படுகிறாள். இறுதியாக அவளை ஸ்ரீவத்ஸன் மருத்துவமனைச்சூழலில் கண்டடைகிறான்.
ஒரு மருந்துபோல அவனுக்கு அறிமுகமாகி, பிறகு அவனுடைய மனத்தில் இடம்பிடிக்கிறாள். எதையும்
மிகைப்படுத்தாமல் ஒரு நடுத்தட்டு வாழ்க்கையை சி.ஆர்.ராஜம்மா இந்த நாவலில் சித்தரித்துள்ளார்.
(கிழக்கு
டுடே – இணையதளம் – 08.07.2026)