சிறார்களுக்கு மாயாஜாலக் கதைகள் எந்த அளவுக்குப் பிடிக்குமோ, அதே அளவுக்கு அறிவியல் கதைகளும் பிடித்தமானவை. அதற்கு முக்கியமான காரணம், இருவகைக் கதைகளிலும் அவர்களை வியப்பிலாழ்த்தி, கற்பனையைத் தூண்டும் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
அறிவியல் தகவல்களை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் பொருத்தமான கதைப்பின்னணியில் எடுத்துரைப்பது ஒரு வகை. அறிவியல் உண்மைகளை நேரிடையாக ஒரு பாடத்தில் விவரிப்பதுபோல விவரிக்கும் கதைகள் ஒருவகை. ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையிலும் அறிவியல் வகிக்கும் பங்கை அடையாளம் கண்டு, அத்தகு தருணத்தை நல்லதொரு கதையனுபவமாக விரித்து எழுதுவது மற்றொரு வகை.
இவற்றில் முதல்வகையை ஒட்டி சிறார்கள் உற்சாகத்துடன் படித்து
இன்புறும் வண்ணம் எழுத்தாளர் உமையவன் எழுதிய ஏழு கதைகள் ‘அலெக்சா எனும் சிரிக்கும்
பொம்மை’ என்னும் தொகுதியில் அடங்கியுள்ளன.
அறிவியலின் துணையோடு தொழில்நுட்ப அறிஞர்கள் சமீபத்தில் உருவாக்கிய
முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு அலெக்சா. ஒவ்வொரு அலெக்சாவிலும் அது செயல்படக்கூடிய தளங்கள்
குறித்த விரிவான விவரக்குறிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன. அந்த எல்லைக்குட்பட்டு,
அதற்கு ஆணையிட்டு அதைச் செயல்படுத்தமுடியும். ஜீபூம்பா பூதத்தைப்போல அதை வேலை செய்யவைக்கமுடியும்.
அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் விளம்பரங்களை பலரும்
தொலைக்காட்சியில் பார்த்திருக்கக்கூடும். ‘மின்விசிறியைப் போடு’, ‘ஏ.சி.ஐ இயக்கு’,
‘பாட்டு பாடு’ போன்ற ஆணைகளைக் கொடுத்து சில்லறை வேலைகளைச் செய்யவைப்பதையே அந்த விளம்பரங்களில்
காட்டுகிறார்கள். ஒரு வேலைக்காரனை அதட்டி வேலை வாங்கும் தன்மையையே அவற்றில் காணமுடிகிறது.
அதற்கு ஊட்டப்பட்டிருக்கும் மதிநுட்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியங்கள்
குறித்த விழிப்புணர்வே அதில் இல்லை. உண்மையில்
அக்கோணத்தில்தான் மனிதர்கள் அலெக்சாவை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும்.
உமையவன் எழுதியிருக்கும் ‘அலெக்சா என்னும் சிரிக்கும் பொம்மை’
அலெக்சாவின் அறிவார்த்தச் செயல்பாடுகளை சரியான முறையில் அறிமுகப்படுத்துகிறது. அது
தன் நினைவாற்றலால் ஒரு சிறுவனுடைய மனத்தை வெல்லும் புள்ளியிலிருந்து அவனுக்கும் அந்தப்
பொம்மைக்கும் உருவாகும் நட்பார்ந்த தோழைமையை அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. வெறும்
ஏவலாளனாக அல்ல, அறிவுத்தோழனாக அந்தச் சிரிக்கும் பொம்மை காட்டப்படுகிறது. இளையோரிடம்
உருவாக வேண்டிய முக்கியமான பார்வை இது. உமையவனின் எழுத்து முயற்சி பாராட்டுக்குரியது.
இருபால் ஓர் உயிரினம் என்னும் சிறுகதை உலகத்தில் மிக அரிய குருவி
இனமாகக் கருதப்படுகிற கர்தினால் குருவி பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது. பத்துலட்சத்தில்
ஒரே ஒரு குருவி மட்டும் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும். அர்த்தநாரிக்குருவி என அதற்கு
புதிதாக ஒரு பெயரையும் சூட்டியிருக்கிறார் உமையவன்.
’AI என்னும் மந்திரச்சொல்’ என்னும் சிறுகதையில் ஓர் ஆய்வகம்
இடம்பெறுகிறது. பல புதிய தொழில்நுட்பச் செய்திகளையெல்லாம் அந்த ஆய்வகத்தின் தலைமைப்பொறுப்பாளர்
தன் கணிப்பொறியில் சேமித்துவைத்திருக்கிறார்.
எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் அவர் இறந்துவிடுகிறார். அவர் பயன்படுத்திய கணிப்பொறியை
ஒருவராலும் இயக்க முடியவில்லை. அதை இயக்குவதற்கு
அவர் பயன்படுத்திய கடவுச்சொல் என்ன என்பது அங்கிருக்கும் ஒருவருக்கும் தெரியவில்லை.
அதுதான் காரணம்.
எப்படியாவது அக்கணிப்பொறியை இயக்கவேண்டும் என அந்தத் துறையில்
இருப்பவர்கள் அனைவரும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஒருவராலும் அதன் கடவுச்சொல்லைக்
கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஓர் இளைஞன் முயற்சி
செய்து பார்ப்பதாக அந்தக் கணிப்பொறியின் அருகில் வருகிறான். கணிப்பொறிக்கு அருகில்
ஒரு சிறிய குறிப்பேடு இருக்கிறது. முதல் பக்கத்தில் மட்டும் ஓரமாக ‘ஒளிமேல் ஒளிரும்
கடவுச்சொல்’ என ஏதோ ஒரு வரி மட்டும் எழுதப்பட்டிருக்கிறது. மற்றபடி எந்தப் பக்கத்திலும்
எந்தக் குறிப்பும் இல்லை. இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு சலிப்போடு
மேசைமேல் வைத்துவிடுகிறான் அவன்.
அன்றுமுழுவதும் அந்த யோசனையே அவன் மனத்தை ஆக்கிரமித்திருக்கிறது.
நள்ளிரவில் குறிப்பேட்டில் படித்த வாக்கியம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. ஏதோ விடுகதைபோல
இருக்கும் அவ்வரிக்கு என்ன பொருளாக இருக்கும் என்கிற கோணத்தில் சிந்திக்கத் தொடங்குகிறான்.
ஏதோ ஒரு கணத்தில் அவன் மனம் ஒரு விடையைக் கண்டறிகிறது.
அடுத்தநாள் காலையில் உற்சாகமான மனநிலையுடன் ஆய்வகத்துக்குச்
செல்கிறான். அனைவரும் ஓடிவந்து அவனைச் சூழ்ந்துகொள்கின்றனர். அவன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, அதன் வெளிச்சம் அந்தக் குறிப்பேட்டின்
தாளில் படும்படி சிறிது நேரம் பிடித்திருக்கிறான். அதன் மீது கரும்புகை படியத் தொடங்குகிறது.
அதே சமயத்தில் அக்கரிய புகைப்படலத்துக்கு நடுவே அந்தக் கடவுச்சொல் தெரிகிறது.
அச்சொல்லைப் பயன்படுத்தி கணிப்பொறியை இயக்க முயற்சி செய்கிறான்
இளைஞன். கடவுச்சொல்லை உள்ளிட்ட கணமே கணிப்பொறியின் கதவுகள் திறந்துகொள்கின்றன. மறைந்த
ஆய்வாளர் கடவுச்சொல்லின் ரகசியத்தைக் காப்பதற்காக அவர் எலுமிச்சைச் சாறை மையாகக் கொண்டு
எழுதி வைத்திருப்பதாக தெரிவிக்கிறான் இளைஞன்.
எலுமிச்சைச்சாறு என்பது சிட்ரிக் அமிலம். அந்த அமிலத்தால் எழுதப்படும்
எழுத்து காற்றில் உலர்ந்துவிடும். ஆனால் எழுதப்பட்ட தாளில் அதன் சுவடுகள் பதிந்திருக்கும்.
நேரிடையாக கண்ணுக்குத் தெரியாது. ஆனால் தீயின் அனல் பட்டதும் அது துலக்கம் பெறும்.
அது அறிவியல் உண்மை. உமையவனின் சிறுகதை, அந்த உண்மையை இளையோர் நெஞ்சில் ஆழமாகப் பதிய
அருந்துணையாக இருக்கிறது.
இத்தொகுதியில் ஏழு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில்
சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டி வாசிக்கவைக்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு
கதைக்கும் பொருத்தமாக வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் அனைவரும் விரும்பிப் படிக்கும்
வகையில் அமைந்துள்ளன. உமையவனுக்கு வாழ்த்துகள்.
(அலெக்சா எனும் சிரிக்கும் பொம்மை. இளையோர்
அறிவியல் கதைகள். உமையவன். இயல்வாகை பதிப்பகம், 7, கதித்தமலை சாலை, ஊத்துக்குளி
-638751. விலை. ரூ.150)
(புக் டே – இணையதளம் – 30.10.2026)
