கடந்த ஆண்டில் வளவ. துரையன் எழுதிய ‘தடம் பதித்த தமிழர்கள்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். வெவ்வேறு வகைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய பல ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டியெடுத்து சிறுசிறு கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருந்தார். மொத்தம் முப்பத்துநான்கு கட்டுரைகள். அப்பட்டியலில் தெரிந்தவர்களும் இருந்தார்கள். தெரியாதவர்களும் இருந்தார்கள்.
முத்தப்பர் என்னும் புலவரின் பெயரை முதன்முதலாக அந்தப் புத்தகத்தின் வழியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். முதன்முதலாக பயணக்கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்ற படகாலு நரசிம்மலு நாயுடுவைப்பற்றிய கட்டுரையும் அத்தொகுதியில் இருந்தது. சங்கரதாஸ் சுவாமிகள், சோமசுந்தர பாரதியார், வ.ரா., வல்லிக்கண்ணன், பெ.தூரன், த.நா.குமாரசாமி, வள்ளியப்பா என பற்பல ஆளுமைகளைப்பற்றிய விரிவான சித்திரங்களும் அத்தொகுதியில் இருந்தன. அவர்களின் பெயர்கள் அனைவரும் அறிந்த பெயர்களாக இருந்தாலும், அவர்களைப்பற்றி பலரும் அறியாத ஏராளமான தகவல்களை வளவ. துரையன் திரட்டித் தொகுத்திருந்தார். அந்தப் புத்தகத்தைப் படித்துமுடித்ததும், பிறரும் அதைத் தேடிப் படிக்கும் வகையில் ஓர் அறிமுகக்கட்டுரையும் எழுதினேன்.
அத்தொகுதியை ஒட்டிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதுதான் தடம் பதித்த தமிழர்கள் என எதிர்காலத்தில் ஒருவர் உருவாக்கக்கூடிய பட்டியலில் வளவ. துரையனும் இடம்பெறுவார் என்றொரு எண்ணம் தற்செயலாக எழுந்தது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எல்லா வகைமைகளிலும் எழுதிக்கொண்டிருப்பவர் அவர். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டவர். எதிர்காலத்தலைமுறை அவரை நினைத்துக்கொள்வதற்கு ஏதுவாக பல தளங்களில் அவருடைய இயக்கம் அமைந்திருக்கிறது. அதில் எந்த ஐயமும் இல்லை.
அதுபோன்றதொரு எண்ணம் எழுந்த
அதே நேரத்தில், அவரைப்பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் எதிர்காலம் வரைக்கும் ஏன் காத்திருக்கவேண்டும்
என்றும், அந்தப் பொறுப்பை எதிர்காலத்தலைமுறை மீது ஏன் சுமத்தவேண்டும் என்றும் என் நெஞ்சில்
கேள்விகள் எழுந்தன. அவரை நித்தமும் தொடர்புகொண்டு உரையாடிக்கொண்டும் அவருடைய படைப்புகளை
வாசித்துக்கொண்டும் இருக்கிற நாமே அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் என அக்கணமே முடிவெடுத்தேன். இத்தொகுதிக்கான முதல்விதை அப்படித்தான் என் நெஞ்சில்
விழுந்தது.
அவருடைய தன்விவரக்குறிப்பைப்
புரட்டிப் படித்தபோது, அவர் தன் எழுபத்தைந்தாவது வயதில் இருப்பதை உணர்ந்தேன். உடனே
உருவாகவிருக்கும் கட்டுரைத்தொகுதியையே அவருடைய பவளவிழா மலராக வைத்துக்கொள்ளலாம் என்ற
முடிவெடுத்தேன். அதற்குப் பிறகுதான் என் முடிவை வளவ. துரையன் அவர்களிடம் தெரிவித்தேன்.
முதலில் அவர் தயங்கினாலும், அடுத்தடுத்து நான் வலியுறுத்திய பிறகு மலர் கொண்டுவருவதற்கான
ஒப்புதலை அளித்தார்.
அன்றே, கேட்டதும் கட்டுரை கொடுக்கக்கூடியவர்கள்
என்று எனக்குத் தோன்றிய நண்பர்களின் பெயர்களை ஒரு பட்டியலாக எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும்
பேசி தகவலைத் தெரிவித்தேன். அனைவரும் உள்ளார்ந்த
மகிழ்ச்சியுடன் மலர் பற்றிய செய்தியை வரவேற்றனர்.
உரிய நேரத்துக்குள் கட்டுரைகளையும் அனுப்பிவைத்தனர். யாருக்கும் நினைவூட்ட வேண்டிய
அவசியமே எழவில்லை. அனைவரும் குறித்த நேரத்தில் கட்டுரைகளைக் கொடுத்துவிட்டனர்.
திட்டமிட்ட ஒரு மாத இடைவெளிக்குள்ளேயே
அனைவருடைய கட்டுரைகளையும் திரட்டித் தொகுத்துவிட்டேன். வளவ. துரையன் மீது அக்கட்டுரையாளர்கள்
கொண்டிருக்கும் நட்பும் நெருக்கமும்தான் இதற்குக் காரணங்கள். கட்டுரைகளை வழங்கிய நண்பர்கள்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக்
கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும்
பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கு என் மனமார்ந்த நன்றி.
(இலக்கியச்சோலையின் ஆலமரம் – வளவ.துரையன்
பவளவிழா மலருக்காக எழுதிய முன்னுரை)