Home

Sunday, 6 September 2026

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026 : எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம்

 

தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக எழுதிவரும் மூத்த, இளம் படைப்பாளிகளை முன்னிறுத்தவும் அம்மொழிகளுக்கிடையில் நிகழவேண்டிய இலக்கியப் பரிமாற்றத்தின் தேவையை உணர்த்தவும் கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூரில் வெற்றிகரமான வகையில் புக் பிரம்மா இலக்கியத்திருவிழா நடைபெற்று வருகிறது. 2026ஆம் ஆண்டுக்குரிய திருவிழா கடந்த 21.08.2026 முதல் 23.08.2026 வரை செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. கன்னட நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிகெ இந்த அமைப்பின் இயக்குநராக இருந்து நிர்வகித்துவருகிறார்.

இம்முறை தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளோடு வங்க மொழியும் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு அமர்வுக்கும் ஐம்பது நிமிடங்கள் என கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்களிலும் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட அமர்வுகள் நிகழ்ந்தபோதும் அனைவராலும் கால அளவு மிகச்சரியாகக் கடைபிடிக்கப்பட்டது.

மண்டப, மதன, அட்சரா, அங்களா, அனாவரன என பெயரிடப்பட்ட ஐந்து தனித்தனி அரங்குகளில் இலக்கிய அமர்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இவையன்றி முகாமுகி, சின்னரலோக, பொயட் ட்ரி, நியு ஜென் என பெயரிடப்பட்டிருந்த நான்கு சிற்றரங்குகளில் எழுத்தாளர் சந்திப்பு, கவிதை முயற்சியில் ஈடுபட்டுவரும் இளம்தலைமுறையினருடன் மூத்த கவிஞர்கள் நிகழ்த்தும் உரையாடல், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், சிறார்களுக்கான நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

21.08.2026 அன்று காலை பத்து மணியளவில் புக் பிரம்மா இயக்குநரான சதீஷ் சப்பரிகெயின் வரவேற்புரையோடு இலக்கியத்திருவிழா தொடங்கியது. அதையடுத்து, இந்திய மொழிகளுக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான உறவு இப்போது எத்தகையதாக இருக்கிறது, எதிர்காலத்தில் அது எத்தகையதாக இருக்கவேண்டும் என்கிற கருத்தை ஒட்டிய கலந்துரையாடலாக முதல் அமர்வு நடைபெற்றது. கன்னடத்தின் எழுத்தாளர்கள் ஓ.எல்.நாகபூஷணசாமி, எம்.எஸ்.ஆஷாதேவி, மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், ஆங்கில எழுத்தாளர் கேஷவ குஹா ஆகியோர் அத்தலைப்பையொட்டி தம் கருத்துகளைத் தெரிவித்தனர். திவ்யா கலவள என்பவர் அந்த உரையாடலை ஒருங்கிணைத்தார்.



கலந்துரையாடலில் ஆங்கிலத்தின் சாதக பாதகங்கள் எல்லாக் கோணங்களிலும் அலசப்பட்டன. இறுதியில் எல்லா மொழிகளுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக விளங்கும் ஆங்கிலத்தை இன்றைய காலகட்டத்தில் ஒருபோதும் நம்மால் தவிர்த்துவிட முடியாது என்பதால், அம்மொழியால் கிட்டும் பயனை உதறாமலும் அதே சமயத்தில் அதன் மேலாதிக்கம் எந்த மொழியின் மீதும் நிகழாமலும் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம் என்கிற எண்ணத்தையே அனைவரும் முன்னிறுத்தினர்.

தமிழ் மொழியின் முதல் அமர்வு ‘நவீன கவிதை : மாறிவரும் அழகியல்’ என்னும் தலைப்பில் நடைபெற்றது. கவிஞர் மோகனரங்கன் அந்த அரங்கை ஒருங்கிணைக்க, கண்டராதித்தன், சம்யுக்தா மாயா, பூவிதழ் உமேஷ் ஆகிய கவிஞர்கள் தம் எண்ணங்களை முன்வைத்தனர். உள்ளடக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு கவிஞர்களின் படைப்புகள் வழியாக கவிதையின் அழகியல் மாறிவந்த தருணங்களை முன்வைத்து ஒவ்வொருவரும் உரையாற்றினர்.  



வாசகர்களுக்கு நெருக்கமான மொழியாக கவிதையே விளங்குகிறது என்று குறிப்பிட்ட கண்டராதித்தன் ஒவ்வொரு  தலைமுறையிலும் புதிதாக உருவாகி நிலைபெற்ற ஆளுமைகளை நினைவூட்டி அவர்களுடைய சில கவிதைகளையும் வாசித்துக் காட்டினார். சமகாலத்தில் எழுதிவரும் சிறந்த இளம்கவிஞர்களின் பட்டியலையும் அளித்தார்.

சம்யுக்தா மாயா தன் உரையில் பெண் கவிஞர்களின் வருகையையும் பங்களிப்பையும் மூன்று காலகட்டமாகப் பிரித்து அணுகவேண்டிய அவசியத்தை உணர்த்தினார். எழுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான காலகட்டத்தை முதல் பகுதியாகவும் தொண்ணூறுகள் முதல் 2010 வரையிலான  காலகட்டத்தை இரண்டாவது பகுதியாகவும் அதற்குப் பிறகான காலகட்டத்தை மூன்றாவது பகுதியாகவும் கொண்டு அணுகும்போது, பெண் கவிஞர்களின் படைப்புலகத்திலும் பார்வையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணரமுடியும் என்றும் குறிப்பிட்டார்.



பூவிதழ் உமேஷ் இன்றைய கவிதை உரைநடைக்கு நெருக்கமான மொழியைத் தனக்குரியதாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதையும் எண்ணற்ற உதிரிச்சம்பவங்களை முன்வைப்பதை ஓர் உத்தியாகப் பின்பற்றுவதையும் சில எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டார்.

’நாட்டார் கதைகளும் சமூக வரலாறும்’ என்னும் தலைப்பில் அமைந்த அமர்வை முனைவர் இரா.காமராசு ஒருங்கிணைத்தார். முனைவர் அ.கலையரசி, முனைவர் என்.ராமச்சந்திரன், என்.வடிவேலன் ஆகியோர் உரையாற்றினர். காலவரிசையில் மன்னர்கள் ஆண்ட வரலாற்றை மட்டுமே ஒரு சமூக வரலாறாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினால், அது ஒருபோதும் முழுமை பெற்ற வரலாறாக இருக்காது என்பதையும் சமூகத்தின் ஆழ்மனப் பிரதிபலிப்புகளாக வாய்மொழி அளவிலேயே நிலவும் பல்வேறு வகையான கதைகள் வழியாக  அதன் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டால் மட்டுமே முழுமையடையும் என்ற முன்னுரையோடு இரா.காமராசு அந்த அமர்வைத் தொடங்கிவைத்தார்.

உள்ளூர் வரலாற்றையும் அடித்தள மக்கள் வரலாற்றையும் எழுத உதவும் ஆவணங்களாக நாட்டார் கதைகள் அமைந்திருக்கின்றன என்ற குறிப்போடு தன் உரையைத் தொடங்கினார் முனைவர் அ.கலையரசி. சாதியச் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் முன்வைக்கும் மதுரைவீரன் கதையைப்பற்றி  விரிவாக எடுத்துரைத்தார். சாதி மீறிய திருமணம் தொடர்பான பதிவு காத்தவராயன் கதையிலிருந்தே தொடங்குகிறது என்பதையும் அவர் கூறினார்.



முனைவர் என்.இராமச்சந்திரன் தம் உரையில் நாட்டார் தெய்வங்களின் தோற்றத்தைப்பற்றிய அழுத்தமான பதிவுகள் நாட்டார் கதைகளிலேயே பெருமளவில் காணக்கிடைக்கின்றன என்பதை பல்வேறு கதைகளை எடுத்துக்காட்டாகக் கூறி நிறுவினார். முனைவர் வடிவேலன் நாட்டார் கதைகளில் நிலவும் சமூக எதிர்ப்புணர்வுப் பார்வையை பல்வேறு எடுத்துக்காட்டுகளின் துணையோடு முன்வைத்து உரையாற்றினார்.

கேட்பதற்கு மிக எளிமையான ஒரு வாசகமாகத் தோற்றமளிக்கும் பழமொழிகள், வேறொரு கோணத்தில்  சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்கும் தன்மையை எடுத்துக்காட்டுகளோடு பேசினார் முனைவர் இரா.காமராசு. ’ஆனை துரத்தினாலும் ஆனைக்காலில் ஒதுங்காதே’ என்னும் பழமொழியைக் கேட்பதற்கு ஏதோ அறிவுரைச்சொல் போலத் தோன்றினாலும் அதன் ஆழத்தில் வெளிப்படும் சைவ வைணவ மத முரண்பாட்டுப் பார்வையை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கினார்.

’என்னைக் கவர்ந்த புத்தகங்களின் வாசிப்பனுபவம்’ என்னும் தலைப்பில் அமைந்த அமர்வை முனைவர் பழனி.கிருஷ்ணசாமி ஒருங்கிணைத்தார். அவர் தன் உரையில் அரிமளம் பத்மனாபன் எழுதிய ’இசைத்தமிழும் தமிழிசையும்’ என்கிற நூலையும் ஆய்வாளர் முத்துமோகன் எழுதிய ’இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ என்னும் நூலையும் முன்வைத்து விரிவாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து ரமேஷ் கல்யாண் விண்வெளிப் பயண அனுபவங்களை முன்வைத்து ஆர்.வெங்கடேஷ் எழுதிய ‘பதினாறு சூரிய உதயங்கள்’ நாவலையும் மஞ்சுநாத் எழுதிய ’அப்பன் திருவடி’ நாவலையும் வாசித்த அனுபவங்களையும் அவற்றால் தான் பெற்ற மன எழுச்சியையும் முன்வைத்து உரையாற்றினார்.



தி.சிவக்குமார் ’உலகச்சிந்தனை மரபில் கிளைபரப்பிய ஒரு மரம்’ என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் ஆய்வாளர் தமிழவனின் தன்வரலாற்று நூலையும் எழுத்தாளர் அம்பை அவர்களால் பதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த ஆர்.எஸ்.சுபலஷ்மியின் ’என் சுயசரிதை’ நூலையும் முன்வைத்து தன் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். கவிஞர் மோகனரங்கன்   இதுவரை எழுதிய கவிதைகளின் பெருந்தொகுதியாக வெளிவந்திருக்கும் ‘சொல்லின் நிழல்’ நூலையும் இலங்கை எழுத்தாளர் தில்லை எழுதிய ’தாயைத்தின்னி’ நாவலையும்  முன்வைத்து தன் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சவிதா.

22.08.2026 அன்று தமிழ்ப் பிரிவில் ‘எனது நாவல்: கனவு நனவான கதை’ என்னும் தலைப்பில் முதல் அமர்வு நடைபெற்றது. நாவலாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் அந்த அமர்வை ஒருங்கிணைத்துப் பேசினார்.  சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்திலேயே நாவல் எழுதிப் பார்க்கும் ஆசை ஒரு விதையென தன் மனத்தில் பதிந்ததை ஒரு கனவை விவரிப்பதுபோல எடுத்துரைத்தார் அவர். அம்மன் நெசவு, மணற்கடிகை, மனைமாட்சி ஆகிய நாவல்களை எழுதுவதற்கான எண்ணம் எழுந்த கணங்களைப்பற்றி மிக அழகாக விவரித்தார். தெரிந்த கதைகளுக்கு அப்பால் தெரியாத உலகத்தை எழுதிப் பார்க்கும் ஆர்வத்தால் மாயப்புன்னகை, வேங்கைவனம் ஆகிய நாவல்களை எழுதத் தொடங்கியதையும் அவை முழுவடிவத்தை  அடையும் வரையில் பலமுறை திருத்தித்திருத்தி எழுதி முடித்ததையும் குறிப்பிட்டார்.



இரவோடி நாவலுக்கான கரு தன் மனத்தில் விழுந்த கணத்தை ஒரு கதையை விவரிப்பதுபோல விவரித்துப் பேசினார் என்.ஸ்ரீராம். முதலில் தான் கேட்டதாக அவர் குறிப்பிட்ட பழங்கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஓர் இடத்தில் மிக மகிழ்ச்சியாக வசித்துவரும் ஓர் இனக்குழுவினர் திடீரென ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பொருட்டு அவர்கள் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய நெருக்கடி உருவாகிறது. வாழிடத்திலிருந்து புறப்பட்டு வெகுதொலைவு நடந்துசெல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிரில் ஒரு பெரிய ஆறு குறுக்கிடுகிறது. ஆற்றைக் கடப்பது எப்படி என்று தெரியாமல் துயரத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.

உதவி வேண்டுமென்று தெய்வத்தை வேண்டியபடி கரையோரமாகவே சோர்வோடு உறங்கிவிடுகிறார்கள். நள்ளிரவில் அங்கு வந்த தெய்வம் கரையோரமாக ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தை ஆற்றின் குறுக்கே இரு கரைகளையும் தொட்டிருக்கும் வகையில் விழச்செய்கிறது. அதையே பாலமாக நினைத்து அதன் மீது ஏறி ஆற்றைக் கடந்து செல்லுமாறு அம்மக்கள் குழுவைக் கேட்டுக்கொள்கிறது. அப்போது விழித்திருந்தவர்கள் அனைவரும் அந்த ஆற்றைக் கடந்து சென்றுவிடுகின்றனர்.  படுத்தவாக்கில் கிடந்த மரத்தை தெய்வம் மீண்டும் நிமிர்ந்து நிற்கவைத்துவிடுகிறது. நிகழ்ந்தது எதையுமே அறியாமல் களைப்பில் ஆழ்ந்து உறங்கிவிட்டு திடீரென விழித்தெழுந்த மக்கள் குழு நடந்ததையெல்லாம் அறிந்துகொண்டு பதற்றத்துடன் தெய்வத்திடம் ஓடோடிச் சென்று முறையிடுகிறார்கள். ஆனால் தெய்வம் இரக்கம் காட்டவில்லை. மாறாக, தூக்கத்தின் மீது பற்றுகொண்ட அவர்கள் இரவெல்லாம் தூங்க வழியில்லாத ஒரு வேலையைச் செய்து பிழைக்கவேண்டும் என்றொரு சாபத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அந்தச் சாபத்தின் காரணமாக உருவானவர்களே சாமக்கோடாங்கிகள் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி தன் இளமையில் கேட்டும் பார்த்தும் அறிந்த மூன்று மையப்புள்ளிகளைத் தன் கனவால் இணைத்து எழுதிய நாவலே இரவோடி என்று குறிப்பிட்டார் ஸ்ரீராம்.




மு.குலசேகரன் ‘தங்கநகைப்பாதை’ நாவலை எழுதுவதற்கான தூண்டுதலைப் பெற்ற கணத்தை சுவாரசியமாக விவரித்தார். தம் குடும்பத்துக்குச் சொந்தமாக ஊருக்கு வெளியே ஒரு துண்டு நிலம் இருந்ததென்றும் தன் கிராமத்தின் வழியாக நீண்ட தங்கநாற்கரச்சாலை அந்நிலத்தில் விவசாயம் செய்ய இயலாத ஒரு நிலையை உருவாக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டார். ஒருநாள் அதிகாலை நேரத்தில் நடந்து செல்லும்போது தொலைவில் கிராமத்தை ஒட்டி எழுப்பப்பட்டிருந்த செவ்வக வடிவ நுழைவாயிலையும் அதன் வழியாக தெரியும் ஆறுவழிச்சாலைக்காக நடக்கும் கட்டுமானத்தையும் பார்த்தபோது உருவான திகைப்பும் குழப்பமும்தான் ஒரு நாவல் எழுதவேண்டும் என்கிற கனவை உருவாக்கியது என்று குறிப்பிட்டார்.

நாவலாசிரியர் அரிசங்கர் புதுச்சேரி வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு பாரிஸ், மாகே கஃபே ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். இளமையில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற ஒரு பெண்ணும் அவரும் காதலில் மூழ்கியிருந்த அனுபவத்திலிருந்து தன் நாவல் கனவை சுவாரசியமாகச் சொல்லத் தொடங்கினார் அவர். தன் தந்தையோடு அப்பெண்ணின் வீட்டுக்கு பெண் கேட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஆர்வம் இருந்தாலும், அப்பெண்ணின் அப்பாவுக்கு அதில் உடன்பாடு இல்லை.  தன் பெண்ணை பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவனைத் திருமணம் செய்துகொண்டு பிரான்சிற்குச் சென்று வாழவேண்டும் என்பதே தன் கனவு என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அப்பாவின் கனவுக்காக அந்தப் பெண் தன் கனவைத் துறந்துவிட்டார். புண்பட்ட காதல் அனுபவமே தன்னை நாவல் எழுதத் தூண்டியதாகக் குறிப்பிட்டார். அடுத்தடுத்த பாகங்களை எழுதத் தூண்டிய பின்னணியையும் அவர் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார்.

‘தமிழில் நவீன பயண இலக்கியம்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற அமர்வை கந்த சுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார். தமிழில் பயண நூல் எழுதும் மரபு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் செயல்பாடு. இதுவரை கணக்கற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. அவ்வரிசையில் சமீப காலத்தில் வெளிவந்த பயண நூல்களை வாசகர்களுக்குக் கவனப்படுத்தும் வகையில் எடுத்துரைப்பதே அந்த அமர்வின் நோக்கம் என எடுத்துரைத்த கந்த சுப்பிரமணியன் எழுத்தாளர் மகுடேசுவரன் எழுதிய ’கலிங்கம் காண்போம்’ புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினார். தமிழகத்திலிருந்து கலிங்கம் வரையிலான அவருடைய பயண அனுபவங்கள் சுவாரசியமாக இருப்பதை சுருக்கமான சிறுசிறு தகவல்கள் வழியாக எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சிவப்பிரசாத் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அருகர்களின் பாதை நூலும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய தேசாந்திரி நூலும் தமக்கு அளித்த அனுபவங்களை உற்சாகமாகக் குறிப்பிட்டார். ராயகிரி சங்கர் எழுத்தாளர் சல்மா தன் பாகிஸ்தான் பயணம் குறித்து எழுதிய ’கனவு வெளிப் பயணம்’ என்னும் நூல் வழியாகவும் ராம் தங்கம் எழுதிய ’கடவுளின் தேசம்’ பயண நூல் வழியாகவும் தாம் அறிந்துகொண்ட விவரங்களை உற்சாகமுடன் விவரித்தார்.

திலீபன் எழுதிய தீரா உலா என்னும் பயண நூலை முன்வைத்து தன் உரையை நிகழ்த்தினார் தங்கமணி. கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கெளஹாத்தி வரை சென்ற அவருடைய பயண அனுபவங்களைப் பற்றிய அந்தப் புத்தகம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்றென அவர் குறிப்பிட்டார். பயண அனுபவத்துக்காகவே அவர் பயணத்தை மேற்கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதைத்தவிர ஜெயமோகனின் முகங்களின் தேசம், மகுடேசுவரனின் சுற்றுலாற்றுப்படை, கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம், லடாக் பயணம் குறித்து ரமணன் எழுதிய புதிய புத்தரைத்தேடி, மேகாலயா பயணம் குறித்து எழுதிய மேகங்கள் வாழும் சொர்க்கம், காசிப் பயணம் குறித்து எழுதிய பயணங்கள் முடிவதில்லை, மருத்துவர் செந்தில் எழுதிய தர்மபுரி முதல் பூடான் வரை என பல புத்தகங்கள் அளித்த அனுபவங்களையும் குறிப்பிட்டார்.

ஆய்வாளர் கடற்கரய் வாழ்நாள் முழுதும் பயணம் செய்துகொண்டே இருந்த காந்தியடிகள், தாகூர் போன்றோர் எழுதிய குறிப்புகள் அனைத்தையும் கிட்டத்தட்ட பயண நூல்கள் என்றே குறிப்பிடலாம் என்றொரு கருத்தைக் குறிப்பிட்டார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கவித்தலம் துரைசாமி மூப்பனார் (ஜி.கே.வாசன் அவர்களுடைய தாத்தா) எழுதி 1887இல் வெளிவந்த கங்கா யாத்ரா ப்ராவகம் என்னும் பயண நூலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். அதே சமயத்தில் அந்தப் புத்தகம் இன்றுவரை மறுபதிப்பு காணாமல் கிடப்பதைப்பற்றியும் ஆற்றாமையுடன் தெரிவித்தார்.

‘என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்’ என்னும் தலைப்பில் அடுத்த அமர்வு நடைபெற்றது. அமர்வை ஒருங்கிணைத்தவர் மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான கயல். அந்த அமர்வில் அவரோடு வெங்கட சுப்பராய நாயகர், சித்தார்த்தன் சுந்தரம், அக்களூர் இரவி ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் உரையாடினார்கள். கிளிமாஞ்சாரோவின் வெண்பனி, போரொழிந்த வாழ்வு, பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும் ஆகிய நூல்களை மொழிபெயர்த்த அனுபவம் உள்ளவர் கயல். திபெத் மண்ணின் கதைகளை மொழிபெயர்ப்பதற்கு முன்பு அந்நிலத்தைப்பற்றியும் அங்குள்ள மக்கள் வாழ்வு பற்றியும் தான் கொண்டிருந்த எண்ணங்கள் அனைத்தும் மொழிபெயர்ப்புக்குப் பிறகு அடியோடு மாறிவிட்டன என்று குறிப்பிட்டார். வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழும் அம்மக்களின் நிலை குறித்த துல்லியமான சித்திரங்களை அக்கதைகள் வழங்கியதாகவும் குறிப்பிட்டார். வேறொரு நாட்டைச் சேர்ந்த ஓர் இலக்கியப்படைப்பின் மொழிபெயர்ப்பு அந்நாட்டு மக்களின் வாழ்வனுபவங்களையும் நிலவியல் சூழலையும் உய்த்துணர வழிவகுக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஒரு மொழிபெயர்ப்பில் இலக்கியத்தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகளை எதிர்கொள்ளும் முறைகளைப்பற்றி பல எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகவும் நகைச்சுவையோடும் குறிப்பிட்டு உரையாற்றினார் வெங்கட சுப்பராய நாயகர். அவர் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழிற்கும் தமிழ் மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்கும் ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்த அனுபவமுள்ளவர். தன் உரையில் மொழிபெயர்ப்பு என்பது இரு முதலாளிகளிடம் வேலை செய்யும் அனுபவத்துக்கு நிகரானது என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார். ஒரே சமயத்தில் நூலாசிரியருக்கும் வாசகர்களுக்கும் நிறைவளிக்கும் வகையிலும் மூல வாசகத்திலிருந்து பிறழாமலும் மொழிபெயர்ப்பது மிகப்பெரிய சவால் என்றும் ஒரு மொழிபெயர்ப்பை வெற்றிகரமாக முடிக்கும்போது ஏற்படும் மனநிறைவு மாபெரும் மகத்தான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்த அனுபவமுடைய சித்தார்த்தன் சுந்தரம் மொழிபெயர்க்கும் தருணங்களில் ஆங்கிலத்தொடர்களுக்கு இணையான தமிழ்த்தொடர்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது மிகப்பெரிய சவால் என்று குறிப்பிட்டார். பல சமயங்களில் எளிய பொருளை அளிக்கும் bread winner, fried rice போன்ற  ஆங்கிலச்சொற்களுக்கு புழக்கத்தில் உள்ள இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிய கூடுதலான நேரத்தைச் செலவழிக்கவேண்டிய நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார். பல சமயங்களில் சொற்களின் நேர்ப்பொருளுக்கு அப்பால் அவற்றின் சுட்டுபொருளை மொழியாக்கத்தில் கொண்டுவரவேண்டிய தருணங்களையும் ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளவேண்டி வரும் என்று குறிப்பிட்டார். Elephant catcher,  To kill a mocking bird போன்ற நூல் தலைப்புகளை நீண்டகால யோசனைக்குப் பிறகு அச்சொற்களின் சுட்டுபொருளே முக்கியமானது என உணர்ந்து உச்சம் தொட, பாடும் பறவையின் மெளனம் என மொழிபெயர்த்ததாகவும் குறிப்பிட்டார்.

சமூகவியல் சார்ந்த எண்ணற்ற அல்புனைவு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் அக்களூர் இரவி மொழிபெயர்ப்பதற்கான நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்புணர்வோடு இருப்பதாகக் குறிப்பிட்டார். சமத்துவம் நோக்கிய இயக்கம், அந்த நதிக்கரையில் என் இதயத்தைப் புதையுங்கள், தகவல் அறியும் உரிமை, அரசியல் சிந்தனையாளர் புத்தர் போன்ற நூல்களை மிகவும் விரும்பி மொழிபெயர்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.   

23.08.2026 அன்று தமிழ்ப்பிரிவில் முதல் அமர்வாக ‘புதிய தமிழ்ச்சிறுகதைகளின் போக்குகள்’ என்னும் அமர்வு நடைபெற்றது. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைக்க சிறுகதை எழுத்தாளர்கள் சுஜாதா செல்வராஜ், திருச்செந்தாழை, சுஷில்குமார் ஆகியோர் பங்கேற்று தம் கருத்துகளை முன்வைத்தனர். புத்தாயிரத்தாண்டில் இலக்கியத்துக்கென இணைய இதழ்கள்  உருவாகி வளர்ந்த சூழலில் எண்ணற்ற புதிய துறைசார் அனுபவங்கள் சிறுகதைகளாக மலர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்த விதத்தைப்பற்றிய சுருக்கமான ஒரு வரலாற்றுச் சித்திரத்தை தன் முன்னுரையில் வழங்கினார் எம்.கோபாலகிருஷ்ணன்.

புதிய நூற்றாண்டின் வாழ்க்கைமுறை முந்தைய நூற்றாண்டைக்காட்டிலும் மனிதர்களிடையில் ஆழமான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று குறிப்பிட்டார் சுஷில்குமார். அவற்றை எழுதிக் கடக்கும் கலையை புதுவகை எழுத்துகள் கற்பிப்பதாகவும் அவர் கூறினார். புதிய களம் சார்ந்து எழுதப்படும் கதைகளில் இவான் கார்த்திக் கதைகள் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

சமகாலத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களின் வாழ்க்கைமாற்றத்துக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன என்று குறிப்பிட்ட சுஜாதா செல்வராஜ் அந்தப் பொருளியல் தன்னிறைவு வாழ்க்கையை சொந்த அனுபவங்கள் வழியாகப் பார்க்கும் ஆற்றலை பெண்களுக்கு வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். பழைய தலைமுறையில் மெளனமாகக் கடந்துவந்த உடல்சார் பிரச்சினைகள் இப்போது வெளிப்படையாக எழுதப்படுவதாகத் தெரிவித்தார். ஐ.கிருத்திகா எழுதிய ‘இளவெயில்’, உமாமகேஸ்வரி எழுதிய ‘தொலைகடல்’ போன்ற பல சிறுகதைகளை வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார். ஜெயராணியின் பல சிறுகதைகள் பெண்கள் சந்திக்க நேரும் சாதி சார்ந்த ஒடுக்குமுறைகளைப் பதிவு செய்திருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

எழுத்தாளர் திருச்செந்தாழை துறைசார் கதைகள் தமிழுக்கு வளம் சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். மயிலன் ஜி.சின்னப்பன் எழுதத் தொடங்கிய பிறகு மருத்துவத்துறை சார்ந்த கதைகள் தொடர்ச்சியாக எழுதப்படுவதும் கார்த்திக் பாலசுப்பிரமணியன், வயிரவன் போன்றோர் எழுதத் தொடங்கிய பிறகு ஐ.டி. துறை சார்ந்த கதைகள் பரவலாக எழுதப்படுவதும் வரவேற்கவேண்டியதென்றும் திருச்செந்தாழை குறிப்பிட்டார். புத்தாயிரத்தாண்டில் வணிகத்துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்திருப்பதையும் அத்தகு தருணங்கள் சார்ந்த கதைகள் விரைவில் பதிவாகும் என்றும் தெரிவித்தார். முத்துராசாகுமார், சித்ரன், இந்திரா ராஜமாணிக்கம் போன்றோரின் புதிய கதைகள் தமிழுக்குப் புதிய வரவாக உள்ளன என்றார்.

அடுத்த அமர்வு ‘நூல்கள் வழியாக தமிழக நகரங்களின் வரலாற்றுத் தடங்கள்’ என்னும் தலைப்பில் நடைபெற்றது. அமர்வை ஒருங்கிணைத்தவர் ஜா.ராஜகோபாலன். விஜயானந்தலட்சுமி, முனைவர் மணி.மாறன், குமாரநந்தன் ஆகியோர் பங்கேற்றனர். ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்னும் புறநானூற்று வரியைக் குறிப்பிட்டு தன் உரையைத் தொடங்கினார் ராஜகோபாலன். நிலம் ஒருவருடைய அடையாளமாக உருமாறும் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிவித்த அவர் வெவ்வேறு நூல்கள் வழியாக நம்மால் காணமுடிகிற திருநெல்வேலி நகரத்தின் சித்திரங்களை பல சுவாரசியமான தகவல்களோடு கூறினார்.

கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் மிக முக்கியமானதொரு தொடக்கநூல் என்றும் அவரைத் தொடர்ந்து சோமலெ, ஜகதீச ஐயர், குருகுலதாசப்பிள்ளை, செ.திவான் போன்றோர் பல வரலாற்றுத் தருணங்களை எழுதியிருக்கிறார்கள் என்றும் ராஜகோபாலன் குறிப்பிட்டார். ஆ.இரா.வேங்கடாசலபதி, த.ராசையா, நாறும்பூநாதன், வெள் உவன், முத்தாலங்குறிச்சி காமராசு போன்றோர் தொடர்ந்து திருநெல்வேலி வரலாறு சார்ந்த நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தேனி நகரத்தின் சித்திரங்களை பல தகவல்களின் துணையோடு அழகாகப் பேசினார் விஜயானந்தலட்சுமி. அசோகர் காலத்துக்கு முந்தைய கல்வெட்டு கிடைத்த இடமாகவும் பாண்டியர் வரலாற்றை அறிய துணையாக உள்ள சின்னமனூர் செப்பேடுகள் கிடைத்த இடமாகவும் தேனி இருப்பதாகக் குறிப்பிட்டார். சோமலெ. கம்பம் சீனிராஜ் போன்ற மூத்த எழுத்தாளர்கள் அந்நகரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள் என்றும் புதிய எழுத்தாளர்களான தேனி சீருடையான், எஸ்.செந்தில்குமார், சித்ரா சிவன் போன்ற எழுத்தாளர் இன்றைய தேனியின் சித்திரங்களை எழுதி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். கம்பம் பகுதியைச் சேர்ந்த தாத்தப்பங்குளம் உடைந்த வரலாற்றுத்தருணம் ‘குளம் உடைப்புச் சிந்து’ ’புதுக்கால் சிந்து’ போன்ற படைப்புகள் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்ததை சுருக்கமாக விவரித்தார். முகம்மது மீரான், கருத்த ராவுத்தர் போன்ற படைப்பாளிகள் இன்றும் தேனியை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து எழுதி வருவதாகவும் தெரிவித்தார்.

தஞ்சாவூர்க் கவிராயர் சமீப காலத்தில் எழுதிய ‘தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்’ நூல் தஞ்சாவூரின் வரலாற்றை அறிய விரும்புகிறவர்களுக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்று குறிப்பிட்டுப் பேசினார் முனைவர் மணி.மாறன். தெருக்களே அக்காலத்தில் சந்துகள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு தெருவுக்கும் பெரியதொரு வரலாற்றுப்பின்னணி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் ஒருசில சந்துகள் சார்ந்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார். ராணி மங்கம்மாள் வாழ்ந்த மங்களவிலாசம் பற்றி தஞ்சை பிரகாஷ் விரிவாகவே எழுதியிருப்பதாக அவர் தெரிவித்தார். லட்சுமி பாலகிருஷ்ணன் எழுதிய ஆனந்தவல்லி நாவல் மிகமுக்கியமானதொரு வரலாற்று ஆவணம் என்றும் குறிப்பிட்டார். டி.எஸ்.கோதண்டராமன், இராம.பாரதி, பட்டுக்கோட்டை ராஜா போன்றோரின் படைப்புகள் வழியாக ஏராளமான தஞ்சாவூர் சித்திரங்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். அடிமை வணிகம் நாட்டின் விடுதலைக்குப் பிறகு கூட நடைபெற்றது தொடர்பான பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் மாட்டுவண்டி, குதிரைவண்டி ஓட்டுவதற்குக் கூட உரிமம் தேவைப்பட்டது என்னும் தகவல் பழைய இலக்கியத்தில் பதிவாகியிருப்பதையும் விட்டல்மந்திர் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டுத் திண்ணைகளில் பல இசைமேதைகள் இசைநிகழ்ச்சிகள் நடந்த வரலாறும் ஞானசம்பந்தர் முக்தியடைந்த நாளில் முத்துப்பல்லக்கு எழும் வரலாறும் பதிவாகியிருப்பதையும் உற்சாகத்தோடு தெரிவித்தார். 

சேலம் நகரத்தின் வரலாற்றுத் தடங்கள் குறித்து குமாரநந்தன் பல தகவல்களைத் தெரிவித்தார். அந்நகரத்தின் பெயர் உருவான வரலாறு சார்ந்து பல சுவாரசியமான தகவல்கள் முன்வைக்கப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார். சிலர் சீலம் என்ற சொல்லே பிற்காலத்தில் சேலம் என மாறியதாகவும் சிலர் சாலியா என்னும் சொல்லே சேலம் என மாறியதாகவும் சிலர் சேரளம் என்னும் பெயரே பிற்காலத்தில் சேலம் என உருமாறியதாகவும் குறிப்பிடுவதைத் தெரிவித்தார். எல்லாமே ஏற்கும் வகையில் அமைந்திருப்பதால் எது உண்மையாக இருக்கக்கூடும் என்பது புதிராகவே உள்ளது என்றும் கூறினார். எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதிய ‘ஒரு அன்னாடு காச்சியின் சேலம்’ புத்தகம் வழியாக ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய சேலம் நகரச் சித்திரங்களை அறிந்துகொள்ள முடிகிறது என்று தெரிவித்தார். ஜே.பர்னபாஸ் எழுதிய ‘சேலம்: வரலாற்றுத்தடங்கள்’ வழியாக அறிவதற்கு வாய்ப்புள்ள வரலாற்றுச்சித்திரங்களையும் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த அமர்வு ‘அயல்மொழிக் கவிதைகள்: ஆழமும் அனுபவமும்’ என்னும் தலைப்பில் நடைபெற்றது. நிக்கனோர் பர்ரா, சில்வியா பிளாத் ஆகியோரின் கவிதைகளை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் அனுராதா ஆனந்த்  அந்த அமர்வை ஒருங்கிணைக்க, ஆனந்தகுமார், இரா.கவியரசு, முனவர்கான் ஆகியோர் பங்கேற்றனர். கவிதை மொழிபெயர்ப்பில் சரியான சொல்தேர்வு தொடர்பாக கடைப்பிடிக்கவேண்டிய கவனத்தைப்பற்றி பல எடுத்துக்காட்டுகளோடு பேசினார் அனுராதா ஆனந்த். மொழிபெயர்ப்பு வழியாக தமிழில் வெளிவந்திருக்கும் ரூமி கவிதைகள் வழங்கும் அனுபவத்தை கவியரசு சிற்சில எடுத்துக்காட்டுகளோடு விரிவாகப் பகிர்ந்துகொண்டார். முனவர்கான் தமிழ் மொழிபெயர்ப்பு வழியாக வாசித்து அறிந்துகொண்ட சத்தீஷ்கர், ஜார்கண்ட் பகுதிகளின் மலைவாழ் மக்களின் கவிதைகளில் தென்படும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான சித்திரங்களை சுருக்கமாக முன்வைத்தார். மேலும் தமிழில் வாசிக்கக் கிடைக்கும் இந்தி மொழிக் கவிதைகள் வழங்கும் வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.  

ஒவ்வொரு நாளும் முகாமுகி அரங்கில் எழுத்தாளர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகள் நாள்முழுதும் நடைபெற்றன. முதல்நாள் கவிஞர் சுகுமாரனுடன் வாசகர்கள் உரையாடல் நிகழ்த்தினர். ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது கவிதை என்பதை மொழியின் கதவு என முதலில் நினைத்ததாகவும் இப்போது கவிதை என்பதை மறுமலர்ச்சியாக நினைக்கத் தோன்றுவதாகவும் சுகுமாரன் குறிப்பிட்டார். காலம்தோறும் மொழி மிக நுட்பமான  வகையில் நம்மையறியாமலேயே மாறிக்கொண்டே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கவிஞர் வைத்தீஸ்வரன் எழுதத் தொடங்கிய காலத்தில் எவர்சில்வர் நிலவு என்று ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பதாகவும் அத்தகையை ஒரு சொல்லாட்சியை இப்போது அனைவருமே வேகமாகக் கடந்துவந்துவிட்டோம் என்றும் அவர் எடுத்துக்காட்டாகச் சொன்னார். அச்சு ஊடகம் வழியாக ஒரு செய்தியை முன்வைத்த காலத்தின் உணர்வுநிலைக்கும் காட்சி ஊடகம் வழியாக ஒரு செய்தியை முன்வைக்கிற இன்றைய காலத்தின் உணர்வுநிலைக்கும் இடையில் தன் மனம் ஆழமான வேறுபாடுகளை உணர்வதாகவும் அந்த வேறுபாட்டின் காரணமாகவே காட்சி ஊடகத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுவன் சந்திரசேகர் தன் நேர்காணலில் வாசகர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் புன்னகை ததும்பும் முகத்தோடும் உற்சாகத்தோடும் பதில் சொன்னார். புதுப்புது உதிரி அனுபவங்களை நாடிச் செல்வதும் அவற்றையெல்லாம் எழுதிப் பார்ப்பதும் தனக்குப் பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். 

பல்வேறு காரணங்களால் கிராமத்தைவிட்டு வெளியேறி நகரங்களில் வசிக்கும் மக்களின் நெஞ்சில் இயல்பாகவே இருக்கும் இழப்புணர்வை கிராமம் சார்ந்த கதைக்கருக்கள்  ஓரளவு ஈடு செய்கின்றன என்றும் நகரத்தில் வசிப்பவர்கள் கிராமம் சார்ந்த கதைகளை விரும்பிப் படிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பெருமாள் முருகன் தன் நேர்காணலில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாதொரு பாகன் நாவலை அடுத்து, அதன் அடுத்தடுத்த பாகங்களை எழுத நேர்ந்த சூழலையும் சுருக்கமாகத் தெரிவித்தார்.

கவிஞர்கள் கயல், யுவன், ரத்னா வெங்கட் ஆகியோர் ஒவ்வொரு நாளும் பொயட் ட்ரீ சிற்றரங்கில் இளைய தலைமுறையினருடன் கவிதை குறித்து உரையாடினர்.

ஜெயமோகன் எழுதிய ’பத்து லட்சம் காலடிகள்’ கதைத்தொகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பான One million footsteps புத்தகத்தையும் குமரித்துறைவி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான The daughter of Kumari புத்தகத்தையும் ஜக்கர்நட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவை வெவ்வேறு நாட்களில் அனாவரன அரங்கில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிகளை ஐஸ்வர்யா, சுசித்ரா ராமச்சந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தார். வாசகர்கள் கேள்விகளுக்கு ஜெயமோகன் பதிலளித்தார்.

காலச்சுவடு சார்பாக மூன்று நூல்கள் வெவ்வேறு தருணங்களில் வெளியிடப்பட்டன. எஸ்.ராஜாராம் தொகுத்த பதிப்புப்பரிமாணங்கள் என்னும் நூலை வெளியிட்டு பெருமாள் முருகன் பேசினார். அவரைத் தொடர்ந்து முனவர்கான் பேசினார். பெருமாள் முருகன் எழுதிய சோரகவி மரபு என்னும் நூலை பழனி.கிருஷ்ணசாமி வெளியிட்டுப் பேசினார். அவரைத் தொடர்ந்து தங்கமணி பேசினார். தியடோர் பாஸ்கரன் எழுதிய இது நம் சினிமா என்னும் நூலை சுகுமாரன் வெளியிட்டுப் பேசினார். அவரைத் தொடர்ந்து பெருமாள்முருகன் பேசினார்.

தமிழ்மொழி சார்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட அமர்வுகளைப்போலவே மூன்று நாட்களிலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம்  மொழி சார்ந்த அமர்வுகளும் வெவ்வேறு அரங்குகளில் நிகழ்ந்தன. பல மொழியினரும் புன்னகை பூத்த முகங்களுடன் புழங்கக்கூடிய வளாகமாக புக் பிரம்மா விழா வளாகம் அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பார்வையாளர்களின் செவிக்கு விருந்தாக கர்நாடக இசைக்கச்சேரியும் இந்துஸ்தானி இசைக்கச்சேரியும் நடைபெற்றன. மூன்றாவது நாள் மாலையில் நடைபெற்ற ‘பஸ்மாசுர மோகினி‘ என்னும் யட்சகான நிகழ்ச்சியோடு இலக்கியத் திருவிழா இனிதே நிறைவுற்றது.

இம்முறை புக் பிரம்மா இலக்கியத்திருவிழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த நாவல்  போட்டியிலும் சிறுகதைப்போட்டியிலும் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்குத் தனித்தனியாக விருதுகள் வழங்கப்பட்டன. தென்னிந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்ற பெருமாள் முருகனுக்கும் இலக்கியத்திருவிழாவின் சிறப்பு விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்கு எழுத்தாளரான முகம்மது கதீர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் சிறுதூறலென மழை பொழிந்ததால் எங்கெங்கும் குளிர் நிறைந்திருந்தது. நிகழ்ச்சிக்கு ஊறு விளைவிக்காத அளவில் அம்மழை இருந்ததால் வெளியே செல்ல நினைத்த பார்வையாளர்கள் கூட வளாகத்துக்குள்ளேயே தமக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சுற்றி  நின்று அரட்டைக்கச்சேரியில் மூழ்கியிருந்தனர். கே.ஆர்.மீரா, பென்யாமின், பால் சக்காரியா, ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன் ஆகியோர் வளாகத்தின் எந்தப் பகுதியில் நின்றிருந்தாலும் அவர்களைச் சுற்றி பத்துப் பதினைந்து பேர் சூழ்ந்து நின்று   உற்சாகமாக உரையாடிய காட்சியைப் பார்க்கமுடிந்தது. அரங்குகளில் நிகழாத உரையாடல்களாக அவை அமைந்துவிட்டன. தொடர்ச்சியான உரையாடல்களால் மனம் ஊக்கம் கொண்ட பறவையென வட்டமிட்டபடி இருந்தது.

 

(2026ஆம் ஆண்டின் புக் பிரம்மா இலக்கியத் திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 21,22,23 தேதிகளில் பெங்களூரில் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அதைப்பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகக்கட்டுரை 30.08.2026 அன்று தமிழ் இந்து நாளிதழில்   வெளிவந்தது.)