எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெட்சுமணன் முருகபூபதி இலங்கையின் வடமாகாணத்தின் நீர்க்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து அவருடைய தாத்தா இலங்கைக்குக் குடியேறி, அதன் பிறகு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். பள்ளிக்கல்வியை முடித்த முருகபூபதி எழுத்துத் துறையில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக 1972ஆம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகையில் நிரூபராகப் பணிபுரியத் தொடங்கினார்.
தன் கடுமையான உழைப்பின் விளைவாக பணி உயர்வு பெற்று சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே பத்திரிகையின் துணை ஆசிரியராக விளங்கினார். 1987ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து செல்லவேண்டிய சூழலில்தான் அவர் அந்தப் பத்திரிகைப் பொறுப்பிலிருந்து விலகவேண்டியதாயிற்று. ஆயினும் இன்றுவரை பல பத்திரிகைகளுக்கு அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே தொடர்ந்து உற்சாகமாக எழுதிக்கொண்டே இருக்கிறார்.
அவர் எழுதிய முதல் சிறுகதை அந்தக் காலத்தில் டொமினிக் ஜீவா ஆசிரியராகப்
பொறுப்பேற்று நடத்திவந்த மல்லிகை இதழில் 1972இல் வெளிவந்தது. அடுத்த மூன்றாண்டு இடைவெளியிலேயே
அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி ‘சுமையின் பங்காளிகள்’ என்னும் தலைப்பில் வெளிவந்தது.
ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் முருகபூபதி ஒரே ஒரு நாவலை மட்டுமே எழுதியிருக்கிறார். அவை தவிர, கட்டுரை,
பயண இலக்கியம், கடித இலக்கியம் என எல்லா வகைமையிலுமாக இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை
எழுதியிருக்கிறார்.
13.07.1951 அன்று பிறந்த முருகபூபதி தற்சமயம் எழுபத்தைந்து வயதை
நிறைவுசெய்திருக்கிறார். அவருடைய பவளவிழாவை முன்னிட்டு நண்பர்களான சு.ஸ்ரீ.கந்தராசா,
கிறிஸ்டி நல்லரெத்தினம், நோயல் நடேசன் ஆகியோரின் முயற்சியால் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக்
கலைச்சங்கம் வழியாக ஒரு மலர் வெளிவந்துள்ளது. முருகபூபதியின் எழுத்தாற்றலையும் தோழமைப்பண்பையும்
நன்குணர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் விரிவான கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
மலருக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்க்கும் வகையில் முருகபூபதியின் நான்கு கட்டுரைகளும்
அவர் எழுதிய முதல் சிறுகதையும் பின்னிணைப்பாகச்
சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்தும் இணைந்து முருகபூபதியின் முழு ஆளுமையைப்பற்றிய ஒரு சித்திரத்தை
இம்மலர் வாசகர்களுக்கு அளிக்கிறது.
’இலக்கம் 20, சூரிய வீதி, நீர்கொழும்பு முருகபூபதியின் வீடு’
என்கிற தலைப்பில் ஜே.கே. ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். முருகபூபதி எழுதி 2014ஆம்
ஆண்டில் வெளிவந்த் ‘சொல்லமறந்த கதைகள்’ என்னும் புத்தகத்தின் சாரத்தை எடுத்துரைக்கும்
விதமாக அக்கட்டுரை அமைந்திருக்கிறது. அதன் வழியாக, முருகபூபதியின் சொந்த வாழ்க்கை அனுபவங்களில்
சிலவற்றைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.
அவற்றில் முக்கியமான ஒரு தகவல். எழுபதுகளில் இருபது வயது மட்டுமே
நிறைந்திருந்த முருகபூபதி ஜே.வி.பி. என்கிற பெயரில் தோன்றிய இயக்கத்திற்கு ஆதரவளிப்பவராக
இருந்திருக்கிறார். ஒருமுறை அந்த இயக்கத்தின் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
ஒருமுறை கிளர்ச்சிக்காலத்தில் ஆசிரியர் சங்க அலுவலகத்தில் தங்கி இயக்கத்துக்கான பிரச்சாரச்சுவரொட்டிகளை
எழுதிக்கொண்டிருக்கிறார். அப்போது கைபிசகாக பூச்சு மைத்துளிகள் அவருடைய கண்களுக்குள்
சிதறிவிடுகின்றன. எரிச்சலைத் தாங்கிக்கொள்ள முடியாமலும் கண்களைத் திறக்கமுடியாமலும்
துன்பப்படுகிறார். காவல்துறையின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக
வெளியே சென்று உதவி பெற முடியாத நிலையில் தவிக்கிறார்.
அப்போது அந்த அலுவலகத்திலிருந்த ஒரு சிங்களப்பெண் தன் வீட்டுக்கு
ஓடோடிச் சென்று தன் தமக்கையிடமிருந்து தாய்ப்பால் பெற்றுவந்து அவருடைய கண்களுக்குள்
சொட்டுச்சொட்டாக விடுகிறாள். அந்த மருத்துவம் சற்றே ஆறுதலளிக்கிறது. ஆயினும் வீங்கிய
கண்களோடு அவரால் வேலை செய்யமுடியவில்லை. ஓய்வெடுக்கவேண்டிய
நிலையில் இருந்ததால் சுவரொட்டி எழுதும் வேலை தடைபடுகிறது. அச்சமயத்தில் தாய்ப்பால்
கொண்டுவந்து கொடுத்த அதே சிங்களப்பெண் தானாகவே மனமுவந்து உதவ முன்வருகிறார், அவருக்குத்
தமிழே தெரியாதபோதும் தமிழில் எழுதிவைத்ததைப் பார்த்து சித்திரம் எழுதுவதுபோல பிரதியெடுத்து
சுவரொட்டிகளை எழுதிக் கொடுக்கிறார். அப்பெண் காட்டிய அன்பும் ஆதரவும் அவரை நெகிழவைக்கின்றன.
ஒரு சிறுகதைக்கே உரிய களப்பின்னணியைக் கொண்ட இக்கட்டுரையோடு இன்னும் பல கட்டுரைகளையும்
ஜே.கே. தன் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இதே வகைமையில் முருகபூபதி தொடக்கக்காலத்தில் எழுதிய உருவகக்கதைகளின்
தொகுப்பாக வெளிவந்த ‘பாட்டி சொன்ன கதைகள்’ என்னும் புத்தகத்தை முன்வைத்து வ.ந.கிரிதரன்
சுவாரசியமான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் முருகபூபதி
எழுதிய ஏதேனும் ஒரு நூலை முன்வைத்து அந்நூலின் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையில்
எழுதியிருக்கிறார்கள். அந்த அமைப்புமுறையின் காரணமாக, இதுபோன்ற மலரொன்றில் வழக்கமாக
நேரக்கூடிய ’கூறியது கூறல்’ நிகழாவண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது. அது மலரின் மதிப்பை
உயர்த்தியிருக்கிறது.
நோயல் நடேசன் தன் கட்டுரையில் முருகபூபதி அமைதியான முறையில்
ஆற்றிவரும் ஒரு பொதுப்பணியைப்பற்றிய தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார். 1987இல் ஆஸ்திரேலியாவுக்கு
இடம்பெயர்ந்த முருகபூபதி ‘இலங்கை மாணவர் கல்வி
நிதியம்’ என்னும் பெயரிலோர் அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். போரினால் குடும்பத்தை
விட்டுப் பிரிந்து ஆதரவற்று நின்ற குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதுதான் அதன் முதன்மை
நோக்கமாக இருந்திருக்கிறது. படிப்படியாக, அதை விரிவாக்கி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும்
மலையகத் தோட்டப்பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் கல்வியறிவு பெறுவதற்கான உதவிகளைச் செய்யத்
தொடங்குகிறது. கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அந்த இயக்கம் இதுவரை
ஐயாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் கல்வி பெற உதவியிருக்கிறது. ‘அன்ன யாவினும் புண்ணியம்
கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்பது பாரதியாரின் வரி. பாரதி பற்றாளரான முருகபூபதி
அவர் சொல் வழி நின்று செயலாற்றியிருக்கிறார்.
’கங்காரு தேசத்தின் கற்பகத்தரு’ என்னும் தலைப்பில் தெய்வீகன்
அவரும் முருகபூபதியும் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணத்தைத் தொடக்கமாகக்கொண்டு ஒரு நல்ல
கட்டுரையை எழுதியிருக்கிறார். சிட்னிக்கு வந்திருந்த கிழக்கிலங்கை எழுத்தாளர் செங்கதிரோன்
த.கோபாலகிருஷ்ணனைச் சந்திக்க இருவரும் மெல்போர்னிலிருந்து ரயிலில் சென்று திரும்பிய
பயணத்தை ஒரு சிறுகதையைப்போல சுவாரசியமாக எழுதியிருக்கிறார். கட்டுரையின் போக்கில் முருகபூபதியைப்பற்றி
‘எல்லோருக்காகவும் எப்போதும் சிலுவை சுமப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் உள்ளம்’
என்றொரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதை பல்வேறு தருணங்களை
நினைவுபடுத்தி கட்டுரை நெடுக சுருக்கமான பதிவுகளகா எழுதியிருக்கிறார் தெய்வீகன். ஒரு தகவலும் விடுபட்டுவிடாதபடி ஒருமையுணர்வோடு எழுதப்பட்டிருக்கும்
அக்கட்டுரை
நித்தியானந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், கருணாகரன், எம்.ஏ.நுஃமான் என உலகின் பல்வேறு பாகங்களில்
வசிக்கும் ஆளுமைகள் முருகபூபதியின் படைப்பாளுமையையும் பண்புகளையும் முன்வைத்து எழுதியிருக்கும்
கட்டுரைகள் அனைத்தும் முருகபூபதியை அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் அவரைப்பற்றிய ஒட்டுமொத்த
சித்திரத்தை அளிக்கின்றன.
மலரின் இரண்டாவது பகுதியில் வாசிப்பு மகிழ்ச்சிக்காக முருகபூபதியின்
சிற்சில ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ’கவிஞர் அம்பி நினைவுகள்’ என்னும் தலைப்பில்
ஒரு கட்டுரை உள்ளது. அம்பி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கவிஞர் இராமலிங்கம்
அம்பிகையார் 95 வயதுவரை வாழ்ந்து மறைந்தவர். முருகபூபதிக்கு குடும்ப நண்பராகவும் அவருடைய
பேரப்பிள்ளைகளுக்கு அம்பித்தாத்தாவாகவும் என்றென்றும் தொடர்பிலேயே இருந்த அவரைப்பற்றிய
பல்வேறு நினைவுகளை தன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் முருகபூபதி.
தமிழக எழுத்தாளர்களாக ஜெயகாந்தன், ராஜம்கிருஷ்ணன், திரைப்பட
இயக்குநரான பாலு மகேந்திரா மூவரையும் சந்தித்து உரையாடிய அனுபவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக
எழுதியிருக்கிறார். ராஜம் கிருஷ்ணன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த
காலத்தில் சென்று சந்தித்த அனுபவத்தைப்பற்றிய சொற்சித்திரம் மனத்தை உருக்கும் வகையில்
உள்ளது.
மலரின் இறுதிப்பகுதியில் முருகபூபதி 1972இல் எழுதிய முதல் சிறுகதை
‘கனவுகள் ஆயிரம்’ இடம்பெற்றிருக்கிறது. எழுதப்பட்டு 44 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்
எல்லாச் சூழல்களையும் கடந்து படிக்கத்தக்க நல்ல கதையாகவே அது காட்சியளிக்கிறது. காலத்தின்
துரு படியாத புத்தம்புது பொன் என்றுதான் சொல்லவேண்டும்.
அந்தோணி ஒரு மீனவன். கடலில் துடுப்பு போட்டு படகைச் செலுத்திச்
சென்று மீன் பிடிக்கும் தொழிலைச் செய்பவன். அதே கரையோரத்தில் வசிக்கும் பிற மீனவர்கள் எஞ்சின் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
பிறரைப்போல அந்தோணியும் எஞ்சின் பொருத்தப்பட்ட படகில் சென்று தொழில் செய்யவேண்டும்
என்று அவன் மனைவி மேரி விரும்புகிறாள். அந்தோணி மற்றவர்கள்போல மாற விருப்பமில்லாதவனாக
இருக்கிறான். துடுப்பு போடுவதில் சிரமமிருந்தாலும் அதை அவன் பொருட்படுத்துவதில்லை.
ஓர் எஞ்சினுக்காக பெரிய தொகையை ஒரு முதலீடாகச் செலவு செய்யும்
அளவுக்கு அவனிடம் பணவசதி இல்லை. அவனுக்குத் தெரியாமல் ஒரு தொகையைச் சிறுகச்சிறுக சேர்த்துவைத்திருக்கிறாள்
மேரி. அந்தத் தொகையை முன்பணமாகச் செலுத்தி எஞ்சின் வாங்கிவிடலாம் என்றும் பிறகு தவணை
முறையில் கடனை அடைத்துவிடலாம் என்பது அவள் எண்ணமாக இருக்கிறது. ஆனால் கடன் என்கிற பேச்சுக்கே
இடம்வைத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறான் அந்தோணி.
அந்தோணியின் ஆழ்மனத்தில் எஞ்சினைவிட முக்கியமான வேறொரு கவலை
அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அந்தோணி, மேரி இருவருக்கும் திருமணம் நடந்து 8 ஆண்டுகளுக்கு
மேலாகியும் குழந்தைப்பேறு இல்லை. இனியும் பிறக்குமா என்பதில் அவனுக்குச் சந்தேகம் எழுகிறது.
எங்காவது மருத்துவமனைக்கோ அல்லது ஆசிரமத்துக்கோ சென்று புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைத்
தத்தெடுத்துக்கொள்வதுதான் நல்ல தீர்வாக இருக்கும் என்று அந்தோணி நினைக்கிறான். தத்து
என்கிற பேச்சுக்கே இடம்வைத்துக்கொள்ளக் கூடாது, தமக்கென சொந்தமாக ஒரு குழந்தை நிச்சயம்
பிறக்கும், அதுவரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறாள் மேரி.
எஞ்சினைப் பற்றிய பேச்சு எழும்போது அந்தோணி மறுத்துரைப்பதும்
தத்தெடுத்தல் தொடர்பாக பேச்சும் எழும்போது மேரி மறுப்பதுமாக ஒவ்வொரு நாளும் கழிகிறது.
கதை தொடங்கும் இரவுப்பொழுதிலும் அதே மறுப்புப்பேச்சுகள் நிகழ்கின்றன.
அடுத்தநாள் அதிகாலையில் வழக்கம்போல படகை எடுத்துக்கொண்டு மீன்
பிடிப்பதற்காக கடலில் இறங்குகிறான் அந்தோணி. மாலையில் மீன்பிடித்துக்கொண்டு திரும்பும்
மீனவர்கள் அந்தோணியின் உயிரற்ற உடலைச் சுமந்துவந்து கரையில் கிடத்துகிறார்கள். நடுக்கடலில்
துடுப்பு போட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென இழுப்பு நோயால் அவன் வேதனைப்பட்டுத் துடித்ததாகவும்
அவனுடைய படகை நெருங்கிச் செல்வதற்குள் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அந்தோணியின்
உடல்மீது விழுந்து கதற்கிறாள் மேரி.
அந்தோணியின் கனவை மேரி ஏற்றுக்கொள்ளவில்லை. மேரியின் கனவை அந்தோணி
ஏற்றுக்கொள்ளவில்லை. இருவருக்குமே எந்தக் கனவும் தேவைப்படாதபடி மரணம் ஒரு முற்றுப்புள்ளியை
வைத்துவிடுகிறது. நிராசைகளாக இம்மண்ணில் கரைந்து கானாமல் போன ஆயிரமாயிரம் கனவுகளோடு
அவர்களுடைய கனவுகளும் கரைந்துவிடுகின்றன. முருகபூபதியின் படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டாக
ஒரேஒரு சிறுகதை மட்டுமே மலரில் இடம்பெற்றுள்ளது.
பிற கதைகளையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை அச்சிறுகதை உருவாக்குகிறது.
எழுதுவது, பிறரை எழுதத் தூண்டுவது, இலக்கிய அமைப்புகளை உருவாக்கி
இயங்குவது, மூத்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளோடும் இளைய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளோடும்
இணக்கமான முறையில் பழகி நட்பை வளர்த்துக்கொள்வது, தனக்கு நம்பிக்கை இல்லாத இலக்கியப்போக்குகளில்
ஈடுபட்டிருக்கும் எழுத்தாளர்களோடும் கூட நல்லுறவைப் பேண விரும்புவது, இலக்கிய நிகழ்ச்சிகளையும்
விழாக்களையும் ஒருங்கிணைத்து நடத்துவது என எல்லாவிதமான நற்குணங்களின் உறைவிடமாக விளங்குகிறார்
முருகபூபதி. அவருடைய ஜனநாயக உணர்வும் பன்முகத்தன்மையும்தான் இதற்குக் காரணம். அனைவரோடும்
நட்பு பாராட்டும் குணமுடைய அவர் நேரம் தவறாமையையும் சொல்வழுவாமையையும் தம் இயல்புகளாகவே
வளர்த்துக்கொண்டிருக்கிறார். எல்லோரிடமும்
சிரித்துப் பேசி கலகலப்பாகவே இருப்பது, பிறருக்கு உதவுவது, இன,மொழி,மத,பால் வேறுபாடு
பார்க்காமல் அனைவரையும் சமமாக நினைத்துப் பழகுவது ஆகியவற்றிலும் அவர் பிறருக்கு எடுத்துக்காட்டாகச்
சொல்லத்தக்க விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மலரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு
கட்டுரையிலிருந்தும் ஒரு புள்ளியையும் நிறத்தையும் எடுத்து முருகபூபதியின் சித்திரத்தை
உருவாக்கிக்கொள்ள நினைக்கும்போது இந்த எண்ணமே எழுகிறது.
பவளவிழா மலர் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
ஒவ்வொரு கட்டுரையாளரும் முருகபூபதியின் ஆளுமைப்பண்பை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு
புதிய செய்தியை முன்வைத்திருக்கின்றனர். எங்கும் கூறியதுகூறல் இல்லை. அதனாலேயே இந்த
மலர் ஒரு பெரிய நாவலின் பல்வேறு அத்தியாயங்களைப் படிப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது.
மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதியின் பவளவிழா மலர் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும்
வாழ்த்துகள்.
(ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப்பயணம். லெட்சுமணன்
முருகபூபதியின் பவளவிழா மலர். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்க வெளியீடு)
(புக் டே – இணைய இதழ் –
0311.2026 )
