1915இல்
காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்தவுடன் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றங்கரையையொட்டி
ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்தி, அதையே தன் செயல்பாடுகளுக்கான களமாக அமைத்துக்கொண்டார். அவரோடு
ஆசிரமத்தில் சேர்ந்து வசிக்கவும் பாடுபடவும் பலருக்கும் அழைப்பு விடுத்தார். ஆசிரமத்தில்
இணைய வருபவர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்கவேண்டியவை என பதினோரு விரதங்களின் பட்டியலை
அறிவித்தார். அவற்றை உளமார ஏற்றுப் பின்பற்றுகிறவர்களை மட்டுமே ஆசிரமத்தில் இணைத்துக்கொண்டார்.
அதுவே அங்கு எழுதாத விதியாக அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
சத்தியம்,
அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடமையின்மை, உடலுழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை, தீண்டாமை,
சமய நல்லிணக்கம், சுதேசி ஆகியவையே அவர் குறிப்பிட்ட பதினோரு விரதங்கள். அவருடைய அழைப்பை
ஏற்று வந்தவர்கள் அனைவரும் அந்தப் பதினோரு விரதங்களை ஆசிரமத்தில் வசித்த காலத்தில்
மட்டுமன்றி, தம் வாழ்நாள் முழுதும் பின்பற்றினார்கள். மேலும் தம்மைச் சுற்றி அமைந்திருக்கும்
சமூகத்தின் மீது செல்வாக்கைச் செலுத்தி அவர்களையும் பின்பற்றவைத்தனர். அந்த ஆளுமைகளின்
வாழ்க்கையும் செயல்பாடுகளும் இன்று வரலாறாக மாறியிருக்கின்றன.
தீண்டாமையைக்
கைவிடும் வரையில் இந்தியரின் வாழ்வில் ஆன்ம முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைந்த விவேகானந்தர்
மனம்கசந்து கூறிய கூற்று மெல்ல மெல்ல இந்தியரிடையில் பரவி வேரூன்றத் தொடங்கியது. அதன் பிறகு நாட்டின் பல பகுதிகளில் தீண்டாமைக்கு
எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு இடங்களில்
பல சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றி தீண்டாமையை அகற்றி அனைவரும் சேர்ந்து வாழும் எண்ணத்தையும்
நம்பிக்கையையும் விதைத்தார்கள். சபர்மதி ஆசிரமத்தைத் தொடங்கிய காந்தியடிகள் தீண்டாமை
ஒழிப்பை ஒரு விதியாகவே வகுத்து சுதந்திர இயக்கத்தோடு இணைத்து தீவிரமாகப் பரப்பத் தொடங்கினார்.
நாடெங்கும்
நிகழ்த்திய சுற்றுப்பயணங்களில் எல்லா மேடைகளிலும் தீண்டாமைக்கு எதிரான தன் கருத்தை
மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து மக்கள் மனத்தில் பதியும்படி செய்தார். தேச நிர்மாணப்பணித்திட்டத்தில்
தீண்டாமை ஒழிப்பையும் ஒரு திட்டமாக இணைத்து அதற்கென தனி அமைப்புகளையும் உருவாக்கினார்.
பொது அரசியலுக்குள் வராமல், தீண்டாமை ஒழிப்புக்காகவும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டுக்காகவும்
அந்த அமைப்புகள் செயல்பட்டன.
தீண்டாமைக்கு
எதிரான காந்தியடிகளின் பரப்புரையின் தீவிரம் பெருகப்பெருக, அச்சமூகச்செயல்பாட்டால்
ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை நோக்கி வந்து அவருடைய செயல்பாடுகளோடு இணைந்துகொண்டனர். தேசமெங்கும் பல கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
ஆதரவு பெருகி வந்த அதே நேரத்தில் அவருடைய நடவடிக்கைகள்
மீது ஒவ்வாமை கொண்டவர்களின் எதிர்ப்பும் பெருகி வந்தது.
ஒருமுறை
25.07.1934 அன்று புனே நகரத்தில் உள்ள நகராட்சி அரங்கத்தில் தீண்டாமைக்கு எதிரான ஒரு
கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொழுது அடங்கியதும்
ஏழரை மணியளவில் ஒரு கார் அந்த அரங்கத்தை நோக்கி வந்தது. அது காந்தியடிகளை ஏற்றிக்கொண்டு
வந்த கார் என நினைத்து, அரங்கத்தில் காத்திருந்த இசைக்குழுவினர் வரவேற்பு இசையை முழங்கத்
தொடங்கினர். கார் நின்றதும் காந்தியடிகள் கதவைத் திறந்து வெளியே வரும் தருணத்துக்காக
அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் காரிலிருந்து இறங்கியவர் வேறொருவர். அதே நேரத்தில்
எங்கிருந்தோ காரை நோக்கி வீசப்பட்ட ஒரு வெடிகுண்டு காருக்கு அருகில் விழுந்து வெடித்தது.
அந்த
விபத்தில் ஒரு காவலரும் அருகில் நின்றிருந்த ஐந்து தொண்டர்களும் படுகாயமடைந்தனர். அதற்குள்
குண்டு வீசிய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காந்தியடிகளின் தீண்டாமைப் பிரச்சாரத்தைப்
பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரைச் சாய்ப்பதற்குத் தீட்டிய திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
உயிர் பற்றிய அச்சமெதுவும் இல்லாத காந்தியடிகள் தம் வாழ்நாள் முழுதும் தம் கருத்தில்
உறுதிகொண்டவராக தம் செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
நம் நாட்டில்
தீண்டாமை தொடர்பான காந்தியடிகளின் செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஒரு கூட்டம்
வாழ்ந்ததுபோலவே, தீண்டாமை ஒழிப்பையொட்டிய காந்தியடிகளின் கருத்தாலும் செயல்பாட்டாலும்
ஈர்க்கப்பட்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் காந்தியடிகளின் சொல்லையே தம் வாழ்நாள்
கட்டளையாகக் கருதி தாம் வசிக்கும் பகுதிகளில் நேரிடையாகவே தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில்
ஈடுபட்டு பலருக்கும் முன்னோடியாக வாழத் தொடங்கினர். அவர்களின் ஒருவர் கேரளத்தில் மலபார்
பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஷெனாய் என்கிற சுவாமி ஆனந்த தீர்த்தர்.
ஆனந்த
தீர்த்தர் சாரஸ்வத பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றபோதும் குழந்தைப் பருவத்திலிருந்தே
வீட்டுக்கு வெளியே பிற வகுப்புகளைச் சேர்ந்த பிள்ளைகளோடு பேதம் பார்க்காமல் சேர்ந்து
விளையாடிப் பழகும் பழக்கம் உள்ளவராகவும் இருந்தார். அந்தப் பழக்கமே அவருடைய நெஞ்சில்
நல்லிணக்க எண்ணம் உருவாகக் காரணமாக இருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர்
படிக்கத் தொடங்கிய யங் இந்தியா இதழ்களும் அவருடைய எண்ணங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தன.
ஆனந்த
தீர்த்தர் காந்தியடிகளை மதித்த அதே அளவுக்கு
துறவி நாராயண குருவையும் மதித்து அவருடைய கருத்துகளையும் படித்து வந்தார். ஒரே
சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்னும் கொள்கையோடு ஆன்மிக வழியில் சமூகச் சீர்திருத்தத்தை
மேற்கொண்டிருந்த நாராயண குருவின் இயக்கம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. கோவை நகருக்கு
நாராயண குரு வருகை புரிந்தபோது அவரைச் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போது
அவர் சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தார். அதையடுத்து, பல முறைகள் நாராயண குருவுடைய
ஆசிரமத்துக்குச் சென்று உரையாடி சீர்திருத்தம் தொடர்பான தெளிவை அடைந்தார். அவர் நடத்திவந்த
தர்ம பரிபாலன சங்கத்தில் துறவியாவதற்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தபோதும்,
அவற்றையெல்லாம் தளர்த்தி ஆனந்த தீர்த்தரை நேரிடையாகவே தன் சீடராக்கிக்கொண்டார் நாராயண
குரு. ஆனந்த ஷெனாய் என்னும் பெயர் அன்று முதல் சுவாமி ஆனந்த தீர்த்தர் என மாறியது.
அதற்குப் பின் தீண்டப்படாதவர்களுக்காக உழைப்பதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார்
அவர். காந்தியடிகள், நாராயண குரு ஆகிய இருவருடைய கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த
தீர்த்தர் திகழ்ந்தார்.
கேரளத்தில்
தீண்டப்படாதவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்வதிலும் அவர்களுக்குக் கிட்டவேண்டிய சமூக
உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் ஆனந்த தீர்த்தர் தொடர்ந்து கவனம் செலுத்தி உழைத்தார்.
மலபார் பகுதியில் பையனூரில் ஸ்ரீ நாராயண வித்யாலயம் என்னும் பெயரில் ஒரு பள்ளியைத்
தொடங்கினார். தீண்டப்படாதவர்களுக்கு ஆதிக்க சாதியினரால் மறுக்கப்பட்ட பொதுப்பாதைகளைப்
பயன்படுத்துதல், பொதுநீர்நிலைகளில் நீர் எடுத்தல், முடிதிருத்த நிலையங்களில் முடிவெட்டிக்கொள்தல்,
விடுதிகளில் சாப்பிடுதல், கோவில் நுழைவு போன்ற பல உரிமைகளுக்காக தீண்டப்படாதவர்களோடு
இணைந்து நின்று அன்றைய தினங்களில் நிலவிய சமூகக்கட்டுபாடுகளை உடைத்தார். எல்லா இடங்களிலும்
காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியிலேயே போராட்டங்களை நடத்தினார்.
ஆனந்த
தீர்த்தர் மேற்கொண்ட பல போராட்டங்களைப்பற்றிய செய்திகளையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்
காட்டிய உறுதியைப்பற்றியும் பல கள ஆய்வுகளுக்குப் பிறகு செய்திகளைத் திரட்டி ஆய்வாளர்
ஏ.எம்.அயிருக்குழியில் மலையாள மொழியில் எழுதிய முக்கியமானதொரு நூலை மொழிபெயர்ப்பாளரான
நிர்மால்யா தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆனந்த தீர்த்தர் சட்டத்தின் துணையோடு மேற்கொண்ட
பல்வேறு போராட்டங்களையும் அவற்றுக்காக அவர் அலைந்த அலைச்சல்களையும் அவமானங்களையும்
இந்தப் புத்தகத்தின் வழியாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
மதுரையை
ஒட்டிய மேலூர் பகுதியிலும் ஆனந்த தீர்த்தர் பல ஆண்டுகள் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான
சேவைகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர் என்றபோதும், தமிழில் அவரைப்பற்றி ஒருசில கட்டுரைகளுக்கப்பால்
தனித்ததொரு நூலாக எதுவும் ஆவணமாக்கப்படவில்லை. அது தமிழகத்தின் பெருந்துயரம். நல்லூழாக,
மலையாளத்தில் ஆனந்த தீர்த்தரைப்பற்றிய நூலை ஆய்வாளர் ஏ.எம்.அயிரூக்குழியில் எழுதியிருக்கிறார்.
அவர் பாடுபட்டுத் திரட்டியிருக்கும் பல்வேறு குறிப்புகள் ஆனந்த தீர்த்தர் தம் வாழ்நாளில்
சந்தித்த பல்வேறு சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு நின்ற அவருடைய மன உறுதியையும் உணர்த்துகின்றன.
ஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை முழுக்க முழுக்க ஒரு சாகசப்பயணத்துக்கு நிகரானதாக உள்ளது.
நிர்மால்யாவின் முயற்சியினால் அந்த மாபெரும் மனிதரின் வாழ்க்கை வரலாற்றை இப்போது தமிழிலேயே படிக்கும் வாய்ப்பு
நமக்குக் கிடைத்துள்ளது.
இந்தப்
புத்தகத்தில் பின்னிணைப்பாக, ஆனந்த தீர்த்தர் நடத்திவந்த ஸ்ரீநாராயண வித்தியாலயத்தில்
கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் சிலர் எழுதிய அனுபவக்குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொருவரும் சுவாமியிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் சுவைபடக் கோர்வையாக முன்வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் சுவாமியின் சாதனைகளையும் முயற்சிகளையும் சித்தரிக்கின்றன.
அனைத்தும் இணைந்து ஒரு மாபெரும் வாழ்க்கை வரலாற்றைப் படித்த மனநிறைவை அளிக்கிறது. எல்லா
விதங்களிலும் முக்கியமானதொரு நூலைத் தமிழ் வாசக உலகத்துக்கு மொழிபெயர்த்து அளித்திருக்கும்
நிர்மால்யாவுக்கு வாழ்த்துகள்.
(நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பில் பரிசல் பதிப்பகத்தின்
வெளியீடாக வந்திருக்கும் ஏ.எம்.அயிரூக்குழியில் எழுதிய ‘ஆனந்ததீர்த்தர் : தலித் உரிமையின்
தனிக்குரல்’ என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை)