Home

Sunday, 27 September 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 13

 

மனிதர்களும் தெய்வமும்

தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ்.ராமையா என்கிற வத்தலகுண்டு ராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாக பள்ளியில் நான்காவது படிவம் வரை மட்டுமே படித்தார். படிப்பை நிறுத்திய பின்னர் ஏறத்தாழ பத்தாண்டு காலம் வெவ்வேறு ஊர்களில் துணிக்கடை விற்பனையாளராகவும் உணவுவிடுதிப் பணியாளராகவும் பணிபுரிந்தார்.

அன்பின் வடிவங்கள்

 

சிறார்களுக்கான பாடல்களையும் கதைகளையும் தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா. அவருடைய படைப்பாக்கத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் வந்துள்ளன. எளிமையும் கற்பனையும் கலந்த அழகான பின்னணியில் அவர் எழுதும் கதைகள் சிறார்களை மிகவிரைவாக ஈர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றன. அக்கதைகள் வாசிப்போருக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கின்றன.

Saturday, 19 September 2026

அரிதான செயல்

 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் முக்கியமான மூத்த படைப்பாளர் விட்டல்ராவ். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கலை விமர்சகர், ஓவியர், திரைப்படஞானம் மிக்கவர் என பன்முகம் கொண்ட படைப்பாளர்.

அகப்பயணத்தின் விசித்திரம்

  

மன ஓட்டத்தின் தடத்தில் எந்த முன்முடிவுமின்றி பயணம் செய்து, அது சென்று நிற்கும் புள்ளியை எந்தப் பூச்சுமின்றி முன்வைக்கும் எழுத்தாளர் என மறைந்த மூத்த எழுத்தாளர் சூடாமணியைக் குறிப்பிடலாம். அவருடைய எழுத்துலகத்தைப் பொதுவாக அகப்பயணத்தின் அனுபவக்குறிப்புகள் என அடையாளப்படுத்தமுடியும்.

பாவண்ணன் சிறுகதைகள் - இரண்டாம் தொகுதி - முன்னுரை

 

ஒரு சொல்

 

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எண்ணற்ற சிறுபத்திரிகைகள் வெளிவந்தன. எல்லாமே தனிச்சுற்றுக்கான இதழ்கள். எந்த இதழுக்கும் கால வரையறை எதுவும் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என வெளிவருபவையாகவே அவை இருந்தன. தளம், புதிய நம்பிக்கை, அரும்பு, மன ஓசை, புதிய மனிதன், புது எழுத்து, இங்கே இன்று, கதைசொல்லி, ஒரு, சிறுகதைக்களஞ்சியம், கேரளத்தமிழ், அன்னம் விடு தூது என நீண்டு செல்லும் வரிசையில் அமைந்த அந்த இதழ்கள்தாம் நான் என் படைப்புகளுக்குத் தளம் அமைத்துக்கொடுத்தன.

Sunday, 13 September 2026

மனம் கவர்ந்த பாடல்கள்

 

சங்க காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் கவிஞர்கள் அனைவரும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகையான வடிவங்களில் எழுதினார்கள். திருத்தக்கதேவர் விருத்தப்பாக்களை எழுதி உயிரூட்டினார். மரபான வடிவங்களை மீறி மக்களைக் கவர்வதற்காக புதிய வடிவங்களில் பாடல்களை எழுதுவது இலக்கிய உலகத்தின் தேவையாக இருந்தது. அருணகிரிநாதர் சந்தப்பாடல்களை எழுதி அவ்வடிவத்துக்கு ஒரு தொடக்கத்தை உருவாக்கினார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்துப் பாடல்களை எழுதி மற்றொரு பாதையை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து கண்ணி, கும்மி என பல புதிய வடிவங்கள் உருவாகின. பாரதியாரும் பாரதிதாசனும் இருவகை வடிவங்களிலும் எழுச்சியோடு பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் இடம்பிடித்தனர்.

சின்னச்சின்ன மாணிக்கங்கள்

 

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் இளம் வாசகர் வட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு நல்ல இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவருகிறது. அப்பயிற்சியின் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஒருசில மாணவமாணவிகள் இலக்கிய நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சொந்தமாக எழுதும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கற்பனைத்திறனும் எழுத்தாற்றலும் கைவரப்பெற்ற மாணவமாணவிகளின் சிறப்பான படைப்புகள் நூல்வடிவில் வெளியாகி பிறர் கவனத்தை ஈர்க்கின்றன.

Sunday, 6 September 2026

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026 : எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம்

 

தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவரும் மூத்த, இளம் படைப்பாளிகளை முன்னிறுத்தவும் அம்மொழிகளுக்கிடையில் நிகழவேண்டிய இலக்கியப் பரிமாற்றத்தின் தேவையை உணர்த்தவும் கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரில் வெற்றிகரமான வகையில் புக் பிரம்மா இலக்கியத்திருவிழா நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குரிய திருவிழா கடந்த 21.08.2026 முதல் 23.08.2026 வரை செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. கன்னட நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிகெ இந்த அமைப்பின் இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

ஒன்பது குன்று - முன்னுரை

  

வெவ்வேறு காலகட்டங்களில் சந்திக்க நேர்ந்த சில அரிய மனிதர்களைப்பற்றியும் சில அரிய தருணங்களைப்பற்றியும் சிற்சில சித்திரங்களை அனுபவக்கதைகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். கதைக்கட்டுரைகள் அல்லது கட்டுரைக்கதைகள் என்று இவற்றைச் சொல்லலாம். ஏற்கனவே இந்தக் கட்டமைப்பில் தீராத பசிகொண்ட விலங்கு, இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள், ஒட்டகம் கேட்ட இசை போன்ற தொகுப்புகள் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுதியைக் கருதலாம்.

சேய்மைக்காட்சிகளும் அண்மைக்காட்சிகளும்

 

ஆறு மாடிகளைக் கொண்ட பெரியதொரு வணிகவளாகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். ஆறாவது மாடியில் நண்பருடைய ஓவியப்பயிற்சிக்கூடம் இருந்தது. அவரைப் பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான் அங்கு போயிருந்தேன். நான் போன நேரத்தில் அவர் இல்லை. அங்கு ஓவியம் வரைந்துகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்னிடம் காத்திருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமராமல் அவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

Sunday, 30 August 2026

ஒவ்வொரு பாடலும் ஒரு சொல்லோவியம்

  

’காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’, ’அக்கா குருவி’ போன்ற சிறார் பாடல் தொகுதிகள் வழியாக தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் குருங்குளம் முத்துராஜா. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறார்களுக்கான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.  புதிதாக வெளிவந்திருக்கும் ’சேட்டைக்கார சின்னா’ என்னும் பாடல் தொகுதி வழக்கம்போல சிறார்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் வேட்டை: இலட்சியவாதமும் சந்தர்ப்பவாதமும்

 

மாயமான் என்பது கம்பராமாயணத்தில் கம்பர் பயன்படுத்திய  சொல். வனவாசத்தின்போது ராமனும் சீதையும் லட்சுமணனும் தண்டகாரண்யம் என்னும் வனப்பகுதியில் வசித்துவருகிறார்கள். ஒருநாள் மாலைப்பொழுதில் ராமனும் சீதையும் தனித்து உரையாடி மகிழ்ந்திருந்த வேளையில் அவ்வழியாக ஒரு மான் ஓடிச் செல்கிறது. பொன்னிற மேனி கொண்ட அந்த மானின் அழகில் மயங்கிய சீதை, அந்த மானைத் தனக்குப் பிடித்துக் கொடுக்குமாறு ராமனிடம் கேட்கிறாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வேகத்தில் உடனடியாக மானைத் தேடிப் புறப்படுகிறான் ராமன்.

Saturday, 22 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 12

 சமுத்திரமும் சாக்கடையும்


சமுதாயச் சீரழிவுகளையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் வெளிப்படையாகவும் அறச்சீற்றத்தோடும் முன்வைக்கும் விந்தனின் படைப்புகள் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. அவர் எழுதிய சிறுகதைகளையும் நாவல்களையும் போலவே அவருடைய கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவருடைய ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்கிற கட்டுரை தொழிலாளர் பிரச்சினையை சமூகத்தில் வாழ்கிற அனைவரும்  புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டது. ’சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்னும் கட்டுரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.

போட்டிகளும் பரிசுகளும்

 

காலை நடைப்பயிற்சிக்குப் புறப்படும் நேரத்தில் வழக்கமாக என்னோடு சேர்ந்துகொள்ளும் நண்பர் இரண்டு நாட்களாக  வரவில்லை.  ஏதேனும் அவசர வேலையாக  அதிகாலையிலேயே வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றிருக்கக்கூடும் என முதல்நாள் நினைத்துக்கொண்டேன். ஆனால் இரண்டாவது நாளும் அவர் வரவில்லை.  அவருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என  எதைஎதையோ நினைத்து மனம் குழப்பமடையத் தொடங்கியது. அதனால் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கைப்பேசி வழியாக அவரை அழைத்தேன்.

Sunday, 16 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 11

 

செல்வமும் காமமும்

தமிழ் நாவல் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை. அவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் ரங்கூன் பேப்பர் கரன்சி அலுவலகத்தில் கருவூலப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தவர். அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். சைவ சித்தாந்தத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஆறு நாவல்களை எழுதியிருக்கிறார். முதல் நாவலாக வெளிவந்த ‘கமலாட்சி’ ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும். (ஆரம்பப் பதிப்புகளுக்குப் பிறகு அந்தத் தலைப்பு ‘கமலாட்சி சரித்திரம்’ என மாறிவிட்டது) இந்த நாவல் 1903ஆம் ஆண்டில் சென்னை ஆர்.எ.சிவசாம்பு வெளியீடாக முதன்முதலில்  வெளிவந்தது.

அது ஒரு வசந்த காலம்

 

கடந்த அறுபதாண்டுகளாக தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவ். சிறுகதை, நாவல், குறுநாவல், அனுபவக்கட்டுரைகள், ஓவியம், திரைப்படம், கோட்டைகள் தொடர்பான கட்டுரைகள் என ஒவ்வொரு தளத்திலும் அவர் மிகச்சிறந்த படைப்புகளை எழுதியிருக்கிறார். அவற்றின் நீட்சியாக இப்போது தன் பள்ளிக்கால நினைவுகளை முன்வைத்து அவர் புக் டே இணையதளத்தில் ‘வகுப்பறைக்கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். அக்கட்டுரைகளின் ஒரு பகுதி இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

Sunday, 9 August 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 10

 

பொய்யும் மெய்யும்

தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு புதிய மரபை உருவாக்கியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.  அவர் எழுதிய ’பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நாவல் 1879ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் எழுத்துமுறையால் ஈர்க்கப்பட்ட பல எழுத்தாளர்கள் அதே வடிவத்தில் எண்ணற்ற நாவல்களை எழுதியிருக்கக்கூடும். ஆனால் அவையனைத்தும் காலத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் கரைந்துபோய்விட்டன.

செடி - சிறுகதை

 

 காலை வெளிச்சத்தில் குலுங்கிக்கொண்டிருந்தன செடிகள். மலர்ந்த பூக்கள் கண்களை இழுத்தன. மலரின் ஒவ்வோர் இதழிலும் அக்காவின் முகம் தெரிந்தது. சிரிப்பு தெரிந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவுகளா என உடம்பு சிலிர்த்தது. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளின் தோள்களைத் தொட்டேன். அப்போதுதான் வீட்டு ஓனரம்மா கொடுத்தனுப்பியிருந்த தோசைகளைச் சாப்பிட்டு முடிந்திருந்தோம்.

Sunday, 26 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 9

 

மதில்கள்

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ’கலைமகள்’ மாத இதழ், தொடக்கத்தில் தேசிய நோக்கையும் மரபான பண்பாட்டுப் பார்வையையும் வெளிப்படுத்தும் படைப்புகளோடு வெளிவந்தது. அப்போது, உ.வே.சா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, டி.கே.சிதம்பரநாத முதலியார், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை என பல எழுத்தாளர்கள் கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர். 

ஒளி பரவட்டும்

 

எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் திரெளபதை அம்மன் திருவிழாவுக்கு நாள் குறித்து அறிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து, அந்தக் கோவில் வளாகத்தில் ஒரு பெரியவர் தொடர்ச்சியாக  பதினெட்டு நாட்கள் மாலை வேளையில் மகாபாரதம் படிப்பார். முக்கியமான பாடல்களைப் பாடி, அதைப் புரிந்துகொள்ள ஏதுவாக பல துணைக்கதைகளையும் சொல்வார்.

Monday, 20 July 2026

இன்னும் ஒரு கணம் - சிறுகதை

 

தோழிகள் சூழ நடந்துவந்த கிருஷ்ணை ரத்தின மேடையில் கிழக்கு முகமாக உட்கார்ந்ததைப் பார்த்த கணத்திலேயே தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டான் துரியோதனன். 

Sunday, 19 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 8

 

இரண்டு வாசல்கள் 

துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்க காலத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்த வேலையைத் துறந்து சென்னைக்குக் குடிபெயர்ந்து பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய அவர் தன் எழுத்தாற்றலால் தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவராக மலர்ந்தார். பொதுவாசிப்புக்குரிய பல நூல்களையும் சிறார்களுக்கான கதைகளையும் நாவல்களையும் எழுதினார். என் பள்ளி நாட்களில் அவர் எழுதிய ’சி.ஐ.டி. சிறுவர்கள்’ என்கிற நாவலை விரும்பிப் படித்த நினைவுள்ளது.

அடுக்கு மாளிகை - சிறுகதை

 

நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியபடி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான் குப்புசாமி. உண்மையில் பம்பரம் எடுப்பதற்காகத்தான் வெளியேயிருந்து உள்ளே வந்திருந்தான் அவன். அரைக்கணத்துக்குள் மனம் மாறிவிட்டது. பம்பரத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான். 

Thursday, 16 July 2026

பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்

 

பதினோராம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் பள்ளிக் கூடத்தில் பரபரப்பு கூடிவிட்டது. தினந்தினமும் காலைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பள்ளிஇறுதியின் வெற்றிக்கும் வாழ்க்கைக்குமான தொடர்பைப் பலவிதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் பள்ளியின் முன்னால் மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மேற்கு வங்காளத்துக்குப் போன கதை ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கம் வழங்கும் பொருட்டுச் சொல்லப்பட்டது. 

மாற்றமும் மாற்றமின்மையும்

  

நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய காலகட்டம் அது. ஏறத்தாழ கால்நூற்றாண்டுக் காலம் நகர்ந்து செல்வதை வெவ்வேறு மாற்றங்களின் ஊடாக உணர்த்தி, இறுதியில் தாயைப் பறிகொடுத்துவிட்டு தனிமையில் வந்து நிற்கிற பேரப்பிள்ளை சுடலையை எடுத்து வளர்த்து பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற காலகட்டத்தோடு படைப்பு நிறைவெய்துகிறது.

Sunday, 12 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 7

 

மாபெரும் புதிர்


கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக்குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா காந்தியத்தொண்டராக மட்டுமன்றி எழுத்தாளராகவும் வாழ்ந்தவர். ’கரட்டூர் ராமு’ என்னும் தலைப்பில் அவர் ஒரு நாவலை எழுதியுள்ளார். கல்யாணசுந்தரத்தின் மூத்த சகோதரர் ஆண்டிப்பட்டியில் காந்திய ஆசிரமத்தை நடத்தி கதருக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் ஆதரவாகச் செயல்பட்டவர். வாழ்நாள் முழுதும் எளிய மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

நெருப்பு வளையங்கள் - சிறுகதை

 

நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கும் தாவி செருகப்பட்ட அம்புபோல நின்றாள். முதல் சுற்று முடிந்தது. பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்தாள். 

Sunday, 5 July 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 6

 

சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். பேனா மன்னர் என்றும் தென்காசிச்சிங்கம் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட அவர்   தென்காசியைச் சேர்ந்தவர்.  ஜனயுகம், பாரதம், , தமிழ்நாடு, தேசபக்தன், நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணியாற்றி தன் மொழியாளுமையை வளர்த்துக்கொண்டார்.

வழி - சிறுகதை

 

வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது. 

Sunday, 28 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 5

 

தன்னலமும் தன்மானமின்மையும்

பாவண்ணன்

 

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசக கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து எழுதுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் உள்ளதை உள்ளபடி கூறும் கச்சிதமான காட்சிச்சித்திரங்களின் தொகுப்பாக வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புகள் இயல்புவாத எழுத்துமுறையின் முன்னுதாரணங்களாக விளங்கின. அவருடைய நாவல்களை ஒரு காலகட்டத்தின் ஆவணம் என்று குறிப்பிடலாம். அவருடைய நாவல்களை க.நா.சு. முதல் சுந்தர ராமசாமி வரை பல எழுத்தாளர்கள் முன்னிறுத்திப் பேசியதற்கு இதுவே காரணம்.

இந்து தமிழ் இணைய இதழ் நேர்காணல்

 தீராத துன்பத்தை எழுதிக் கடக்கலாம் –

கேள்விகள் : அருள்செல்வன்

 

தமிழின் அத்தனை வகைமைகளிலும் எழுதி வருபவர் எழுத்தாளர் பாவன்னன்1982இல் எழுத ஆரம்பித்த இவர், இரண்டே ஆண்டுகளில் இலக்கியச்சிந்தனை விருது பெற்றவர். இதுவரை நூறு நூல்களுக்கு மேல் எழுதியுல்ல இவர் தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள், சாகித்திய அகாதமி, கதா, இயல், விளக்கு, சூரிய விருதுகள் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இனி பாவண்ணனுடன் பேசலாம்.

Sunday, 21 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 4

 

கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ. என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு  சமஸ்கிருதம், இந்தி, வங்கம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். பணியின் நிமித்தமாக அவருடைய தந்தையார் பம்பாய்க்கு அருகில் கல்யாணுக்குக் குடியேறியபோது, அங்கிருந்த பள்ளியில் சேர்ந்து மராத்தியும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது காதில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு மருத்துவம் செய்துகொள்வதற்காக அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்த பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.

ஆவணமாகும் நினைவுக்குறிப்புகள்

 

கல்கத்தாவில் 15.08.1872 அன்று பிறந்த அரவிந்தர் ஆங்கிலேயர் காலத்து ஐ.சி.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காகச் சென்றார். படிப்புக்காலத்தின் இறுதியில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில் தேறியபோதும் குதிரையேற்றத் தேர்வில் பங்கேற்காமல் அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்.

Thursday, 18 June 2026

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் : எல்லாம் செயல்கூடும்


இந்தி பிரச்சார சபையின் வெள்ளிவிழா சென்னையில் 25.01.1946 அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுவதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். அன்றைய கூட்டத்தில் இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாய்மொழிக்கல்வியிலும் இணைப்புமொழிக்கல்வியிலும் தேர்ச்சி பெறுவது மிகமுக்கியம் என்பதை காந்தியடிகள் வலியுறுத்திப் பேசினார். நான்கு நாட்கள் கழித்து அதே இடத்தில் நயி தலீம் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. ஆதாரக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை முடித்த இருபத்தாறு பேர்களுக்கு காந்தியடிகளே சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். அவருடைய உடல்நிலை அப்போது மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்  தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய காந்தியடிகள் 02.02.1946 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

Wednesday, 17 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 3

 

அரிய மனிதர்கள்


பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை அவர் இயற்றினார்.  ‘முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என கோவில்தோறும் ஒலிக்கும் பாடலை எழுதியவர் அவர்தான்.

சிறுகதை வளர்ச்சியின் தடங்கள்

 

நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கக்கூடிய படைப்பாக உள்ளது. அவர் எழுதிய  சிறுகதைகள் இதுவரை ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒரு படைப்பைப் பல கோணங்களிலிருந்து அணுகி ஆய்வு செய்யும் அலசல் விமர்சன மரபை அவரே தொடங்கிவைத்தார். தெளிவான கோட்பாட்டுப் புரிதலோடு எழுத்து என்னும் சிற்றிதழைத் தொடங்கி பல இன்னல்களுக்கிடையில் பல்லாண்டு காலம் தொடர்ந்து நடத்தி விமர்சனத்துக்கான ஒரு தளத்தை உருவாக்கினார். தமிழில் புதுக்கவிதை உருவாகி நிலைபெற்றதற்கு எழுத்து இதழ் நல்லதொரு தளமாக விளங்கியது.

Sunday, 7 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 2

 

வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

 

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.  வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களையும் சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை ஓர் எழுத்தாளராக வடிவமைத்தன.

கும்பகோணத்தின் சுவடுகள்

  

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த  அவ்விதழில் இரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அரசியல் நோக்கத்துடன் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் இலக்கியத்துக்கான மாத இதழாக மாற்றமடைந்தது. மணிக்கொடி காலத்தை தமிழ்ச்சிறுகதைகளின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லலாம். மணிக்கொடி இதழை முன்வைத்து உருவான இலக்கிய ஆளுமைகள் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.

Sunday, 31 May 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 1

 

இசையின் அழைப்பு

 

‘கன்னட மொழியின் ஆஸ்தி’ என்றும் ’சிறுகதைகளின் ஜனகர்’ என்றும்  கர்நாடகத்தைச் சேர்ந்த வாசகர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்,  இந்திய அளவில் அனைவரும் அறிந்த மிகமுக்கியமான எழுத்தாளர். இயற்பெயரிலும் ஸ்ரீனிவாச என்கிற புனைபெயரிலும் எண்ணற்ற படைப்புகளை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் முதல்வரிசைப் படைப்பாளிகளில் ஒருவராக இடம்பெறத்தக்க முக்கியமான எழுத்தாளர். ஞானபீட விருது பெற்றவர்.

எதிர்பாராத அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்பு - நேர்காணல்

 


கேள்வி: குடும்பத்தில் உங்களுக்கு இலக்கிய ஆர்வத்தை உருவாக்கியவர் யார்?

 

பதில்: எனக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை ஊட்டியவர்கள் என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஊக்கமளிக்கும் நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிற சமயத்தில் ஒவ்வொரு வாரமும் நூல்வாசிப்பு என்றொரு பாடவேளை இருக்கும். அப்போது, எங்கள் பள்ளி நூலகர் நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து படிக்கச் செய்வார். நாற்பத்தைந்து மணித்துளிகள் கொண்ட பாடவேளையில் அரைமணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். 

Sunday, 24 May 2026

புதிர்களும் விடைகளும்

 

ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது. அள்ளியள்ளி எடுத்தாலும் வற்றாத அமுதசுரபியாக சிறுகதை வடிவம் கோடிக்கணக்கான கணங்களை நமக்கு வழங்கியுள்ளது.  இத்தனை ஆண்டு காலம் எழுதிய பின்னும் நமக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகளும் இருட்புள்ளிகளும் இந்த வாழ்வில் நிறைந்திருக்கின்றன என்பதை புதிதாக வெளிவரும் ஒவ்வொரு சிறுகதைத்தொகுதியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது.

புரைதீர்ந்த உண்மை

  

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அல்சூர் ஏரியை ஒட்டி ஒரு பெரிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. வாரம்தோறும் அங்கு இலக்கிய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு வந்து வகுப்பெடுத்துவிட்டுச் செல்வார்கள். அந்த வகுப்புக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து செல்பவர்கள் பலர். என் நண்பரும் அவர்களில் ஒருவர். கடந்த ஞாயிறு அன்று காலையில் வகுப்பை முடித்துக்கொண்டு என்னைச் சந்திப்பதற்கு வந்திருந்தார்.

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 1

  

குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.

பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி - 2

 

( தொடர்ச்சி.......)

“நீ சொல்ற வெலயல்லாம் கேட்டப்பறம் இனிமே அதான் செய்யணும்.”

“யோவ், எதுக்குய்யா வளவளன்னு பேசிக்னு. சீக்கிரமா ஒரு வெலயச் சொல்லி எடுத்துக்கினு போயா.”

“யேன் போவலன்னா போலீஸ்ல சொல்லிருவியா?”

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 3

(தொடர்ச்சி......) 


“த்ச்...எல்லாம் எனக்குத் தெரியும்பா. நா சொல்றத கேளு.”

“மாமா.”

“அவளால ஒனக்கு சதாகாலமும் இம்சயாத்தான் போச்சே தவிர நிம்மதியே இல்லை. வாழ்நாளு பூராவும் ஒன்ன நிம்மதியில்லாம  அடிச்சிட்டன். அப்பா பார்த்தசாரதி தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுப்பா.”

“மாமா.”

Monday, 11 May 2026

தனுசு - குறுநாவல் - பகுதி 1

  

கடைசியில் தனுசு அண்ணனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவது தான் நல்லது என்று முடிவாகி ராமு, சுந்தரம் சித்தப்பா, கமலக்கண்ணன் மாமா எல்லாரும் ஒரு டாக்சியில் ஏற்றிக் கொண்டு போய் படாதபாடு பட்டு சேர்த்தபிறகு திரும்பினார்கள். 

தனுசு - குறுநாவல் - பகுதி 2

ப்ளாக் நெம்பர் சொல்லி பேஷன்ட் பெயர் சரிபார்த்து அறை அடையாளம் தெரிந்து கொண்டு நடந்தவனுக்கு எதிரில் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் பைத்தியங்களைப் பார்க்க மேலும்மேலும் பயத்தில் மனம் நடுங்கியது ராமுவுக்கு. சட்டென்று திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. மனசின் நடுக்கத்தைச் சமாளிக்க எங்கேயும் பார்க்காமல் தரையையே பார்த்து நடந்தான். குறிப்பிட்ட அடையாளமிட்ட அறையில் தனுசு அண்ணன் மூலையில் போர்வைச் சுருணைக்குள் கிடந்தான். ராமுவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான்.