Home

Monday, 7 July 2025

தேர் நகர்ந்துகொண்டே இருக்கிறது

 

நான் கோவிந்தையர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் இராமச்சந்திரன் அண்ணன் “உனக்கு எத்தனை திருக்குறள் மனப்பாடமா சொல்லத் தெரியும்?” என்று கேட்டார். அவர் எங்கள் பெரியப்பாவின் மகன். ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு, வேலைக்காகக் காத்திருந்தார். நிலவழகன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். எங்கள் பாடப்புத்தகத்தில் செய்யுள் பகுதியில் இடம்பெற்றிருந்த குறள்கள் மட்டுமே அப்போது எனக்கு மனப்பாடமாகத் தெரியும். உடனடியாக அவற்றை மட்டும் நிறுத்தி நிதானமாக அவரிடம் சொன்னேன்.

அதைக் கேட்ட பிறகு அவர் “நல்லாதான் சொல்ற. ஆனா இது போதாது” என்று சொன்னபடி வீட்டுக்குள் சென்று கையடக்கமான ஒரு திருக்குறள் புத்தகத்தை எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். தொடர்ந்து ”எந்தத் திருக்குறளைப் படிச்சா உடனே மனப்பாடம் பண்ணமுடியுமோ, அதை மட்டும் ஒரு நோட்டுல எழுதி வச்சிகிட்டு படி. ஒரு இருபது திருக்குறள மனப்பாடம் செஞ்சிக்கப் பாரு. அடுத்த வாரத்துல எங்க திருக்குறள் கழகம் சின்னப் பிள்ளைகளுக்காக திருக்குறள் ஒப்பிக்கிற போட்டி ஒன்னு நடத்தப் போவுது. அதுல வந்து தப்பில்லாம ஒப்பிச்சா, ஒனக்கு பரிசு கொடுப்பாங்க“ என்றார்.

அடுத்தநாள் பள்ளிக்குச் சென்றபோது எங்கள் தமிழாசிரியரான கண்ணனும் அந்தத் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி பற்றிய தகவலை வகுப்பில் சொன்னார். ஒவ்வொரு நாளும் அவர் வகுப்பைத் தொடங்கும் முன்பாக ”ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்னும் வள்ளலாரின் வரிகளைச் சொல்லும்போது, அவரோடு சேர்ந்து நானும் நான்கைந்து நண்பர்களும் மனப்பாடமாகச் சொல்வோம். அந்த நினைவில் எங்கள் ஐந்து பேரையும் அருகில் அழைத்தார் அவர்.  “நீங்க அஞ்சி பேரும் அவசியமா போட்டியில கலந்துக்கணும்டா” என்றார். நாங்கள் ஆர்வத்தோடு தலையாட்டியதும் “கோவிந்தையர் பள்ளிக்கூடம் சார்பா நீங்க கலந்துக்கப் போறீங்கங்கறது ஞாபகம் இருக்கட்டும். பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல், தக்கா தெரு ஸ்கூல், ஐஸ்கூல்லேர்ந்து கூட பிள்ளைங்க வருவாங்க. நீங்க தைரியமா குறள் சொல்லி பரிசு வாங்கணும்” என்று உற்சாகமூட்டினார்.

அன்று இரவில், எங்கள் அண்ணன் எனக்குக் கொடுத்த திருக்குறள் புத்தகத்தைப் பிரித்து கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் தொடங்கி அடுத்தடுத்த அதிகாரங்களில் எளிதாக இருக்கும் இருபது திருக்கறள்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக்கொண்டேன். தினமும் காலையிலும் மாலையிலும் அவற்றைப் படித்து மனப்பாடம் செய்துவந்தேன்.

போட்டி நாள் வந்தது. அது ஒரு ஞாயிறு. அந்த விழா எங்கள் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்றது. தடுப்புத்தட்டிகளை அகற்றியதும் அது ஒரு பெரிய விழாக்கூடமாக மாறிவிட்டது. எங்கள் அண்ணனும் இன்னும் பல அண்ணன்மார்களும் சேர்ந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து வரிசையாகப் போடுவது, பலகையில் எழுதுவது என பல வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். என்னையும் சேர்த்து ஏறத்தாழ இருபது சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தோம். எல்லோரும் கையில்  திருக்குறள் புத்தகத்தோடு ஆளுக்கொரு மூலையில் நின்று பயிற்சி செய்துகொண்டிருந்தோம். 

சற்றே மெலிந்த உருவம் கொண்ட ஒரு அண்ணன் எங்களை நோக்கி வேகமாக வந்தார். ”திருக்குறள் ஒப்பிக்க வந்த பிள்ளைகளாடா நீங்க?” என்று கேட்டார். நாங்கள் உடனே “ஆமாம்” என்று தலையசைத்தோம். “இங்க ஒரே சத்தமா இருக்குது. வாங்க. அந்தப் பக்கமா போவலாம்” என சற்றே தொலைவில் இருந்த இன்னொரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அனைவரும் வரிசையாக அவரைப் பின்பற்றினோம். மூன்று வகுப்புகள் நடைபெறுவதற்குத் தோதாக உயரமான தட்டிகளை இணைத்து மறைப்பு உருவாக்கியிருந்தனர். அந்த அண்ணன் அனைவரையும் தட்டிக்கு ஒரு பக்கம் எங்களை நிற்கவைத்துவிட்டு, “இங்கயே நில்லுங்க. நான் பேர் சொல்லி கூப்புடற பையன் மட்டும் உள்ள வந்தா போதும்” என்று சொன்னார். பிறகு தன் பையிலிருந்த சீட்டை எடுத்துப் பார்த்துவிட்டு ஒரு பெயரைச் சொன்னார். உடனே அந்தப் பையன் கையை உயர்த்தியபடி அவரை நோக்கி நடந்துவந்தான்.  அடுத்த கணம் அவனை அழைத்துக்கொண்டு தட்டிக்குப் பின்னால் சென்று மறைந்தார் அவர்.  

அவர்களுடைய முகங்களைத்தான் எங்களால் பார்க்கமுடியவில்லையே தவிர, அவர்களுடைய பேச்சுக்குரல் கேட்டது. எந்தக் குறளைச் சொல்கிறான், எந்த இடத்தில் தடுமாறுகிறான் என்பதெல்லாம் தெரிந்தது. அவன் தடுமாறித் திகைக்கும் கணத்தில் அந்த அண்ணன் விடுபட்ட ஒரு சொல்லை எடுத்துக்கொடுத்து தொடர்ந்து சொல்வதற்கு உதவுவதும் கேட்டது. அந்த அனுபவம் புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது.

ஒவ்வொருவராகச் சென்று ஒப்பித்துவிட்டுத் திரும்பினர். என்னுடைய பெயரை அழைத்ததும் நான் ஓட்டமாக ஓடிச் சென்று அவர் முன்னால் நின்றேன். மனப்பாடம் செய்துவைத்திருந்த ஒவ்வொரு குறளையும் நிறுத்தி நிதானமாகச் சொன்னேன். சொல்லி முடித்ததற்கு அடையாளமாக கைவிரலைப் பிரித்து நானே எண்ணிக்கொண்டு வந்தேன். இருபது குறள்களைச் சொல்லி முடித்ததும் நிறுத்துக்கொண்டேன்.

“இருபதுதான் தெரியுமா? அதுக்கு மேல தெரியாதா?” என்று கேட்டார் அந்த அண்ணன். நான் தலையை அசைத்து தெரியாது என்றேன். “கண்ணுடையவர், புண்ணுடையவர்னு ஒரு குறள் சொன்னியே, அதை இன்னொரு தரம் சொல்லு” என்று குறிப்பாகக் கேட்டார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அக்குறளை ஞாபகப்படுத்திக்கொண்டு மறுபடியும் சொன்னேன்.

அந்த அண்ணன் ஒருகணம் என்னை உற்றுப் பார்த்தார். “இப்பவும் அதே தப்புதான் செய்யற. படிக்கும்போது பார்த்துப் படிக்கமாட்டியா?” என்று கேட்டார். என்ன தப்பு என்று புரியாமல் குழப்பத்துடன் அவர் முகத்தையே நான் பார்த்தபடி நின்றேன். அவர் தன் கையிலிருந்த திருக்குறள் புத்தகத்தைப் பிரித்து குறிப்பிட்ட குறளை என்னிடம் கொடுத்து “இப்ப அதே குறளைப் பார்த்துப் படி” என்றார். நான் அக்குறளை ஏற்கனவே சொன்னதுபோலவே படித்தேன்.  அவர் தன் முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் “இப்பவும் அந்த இடத்துலயே தப்பு பண்ற. திருக்குறள நல்லாப் பாரு.  கண்ணுடையர்னு இருக்குதா, கண்ணுடையார்னு இருக்குதா?” என்று கேட்டார். நான் திருக்குறள் பக்கமாகப் பார்வையைத் திருப்பினேன். முதன்முறையாக என் பிழையை நான் உணர்ந்தேன். கண்ணுடையர் என்பதை நான் எப்படி கண்ணுடையார் என படித்து மனப்பாடம் செய்தேன் என்பதே எனக்குப் புரியவில்லை. நான்  பிழை செய்வதே எனக்குத் தெரியாமல் போய்விட்டது. பிழையை உணர்ந்துகொண்ட அமைதியுடன் நான் அந்த அண்ணன் முகத்தையே பார்த்தேன்.  “எதப் படிச்சாலும் இனிமேலாச்சும் கவனமா பார்த்துப் படிக்கணும், புரியுதா?” என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.

ஏதோ ஒரு பார்வைப்பிசகின் காரணமாக குறிலெழுத்தை நெடிலெழுத்தாக மனம் பதியவைத்துக்கொண்டது. பிறகு சொல்லிச்சொல்லி அதுவே பழகிவிட்டது. என் அவசரம்தான் அதற்குக் காரணம் என என்னை நானே திட்டிக்கொண்டேன். வகுப்பறையில் ஓர் ஓரமாகச் சென்று பெஞ்ச்சில் உட்கார்ந்து போட்டி முடியும் வரை காத்திருந்தேன். தட்டிக்கு மறுபுறத்திலிருந்து வரும் சொற்களை கவனமாகக் காது கொடுத்துக் கேட்டபடி இருந்தேன். எல்லோரும் சொல்லிமுடித்த பிறகு அந்த அண்ணன் வெளியே வந்து முடிவை அறிவித்தார். எனக்கு முதல் பரிசு. பஞ்சாயத்து போர்டு பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு இரண்டாவது பரிசு. எங்கள் பள்ளியைச் சேர்ந்த இன்னொரு மாணவனுக்கு மூன்றாவது பரிசு.

”நீங்க மூனு பேருமே இருபது திருக்குறளையும் மனப்பாடமா சொன்னீங்க. மூனு பேருக்குமே முதல் பரிசு கொடுக்கலாம். ஆனா சொற்களை தப்பா உச்சரிச்சதுக்காக, தப்புக்குத் தகுந்த மாதிரி மார்க்கை குறைக்க வேண்டிதா போச்சி” என்று சொல்லிவிட்டு எங்களைத் தட்டிக் கொடுத்தார். அந்த அண்ணன் பெயர் ஏ.பி.எஸ். அண்ணன் என்றும் அ.ப.சு. அண்ணன் என்றும் பிற்பாடு தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு அவருக்கு வளவ.துரையன் என்றொரு புனைபெயர் இருப்பதையும் புரிந்துகொண்டேன்.

அன்று நடைபெற்ற விழாவில் ஏ.பி.எஸ். அண்ணன் பேசினார். அவரோடு இராஜாராமன் அண்ணன், சுந்தரமூர்த்தி அண்ணன், பழனிவேலன் அண்ணன் என பல அண்ணன்மார்கள் உரையாற்றினர். நல்ல விருந்து சாப்பாடு போட்டார்கள். எனக்கு ஒருபக்கம் திருக்குறள் வரிகளும் மறுபக்கத்தில் அவற்றின் பொருளும் அச்சிடப்பட்ட கையடக்கமான புத்தகத்தைப் பரிசாக அளித்தனர். அடுத்தநாள் அந்தப் புத்தகத்தை பள்ளிக்குச் சென்று கண்ணன் ஐயாவிடமும் மற்றுமுள்ள நண்பர்களிடமும் காட்டினேன். எங்கள் ஐயா என்னை மிகவும் பாராட்டினார்.

திருக்குறள் கழகக் கூட்டங்கள் சில சமயங்களில் கோவிந்தையர் பள்ளியிலும் சில சமயங்களில் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோதி தட்டச்சு நிலையத்திலும் நடைபெற்றன. கூட்டம் தொடங்கும்போது திருக்குறள் சொல்லிவிட்டுத் தொடங்குவது ஒரு நடைமுறை. அதைச் சொல்வதற்காக எங்கள் இராமச்சந்திரன் அண்ணன் என்னையும் கூட்டத்துக்கு அழைத்துச் செல்வார். நானும் திருக்குறள் சொல்லிவிட்டு அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டபடி உட்கார்ந்திருப்பேன். ஏ.பி.எஸ். அண்ணன் தன் பையிலிருந்து சில புத்தகங்களை எடுத்து அறையின் ஓரமாக ஒரு மேசையின் மீது வைப்பார். நான் அவற்றை எடுத்து படிப்பேன். ஏ.பி.எஸ். ஒருமுறை எனக்கு தமிழ்ச்சிட்டு என்றொரு இதழைக் கொடுத்து “வீட்டுக்கு எடுத்தும்போய் படி” என்றார். பல சிறுவர் கதைகளும் பாடல்களும் விடுகதைகளும் அறிவியல் தகவல்களும் இருந்தன. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அவர் எனக்கு ஒரு தமிழ்ச்சிட்டு இதழைக் கொடுத்தார்.

கூட்டம் நடைபெறாத சமயங்களில் கடைத்தெருவில் சத்திரம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டி நான்கு பக்கங்களிலும் கீற்றுகளால் மறைப்பு ஏற்படுத்தப்பட்ட ஒரு சின்னக் குடிலில் எல்லா அண்ணன்மார்களும் சந்தித்து உரையாடிக்கொண்டிருப்பார்கள். அங்கு சில நாளேடுகளும் இருக்கும். எல்லாரும் சேர்ந்து ஏதோ ஒன்றைப்பற்றி தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் அந்த நாளேடுகளைப் புரட்டிப் படித்துக்கொண்டிருப்பேன்.

 ஒருமுறை ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது பலவண்ண மைகளால் எழுதப்பட்ட படைப்புகளையும் ஓவியங்களையும் கொண்ட ஒரு கையெழுத்துப் பத்திரிகை வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். முத்துமுத்தான கையெழுத்தைப் பார்த்ததும், அந்தப் பத்திரிகையை ஆவலுடன் எடுத்துப் புரட்டினேன். அந்தப் பத்திரிகையின் பெயர் சங்கு. அதன் ஆசிரியர் குழுவில் வளவ.துரையன் பெயரும் இருந்தது. தமிழ்ச்சிட்டு, தென்மொழி மாதிரி அதுவும் ஒரு பத்திரிகை என்றும் அச்சுச்செலவுக்குப் பணம் திரட்ட முடியாத காரணத்தால், கையெழுத்துப்பிரதியாகவே நடத்தி வருகிறார்கள் என்றும் புரிந்துகொண்டேன். இலக்கிய ஆர்வம் ஒரு பசையைப்போல என் நெஞ்சில் ஒட்டிக்கொள்வதற்கு திருக்குறள் கழகம் ஒரு முக்கியமான காரணம்.

கோவிந்தையர் பள்ளியில் படித்துமுடித்த பிறகு வளவனூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். பள்ளி நூலகத்திலும் பொது நூலகத்திலும் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கண வகுப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பாவினமும் இலக்கண வடிவமைப்பும் கைவரப்பெற்ற பிறகு, அந்த வடிவங்களில் எழுதத் தொடங்கினேன். அந்தத் துணுக்குகளையெல்லாம் யாரிடமும் காட்டாமல் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி பாதுகாப்பாக வைத்துக்கொண்டேன். அந்தப் படைப்புகளுக்கு நானே கவிஞன். நானே வாசகன்.

திருக்குறள் கழகம் வேகவேகமாக வளர்ந்து வேரூன்றி நிற்கத் தொடங்கியது. சிலர் வேலை கிடைத்து வெளியூர் சென்ற காரணத்தால் கழக வேலையிலிருந்து ஒதுங்கிச் சென்றனர். சிலர் புதிதாக வந்து இணைந்துகொண்டனர். இத்தகு மாற்றங்களுக்கு நடுவில் நான்கு பேர் மட்டும் தூண்களாக நின்று கழகத்தை நடத்தி இலக்கியம் வளர்த்தனர். அவர்கள் அர.இராசாராமன், வளவ.துரையன், துரை. சுந்தரமூர்த்தி, சு.கணேசனார்.

பட்டப்படிப்பில் சேர்வதற்காக, நான் வளவனூரைவிட்டு புதுச்சேரிக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு என் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே அருமையான ஒரு நூலகம் இருந்தது. அங்கு ஏராளமான புத்தகங்கள் எனக்கு அறிமுகமாகின. அது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு. கல்லூரியில் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் பாவலர் ம.இலெ.தங்கப்பா. என் கவிதைப்பயிற்சிக்கு அவர் அருந்துணையாக இருந்தார்.  பல கவிதைப்போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். அவற்றில் கிடைத்த வெற்றி எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. ஊருக்குச் செல்லும்போது, நான் எழுதிவைத்திருக்கும் கவிதைகளை அர.ராசாராமன் அண்ணனிடமும் வளவ.துரையன் அண்ணனிடமும் காட்டி, கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் அக்கவிதைகளைப் படித்துவிட்டு மனம் திறந்து பாராட்டினார்கள்.

பட்டப்படிப்பை முடித்த கையோடு, அஞ்சல்நிலைய எழுத்தராக தேர்வு பெற்று விழுப்புரம் அஞ்சல்நிலையத்தில் ஓராண்டு காலம் பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் இணைந்து ஓராண்டு காலம் பணிபுரிந்தேன். இக்காலகட்டத்தில் சந்த நயத்துடன் மரபுப்பாடல்களை எழுதி எழுதித் தேர்ச்சி பெற்றேன். அர.இரா.வும் வளவ.துரையனும் என்னை பல கவியரங்குகளுக்கு அழைத்துச் சென்று கவிதைகளைப் படிக்கவைத்து ரசித்தனர். கவிதை, கவியுகம், கவிதாமண்டலம் என பல இதழ்களைக் கொடுத்து, அவற்றுக்கு கவிதைகளை அனுப்பிவைக்குமாறு சொன்னார்கள். அவர்களுடைய கவிதைகளுக்கு அருகிலேயே நான் அனுப்பிவைத்த  கவிதைகளும் பிரசுரம் கண்டன.

சிறு கவிதைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதில் என் மனம் நிறைவடையவில்லை. நீண்ட விரிவான கதையமைப்பைக் கொண்ட குறுங்காவியங்களை எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு காவியத்தையும் வெள்ளைத்தாளில் அழகான கையெழுத்தில் எழுதி பைண்டிங் செய்து படிப்பதற்காக நண்பர்களிடம் கொடுத்தேன். ஒவ்வொருவரும் அதைப் படித்த பிறகு தம் எண்ணங்களை, அப்புத்தகத்தின் இறுதிப்பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்த கருத்துப்பதிவுக்கான பக்கங்களில் எழுதிக் கொடுத்தனர். அப்பகுதியில் வளவ.துரையன் விரிவான ஆய்வுக்கட்டுரையையே எழுதிக் கொடுத்தார். அடிக்கடி இடம் மாறியதன் காரணமாக, எங்கோ ஓரிடத்தில் அந்தச் சுவடிகள் எல்லாம் மறைந்துபோய்விட்டன. என்னைப் பொறுத்த வரையில் அது ஒரு பேரிழப்பு.

தொலைபேசித்துறையில் இளநிலை பொறியாளராக தேர்வுபெற்று, அதற்கான பயிற்சிக்காக நான் ஐதராபாத்துக்குச் சென்றேன். அந்தப் பயணம் என் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை. என் மனம் சிறுகதையை நாடியது. அது எனக்கு மிகப்பெரிய விடுதலையாகவும் வடிகாலாகவும் இருந்தது. 1982ஆம் ஆண்டில் தீபம் இதழில் என்னுடைய முதல் சிறுகதை வெளிவந்தது. ஓராண்டு கால பயிற்சி முடிந்து கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ஹொஸபேட்டெ என்னும் ஊரில் வேலையில் சேர்ந்தேன். அதற்குப் பின்பு சில மாதங்கள் கழித்தே விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தேன். அந்த இடைவெளியில் என்னுடைய பெயரில் நான்கைந்து கதைகள் வெளிவந்துவிட்டன. புதிதாக எழுதிய சிறுகதைகளின் கையெழுத்து நகல்களும் கைவசம் இருந்தன. வளவனூரிலேயே வசித்துவந்த அர.இராசாராமன், சுந்தரமூர்த்தி, துரைக்கண்ணு போன்றவர்களை மட்டுமே என்னால் சந்தித்து உரையாடமுடிந்தது.  என் சிறுகதைகள் அவர்களுக்குப் பிடித்திருந்தபோதும், நான் கவிதைமுயற்சிகளைத் தொடராமல் நிறுத்தியதை ஒட்டி அவர்களுக்கு சற்றே வருத்தமிருந்தது. வளவ.துரையன் அண்ணன் கடலூருக்குச் சென்றுவிட்டிருந்தார். அவரைச் சந்திக்க வாய்க்கவில்லை. முகவரியைப் பெற்றுவந்து மடல் மட்டும் தொடர்ச்சியாக எழுதிவந்தேன். ஒளிநகல் வசதி பெருகாத காலம் என்பதால், கதையைப் பிரதியெடுத்து என்னால் யாருக்கும் அனுப்பமுடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எங்கோ நூலகத்தில் படிக்கக் கிடைத்த ஒரு பத்திரிகையில் என்னுடைய சிறுகதையைப் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டு வளவ.துரையன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அது எனக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.

அவர் கடலூரில் வசித்துவந்ததாலும் நாலைந்து மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே விடுப்பெடுத்துக்கொண்டு வளவனூருக்குச் செல்லும் நேரங்களில் சென்ற வேலையை முடித்துக்கொண்டு திரும்பினால் போதும் என்கிற எண்ணத்தில் நான் இருந்ததாலும் என்னால் வளவ.துரையனைச் சந்திக்க இயலவில்லை. எப்படி இருந்தோம் என்பதை இப்போது எண்ணிப் பார்த்தால் திகைப்பாக இருக்கிறது. எப்படியோ கடிதவழி பரிமாற்றம் என்பது மட்டும் நீடித்திருந்தது.

இரண்டாயிரத்துக்கு முற்பட்ட ஏதோ ஓர் ஆண்டில் தினமணி கதிரில் அவருடைய ஒரு சிறுகதை வெளிவந்ததைப் பார்த்தேன். வளவ.துரையன் என்னும் பெயரைப் பார்த்ததுமே உடனே அக்கதையைப் படித்துவிட்டேன். அப்போது நான் இடமாற்றல் பெற்று பெங்களூருக்கு வந்துவிட்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறுகதை உலகத்துக்குள் வளவ.துரையன் அடியெடுத்து வைத்ததை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது. என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் அவருடைய சிறுகதையைப்பற்றிய வாசிப்பனுபவத்தையும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதி அனுப்பியிருந்தேன். தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கும்படி குறிப்பிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பல சிறுபத்திரிகைகளில் அவர் தம் சிறுகதைகளை அவ்வப்போது எழுதி வந்தார். அவற்றையெல்லாம் ஒன்று விடாமல் படித்தேன். அவற்றைப்பற்றிய என் எண்ணங்களையும் கடிதங்கள் வழியாக அடிக்கடி அவருக்குத் தெரியப்படுத்தினேன்.

இரண்டுமூன்று ஆண்டுகளுக்குள்ளேயே ஒரு தொகுதிக்குத் தேவையான அளவுக்கு அவர் பல சிறுகதைகளை எழுதிவிட்டார். ஒரு தொகுப்பாக வெளிவரும்போது நான் அதற்கு ஒரு முன்னுரையை எழுதவேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் அத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டிருந்தேன். மிக விரைவில் அந்த நாளும் வந்தது.  தொகுப்புக்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த எல்லாக் கதைகளையும் ஒருசேரப் படித்துவிட்டு, அத்தொகுப்புக்குப் பொருத்தமான ஒரு முன்னுரையை எழுதிக் கொடுத்தேன். குறுகிய காலத்தில் அத்தொகுப்பு ’தாயம்மா’ என்னும் தலைப்பில் 2000 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அப்போது அவர் ஏறத்தாழ ஐம்பது வயதைக் கடந்திருந்தார். கி.ரா. தன் நாற்பதாவது வயதைத் தொட்ட சமயத்தில்தான் தன் முதல் சிறுகதையை எழுதியதாக ஏதோ ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதைப் படித்த நினைவிருக்கிறது. வளவ.துரையன் அதையும் தாண்டி தன் ஐம்பதாவது வயதில் சிறுகதை உலகத்துக்குள் அடியெடுத்து வைத்தார். ’ஆர்வமுள்ள நெஞ்சுக்கு வயது ஒரு பொருட்டே அல்ல, அதெல்லாம் ஓர் எண் மட்டுமே’ என்னும் சொல்லுக்கு ஏற்ப அவர் வற்றாத ஊக்கத்துடன் அடுத்தடுத்து எழுதிக்கொண்டே இருந்தார்.

’தாயம்மா’ எனும் தலைப்புக்கதை மிகச்சிறந்த சிறுகதை. இன்று அக்கதையை எடுத்துப் படிக்கிறவர்களுக்கும் கூட அக்கதை புத்தம்புதிதாக இருப்பதுபோலவே தோன்றும். அக்கதை சம்பவத்தை நம்பியில்லாமல் மானுடப்பண்பில் நிகழும் வினோதமாற்றத்தைத் தொட்டெடுத்துக் காட்டும் முயற்சியை நம்பி எழுதப்பட்டது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ சிறுகதை எப்படி மனிதமனங்களின் இருட்டுப்பகுதிகளைத் தொட்டெடுத்து இணைத்து மாலையாக்கி வீசுவதுபோல, வளவ.துரையனின்  தாயம்மாவும் ஆழ்மன  குணாதிசயங்களைச் சித்தரிக்கும் கதை.

ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய ஒரு மரத்தடியில் தாயம்மா என்னும் பிச்சைக்காரி இறந்துவிடுகிறாள். அவளுடைய வளர்ப்புமகள் அவளை மரியாதைக்குரிய வகையில் அடக்கம் செய்யவேண்டும் என்று விரும்புகிறாள். அத்தனை ஆண்டுகள் பாசத்துடன் வளர்த்தவளுக்குத் தான் செலுத்தவேண்டிய நன்றிக்கடனாக அந்தச் சடங்கைக் கருதுகிறாள்.  ஆனால் அவளிடம் பணம் இல்லாததால், எப்படி சடங்கை நடத்துவது என்று புரியாமல் தவிக்கிறாள். அவளுக்கு  உதவுவதாகச் சொல்லிக்கொண்டு வருகிறான் ஒருவன். மரணமடைந்த கிழவியையே ஒரு காட்சிப்பொருளாக்கி, வருகிறவர்கள் போகிறவர்கள் அனைவரிடமிருந்தும் பணம் வசூல் செய்கிறான். இருநூறு ரூபாய்க்கும் மேல் பணம் சேர்ந்ததும், அதில் ஒரு பகுதியை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு எஞ்சிய பணத்தை தன் பைக்குள் போட்டுக்கொள்கிறான். ஊர்ப்பஞ்சாயத்து ஆட்களிடம் அடாவடியாகப் பேசி ரகளை செய்து, அவர்கள் வழியாக அமரர் ஊர்திக்கும் இலவச அடக்கத்துக்கும் வழிசெய்துவிட்டுப் போகிறான். தான் அதுவரை செய்த உதவிக்கு நன்றிக்கடனாக தன் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுச் செல்லும்படி அந்த அப்பாவிப்பெண்ணிடம் ஜாடையாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான். அவ்வளவுதான் கதை. கதையின் கருவைவிட, கதை எழுப்பும் பலவித கேள்விகளால்தான் அக்கதை சிறப்பு பெறுகிறது.  சொந்தப் பணத்தைப் போட்டு செலவுசெய்து அடக்கம் செய்யும் அளவுக்கு வசதி இருந்தும், இந்த வசூல் வேலையில் அவன் ஏன் இறங்கினான்? வசூல் செய்தபிறகு, அந்தப் பணத்தைச் செலவழிக்காமல் ஏன் சுருட்டிக்கொள்ள முயற்சி செய்தான்? சுருட்டியவன் அப்படியே செல்லாமல் ஒரு பங்கு பணத்தை அவளிடம் ஏன் கொடுக்கிறான்? கவலையை மறக்க அவளை ஏன் தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறான். அவனுடைய செயல்பாடுகளில் விருப்பமில்லாவிட்டாலும் கூட அவனுடைய சொற்கள் அனைத்துக்கும் அந்தப் பெண் ஏன் உடன்படுகிறாள்? இந்தக் கேள்விக்கெல்லாம் ஒருவரிடமும் பதில் இல்லை. பதிலே இல்லாத கேள்விகள் இவை.  நாம் அறிந்துவைத்திருக்கும் நன்மை, தீமைகளின் அடிப்படையில் இதைப் புரிந்துகொள்ள முடிந்தது.  நன்மைக்குள் ஒளிந்திருக்கும் தீமையையும் தீமைக்குள் ஒளிந்திருக்கும் நன்மையையும் ஊடுருவிப் பார்த்தால் மட்டுமே இச்சம்பவத்தை நம்மால் மதிப்பிட முடியும். ஒவ்வொருவருடைய மனமும் ஆதரவுக்குணமும் சுரண்டல் குணமும் இரு அறைகளைக் கொண்ட ஒரு வீடாக இருக்கிறது.

வளவ.துரையன் எழுதிய ’அன்று இன்று இனி’ என்னும் சிறுகதைத்தொகுதியில் ‘சேலத்தார் வண்டி’ என்றொரு சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. வாகனப் போக்குவரத்துக்கு மாட்டுவண்டிகளை மக்கள் பயன்படுத்திவந்த காலத்தில் சற்றே வசதிவாய்ப்புள்ள ஒரு குடும்பத்துக்கும் ஒரு வண்டிக்காரருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. அவர் சேலம் பக்கத்திலிருந்து குடிபெயர்ந்து வளவனூரில் குடியேறியதால் அவருக்குச் சேலத்தார் என்றும் அவர் ஓட்டிய வண்டிக்கு சேலத்தார் வண்டி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. சேலத்தாரின் மகனும் பெரிய வீட்டைச் சேர்ந்தவரின் மகனும் வகுப்புத்தோழர்கள். எல்லோரிடமும் பிரியமாகப் பேசிப் பழகும் சேலத்தார் அந்தப் பையனிடமும் பிரியமாக இருக்கிறார். எப்போதாவது ஸ்டேஷன் பக்கமாகப் பார்க்கும்போது, அவனிடம் கதை பேசி பொழுது போக்குகிறார்.

அந்தப் பையன் வேகமாக வளர்ந்து இளைஞனாகி திருமணமும் செய்துகொள்கிறான். ரயிலிலிருந்து இறங்கி வரும் மணமக்களை தம் வண்டியில் ஏற்றி அமரவைத்துக்கொண்டு வீடு வரை அழைத்துச் செல்கிறார். அந்தச் சவாரிக்கு அவர் பணம் வாங்க மறுக்கிறார் வண்டிக்காரர். அடுத்து சில ஆண்டுகளில் அந்த வீட்டில் வசித்துவந்த தாத்தாவும் அப்பாவும் அடுத்தடுத்து மறைந்துவிடுகின்றனர். அந்த இளைஞன் வேலை செய்யும் சென்னைக்கே குடிபெயர வேண்டியிருந்ததால், வளவனூரில் இருந்த வீட்டை விற்றுவிட்டு வெளியேறிவிடுகின்றனர். சென்னைக்குக் குடிபோன மணமக்களுக்கு பத்து வருஷம் கழித்துத்தான் குழந்தை பிறக்கிறது. முடி இறக்கும் சடங்குக்காக சென்னையிலிருந்து மைலம் முருகன் கோவில்வரைக்கும் காரில் வந்தவர்கள் பிறந்து, வளர்ந்த ஊரைப் பார்ப்பதற்காக வளவனூருக்கு வருகிறார்கள். சேலத்தார் வீட்டில் இறங்கி, கட்டில்மீது அமர்ந்திருந்த முதியவரைப் பார்க்கிறார்கள். பெரிய வீட்டுப் பிள்ளைகள் தம்மைப் பார்க்க வந்ததை நினைத்து வண்டிக்காரர் மனம் நெகிழ்ந்து போகிறார். குழந்தையின் கையில் கசங்கிய பத்து ரூபாய்த்தாளை வைத்து வாழ்த்துகிறார். மாடுகளை எல்லாம் விற்றுவிட்டதாகவும் வண்டியை மட்டும் விற்க மனமில்லாமல் வைத்திருப்பதாகவும் சொல்கிறார். கைக்குழந்தையை தன் கையில் வாங்கிய முதியவர் அந்த வண்டிக்கு அருகில் சென்று நிற்கிறார். சிரித்துக்கொண்டே குழந்தையிடம் ”இது உங்க கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் உக்காந்த வண்டி. இப்ப நீயும் உக்காந்திருக்கிற வண்டி” என்று சொல்லிவிட்டு ஆனந்தக்கண்ணீர் தளும்பச் சிரிக்கிறார்.

எந்தச் சிக்கலும் இல்லாத நேரிடையான கதை. பெரிய பூடகத்தன்மையோ, மறைபொருளோ, சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சியோ, சித்து விளையாட்டோ எதுவுமே இல்லாத நேரிடையான கதை. எந்தத் தீவிரமான சமுதாயப்பிரச்சினையையும் இது முன்வைக்கவில்லை. ஆனால் அருகிவரும் மனித உறவின் மேன்மையை அடையாளம் காட்டுகிறது. ஒரு பெரிய வீட்டுக்கும் அவர்களுக்கு வண்டியோட்டும் ஒரு வண்டிக்காரருக்கும் இடையில் உருவாகும் உறவு என்பது ஏதோ பணம் கொடுப்பதாலும் பெறுவதாலும் உருவாவதில்லை. முதலாளி, தொழிலாளி என்பதாலும் உருவாவதில்லை. அனைத்தையும் கடந்த எளிய அன்பின் நெருக்கத்தால் உருவாவது. எல்லா இடங்களிலும் இந்த உறவு ஏற்பட்டுவிடுவதுமில்லை. அபூர்வமாக ஏற்படும் உறவு இது. தன் மகனைப்போலவே இன்னொருவருடைய பிள்ளையையும் நினைக்கிற வண்டிக்காரரும் தன் தந்தைக்கு நிகரானவராக வண்டிக்காரரை நினைக்கிற இளைஞனும் இம்மண்ணில் அபூர்வமானவர்கள். இந்த அபூர்வத்தன்மையை வெளிப்படுத்துவதாலேயே வளவ. துரையனின் சிறுகதை எளிமையான கதையாக இருந்தாலும் வாசிப்பதற்கு நல்ல சிறுகதையாக அமைந்திருக்கிறது.

மலையேற்றம் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் நொண்டிவாத்தியார் சிறுகதையும் அபூர்வமான ஒரு மனிதரை அடையாளம் காட்டும் கதை. அப்படி ஒரு வாத்தியார் இருந்தார், அவருக்கு ஒரு வரலாறு இருந்தது என்று  வாசகர்களின் நெஞ்சில் பதியவைக்கும் முயற்சியாகவே வளவ.துரையன் இக்கதையை எழுதியிருக்கிறார்.

பள்ளிக்கூடத்தில் முக்கியமான ஆசிரியர் அவர். தலைமையாசிரியர்கூட பல வேலைகளுக்கு அவரைத்தான் நம்பி இருக்கிறார். மாணவர்களை மிரட்டாமல் அடிக்காமல் பாடங்களைப் படிக்க வைப்பதிலும் தேர்வுகளில் வெற்றிபெற வைப்பதிலும் முக்கியமான பங்காற்றுகிறவர் அவர். ஆயினும் சக ஆசிரியர்கள் முதல் ஊர்க்காரர்கள் வரை அனைவரும் அவருடைய உடல் ஊனத்தைச் சுட்டிக்காட்டி நொண்டி வாத்தியார் என்றே அழைக்கின்றனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தம் கடமையைச் செய்கிறார் அவர். அவர் பிறரால் எப்படி ஏளனம் செய்யப்படுகிறார் என்பதையும் தன்னைப்பற்றி சொல்லப்படும் ஏளனக்குறிப்புகளைப் பொருட்படுத்தாமல் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதையும் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் சிறுசிறு காட்சிகள் வழியாக உணர்த்திவிட்டு முக்கியமான பகுதியை நோக்கி கதையை நகர்த்திச் செல்கிறார் வளவ.துரையன்.

சுதந்திரநாள் விழா பள்ளியில் கோலாலகலமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவர் ஒருவர் அப்பள்ளிக்கு ஒரு புதிய கட்டடத்தைத் தன் சொந்தச் செலவில் கட்டித்தர இருப்பதாக ஓர் அறிவிப்பை அந்த விழாவில் அறிவிக்கிறார். மேலும் தலைமையாசிரியர் அறையில் அமர்ந்திருந்த சமயத்தில், ஆசிரியர்கள் முதல்  கடைநிலை ஊழியர் வரை அனைவரும் கால் ஊனத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் பட்டப்பெயர் சூட்டி அழைப்பதைச் செவிமடுத்து வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அப்படி பட்டப்பெயரால் அழைத்ததற்காக அனைவரையும் கண்டிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்துசெல்லும்போது வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தில் சிக்கிக்கொள்ள இருந்த ஒரு சிறுவனைக் காப்பாற்ற முனைந்தபோது வாகனத்துக்கு அடியில் சிக்கி அடிபட்டதால் அவர் காலில் ஊனம் ஏற்பட்டது என்றும் அன்று அவரால் காப்பாற்றப்பட்ட சிறுவன் தானே என்றும் அந்த மேடையில் அவர் அறிவிக்கிறார்.   எளிய கதை. தன் செயலைப்பற்றி எங்கும் சொல்லிக்கொள்ளாமல் தன்னடக்கத்தோடு வாழும் அரியதொரு மனிதரை அக்கதை அறிமுகப்படுத்துகிறது. இப்படி ஒரு தியாகம் இந்த மண்ணில் சாத்தியம் என்பதற்கு வளவ.துரையனின் சிறுகதை ஒரு சாட்சியாக நீடித்திருக்கிறது.  

ஏறத்தாழ இருநூறு சிறுகதைகளைக் கொண்ட வளவ.துரையனின் படைப்புலகில் இத்தகு அபூர்வ மனிதர்களின் எண்ணற்ற கோட்டோவியங்கள்  நிறைந்திருக்கின்றன.

சிறுகதைகளைப்போலவே வளவ.துரையனின் கவிதைகளிலும் அத்தகு கோட்டோவியங்கள் நிறைந்திருப்பதை அவருடைய எல்லாத் தொகுதிகளையும் தொடர்ந்து வாசித்தவன் என்ற நிலையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

புறநானூற்றில் இடம்பெற்றிருக்கும்  சிற்றில் நற்றூண் பற்றி’  எனத் தொடங்கும் பாடலை நாம் அனைவரும் நன்கறிவோம்.   ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும்  அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே  அப்பாடலில் வெளிப்பட்டிருப்பதை உணரலாம். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை  முன்வைத்து வளவ.துரையன் எழுதியிருக்கும் ஒரு கவிதை மிகமுக்கியமானது. ஆனால் இது மகனைப்பற்றிய கேள்விக்கான விடையல்ல. மகளைப்பற்றிய கேள்விக்கான விடை. இதில் வெளிப்படுவதும் பெருமைக்குறிப்பில்லை. ஒருவித ஆற்றாமையை வெளிப்படுத்தும் குறிப்பு

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று சொன்ன புறநானூற்று மகளை ஒரு கணம் நினைத்துப் பார்க்கலாம். பிள்ளை பெற்று வளர்ப்பவளாக மட்டுமே அன்று ஓர் அன்னை இருந்தாள்.  லட்சத்தில் ஒரு மகள் அன்று கல்வி கற்றிருக்கலாம். பாடல் எழுதியிருக்கலாம். ஆட்சி புரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் விதிவிலக்காகவே கருதப்படவேண்டியவர்கள். சமூக மையத்தில் அந்த எண்ணம் இருந்ததற்கான சாட்சி இல்லை. இரண்டாயிரமாண்டுகளில் படிப்படியாகவே பெண்கள் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுவும் கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே அதிகம். கல்வி, பதவி, அரசியல், போராட்டம், அதிகாரம் என எல்லா நிலைகளிலும் இன்று பெண்களின் நிலையில் மாற்றம் உருவாகி நிலைபெற்றுள்ளது.   இப்படிப்பட்ட சூழலில்கூட, புற உலகில் நிகழும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல்  இல்லறவாழ்க்கை எனப்படும் பொன்விலங்கை மகளுக்குப் பூட்டிவிடும் ஒரு நவீனயுகத்தைச் சேர்ந்த தாயின் நெஞ்சில் நிறைந்திருப்பது குற்ற உணர்வா அல்லது பெருமையுணர்வா என்கிற கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது வளவ துரையனின் கவிதை.

 

சிற்றில் நற்றூண் பற்றி

நின்மகள் யாண்டுதியோ என வினவுதி

அவளோ

எங்கேனும் ஊர்வலத்தில்

முழங்கிக்கொண்டிருப்பாள் அல்லது

உண்ணாநோன்புப் பந்தலில்

சொற்சாட்டை வீசிக்கொண்டிருப்பாள் அல்லது

மனித நேயக் காற்றைச்

சுவாசித்துக்கொண்டிருப்பாள் அல்லது

அதிகார ஆட்சிக்கெதிராய்

 

அறைகூவல் விடுத்துக்கொண்டிருப்பாள்

என்றெல்லாம் சொல்ல ஆசைதான்

 

ஆனால்

எல்லாம் படித்துத் தெரிந்தவளை

இல்லறத் தொழுவில் மாட்டியதால்

வாழ்க்கைப்புல்லை இப்போது

அசைபோட்டுக்கொண்டிருப்பாளே

 

நவீன தாய் வெளிப்படுத்தும் ஒருவித  ஆற்றாமையின் சித்திரம் இது. இன்னொரு வகையான ஆற்றாமையும் நவீன தாய்மார்களிடம் உண்டு. ஒரு பெண், ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு, அக்குழந்தைக்குச் சோறூட்டி, தாலாட்டி உறங்கவைத்து, பேசவைத்து, நடக்கவைத்து, ஓடவைத்து வேடிக்கைபார்த்து, கணந்தோறும் மகிழ்ச்சியில் திளைக்கிறாள். குழந்தை வளரவளர அதைக்கண்டு அவள் அடையும் ஆனந்தமும் வளர்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, படித்து பட்டம் பெற்று, ஏதோ  ஓர் அயலூரில் அல்லது அயல்நாட்டில்  எப்படியோ வாழ, முதியோர் இல்லத்தில் தனிமையில் வாழ நேரிடும்போது,  அதே தாய் துயரில் திளைக்கிறாள். கொடுமையான தனிமை, அவளை பழைய நினைவுகளை அசைபோடவைக்கிறது. அவள் இனிமேல் அந்த நினைவுகளில்மட்டுமே வாழமுடியும். ஒருபுறம், பழைய சித்திரங்களை அசைபோடும்போது மனம் கண்டறியும் இதம். மறுபுறத்தில், ஆதரவின்றி கைவிடப்பட்ட ஒரு முதியவளாக தனிமையில் வாழ நேர்ந்ததை எண்ணும்போது மனம் உணரும் துக்கம்.  இரு புள்ளிகளுக்கிடையே அவள் மனம் ஊசலாடியபடியே இருக்கிறது.   வளவ.துரையனின் ‘ தட்டு’ என்னும் கவிதையில் இச்சித்திரத்தைப் பார்க்கலாம்.

 

 

தெருவில் ஓடும்

பேருந்து காட்டி

 

வாயொழுகி வாலாட்டும்

சொறிநாய்க்குப் போட்டு

 

வரமறுக்கும் காக்கையை

வாவென்றழைத்து

 

கைப்பிடிச் சுவரில்

காலாட்ட வைத்து

 

செம்பருத்திப் பூவைச்

சேர்த்துப் பிடித்துவைத்து

 

அடுத்த வீட்டுக் குழந்தையை

கையடிக்க ஓங்கிப்

பூச்சாண்டியாய் மாறி

பூனைபோல் கத்தி

 

 சோறூட்டியதெல்லாம்

முதியோர் இல்லத்தில்

தட்டேந்தும்போது

முன்னால் வருகிறது.

 

’மறைவாய்என்னும் கவிதையில் ஒரு சுடுகாட்டுச் சித்திரம் இடம்பெறுகிறது. எரியும் பிணத்துக்கு அருகில் நடைபெறும் சம்பவங்களை ஒரு பொதுப்பார்வையாளனைப்போல எங்கோ ஒரு மரப்பொந்தில் அமர்ந்து பார்க்கும் ஆந்தையின் கண் வழியாக முன்வைக்கிறது அக்கவிதை. மரணத்தைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சிப்புன்னகை புரியும் ஒருவர். துயரம் கொள்ளும் ஒருவர். சொத்து தராததால் தூற்றிப் பேசும் ஒருவர். தனக்குரிய கூலி கிடைக்கவில்லையே என வாதாடிச் சண்டையிடும் சுடுகாட்டுத் தொழிலாளிகள் சிலர்.

மாறுபட்ட உணர்வுடைய மனிதர்களின் நடவடிக்கைகளைத் தொகுத்துச் சித்தரிப்பதன் வழியாக கவிதை ஒரு பிரகாசமான உண்மையை உணர்த்திச் செல்கிறது. காலம்காலமாக இந்த மண்ணில் தழைத்துவரும் தத்துவங்கள் வாழும் முறைமைகள்பற்றியும் வாழ்க்கையின் பெருமைகள்பற்றியும் பேசிப்பேசி ஒரு மரபை வளர்த்துவந்திருக்கின்றன. வாழ்க்கை அன்புமயமானது. வாழ்க்கையில் அறம் மேலானது. அந்த நீதியுணர்வுதான் மானுடத்தை இவ்வளவுதூரம் அழைத்துவந்திருக்கிறது. எதார்த்தத்தில் அன்பையும் அறத்தையும் துரோகமும் கள்ளத்தனமும் சீண்டிச்சீண்டிப் பார்க்கின்றன. ஓயாத இந்த முரண்களில் நசுங்கிநசுங்கி வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது.

ஒருபோதும் துரோகங்களால் வெல்லப்பட முடியாத ஒன்றாகவே மனித வாழ்வு இன்றுவரைக்கும் இருந்துவந்திருக்கிறது. அதே சமயத்தில் மறைவாய் நிகழும் போரும் ஓய்வின்றி நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. மரபுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான இந்த முரண்களை அலசி அசைபோடுவதற்கான பொருத்தமான இடம், சுடுகாட்டைத் தவிர வேறென்ன இருக்கமுடியும். வாழ்ந்தவனைப்பற்றிய மதிப்பீடுகள் வெளிப்படும் இடம் அது.   ஆந்தை ஒரு பொது  உயிராக நின்று அக்காட்சிகளைத் தொகுத்து நம்மிடம் தெரிவிப்பதுபோல வளவ.துரையனின் இக்கவிதை அமைந்துள்ளது.  நம் மனம் மரபைநோக்கித் திரும்பப்போகிறதா, எதார்த்தத்தை நோக்கித் திரும்பப்போகிறதா என்பது முக்கியமான ஒரு கேள்வி. 

இந்தப் பறவையைப்போலவே வளவ.துரையன் காலமெல்லாம் தாம் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் தொகுத்து அடுக்கி படைப்புகளாக முன்வைத்தபடி இருக்கிறார்.  ஒரு கவிதையில் குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில் வீசப்படும் செல்லாத நாணயத்தின் குரூரத்தைச் சித்தரிக்கும் வளவ.துரையன், மற்றொரு கவிதையில் நம்பிக்கையோடு உணவைத் தேடிவரும் நாயையும் பூனையையும் கிளியையும் காகத்தையும் சித்தரிக்கிறார். ஒருபுறம் நம்பிக்கையின் சித்திரம். மறுபுறம் குரூரத்தின் சித்திரம். மனதின் ஓயாத போராட்டமே வாழ்க்கையாகும்போது படைப்புகளின் மாறுபட்ட காட்சிகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன.   

வளவ.துரையன் மரபுப்பாடல்களிலிருந்து மெல்லமெல்ல நவீன கவிதைகளை நோக்கியும் பிறகு சிறுகதை, நாவல் என பிற வடிவங்களையும் நோக்கி நகர்ந்துவந்தவர்.  எந்த வடிவமாக இருந்தாலும்,   மாறுபட்ட அரிய காட்சிகளைத் தொகுத்து முன்வைப்பதும் அவற்றின் வழியாக சில அசைவுகளை வாசகர்களின் நெஞ்சில் உருவாக்குவதும் அவருடைய  கலைவெளிப்பாடாக அமைந்துவிட்டது.  தாமே செம்மைப்படுத்திக்கொண்ட பாதையில் வளவ.துரையனுடைய தேர் சீரான வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது.  அன்பார்ந்த அண்ணன் வளவ.துரையன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(06.07.2025 அன்று கடலூரில் நடைபெற்ற வளவ.துரையன் பவளவிழாவை ஒட்டி வெளியிடப்பட்ட ’இலக்கியச்சோலையின் ஆலமரம்’ என்னும் தொகைநூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை )