Home

Saturday, 13 December 2025

கவித்துவமான முடிவு

  

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் புனைவு வெளிப்படும் வடிவம் மாற்றமடைந்தபடி வருகிறது. சமீப ஆண்டுகளில் பலர் குறுங்கதைகள் என்னும் வடிவத்தில் எழுதிவருகிறார்கள். அவ்வரிசையில் சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி போன்றோர் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள்.

பெரும்பாலும் கவிதைக்குரிய கணநேரக் காட்சியையும் சிறுகதைக்குரிய சித்தரிப்பையும் ஒருங்கே கொண்டு கவித்துவமான முடிவோடு குறுங்கதைகள்  அமைகின்றன.  இத்தகு படைப்புகள் வாசகர்கள் நெஞ்சில் உடனடியாகப் பதிந்துவிடுகின்றன என்பதால் இதை ஒரு பொது இலக்கணமாகக் கொள்ளலாம். தம் கவிதைத்தொகுதிகளால் ஏற்கனவே வாசக கவனம் பெற்ற கவிஞர் ந.பெரியசாமி தற்போது குறுங்கதைகளை எழுதி ’காற்றுக்குடுவை’ என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்திருக்கிறார்.

இச்சிறிய தொகுப்பில் 31 குறுங்கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் கதையோட்டத்துக்குப் பொருந்தும் வகையில் அழகாக ஓர் ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. அடிப்படையில் பெரியசாமி ஒரு கவிஞர் என்பதால், அவரால் மிக இயல்பாகவும் வாசகர்களைக் கவரும் வகையிலும் சிறப்பான குறுங்கதைகளை எழுத முடிந்திருக்கிறது.

முதல் கதையான ’நட்சத்திரங்கள்’ ஏறத்தாழ ஒரு கவிதைக்கே உரிய அழகோடு அமைந்துள்ளது. மலைமீது அமைந்திருக்கும் சந்திரசூடேஸ்வர் கோவிலுக்கு பலர் வருகிறார்கள். முகப்பில் உள்ள நந்தியின் காதோரமாகக் குனிந்து ஓர் இளம்பெண்  முதலில் தன் பிரார்த்தனையை ஓசையின்றிச் சொல்லிவிட்டுச் செல்கிறாள். அவளையடுத்து ஒரு குழந்தையை ஏந்திவந்த பெண்ணொருத்தியும் நந்தியின் காதில் ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டுச் செல்கிறாள். இப்படி அவளைத் தொடர்ந்து இன்னும் பலரும் நந்தியிடம் தனிப்பட்ட விதத்தில் ஏதோ ஒரு செய்தியைத் தெரிவித்துவிட்டு, சுமையை இறக்கிவைத்த விடுதலையுணர்வோடும் மலர்ச்சியோடும் நடந்துபோகிறார்கள்.

பொழுது மங்கி இருள் சூழ்ந்த நேரம் அது. வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக ஒளிரத் தொடங்குகின்றன. அக்காட்சி, நந்தியின் காதில் பெண்கள் சொன்ன ரகசியச்செய்திகளே வானமெங்கும் நட்சத்திரங்களாக உருமாறி நிறைந்திருப்பதுபோன்ற மயக்கத்தோற்றத்தை உருவாக்குகிறது. இருவேறு காட்சிகள் ஒரே நாரில் தொடுக்கப்பட்ட மலர்களாக இணைந்து கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன.

‘றெக்கைகள்’ இன்னொரு முக்கியமான குறுங்கதை. ஏதோ காரணத்தால் ஒருவனுக்கு வாழ்வு கசந்து போகிறது. தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறான்.  தன் ஊருக்கு அருகிலேயே உள்ள மலையின் மீது ஏறி அங்கிருந்து குதிக்கிறான். அவன் கீழே விழுவதற்குப் பதிலாக, எதிர்பாராத விதமாக அவன் உடலில் முளைத்த இறகுகளின் உதவியோடு காற்றுவெளியில் பறக்கத் தொடங்கிவிடுகிறான். பிறகு, எங்கோ ஓரிடத்தில் இறங்கி வீட்டுக்குத் திரும்பிவிடுகிறான்.

தன் முயற்சி பலிக்கவில்லையே என்பதில் அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. பிறருக்கு மிக எளிதாக  கைகூடுகிற ஒரு சின்ன செயலைக்கூட தன்னால் சரியாகச் செய்யத் தெரியவில்லையே என துயரத்தில் மூழ்குகிறான். தன் தோல்வியுணர்ச்சி அவனை உள்ளூர அரித்தபடி உள்ளது. சில நாட்கள் கழித்து மீண்டும் அதே முயற்சியில் இறங்குகிறான்.

மலையை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். யாரோ ஒருவர் அவனை கைப்பேசியில் அழைக்கிறார்கள். ‘காற்றுக் குதிரையிலே என் கார்குழல் தூதுவிட்டேன்’ என்னும் பாடல்வரிகள் அழைப்புமணி ஓசையாக ஒலித்தபடி இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அந்த அழைப்பைப் பொருட்படுத்தாமல் அவன் மலையை நோக்கி ஓய்வின்றி நடந்தபடி இருக்கிறான். இறுதியாக உச்சியை அடைந்து இந்த முறையாவது வெற்றி கிடைக்கவேண்டும் என நினைத்தபடி கண்களை மூடிக்கொண்டு கீழே குதிக்கிறான்.

எதிர்பாராத விதமாக மீண்டும் அவன் உடலில் இறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன. கீழே விழுவதற்குப் பதிலாக  காற்றுவெளியில் பறக்கத் தொடங்குகிறான். அக்கணத்தில் அவன் தன் துரதிருஷ்டத்தை நினைத்துக் கலக்கமடைகிறான். அதே சமயத்தில் அதில் தனக்கான ஏதோ ஒரு செய்தி அடங்கியிருப்பதாகவும் அவன் நினைக்கிறான். உடனே தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு வாழ்வதில் ஆர்வம் கொள்ளத் தொடங்குகிறான். காட்சிகளுக்கு இசைவான மனமாற்றம் நல்லதொரு அனுபவமாக மலர்கிறது.

’எறும்பின் வாசிப்பு’  நல்லதொரு சிறுகதை. தங்கமுட்டை இடும் வாத்தை அறுக்கும் குடியானவனைப்பற்றிய பழைய நீதிக்கதையின் சாயலைக் கொண்டிருந்தபோதும் படிப்பதற்குச் சுவாரசியமாக இருந்தது. அக்கதையில் ஒரு பேராசிரியர் ஓர் எறும்பை வளர்க்கிறார். அதற்குப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறார். கவிதை, சிறுகதை, நாவல் என எல்லாவற்றையும் அந்த எறும்பு ஆவலோடும் வேகமாகவும் படித்துத் தெரிந்துகொள்கிறது. அந்த எறும்பை அந்தப் பேராசிரியர் எப்போதும் தன் சட்டைப்பையிலேயே வைத்திருக்கிறார். வகுப்பில் பாடம் நடத்தும்போது ஏதாவது ஒன்று மறந்துபோகும் தருணத்தில் அந்த எறும்பின் உதவியை நாடி அதை மறைத்துவைத்திருக்கும் சட்டைப்பையைத் தொட்டுத் தடவிவிடுகிறார். உடனே அவருக்கு மறந்துபோன செய்தி நினைவுக்கு வந்து விடுகிறது. இடைவெளி இன்றி அவரால் மிக எளிதாகப் பாடம் நடத்த முடிகிறது.

எறும்புக்கு அவர் கற்றுக்கொடுத்த கல்வி வீண்போகவில்லை. அவருக்கு உற்ற துணையாக விளங்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பத்திரிகையில் ஓர் இலக்கியப்போட்டி அறிவிப்பு வெளியாகிறது. அப்போட்டியில் கலந்துகொள்ள அந்தப் பேராசிரியரும் விரும்புகிறார். அதற்குத் தயாராகும் பொருட்டு இரவுபகல் பாராமல் தொடர்ச்சியாகப் படிக்கிறார்.  அந்த எறும்பையும் படிக்கவைக்கிறார். விடிந்தால் போட்டிநாள் என்கிற நிலையில் நீண்ட நேரம் கண்விழித்து படித்துவிட்டு பின்னிரவில் உறங்கத் தொடங்குகிறார் பேராசிரியர். விடிந்துவிட்டதை உணர்த்த அவருடைய சட்டைப்பையில் இருந்த எறும்பு வழக்கம்போல லேசாக அவரைக் கடிக்கிறது. உறக்கமயக்கத்தில் மூழ்கியிருந்த பேராசிரியருடைய கை தன்னிச்சையாக உயர்ந்து கடிபட்ட இடத்தை அடித்ததும் அந்த எறும்பு செத்துவிடுகிறது. நீண்ட நேரத்துக்குப் பிறகு உறக்கம் தெளிந்து, போட்டிக்குத் தயாராகவேண்டுமே என்கிற பரபரப்போடு எழுந்த சமயத்தில்தான் பேராசிரியர் செத்துக் கிடக்கும் எறும்பைப் பார்க்கிறார். அக்கணமே அவரும் மயங்கிச் சரிகிறார். மனித வாழ்வில் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அனிச்சைச்செயல்கள் போல அடுத்தடுத்து நிகழ்வதை ஒருவராலும் தடுக்கமுடிவதில்லை.

’நாவல் மரம்’ படித்ததுமே முகம் மலரவைக்கிற குறுங்கதை. கோடைகால வெயில் நாளில் ஓர் எழுத்தாளன் ஊருக்கு வெளியே நீண்ட தூரம் நடந்துசெல்கிறான். நீர்வேட்கை அதிகமாக உள்ளது. களைப்பின் காரணமாக வறண்டுபோன ஒரு குளத்தருகில் உள்ள நாவல்மரத்தடியில் அமர்கிறான். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட தென்படவில்லை. அலுப்பும் சலிப்புமாக பெருமூச்சு விடும் தருணத்தில் பனைமர உச்சியிலிருந்து ஒரு சொட்டு நீர் இறங்கி அவனுடைய கைமீது விழுகிறது.

அந்தத் தீண்டல் அவனுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. அப்போது அவனுடைய கைப்பேசியில் ஓர் அழைப்பு வருகிறது. அவனுக்கு வந்த கடிதத்தை அடுத்தவீட்டில் கொடுத்துவிட்டுச் செல்வதாக ஒரு கூரியர்காரர் தெரிவிக்கிறார். கூரியரில் கடிதம் அனுப்பியவர் யார் என்னும் ஆவல் அவன் மனத்தைக் குடைகிறது. மரத்தடியிலிருந்து எழுந்து மீண்டும் வீட்டை நோக்கி நடந்துவருகிறான். அடுத்த வீட்டுச் சிறுமியிடமிருந்து கடிதத்தை வாங்கி வேகமாகப் பிரித்து வாசிக்கிறான். யாரோ முகம் தெரியாத வாசகர் அவனுடைய படைப்பைப்பற்றி உற்சாகமூட்டும் வரிகளை எழுதியிருக்கிறார். அவ்வரிகள் அவனை ஊக்கம் கொள்ள வைக்கின்றன.

இரு வேறு காட்சிகளை அழகாக இணைத்து குறுங்கதையை எழுதியிருக்கிறார் பெரியசாமி. பனையிலிருந்து உதிரும் ஒரு சொட்டுநீர் போல எங்கிருந்தோ யாரோலோ எழுதப்படும் ஒற்றை வரிக் கடிதம் எழுத்தாளனின் மனத்தில் ஊக்கத்தை நிரப்புகிறது. இந்த உலகத்தில் கைவிடப்பட்டவர்கள் என ஒருவரும் இல்லை என்பதையும் ஒன்று இன்னொன்றைத் தாங்கிப் புரப்பதுதான் உலகத்தின் இயற்கை என்பதையும் புரிந்துகொள்ள வைக்கிறது.

கவித்துவமான முடிவுகளால் வாசகர்களை மேன்மேலும் சிந்திக்கத் தூண்டும் குறுங்கதை வடிவத்தில் பெரியசாமி கொண்டிருக்கும் ஆர்வத்துக்கு காற்றுக்குடுவை நல்லதொரு சாட்சியாக விளங்குகிறது. இத்தொகுதி, குறுங்கதை எழுத்தாளர்களின் பட்டியலில் பெரியசாமி தவிர்க்கமுடியாத ஒரு பெயராக மாற்றியிருக்கிறது. தான் வெளியிடும் ஒவ்வொரு புத்தகத்தையும் கலையழகுடன் வெளியிடும் தேநீர் பதிப்பகம் இத்தொகுதியையும் மிகச்சிறந்த முறையில் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

 

 

(காற்றுக்குடுவை – குறுங்கதைகள். ந.பெரியசாமி, தேநீர் பதிப்பகம், 24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை-635851. விலை.ரூ.110)

 

(புக் டே – இணையதளம் – 23.11.2025)