Home

Sunday, 15 November 2026

அடிப்படைப்பண்புகள்

  

ரஷ்ய இலக்கிய மேதைகளில் ஒருவர் லேவ் தல்ஸ்தோய். பன்முக ஆளுமை கொண்டவர். போரும் அமைதியும், அன்னா கரினினா போன்ற மாபெரும் இலக்கியப்படைப்புகளை அவர் எழுதியுள்ளார்.  அதே சமயத்தில், சிறார்களுக்கென ஏராளமான சிறுகதைகளையும் எழுதிவைத்திருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளர் அவர். அவருடைய படைப்புகளை விரும்பிப் படிக்கும் வாசகர்கள் உலகெங்கும் இன்றும் இருக்கிறார்கள்.

தல்ஸ்தோய் எழுதிய சிறார் கதைகளிலிருந்து 13 கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வால்காக்கை பதிப்பகம் ஒரு புதிய தொகுதியை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது. பூ.சோமசுந்தரமும் ரா.கிருஷ்ணையாவும் அக்கதைகளைச் சிறப்பான வகையில் மொழிபெயர்த்திருக்கின்றனர். ஒவ்வொரு கதைக்கும், அக்கதையைப் படிக்கத் தூண்டும் வகையில் அழகான ஓவியங்கள் அமைந்துள்ளன. நல்ல முயற்சி. சிறார்களுக்கு அன்பளிப்பாகவும் பிறந்தநாள் பரிசாகவும் அளிப்பதற்கு ஏற்றவகையில் புத்தகம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

’சிங்கமும் நாயும்’ தல்ஸ்தோயின் முத்திரையைத் தாங்கிய சிறப்பான சிறுகதை. லண்டன் மாநகரில் உள்ள விலங்குக்காட்சிச்சாலையில் நடப்பதுபோல இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. இக்காட்சிச்சாலையில் நுழைவுக்கட்டணமாக பணம் மட்டுமன்றி, கட்டணத்துக்கு இணையான விலைமதிப்புள்ள நாய்களையும் பூனைகளையும் கூட  ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது. அங்குள்ள விலங்குகளுக்கு இரையாக அளிக்க அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் காட்சிச்சாலையினர்.

யாரோ ஒரு மனிதன், அந்தக் காட்சிச்சாலைக்குள் நுழைந்து எல்லா விலங்குகளையும் ஒருசேரப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் அவனிடம் பணமில்லை. அதனால் தெருவில் திரிந்த ஒரு நாய்க்குட்டியைப் பிடித்துவந்து கட்டணமாகக் கொடுத்துவிட்டு காட்சிச்சாலைக்குள் சென்றுவிடுகிறான். பணியாளர்கள் அந்த நாய்க்குட்டியைத் தூக்கிவந்து ஒரு சிங்கத்தின் கூண்டுக்குள் இரையாக வீசிவிட்டுச் செல்கிறார்கள்.

என்ன காரணத்தாலோ, சிங்கம் அக்குட்டியை அடித்து உண்ணவில்லை. எப்படியோ அச்சிங்கத்துக்கும் நாய்க்குட்டிக்கும் நல்ல நட்புறவு உருவாகிவிடுகிறது. சிங்கத்தின் மடியில் காலை நீட்டிப் படுத்துறங்கும் அளவுக்கு அவை நெருங்கிப் பழகுகின்றன. ஓராண்டுக்கும் மேலாக சிங்கத்துக்கும் நாய்க்கும் இடையிலான நட்பு நீடிக்கிறது.

எதிர்பாராத விதமாக ஒருநாள் நாய்க்குட்டி நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறது. அதன் மரணத்தைப் புரிந்துகொண்ட சிங்கம் கூண்டுக்குள் அமைதியின்றி அலைமோதுகிறது. வெறிகொண்டதுபோல ஓயாமல் கர்ஜிக்கிறது. நாயின் சடலத்தை அப்புறப்படுத்தக்கூட சிங்கம் யாரையும் அனுமதிக்கவில்லை. கொடுத்த உணவு எதையும் உட்கொள்ளவில்லை. இறந்த நாயைத் தழுவியபடியே ஐந்து நாட்கள் படுத்துக் கிடக்கிறது. ஆறாவது நாள் காலையில் அந்தச் சிங்கம் இறந்துவிடுகிறது.

சிங்கம், நாய் ஆகியவற்றின் குணங்களை ஒட்டி சமூகத்தில் சில முன்முடிவுகள் உண்டு. அந்த முன்முடிவுகளைப் பற்றிய ஒரு மறுபரிசீலனைச் சிந்தனையை இந்தக் கதை வழியாக உருவாக்குகிறார் தல்ஸ்தோய். நெருங்கிப் பழகவோ, நட்பு பாராட்டவோ இம்மண்ணில் எந்த முன்நிபந்தனையும் தேவையில்லை என்னும் எண்ணத்தை சிறார்கள் மனத்தில் இந்தக் கதை விதைக்கிறது. மேலும் நட்பை நினைத்து நினைத்து உருகி  இறுதியில் தன் உயிரையே இழக்கும் சிங்கத்தின் பண்பு மிக உயர்வானது. தான் சிக்கிக்கொண்ட வலையைக் கடித்து அறுத்து தன்னை விடுவிக்கும் சுண்டெலிக்கும் சிங்கத்துக்கும் இடையில் உருவாகும் நட்பு தொடர்பான ஒரு கதை நம் மொழியிலும் உண்டு. சிறார்களின் பாடப்புத்தகத்தில் இன்றும் அந்தக் கதை இடம்பெற்றிருக்கிறது. அதற்கு இணையான இன்னொரு கதை இந்த உலகின் இன்னொரு மூலையில் ரஷ்யாவில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இத்தொகுதியில் உள்ள இன்னொரு சிறப்பான சிறுகதை ’மூன்று கரடிகள்’. ஒருநாள் ஒரு சிறுமி காட்டைச் சுற்றிப் பார்ப்பதற்குச் செல்கிறாள். ஒவ்வொரு இடமும் அவளுக்குப் புதுமையாக இருக்கிறது. சுற்றித் திரிந்த மகிழ்ச்சியில் அவளுக்கு வந்த வழி மறந்துவிடுகிறது. எங்கெங்கோ அலைகிறாள். நடுக்காட்டில் ஒரு வீடு தெரிகிறது. யாரும் இல்லாத அந்த வீட்டுக்குள் அவள் செல்கிறாள். அது ஒரு கரடியின் வீடு. அப்பா கரடி, அம்மா கரடி, குட்டிக்கரடி என மூன்று கரடிகள் அங்கே வசிக்கின்றன.

கரடிகளின் வீட்டில் சமையலறை, படுக்கையறை, கூடம் எல்லாம் இருக்கின்றன. மூன்று படுக்கை, மூன்று தட்டு, மூன்று நாற்காலி என எல்லாப் பொருட்களும் மூன்றுமூன்றாகவும் வெவ்வேறு அளவு கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. அச்சிறுமி அவளுக்குப் பிடித்த நாற்காலியில் அமர்ந்து, பிடித்த உணவைச் சாப்பிட்டு, பிடித்த படுக்கையில் படுத்து உறங்குகிறாள். காட்டில் சுற்றியலைந்த களைப்பின் காரணமாக அவள் மிகவிரைவில் உறக்கத்தில் மூழ்கிவிடுகிறாள்.

வெளியே சென்ற கரடிகள் திரும்பிவருகின்றன.  அலங்கோலமாக இருக்கும் வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றன. யார் செய்த வேலை இது என அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கின்றன. கட்டிலிலில் படுத்துறங்கும் சிறுமியைக் கண்டதும் ஆத்திரத்தோடு அவளைத் தாக்குவதற்கு நெருங்குகின்றன. சத்தம் கேட்டு விழித்த சிறுமி சூழலின் நிலைமையைப் புரிந்துகொண்டு ஜன்னல் வழியே வெளியே குதித்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறாள்.

சுவாரசியமான இந்தக் கதைக்கு இணையாகச் சொல்லத்தக்க வகையில் ஓர் ஏழை விவசாயிக்குச் சொந்தமான வெள்ளரித்தோட்டத்திற்கு  ஒருவரும் அறியாமல் வந்து பழத்தைத் தின்றுவிட்டுச் செல்லும் நரி பற்றிய ஒரு கதை நம் சூழலிலும் உண்டு.

நாடுகள் வேறுபட்டாலும் மொழியும் சூழலும் வேறுபட்டாலும் மக்களிடையில் சில அடிப்படையான பண்புகளை விதைத்து வளர்த்தெடுக்கும் ஆர்வம் மனிதகுலத்தின் பொதுப்பண்பாக இருப்பதைத்தான் இத்தகு கதைகள் நமக்குச் சொல்லும் செய்தியாகும்.

இன்றிருப்பதை விட இன்னும் கூடுதலான வளர்ச்சிகளை நோக்கி நம் வாழ்க்கைமுறை பயணப்படக்கூடும். இன்னும் பல உயரங்களை நோக்கியும் நாம் செல்லக்கூடும். நாம் எந்த அளவுக்கு உயரத்துக்குச் சென்றாலும் நம் அடிப்படைக் குணங்களான அன்பும் அறமும் ஒருபோதும் மாறக்கூடாது. அந்த நோக்கத்தின் காரணமாகவே, இத்தகு கதைகள் எல்லா மொழிச்சூழலிலும் உருவாகி நிலைத்திருக்கின்றன.  ’சிங்கமும் நாயும்’ தொகுதி வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மை அதுதான்.

 

 

 (சிங்கமும் நாயும். லேவ் தல்ஸ்தோய். சிறார் கதைகள். தமிழாக்கம்: பூ.சோமசுந்தரம், ரா.கிருஷ்ணையா. வால்காக்கை வெளியீடு. 1/5, கனகதாரா அடுக்ககம், அசோக் அவென்யு, பெரியார் நகர், சென்னை -82. விலை. ரூ.50)

 

(புக் டே – இணைய இதழ் – 26.10..2026)