Home

Sunday, 29 June 2025

பாம்பு - சிறுகதை

 

சத்திரத்துக் கல்திண்ணையும், ரெட்டியார் வாங்கிப் போட்ட தினத்தந்தியும் பொது அறிவுப் பொக்கிஷங்களாக இருந்த நாட்கள் அவை.   வாயில் வெற்றிலையை மென்று குதப்பியபடி ரெட்டியாரும், கிராமணியும் அரசியல் பேசுவார்கள். சூடு குறையும்போதெல்லாம் சுந்தரவேலு நாயுடு குத்திக்கிளறி விடுவார். வார்த்தைகள் சரம்சரமாய் விழும். கேள்விகள், பதில்கள், எக்களிப்புகள், பரிகாசங்கள், நடுநடுவே சோடாக்கடை கிராமபோனில் புறப்பட்டு வரும் என் அபிமான நடிகரின் லட்சிய கீத வரிகள். என் ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு ஏறும். படு கிளர்ச்சியான மனநிலையில் இருப்பேன். மரத்தடியில் எவனாவது ஒருவன் அதே நடிகரின் அங்க அசைவுகளோடு ஆடிக்காட்டி வித்தை செய்வான். இறுதியில் விழும் காசுகளைக் கும்பிட்டுவிட்டு பொறுக்கிக்கொள்வான்.

சத்திரத்தைச் சென்று சேர அன்று மட்டும் பிந்திவிட்டது. எண்ணெய்க் குளியல். பாடாய்ப்படுத்திவிட்டாள் அம்மா. நான் செல்வதற்குமுன் கூடியிருந்த கும்பல் என்னை ஈர்த்தது. ஓடினேன். நான் எதிர்பார்த்தற்கு முற்றிலும் மாறாக வேறொரு வித்தை நடந்துகொண்டிருந்தது. பாம்பு வித்தை. முதல் கணமே என்னைப் பயம் தொற்றியது. சட்டென பின் வாங்கினேன். ஓடி விடவும் முடியவில்லை. ஒருவிதக் கவர்ச்சியும் என்னைத் தடுத்தது. ஒரு எலும்பு மனிதன் கண்மூடி உட்கார்ந்திருந்தான். கோவணதாரி. அவன் உடல்முழுக்க பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தலையில், கழுத்தில், வயிற்றில், தொடையில் எங்கும் பாம்புகளின் அசைவுகள். ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு மூலையில் இருந்து தலையை நீட்டி  அசைத்தன. என் வயசே ஆன ஒருவன், பக்கத்தில் மகுடி ஊதிக் கொண்டிருந்தான்.

நடுக்கத்தில் என் உடல் சில்லிடத் தொடங்கியது. பாம்பின் சீறல்களில் என் வயிறு சுருங்கியது. வரிவரியாய்  உருண்ட உடல்கள். ஒரு மிளார்க்காம்புபோல சுழலும் வால்கள். தாடை அகன்று விரிந்த படம். நிறைய கோடுகளுக்கு நடுவில் ஈரம் கசியும் கண்கள். மேலே மகுடியின் நாதத்தை நோக்கி பிளந்த ஊசிகளாய் நீளும் கரிய நுனிநாக்குகள். பாம்புகள் அவன் உடலெங்கும் எச்சிலை இழுத்துக்கொண்டு ஊர்ந்தன. ரோமங்கள் அடர்ந்த மார்பில் வெளிறிய பிசுபிசுப்பு. அவன் உடலில் மண்ணின் வீச்சம். ஒருவித துர்நாற்றமான எச்சிலின் மணம். அருவருப்பில் மனம் குமைந்தேன். எனினும் ஏதோ ஒருவித பரவசம் என் கால்களைக் கட்டிவிட்டது.

பயத்தோடுதான் நான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மகுடி ஊதிய பையன் பக்கத்தில் இருந்த கூடையைத் திறந்து இன்னொரு புதிய பாம்பை விடுவித்தான். உடம்பை நீட்டிச் சோம்பல் நீக்குகிற மாதிரி ஒரு உதறு உதறிப் பாய்ந்த பாம்பு. அக்கம்பக்கம் தலையை நீட்டிப் பார்த்து விட்டு, அவன் மடியிலிறங்கி தொடை வழியாக ஏறியது. அந்தப் பையன் விடாமல் ஊதிக்கொண்டிருந்தான். ஊதலை நிறுத்தாமலேயே கூடைகளை எல்லாம் பக்கத்தில் அடுக்கினான். பல காலங்களாக பாம்புகளுக்கென்றே வாசிக்கப்பெறும் பிரபலமான வாசிப்பு. மெல்லமெல்லக் கிளம்பி ஒரு புள்ளியில் குவிந்து அதிலேயே தீவிரம் கொள்ளும் இசை. அவன் கழுத்தும், மகுடி அளவுக்கு உப்பி காற்றை மகுடிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது. இடுப்புச்சட்டை தளர, வயிறு உள்சுருங்கியது. மார்பெலும்புகள் பிதுங்கி இருந்தன; ஏதோ நெருப்பு பட்டு பொசுங்கின மாதிரி. அல்லது ஏதோ விபத்தில் சிக்குண்டு கிழிந்த மாதிரி ஆறியும் ஆறாமலுமிருந்த அந்தச் சிவப்புத் தசையில் வேர்வை வழிந்துகொண்டிருந்தது. அசைவே இல்லாத கண்களில் நெருப்பு புறப்பட்டதுபோல ஒரு வெளிச்சமிருந்தது. கால்களைத் தாளத்துக்கேற்ப மாற்றிமாற்றி அடிவைத்து ஊதியபடி சுற்றிச்சுற்றி வந்தான்.

எல்லாரின் கவனங்களையும் தன் மேல் குவித்து வைத்திருந்த கோவணதாரி மெல்ல கண்களைத் திறந்தான். மொத்தக் கூட்டமுமே அடுத்தகணம் அவன் செய்யப்போகும் காரியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. பாம்புகள் சுழலும் புஜங்களைத் தலைக்கு மேலே தூக்கி கையெடுத்துக் கும்பிட்டான். நான் இன்னும் கொஞ்சம் பின்வாங்கினேன். கழுத்தைச் சுற்றிய பாம்பை முதலில் எடுத்து   கீழே விட்டான். மண்ணில் இறங்கிய பாம்பு நகர்ந்து கூடைக்குப் போனது. மெல்லமெல்ல ஒவ்வொரு பாம்பாக எடுத்து எடுத்து கீழே விட்டு எழுந்து நாலு திசைகளையும் பார்த்து திரும்பித்திரும்பிக் கும்பிட்டான். “ஜெய் நாகம்மா. ஜெய் நாகம்மாஎன்று கூவினான். மகுடியை அக்குளில் இடுக்கிக்கொண்டு நின்றான் பையன்.

நல்லா கேட்டுக்கங்கோ சாமி. பாம்பக்கண்டா படையும்கூட நடுங்கும்ன்னு சொல்வாங்க. பட்டப்பகல்ல பத்து பாம்புங்கள மேல போட்டுக்கனும்ன்னா அதுக்கு நாகம்மா அருள் வேணும். நாங்க பத்து தலைமுறைங்களா நாகம்மாவ தெய்வமா வணங்கறவங்க. வயித்துக்கு சோறு இல்லாமப் போனாலும் நாகம்மாவக் கும்படறது நிக்காது. ஆத்தா புண்ணியத்துல இதுவரிக்கும் ஆயிரம் பாம்ப புடிச்சிருப்பன். ஒரு துளி விஷம் எறங்கனது கெடையாது. ஒடம்புல ஓடற ஒவ்வொரு துளி ரத்தத்திலயும் நாகம்மா இருக்கா...”

தொடர்ந்து அவன் பேசிக்கொண்டிருந்தான். அவன் பிறந்த தேசம், வளர்ந்த தேசம், வாழ்ந்த தேசம், சாதனைகள் செய்த தேசம் என்று அடுக்கிக்கொண்டே போனான். விடாது பேசிய அவன் வார்த்தைகளின் வசீகரம் எல்லாரையும் கட்டிப் போட்டது. கீழே கூடையிலிருந்து தாயத்துகளை அள்ளி எல்லாரிடமும் நீட்டினான்.

ஆத்தா சக்தி இந்த தாயத்துல இருக்கு. யார் கைல இது இருக்குதோ அவுங்கள பாம்பு தீண்டாது. இது அந்த ஆத்தா மேல சத்தியம். இந்த பூமி மேல சத்தியம். இந்த மண்ணு மேல சத்தியம்...”

நான் அப்போதுதான் அவன் புஜங்களிலும், கைமணிக்கட்டிலும் தொங்கிக்கொண்டிருந்த கருத்த தாயத்துகளைப் பார்த்தேன்.

பேச்சின் லயிப்பிலிருந்து விலகி ஒருவன்என்ன விலை தாயத்து?” என்றான்.

உயிருக்கு என்ன விலை சாமி. ஒரு லட்சம் குடுத்தாலும் தகும். ஒரு கோடி குடுத்தாலும் தகும். அந்த உயிர காப்பாத்தற தாயத்து இது. இதுக்கு எவ்ளோ கேட்டாலும் தரலாம். ஆனா அதிகம் ஆசைப்படக்கூடாதுன்னு சொல்வா நாகம்மா. ஒன் பசிக்கு என்ன தேவையோ அது மட்டும் வாங்குன்னு சொல்வா. ஒரு ரூபா ஒரு தாயத்து, இஷ்டப்பட்டவங்க, இரக்கப்பட்டவங்க, நல்ல மனசுக்காரங்க நாலுபேரு பாத்து இந்தான்னு நாலு காசு கூட குடுத்தா, இந்த வாயில்லா ஜீவன்களுக்கு பால் ஊத்த ஆவும்.”

ஒருவன் ஒரு ரூபாயைக் கொடுத்து விற்பனையை ஆரம்பித்ததும், எல்லாரும் வாங்கினார்கள். இடையே மகுடியை அக்குளில் வைத்துக்கொண்டு, காசுக் குவளையை ஏந்தியபடி பையன் சுற்றி வந்தான். நாற்பது பக்க நோட்டு வாங்க அப்பாவிடம் நேற்று வாங்கி வைத்திருந்த காசு இருந்தது என்னிடம். அரை மனசோடு அவன் குவளையில் அதை வீசினேன். நெருக்கத்தில் அவன் உடலிலும் துர்நாற்றமான வீச்சத்தை உணர்ந்தேன். அன்றைக்கு நிறைய தாயத்துகள் விற்பனையாயின. இனி ஊரில் பாம்புகளால் சாவே இருக்காது என்று நினைத்துக் கொண்டேன்.

மதியச் சாப்பாடு உட்கொள்ளவே பிடிக்கவில்லை. எதைப் பார்த்தாலும், பாம்பு நெளிகிறமாதிரி இருந்தது. அம்மா காரணத்தைத் துளைத்துத்துளைத்துக் கேட்டாள். நான் சொல்லவில்லை. தூங்கப் போனேன். தூக்கத்திலும் பாம்புக் கனவு. தலை மட்டும் மனிதத்தலை. உடல் முழுக்க பாம்பு போல. அதுதான் விசித்திரம். ஒன்றையொன்று சுழற்றிச்சுழற்றி அடிக்கின்றன. நாக்கை நீட்டி கொத்தத் துடிக்கின்றன. முறுக்கிய வால்களால் ஒன்றையொன்று பின்னுகின்றன. வேர்வை வழிய நடுங்கி எழுந்திருக்கும்போது தோட்டத்தில் அப்பாவும் மற்றவர்களும் சத்தமிட்டுப் பேசுவது கேட்டது.

மாட்டுக்கு வைக்கோலை உதறிப்போட போனபோது அம்மா ஒரு பாம்பைப் பார்த்திருக்கிறாள். கூவி அப்பாவை வரவழைப்பதற்குள் பாம்பு வைக்கோல் போருக்குள் போய் விட்டிருக்கிறது. அப்பாவும் மற்றவர்களும் தேடிக் கொண்டிருந்தார்கள். தூங்கி எழுந்து வந்த எனக்கு சட்டென்று எல்லாம் புரிந்துவிட்டது. நான்விடுவிடுவென அப்பாவிடம் போய் பாம்பாட்டிய கூப்பிட்டா மகுடி ஊதி புடிச்சிடுவாம்பாஎன்றேன். ஒருகணம் என் பக்கம் திரும்பிய அப்பாஇந்த ஊருல யார்டா இருக்கா?” என்றார். அடுத்த கணமேஎனக்குத் தெரியும்பா. நா போய் இட்டாறேன்.” என்று கதவைத் தாண்டிவிட்டேன்.

சத்திரத்தை அடைந்த பிறகுதான் மறுமூச்சு வாங்கினேன். வித்தை காட்டிய ஆள்கள் மரத்தடியிலில்லை. அவர்களைத் தேடியபடியே அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபடி நடந்தேன். கொஞ்ச தூரத்தில் அரசமரத்தின் அருகே அந்த எலும்பு மனிதனைக் கண்டேன். இப்போது அவன் லுங்கி கட்டியிருந்தான். பக்கத்தில் அந்தப் பையன். தைரியமாய் அவர்கள் அருகில் போய்ஒரு பாம்பு புடிக்கணும், வரீங்களாஎன்றேன். அச்சிறுவன் சுறுசுறுப்பாய் மகுடியை எடுத்துக்கொண்டு எழுந்தான். அந்த ஆள் மட்டும் எழுந்திருக்காமல்என்ன பாம்பு?” என்று என்னையே கேட்டான்.

நான்தெரியாதுஎன்றேன். மீண்டும்எத்தன பாம்புங்க?” என்றான். அதற்கும்தெரியாதுஎன்றேன். என் பேச்சுக்கு மதிப்பளிக்காமல் அவன் பேசிக்கொண்டே போனது எனக்கு எரிச்சலையூட்டியது. நான் அவன் கண்களையே பார்த்தபடி இருந்தேன். “சரி, எங்க ஊடு?” என்றான் கடைசியில். அவர்களை அழைத்துக்கொண்டு நடந்தேன் நான்.

தாயத்தைக் கடித்தபடி வந்தான் அவன். வேகமாக நடந்து அந்த பையனின் அருகில் சென்றுஉன் பேரென்ன?” என்றேன். அவன் திரும்பிகருப்பன்என்றான்.

அப்பா என் செய்கையை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கருப்பன் மகுடியை எடுத்து ஊத, எலும்பு மனிதன் வைக்கோற்போரை ஒட்டி கண்களைப் பதித்திருந்தான். ஐந்தாறு நிமிஷங்கள். கருப்பன் மகுடியை நிறுத்தவேயில்லை. அவன் இசை மட்டுமே உயர்ந்துஉயர்ந்து எழுந்தது. எதற்கோ திரும்பியவன் திகைத்துவிட்டேன். இரண்டடி தூரத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது. மரத்தைப் பிடித்தபடி பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். மகுடியோடு கருப்பன் மெல்லப் பின்வாங்கினான். கரிய நாக்குகள் அலைய பாம்பு முன்னேறியது. அடி மேல் அடி வைத்து பதுங்கி பக்கவாட்டில் வந்தான் எலும்பு மனிதன். இரண்டு நொடிகள். பாம்பு திரும்புகிற மாதிரியிருந்தது. எலும்பு மனிதன் மறைந்து கொண்டான். மீண்டும் முன்னேற்றம். மீண்டும் பின் வாங்கல். இந்த நாடகம் கொஞ்ச நேரம் நடந்தது. சட்டென்று பாம்பின் கழுத்தைப் பிடித்து கூடைக்குள் அடைத்துவிட்டான். இடுப்பில் சுற்றியிருந்த கயிற்றால் கூடையை இறுக்கி மூடி மூச்சுவிட்டான்.

நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. கூட்டம் சலசலப்போடு கலைந்தது. அப்பா உள்ளே போய் இருபது ரூபாய்த் தாளைக் கொண்டுவந்து நீட்டினார். “இன்னம் கொஞ்சம் போட்டுக் குடுங்க சாமி. தோஷம் எடுக்கணும். பால் வாங்கிப் பூச செய்யணும்என்று பெரிசாய் கும்பிட்டான் அவன். அப்பா மேலும் பத்து ரூபாய் கொடுத்தார். பசுக்களைக் கட்டிவிட்டு உள்ளே சென்ற அம்மா, ஒரு கும்பாவில் சோற்றை எடுத்து வந்து வாழை இலையைக் கிள்ளி அதில் போட்டு அந்தப் பையனிடம் கொடுத்தாள். கருப்பன் நன்றியோடு வாங்கித் தின்று தண்ணீர் குடித்தான். எலும்பு மனிதன் சோறு வேண்டாமென்று ஒதுங்கி பையனுக்காகக் காத்திருந்து அழைத்துச் சென்றான்.

அடுத்த நாள் கருப்பனை டூரிங் டாக்கீஸுக்குப் பக்கத்தில் பார்த்தேன். என்னைப் பார்க்கவில்லை அவன். வேறு எங்கோ பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான். அதற்கடுத்த நாள், கிராமபோன் பாட்டில் சொக்கிக்கொண்டு நின்றிருந்தபோது கருப்பனைப் பார்த்தேன். அவன் உடனே என்னை அடையாளம் கண்டுகொண்டான். “அப்பறம் ஏதாச்சிம் பாம்பு வந்திச்சா?” என்று என்னிடம் கேட்டான். நான் அவசரமாய்இல்லஎன்றேன். நான் சொல்வதைக் கவனிக்காதவன் போலவேற எங்கினாச்சும் இருந்தா கூட சொல்லு. நா மட்டும் தனியா வந்து புடிச்சித் தரேன். அந்த தடியன் வேணாம்என்றான்.

கொஞ்ச நேரம் மௌனம், ஏதாவது பேசவேண்டுமே என்று பேச்சை நானே ஆரம்பித்தேன்.

இன்னிக்கு வித்தை இல்லியா?”

தடியனுக்கு காசு கொழுப்பு. கூத்தியாட்ட போய்ட்டான். ரெண்டு, மூணு நாள் சென்றுதான் வருவான்.”

எனக்கு அவன் பேச்சு அதிர்ச்சியாய் இருந்தது.

ஒங்க அப்பா இல்லயா அது?”

அசிங்கமான ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னான் கருப்பன். எனக்கு உடம்பு கூசியது. அவனை உடனே கத்தரித்துவிட வேண்டும் என்று உள்மனம் சொன்னது. எனினும் அவனோடு பேசி இருக்கவே மனம் ஈடுபட்டது. அவனுடைய இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் ஒரே நாளில் தெரிந்துகொள்ளும் ஆவல் என் மனசில் பொங்கியது. அவனை ஆசுவாசப்படுத்தவேண்டிப் பக்கத்தில் கிராமணி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இரண்டு இட்லிகள் வாங்கித் தந்தேன். தின்றுவிட்டு நாலு தம்ளர் தண்ணீர் குடித்தான். பிறகுவரட்டாஎன்று என் பதிலுக்குக்கூட காத்திராமல் கிளம்பிவிட்டான்.

தொடர்ந்து இன்னொரு தரம் பாம்பு வித்தைக்காக நான் காத்திருந்தேன். சத்திரத்தில் இப்போது நடந்த எதுவும், அதன் உயரத்துக்கு சுவாரஸ்யம் தரக்கூடியதாயில்லை. நடுநடுவில் முனியாண்டி சொன்ன குட்டிக்கதைகளும், சினிமாக் கதைகளுமே எனக்கு முழு பொழுதுபோக்காக இருந்தன.

ஒருநாள் டியூஷனுக்குப் போய் திரும்பி வரும்போது மரத்தடியில் இரு உருவங்கள் கட்டிப் புரண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

கருப்பனும் அந்த எலும்பு மனிதனும். இரண்டு பாம்புகள் கட்டிப் புரள்கிற மாதிரி இருந்தன. கருப்பன் அவன் கழுத்தைக் கடிப்பதில் குறியாக இருந்தான். கருப்பனின் தோளிலிருந்த ரணத்தில் இடித்து மேலும் ரத்தம் கொட்டச் செய்தான் எலும்பு மனிதன். வேதனையில் அவனை உதறித் தள்ளி எழுந்த கருப்பன், அழுகையும் அசிங்கமான வார்த்தைகளுமாய் அவன் மேல் கற்களை எடுத்து வீசினான். அதற்குமேல் என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடிப்போய்விட்டேன்.

அன்று இரவு மண்டபத்தில் ஒரு கல்யாணம். நானும் அப்பாவும் சென்று திரும்பினோம். அப்பா என்னை ஒரு ஓரமாய் நிற்கச் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துவரச் சென்றார். எதேச்சையாய்த் திரும்பும்போது எச்சில் இலைகளில் சோறு வழித்துத் தின்றுகொண்டிருந்த கருப்பனைப் பார்த்தேன். பரபரப்புடன் வந்த ஒரு நாய்க்குப் போட்டியாய் அள்ளி அள்ளித் தின்றுகொண்டிருந்தான். நான் கவனிப்பதை அவன் பார்க்கவே செய்தான். ஒரு கணம் அவனது கை நின்றது. அவ்வளவுதான். மறுகணமே இலையை வழிக்கத் தொடங்கியது. எனக்கு முகம் சுண்டிவிட்டது. வீட்டில் யாரோடும் முகம் கொடுத்து பேச இயலவில்லை. இரவெல்லாம் அந்தக் காட்சி என் கண்ணிலேயே மிதந்தது.

மறுநாள் பள்ளிக்குப் போகும் வழியில் எதிர்பாராமல் அவனைப் பார்த்தேன். தண்ணீர் டேங்கிற்குப் பக்கத்தில் நின்றிருந்தான். நான் அவனிடம் சென்று நின்றேன்.

கூத்தியா ஊட்லேந்து நேத்து தான் வந்தான். ஆறு நாளாச்சி. ஒரே பசி. காசு கேட்டா இல்லங்கறான். பைல நோட்டு வச்சிருந்தான். குடுடான்னா, போய் பீயத் துன்னுங்கறான். அதான் புடுங்கி எடுத்துட்டன். திருடன், காயத்திலேயே இடிச்சிட்டான்

ரத்தமும் சீழுமான அந்த தசை ஆடியது.

வித்தைக்கும் வர மாட்டானாம். அந்த கூத்தியா அங்கேயே கூப்படறாளாம். அதுக்காக பாம்புங்களயெல்லாம் யாருக்காச்சும் வெல கட்டிட்டுப் போவலாம்ன்னு பாக்கறான்.”

அப்ப நீ?”

என்ன பொறுக்க உடணும்ன்னுதான் தடியனுக்கு ஆசை. நானா உடுவன். பாத்துட்டே இரு. ஒன்று அவன் சாவணும். இல்ல நா சாவணும்.”

ஒனக்கு தனியா வித்த செய்ய தெரியுமா?”

இவனைவிட பத்து மடங்கு செய்வன்

நான் பேசாமல் நின்றிருந்தேன். பள்ளிக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. அவன் நிதானமாய் நடந்ததை எல்லாம் சொல்லத் தொடங்கினான். புது ஆளிடம் பாம்புகளைக் கொடுத்துவிட்டுப் போவதில் தடியன் மும்முரமாய் இருக்கிறானாம். எல்லாமே அந்தக் கூத்தியாள் ஏற்பாடு. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் வந்துவிடுவார்கள். அதற்குள் பாம்புகளைக் கைப்பற்றிவிடவேண்டும். அப்புறம் ரயிலில் இரவோடு இரவாய் எங்கேயாவது சென்று பிழைத்து விடலாம். அவன் கண்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. என்னால் அவனுக்கு எந்த விதத்திலும் உதவமுடியாது என்று தோன்றியது. பேசாமல் பைக்குள் டிபன் பாக்ஸ்க்குள் இருந்த இட்லிகளை அவன் கையில் போட்டேன். அவன் அவசரமாய் கீழே கிடந்த தாளை மடக்கிச் சுருட்டி இட்லிகளை வாங்கிக்கொண்டான். தின்று முடித்து அந்தத் தாளிலேயே கையைத் துடைத்துவிட்டு பையிலிருந்து ஒரு சின்ன பாட்டிலைக் காட்டினான்.

இது என்ன தெரியுமாஎன்றான். நான் தெரியாது என்பதுபோல தலையசைத்தேன். “விஷம்என்றான். எனக்கு நாக்கு வறண்டது.

அன்னிக்கு உங்க ஊட்ல புடிச்ச பாம்போட விஷம்என்றான். எனக்கு அவன் கண்களில் ஏறிய வெறியைப் பார்க்க முடியவில்லை. கைகால்கள் படபடத்தன. திரும்பிப் பார்க்காமல் பள்ளிக்கு ஓடிவிட்டேன்.

சாயங்காலம் திரும்பும்போது ஆவலைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் எலும்பு மனிதன் உட்கார்ந்திருக்கும் புதர்வரை நடந்து சென்று பார்த்தேன். கூடைகள் புதரின் நிழலிலிருந்தன. அவனும் இன்னொரு புதியவனும் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்கள். கருப்பனைக் காணவில்லை. மறுநாள் முழுக்கவும் கூட கருப்பனைப் பார்க்க முடியவில்லை.

இரண்டு நாள் கழித்து சத்திரத்தில் பாட்டு கேட்கப்போனபோது கும்பல் கும்பலாய் ஆண்கள் புதரின் பக்கம் போய் வந்துகொண்டிருந்தார்கள். புதரின் திசையைக் கண்டதும்கருப்பன்என்று கூவியது என் மனம். பரபரப்புடன் முன்னேறினேன். ஏதோ வித்தையைப் பார்க்கிறமாதிரி கும்பல் கூடியிருந்தது. ஜாக்கிரதையாய் வழி உண்டாக்கிக்கொண்டு தலையை நுழைத்துப் பார்த்தேன்.

அனாதப் பொணம் சாமி. தர்மதொரைங்க ஆளுக்கு கொஞ்சம் குடுத்தா அடக்கம் செய்யலாம். தர்மம் செய்யுங்க சாமி

ஒருவன் கூட்டத்தைப் பார்த்து கெஞ்சியபடி துண்டை நீட்டிக் கொண்டிருந்தான். சட்டென அவன் முகம் ஞாபகத்தில் மின்னியது. அன்று சீட்டாடிக்கொண்டிருந்தவன். அவசரமாய்க் கீழே குனிந்து பார்த்தேன். அடித்துப் புரட்டிப் போட்ட பாம்பு போல எலும்பு மனிதன் மல்லாந்து கிடந்தான். வாய் திறந்திருந்தது. கடை வாயில் ஒழுகி உலர்ந்த கரிய புள்ளி. உடல் முழுக்க நீலம் பரவியிருந்தது. பை இருந்த சட்டையின் பக்கம் கிழிந்து தொங்கியது. காதுகளிலும், மூக்கிலும் எறும்புகள் ஊர்ந்தன. புஜத்திலும், மணிக்கட்டிலும் தொங்கிய தாயத்துக் கட்டைகளைக் காக்கைகள் கொத்திக் கொண்டிருந்தன. அருகில் வழக்கமாக இருக்கும் பாம்புக்கூடைகளும் மகுடியும் காணவில்லை.

(புதிய பார்வை - 1994)