ஆவேசத்துடன் காட்டுக்குள் புகுந்த சென்னா முதலில் ஒரு முயல்களின் கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட முயல்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். முயல்களின் உடல்களைச் சுமந்த வண்டியை ஒரு வேலைக்காரன் ஓட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.
முதல் வேட்டையை எளிதாக
நிகழ்த்திமுடித்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து காட்டுக்குள் சென்றான்
சென்னா. நீண்ட நேர பயணத்துக்குப் பிறகு ஒரு
பெரிய குளத்தைச் சுற்றி திரிந்துகொண்டிருந்த ஒரு மான்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது
நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக்
கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத்
தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட மான்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றினான்.
ஒரு வேலைக்காரனை அழைத்து வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம்
காட்டுமாறு சொன்னான். மான்களின் உடல்களைச் சுமந்த வண்டி அரண்மனையை நோக்கிச்
சென்றது.
முயல்களையும் மான்களையும்
வீழ்த்திய உற்சாகத்தோடு சென்னா தொடர்ந்து காட்டின் மையப்பகுதியை நோக்கிச் செல்லத்
தொடங்கினான். நெடுந்தொலைவு பயணம் செய்த பிறகு ஒரு சிறிய குன்றைச் சுற்றி மரங்கள்
அடர்ந்திருந்த ஒரு பகுதியில் திரிந்துகொண்டிருந்த ஒரு புலிக்கூட்டத்தைப்
பார்த்தான். சிறிது நேரம் அவை அசைந்து அசைந்து நடக்கும் அழகையும் கண்ணிமைக்கும்
நேரத்தில் வேகமுடன் பாய்ந்து தாவி எழும் அதிசயத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து
ஒவ்வொரு புலியாக கொன்று வீழ்த்தினான். பிறகு வழக்கம்போல புலிகளின் உடல்களையெல்லாம்
திரட்டி ஒரு வண்டியில் ஏற்றினான். வண்டியை
அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். புலிகளின்
உடல்களோடு வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.
முயல்களின் உடல்களையும் மான்களின் உடல்களையும்
புலிகளின் உடல்களையும் சுமந்த வண்டிகள் அடுத்தடுத்து அரண்மனை வாசலுக்கு வந்து
நின்றதைப் பார்த்ததும் ராணி ஓரளவு மனம் தெளிந்தாள். ”உங்களை கவலைப்பட வேணாம்னு இளவரசர்
சொன்னாரு” என்று ஒவ்வொரு வண்டிக்காரரும் அவளிடம் சொன்னதைக் கேட்டதும் அவள் மனம்
நிறைந்தது. தன் மகன் பெரிய வீரன் என்று நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கினாள்.
அதே நேரத்தில் அன்றைய
வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக
உரையாடிக்கொண்டிருந்தான் சென்னா. அவனுக்குத் துணையாக நின்றிருந்த அவனுடைய மாமா ”இன்றைக்கு இது போதும். நாம் வீட்டுக்குச்
செல்லலாம்” என்று சென்னாவுக்கு நினைவூட்டினார். சென்னாவும் அவர் சொற்களை
ஏற்றுக்கொண்டான். மொத்த குழுவும்
அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தது.
பொழுது அடங்கி இருள்
சூழ்ந்த நேரத்தில் வழியில் ஒரு கோவில் தென்பட்டது. அதைப் பார்த்ததும், முதல் வேட்டை
வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிலுக்குச்
செல்லவேண்டும் என சென்னாவுக்குத் தோன்றியது. மாமாவிடம் தன் எண்ணத்தைச் சொன்னான்.
அவரும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். உடனே அனைவரும் அந்தக் கோவிலுக்குள்
சென்றனர்.
வெளியே இருந்ததைவிட கோவிலுக்குள்ளே
கூடுதலான இருள் அடர்ந்திருந்தது. அக்கம்பக்கம் எதுவும் தெரியவில்லை.
“உள்ளே எதுவும் தெரியலையே.
எப்படிச் சென்று எப்படி வணங்குவது?” என்று கவலையோடு கேட்டான் சென்னா.
அப்போது ஒரு வீரன் “கொஞ்ச
நேரம் பொறுத்திருங்க இளவரசரே. என்னிடம் சிக்கிமுக்கிக்கல் இருக்குது. அதைத்
தேய்ச்சி நெருப்பை உண்டாக்கறேன். வெளிச்சம் வந்த பிறகு செல்லலாம்” என்றான்.
“சரி” என்று தலையசைத்த சென்னா
ஓரமாக ஒதுங்கி நின்றான்.
வீரன் வேகவேகமாக வெளியே
சென்று கைநிறைய சருகுகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு கோவில் வாசலில்
குவித்தான். தன் பையிலிருந்த
சிக்கிமுக்கிக்கற்களை எடுத்து ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பை எழுப்ப முயற்சி
செய்தான். ஆனால் நெருப்புப்பொறி விழவில்லை. அடுத்தடுத்து பல முறைகள் முயற்சி
செய்தான். எல்லாமே தோல்வியில் முடிவடைந்தன.
விரைவில் அனைவரையும்
அழைத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பவேண்டும் என்ற கவலையில் இருந்த மாமாவை
பதற்றம் தொற்றிக்கொண்டது.
“வெளிச்சத்துக்காகக்
காத்திருக்கவேணாம். சீக்கிரமா நாம அரண்மனைக்குத் திரும்பியாவணும். இருட்டா
இருந்தாலும் பரவாயில்ல. வாசலில் இருந்து பார்க்கிறமாதிரிதான் கருவறை இருக்கும்.
நூல் பிடிச்சதுபோல நேரா நடந்து போனா, தெய்வத்தின் முன்னால் போய் நின்னுடலாம். அதே இடத்துல நின்னு கண்ண மூடி
வணங்கிட்டு சட்டுனு திரும்பிடலாம்” என்று அவர் வழி சொன்னார்.
மாமா சொன்ன ஆலோசனையை
அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ”மெதுவா…. மெதுவா…..” என ஒருவருக்கொருவர்
சொல்லிக்கொண்டே ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து
கருவறைக்கு முன்னால் சென்று நின்றார்கள். இருட்டுக்குள் நிழலாக தெய்வத்தின் கரிய
உருவத்தைப் பார்த்து தலைகுனிந்து வணங்கினர். பிறகு சென்ற வழியிலேயே ஒவ்வொரு அடியாக
வைத்து திரும்பி நடக்கத் தொடங்கினர்.
சிக்கிமுக்கிக்கற்களைத் தேய்ப்பதன்
வழியாக நெருப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தான் வீரன். அவனே
எதிர்பாராத வகையில் சட்டென ஒரு நெருப்புப்பொறி தோன்றி சருகுகளிடையில் விழுந்தது.
அக்கணமே நெருப்பு பற்றிக்கொள்ள எங்கெங்கும் வெளிச்சம் பரவியது. எதிர்பாராத
வெளிச்சத்தில் கண்கள் கூசின. அனைவரும் கண்களை மூடிமூடித் திறந்தனர்.
அந்த வெளிச்சத்தில்
கருவறைத் தெய்வத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் சென்னா. தெய்வத்தின் பின்னால்
சுவர்மீது ஒரு பெரிய புலியின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. பெரிய முகம்.
பெரியபெரிய பற்கள். பெரிய கண்கள். பெரிய உடல். பெரிய நகங்கள். பாய்வதற்குத் தயாராக
இருப்பதுபோன்ற தோற்றம். அதைப் பார்த்த கணமே இனம்புரியாத அச்சத்தில் மூழ்கினான் சென்னா.
காட்டில் நேருக்கு நேர் பார்த்த புலி எழுப்பாத அச்சத்தை அச்சுவரில்
தீட்டப்பட்டிருந்த புலியின் சித்திரம் எழுப்பியது. அவனைத் தாக்கி வீழ்த்துவதற்காக
அந்தப் பேருருவம் தக்க தருணத்துக்காகக் காத்திருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.
எந்தக் கணமும் அந்தப் புலி
தன் மீது பாய்ந்து தன்னைத் தாக்கும் என சென்னாவுக்குத் தோன்றியது. அவனால் அப்போது
மூச்சு கூட விடமுடியவில்லை. விரைவில் வெளியேறிவிடலாம் என நினைத்துக்கொண்டு வாசலை
நோக்கிப் பாய்ந்தான். அவன் கண்கள் அவனையறியமால் சுற்றுச்சுவர்கள் மீது படிந்தன.
அச்சுவர்களிலும் புலிகளின் அதே பேருருவம். அதே கண்கள். அதே தோற்றம். தன்னைச்
சுற்றி எல்லாத் திசைகளிலும் புலிகள் சூழ்ந்து நிற்பதைப்ப்போல அவனுக்குத்
தோன்றியது. அச்சத்தில் சென்னாவின் உடல் நடுங்கியது. என்ன நிகழ்கிறது என்று
புரிந்துகொள்வதற்கு முன்பேயே சென்னா அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.
”ஐயோ” என அலறியபடி அவனை
நோக்கி அவனுடைய மாமா ஓடினார். அவன் மயங்கியிருந்தான். சுய உணர்வு இல்லை. உடனே இரு
கைகளாலும் அவனைத் தூக்கி ஏந்தியபடி வெளியே வந்தார். எல்லோரும் சென்னாவைப்
பார்ப்பதற்காக அவனைச் சூழ்ந்து நின்றனர். அவன் கன்னத்தைத் தொட்டு அசைத்துப்
பார்த்தார் அவனுடைய மாமா. எந்த அசைவும்
இல்லை. மூக்கின் கீழே விரலை வைத்து மூச்சைப் பரிசோதித்துப் பார்த்தார். மூச்சின்
தடமே இல்லை. “ஐயோ, என் மருமகனே. தவமாய்த் தவமிருந்து என் அக்கா பெத்த பிள்ளையை
இப்படி பறிகொடுத்துட்டேனே” என்று அழுதார்.
சுற்றி நின்றிருந்தவர்கள்
அனைவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியது. சிறிது நேரத்துக்கு முன்புவரை அந்தக்
கூட்டத்தினரிடையில் நிலவிய மகிழ்ச்சித்தடம் முற்றிலும் அழிந்து மண்ணோடு
மண்ணாகிவிட்டது. உடனே நான்கைந்து பேர் அருகிலிருந்த மரங்களில் ஏறி பொருத்தமான
கிளைகளை வெட்டி வீழ்த்தினார்கள். அக்கிளைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து கட்டிலைப்போல
ஆக்கினார்கள். அதன் மீது சென்னாவின் உடலைத் தூக்கிக் கிடத்தினார்கள். பிறகு அதைச்
சுமந்தபடி அரண்மனையை நோக்கி நடந்தனர். ”ஐயோ, என் அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே
எனக்குப் புரியவிலையே….…” என்று சொல்லி வாய்விட்டுப் புலம்பியபடியே வந்தார் மாமா.
வேட்டையில் கொல்லப்பட்ட
முயல், மான், புலி என விலங்குகளின் குவியல்கள் வாசலில் வந்து குவிவதைப்
பார்த்துவிட்டு, வெற்றியோடு வருகை தரும் மகனுக்காகக் காத்திருந்த ராணி,
மரக்கட்டில் மீது வைத்து சுமந்துவரப்பட்ட அவனுடைய உடலைப் பார்த்து மயக்கமுற்று
விழுந்தாள். உடனே பணிப்பெண்கள் ஓடோடி வந்து அவளுடைய மயக்கம் தெளிய தேவையான
சிகிச்சையைச் செய்தனர். ”ஐயோ, அக்கா” என்று வீறிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதார்
அவளுடைய சகோதரர். செய்தி கேட்டு ஓடோடி வந்த ராஜாவும் சென்னாவின் உடலைப் பார்த்து
இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். ”எல்லாம் விதியின் பயன்” என்று மனம் நொந்து
பேசியபடி இருந்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த
ராணி, சென்னாவின் உடலை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு அழுதாள். குழந்தைவரம்
கொடுத்த சிவபெருமான் சொன்ன வாசகம்
நினைவுக்கு வந்து அவள் மனத்தை அழுத்தியது. “சிவனே. நீ சொன்னபடியே பதினாறு வயதில்
என் மகனைப் பறிகொடுத்துட்டேனே” என்று ஆற்றாமையோடு சொல்லிச்சொல்லி கண்ணீர்
விட்டாள். ராஜாவால் எதுவும் பேச இயலவில்லை. ”முட்டாளா இருந்தாலும் பரவாயில்லை,
நூறு வருஷம் வாழற பிள்ளையைக் கொடுன்னு நாம கேட்டிருக்கலாம்” என்று தனக்குத்தானே
சொல்லி அழுதார்.
அரண்மனையில் இருந்தவர்கள்
அனைவரும் இளவரசனின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். அதைக்
கவனித்ததும் ராணி அவர்களைப் பார்த்து சத்தம் போட்டு தடுத்தாள்.
“நான் அவனுக்கு ஒரு நல்ல
பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்ணும்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தேன். அது
நடக்கலை. ஆனாலும் நான் என் ஆசையை நிறைவேற்றிக்காம விடமாட்டேன். அவனுக்கு ஒரு
பெண்ணைத் தேடி திருமணம் செய்வேன். இது சத்தியம். இதை நான் செய்து காட்டுவேன்.
அந்தத் திருமணம் நடக்கும்வரை அவனுடைய உடலை அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லவோ,
அடக்கம் செய்யவோ அனுமதிக்கமாட்டேன்”.
அவளுடைய சூளுரையைக் கேட்டு
அனைவரும் திகைத்து நின்றனர். “இறந்துபோன ஒருவனுக்கு யாரு இந்த உலகத்திலே பெண்
கொடுப்பாங்க?. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? ஏன் இந்த ராணி இப்படி
பைத்தியக்காரத்தனமா பேசுறா?” என்று நினைத்துக்கொண்டனர். ஆனாலும் அவள் ராணி என்கிற
காரணத்தால் யாரும் எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் நெஞ்சிலேயே
அடக்கிக்கொண்டனர்.
அரண்மனை கருவூலத்திலிருந்த
தங்க ஆபரணங்களையெல்லாம் ஒரு பெரிய மூட்டையில் போட்டுக் கட்டி எடுத்துவரச் செய்தாள்
ராணி. அந்த மூட்டையை ஒரு மாட்டுவண்டியில் தூக்கிவைக்கச் சொன்னாள். பிறகு தன்
அண்ணனையும் அவனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்களையும் அந்த வண்டியோடு
செல்லும்படி சொன்னாள்.
“இந்த ராஜ்ஜியத்தையே ஒரு
சுத்து சுத்துங்க. என் மகனுக்கு யாரு பொண்ணு கொடுக்க தயாரா இருக்கறாங்களோ,
அவுங்களுக்கு வண்டியில இருக்கிற இந்த தங்கமூட்டையை பரிசா கொடுத்துட்டு, அந்தப்
பொண்ணை வண்டியில ஏத்திகிட்டு வாங்க”
ராணியின் பேச்சைத்
தட்டமுடியாமல் அவளுடைய சகோதரனும் பிற வீரர்களும் வண்டியை ஓட்டிக்கொண்டு
ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு தெருவாகச் சென்றார்கள். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம்
ராணியின் கோரிக்கையை அறிவித்தபடி சென்றார்கள்.
அந்த ஊர்க் கடைசியில் ஒரு
ஏழைக் குடும்பம் வசித்துவந்தது. அவருக்கு ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்களில்
ஒருவருக்கும் அவரால் திருமணம் செய்துவைக்கமுடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு
நாட்களைக் கடத்திவந்தார். மாட்டுவண்டியோடு வந்தவர்களின் கோரிக்கை அவருடைய காதில்
விழுந்தது. உடனே அந்த வண்டியை நிறுத்தி, அவர்களிடம் சென்று “இறந்துபோன இளவரசனுக்கு
நான் என் பொண்ணை மனப்பூர்வமா கல்யாணம் செஞ்சி வைக்கறேன்” என்று சொன்னார்.
கோரிக்கையின் விவரம் அந்தப்
பெரியவருக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியாமல், அவர்கள் நிதானமான
குரலில் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்கள். அந்தப் பெரியவர் “நீங்க சொல்றது
எனக்குத் தெளிவாவே புரியுதுங்க ஐயா. நான் என் பொண்ணை அனுப்பிவைக்கத் தயாரா இருக்கறேன்.
வாங்க” என்று அமைதியாகச் சொன்னார்.
வந்த வேலை இவ்வளவு
சீக்கிரமாக முடிந்ததில் ஓரளவு ஆறுதல் கொண்ட அக்குழுவினர் மாட்டுவண்டியை அந்தப்
பெரியவரின் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். பெரியவர் வண்டிக்கு முன்னால் வழி
சொல்லிக்கொண்டே சென்றார். வீட்டை அடைந்ததும் திண்ணையைக் காட்டி “ஒரு நிமிஷம்
இப்படியே உக்காந்திருங்க. நான் வீட்டுக்குள்ள போய் விவரத்தை சொல்லி பொண்ணை தயார்
செஞ்சி அழைச்சிட்டு வரேன்” என்று சொன்னார். வண்டிக்குழுவினர் திண்ணையில்
உட்கார்ந்து இளைப்பாறினர்.
வீட்டுக்குள் சென்ற
பெரியவர் தன் மனைவியிடமும் பெண்களிடமும் வாசலில் வண்டி வந்து நின்றிருக்கும்
விவரத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து தன்
ஏழு மகள்களையும் பார்த்து “இந்தக் கல்யாண ஏற்பாட்டுல உங்கள்ல யாருக்கு விருப்பம்
இருக்குதோ, அவுங்க போகலாம். நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன். ஆனா, யாராவது
ஒருத்தவங்க போனாதான் கிடைக்கப்போற இந்த செல்வத்தால நம்ம குடும்பம் மேல வரும்”
என்றார்.
பெண்கள் ஒவ்வொருவரும்
அடுத்தவர் முகத்தைப் பார்த்தபடி எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் நின்றிருந்தனர்.
அப்போது எல்லோருக்கும் இளைய பெண்ணான சென்னவ்வா “அப்பா, நான் இந்தக் கல்யாணத்துக்குத்
தயாரா இருக்கேன். என்னை அனுப்புங்கப்பா” என்று முன்வந்தாள்.
அதுவரை திடமானவர் போல
இருந்த அந்தப் பெரியவர் திடீரென உடைந்து அழத் தொடங்கினார். “நீ இந்த வீட்டுக்குக்
குலதெய்வமா இருப்பம்மா” என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றார். மற்ற பெண்கள்
அவளுக்கு நல்ல உடைகளை உடுத்தி வெளியே அழைத்துவந்தனர். வண்டிக்காரர்கள்
வண்டியிலிருந்த தங்கமூட்டையை இறக்கி அந்த வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு,
அந்தப் பெண்ணை உட்காரவைத்தார்கள். “போய்வா சென்னவ்வா. உனக்கு கொடுப்பினை இருந்தா
சாவித்திருக்கு செத்துப்போன புருஷன் உயிரோடு திரும்பவும் கிடைச்சமாதிரி உனக்கும்
கிடைக்கட்டும்” என்று கைகளை உயர்த்தி வாழ்த்தினார் பெரியவர்.
அடுத்த கணமே வண்டி புறப்பட்டது.
அந்த வண்டி அந்தத் தெருவைக் கடக்கும்வரை கைகுவித்தபடி நின்றிருந்த பெரியவர் பிறகு
ஒரு பெருமூச்சோடு வீட்டுக்குள் போனார்.
அரண்மனைக்குச் சென்றதுமே சென்னவ்வாவுக்குத்
திருமண அலங்காரம் செய்தார்கள். செத்துப்போன சென்னாவுக்கும் மாப்பிள்ளை அலங்காரம்
செய்யப்பட்டது. சிறிது நேரத்தில், எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களோடும் அந்தத்
திருமணம் நடைபெற்று முடிந்தது. அனைவரும்
அட்சதை தூவினார்கள். சென்னவ்வாவின் கழுத்தில் தாலி ஏறியது.
திருமணம் முடிந்த கையோடு சவ
அடக்க ஏற்பாடுகளும் நடைபெற்றன. சென்னாவின் உடலைக் குளிப்பாட்டி, மாலையிட்டு
பாடையில் கிடத்தினர். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, பாடையைக் தூக்குவதற்கு
முற்பட்டனர். அந்த நேரத்தில் அங்கே நின்றிருந்த சென்னவ்வா மணப்பெண் கோலத்தோடு
வேகமாக நடந்துவந்து அந்தப் பாடையில் சென்னாவின் உடலுக்கு அருகில்
உட்கார்ந்துகொண்டாள்.
அதைப் பார்த்து அனைவரும் “இப்படி
நீ செய்யக்கூடாதும்மா. நீ வீட்டுலதான் இருக்கணும்” என்று சொன்னார்கள். ஆனால்
அவர்கள் சொற்களைக் கேட்க சென்னவ்வா தயாராக இல்லை. அவள் மிகவும் உறுதியான குரலில்
“நானும்தான் வருவேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. அவர் என்னுடைய கணவர். அவரைப்
புதைக்கற இடத்துல என்னையும் சேர்த்துப் புதைங்க. அவர் இல்லாத உலகத்துல வாழ எனக்கு
விருப்பமில்லை” என்று தெரிவித்துவிட்டு உறுதியாக உட்கார்ந்துகொண்டாள்.
வேறு வழியில்லாமல் சென்னவ்வாவையும்
சேர்த்து சுமந்துகொண்டு இடுகாட்டுக்குச் சென்றார்கள் பணியாட்கள். அவர்கள் இடுகாட்டை
நெருங்கும் சமயத்தில் இடிமின்னலோடு கடுமையான மழை பொழியத் தொடங்கியது. இடுகாட்டில்
பாடையை இறக்கிவைத்துவிட்டு, அனைவரும் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.
இரண்டுமூன்று மணி நேரங்களாக
காத்திருந்தபோதும் மழை நிற்கவே இல்லை.
கொஞ்சம்கொஞ்சமாக வலுத்து பேய்மழையாக மாறியது. புயல்போல காற்று வீசியது.
கிழக்கு மூலையில் இருந்த ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெள்ளம்போல இடுகாட்டை நோக்கிப்
புரண்டு வந்தது. அதைப் பார்த்து அச்சம் கொண்ட அனைவரும் இடுகாட்டைவிட்டு வெளியேறி
தத்தம் வீட்டை நோக்கியும் அரண்மனையை நோக்கியும் ஓடத் தொடங்கினர்.
மெல்ல மெல்ல பொழுது அடங்கத்
தொடங்கியது. எங்கெங்கும் இருள் சூழ்ந்தது. மழை ஓயவே இல்லை. அந்த நேரத்தில் கூட
பாடையில் இளவரசனின் உடலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தாள் அவள். மழை வெள்ளத்தில்
அவளைச் சுற்றி சேறும் சகதியும் ஓடியது.
“நான் என்ன செய்யறது?
இதுதான் என் விதி” என்று சொன்னபடி அந்தச் சேற்றில் கையை விட்டு அளைந்தபடி
இருந்தாள் சென்னவ்வா. அவள் கைகள் தன்னிச்சையாக அந்தச் சேற்றை அள்ளிக் குழைத்து ஒரு
உருண்டையாக உருட்டின. அந்த உருண்டையை மனம்போன போக்கில் அழுத்தியும்
தட்டையாக்கியும் வெவ்வேறு வடிவமாக மாற்றி மாற்றிச் செய்தன. ஒருமுறை உருவாக்கிய
வடிவம் சிவன் கோவில் நந்தியைப்போல இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
நந்தீஸ்வரா என்று
மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் சென்னவ்வா. அந்த நந்தியை தனக்கு முன்னால் நிற்கவைத்து, பல
கோணங்களில் பார்த்து திருப்தியடைந்தாள். செத்துப்போன உடல்மீதிருந்த மாலையிலிருந்து
பூக்களைப் பிரித்தெடுத்து அதன் மீது தூவினாள். தொடர்ந்து தனக்குத் தெரிந்த சிவன்
பாடலை பக்தியோடு பாடத் தொடங்கினாள்.
அவள் பாடப்பாட அந்த நந்தி
உருவம் தன் உடலை அசைப்பதுபோல இருந்தது. சில நொடிகளில் உண்மையிலேயே அவள் முன்னால்
நந்தி உயிர்பெற்று எழுந்து நின்றது. ”சென்னவ்வா, உன் பக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்குது.
உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உனக்கு என்ன வேணும், கேள்” என்று கேட்டது.
உடனே சென்னவ்வா கண்ணீரோடு
தன் கதையையெல்லாம் நந்தியிடம் சொன்னாள். “என் புருஷனுடைய உயிர்தான் எனக்கு வேணும்
நந்தீஸ்வரா. அவரோடு சேர்ந்து சிவபெருமான் பார்வதி மாதிரி நல்லவிதமா குடும்பம்
நடத்தணும்” என்று முறையிட்டாள். “உனக்காக நான் முயற்சி செய்றேன் சென்னவா,
கவலைப்படாதே” என்று ஆறுதல் சொன்னது நந்தி. அடுத்த கணமே அது மெல்ல அசைந்து
கைலாசத்தை நோக்கிப் பறந்து சென்றது.
கைலாசத்தில் பார்வதியோடு
உரையாடிக்கொண்டிருந்த சிவபெருமான் முன்னால் இறங்கி நின்று வணங்கியது நந்தி. உடனே
சிவபெருமான் நந்தியை ஏறிட்டுப் பார்த்தார்.
உடனே ”ஐயா, எனக்காக நீங்க ஒரு காரியம் செஞ்சிக் கொடுக்கணும்” என்று
சிவபெருமானிடம் முறையிட்டது நந்தி.
“என்ன செய்யணும், சொல்” என்று
கேட்டார் சிவபெருமான்.
“பூமியில நடக்கிற விஷயங்கள்
எல்லாத்தையும் நீங்களும் பார்த்திருப்பீங்க. சென்னவ்வாவுடைய புருஷனுக்கு நீங்க
மறுபடியும் உயிர் கொடுக்கணும். பாவம், ரொம்ப சின்ன பொண்ணு. செத்துப்போன
வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா
இருக்குது. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும்”
”அது அவ்வளவு சுலபமான
காரியமில்லை. இப்படியெல்லாம் எடுத்த உயிரை கொடுத்துகிட்டே போனா, அதுக்கு ஒரு
முடிவே இருக்காது. உனக்காக, அந்த சென்னவ்வாவுக்கு சின்னதா ஒரு சோதனை வைக்கலாம். அவளுடைய எதிர்வினை எப்படி இருக்குதுன்னு
கவனிக்கலாம். அதுக்கப்புறம் நாம் உயிரைத் திருப்பிக் கொடுக்கிறதைப்பத்தி நாம ஒரு
முடிவெடுக்கலாம்” என்றார் சிவபெருமான். ”சரி ஐயா” என்று ஏற்றுக்கொண்டது நந்தி.
சிவபெருமான் அக்கணமே ஒரு
புலியை சென்னவ்வா அமர்ந்திருக்கும் இடுகாட்டுக்குச் சென்று தாக்குதல் நிகழ்த்தும்படி
ஏவிவிட்டார். இருளும் மழையும் சேர்ந்திருந்த அந்தப் பொழுதில் சிவபெருமான் ஏவிய
புலி சென்னவ்வாவுக்கு அருகில் சென்று நின்று உறுமியது. சென்னாவின் உடலை இழுத்துச்
சென்று தின்ன அது முயற்சி செய்தது. அதைப் புரிந்துகொண்ட சென்னவ்வா உடனடியாக
இளவரசனின் உடலை மறைத்தபடி குறுக்கே படுத்துக்கொண்டு “புலி அண்ணா, புலி அண்ணா,
உனக்குப் பசிச்சா நீ என்னை வேண்டுமானா அடிச்சிச் சாப்பிடு. தயவுசெஞ்சி என் கணவரை
விட்டுடு” என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.
அவள் கண்ணீரோடு கெஞ்சியதைப்
பார்த்து அந்தப் புலியின் மனம் கரைந்துவிட்டது. இளவரசனின் உடலை நோக்கி முன்வைத்த
காலை தயக்கத்தோடு பின்னால் எடுத்துக்கொண்டது. ஒருகணம் சென்னவ்வாவைப் பார்த்தது. ”உன்னைப்
பார்த்தால் பாவமா இருக்குது. நான் அவனையும் சாப்பிடலை, உன்னையும் சாப்பிடலை,
போதுமா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.
மறுகணமே கைலாசத்துக்குத்
திரும்பிவந்து சிவபெருமான் முன்னால்
நின்று வணங்கியது. உடனே சிவபெருமான் புலியை ஏறிட்டுப் பார்த்தார். ”ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே
கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்” என்று சிவபெருமானிடம்
முறையிட்டது புலி.
“சொன்ன வேலையைச் செய்யவிடாத
அளவுக்கு உன்னை எது தடுத்தது, சொல்” என்று கேட்டார் சிவபெருமான்.
“சென்னவ்வாவுடைய பக்திதான்
பெருமானே. அந்தச் சின்ன பொண்ண பார்க்க ரொம்ப பாவமா இருக்குது. செத்துப்போன வீட்டுக்காரன்
பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. கொல்லறதுக்கு
மனசே வரலை. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும் பெருமானே”
”அது அவ்வளவு சுலபமான
காரியமில்லை” என்று சொல்லிவிட்டு யோசனையில் மூழ்கினார் சிவபெருமான். தன் முயற்சி
தோற்றுப்போனதை நினைத்து வருத்தத்தோடு ஒதுங்கி நின்றது புலி.
நீண்ட யோசனைக்குப் பிறகு
சிவபெருமான் ஒரு சிங்கத்தை அந்த இடுகாட்டை நோக்கிச் செல்லுமாறு ஏவினார். அந்தச்
சிங்கமும் சென்னவ்வாவின் கண்ணீரில் மனம் கரைந்து திரும்பி வந்து ”ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே
கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்” என்று சிவபெருமானிடம்
முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.
சிங்கத்தின் வேண்டுகோளைக்
கேட்டு சலித்துப்போன சிவபெருமான் அடுத்து ஒரு யானையை ஏவினார். அந்த யானையும்
சென்னவ்வாவின் கண்ணீரைக் கண்டு மனம் இரங்கி திரும்பி வந்து ”ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே
கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்” என்று சிவபெருமானிடம்
முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.
எல்லோரும் சென்னவ்வாவுக்காக
வாதாடியதைக் கண்ட சிவபெருமான் தானே நேரில் பார்த்து நிலைமையைப்
புரிந்துகொள்வதற்காக கைலாசத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டுக்கு வந்தார்.
வழக்கம்போல ஒரு சாமியாரின் கோலத்தில் தோளில் ஒரு பிச்சைப்பையை மாட்டிக்கொண்டு
இன்னொரு கையால் ஓர் ஊன்றுகோலை ஊன்றி ஊன்றி கொட்டும் மழையில் அவளுக்கு முன்னால்
வந்து நின்றாள். “அம்மா, ஏதாவது தானம் செய்யுங்கம்மா” என்று சென்னவ்வாவை நோக்கி கை
நீட்டினார்.
இடுகாட்டில் மழையில்
இறந்துவிட்ட உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு ஒரு சாமியாருக்கு எதைத் தானமாகக்
கொடுப்பது என்று புரியாமல் தவித்த சென்னவ்வா ஒருகணம் யோசனையில் மூழ்கினாள்.
மறுகணமே எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தன் கழுத்தில் தொங்கிய தங்கத்தாலியைக்
கழற்றியெடுத்து சாமியார் நீட்டிய கையில் வைத்தாள்.
“இதைக் கொடுக்கறேன்னு
தயவுசெஞ்சி நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க ஐயா. இந்த இடுகாட்டுல உக்காந்துகிட்டு
இந்த மழையில உங்களுக்கு வேற எதையும் கொடுக்கமுடியாத நிலையில இருக்கேன். என்னை
மன்னிச்சிடுங்க” என்று சொன்னாள் சென்னவ்வா.
சென்னவ்வாவின் செய்கை
சிவபெருமானின் மனத்தைக் கரைத்துவிட்டது. உடனே அவர் அந்தத் தாலியை அவள் கழுத்திலேயே
மீண்டும் அணிவித்துவிட்டு, இறந்துபோன இளவரசனை மீண்டும் உயிர்ப்பித்தார். “நூறாண்டு
காலம் வாழ்க” என்று சொல்லி இருவரையும் வாழ்த்தினார். தனக்கு அருகில் இருந்த இளவரசனின் உடலில் அசைவை
உணர்ந்த சென்னவ்வா சாமியாருக்கு நன்றி சொல்லத் திரும்பினாள். அதற்குள் அவர்
மறைந்துவிட்டார்.
அவர் சென்ற திசையைப்
பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு நன்றியோடு கைகுவித்து வணங்கினாள் சென்னவ்வா.
உயிர்பிழைத்த இளவரசன் சென்னா மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தான் இடுகாட்டில்
இருப்பதையும் தனக்கு அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதையும் பார்த்து அவன்
குழப்பமுற்றான். அவன் குழப்பம் தீரும் வகையில் சென்னவ்வா பொறுமையாக எல்லாவற்றையும்
விரிவாக அவனுக்கு எடுத்துரைத்தாள். பிறகு இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தடிக்குச்
சென்று ஒதுங்கி விடியவிடிய கதைபேசி மகிழ்ந்தனர்.
காலையில்தான் மழை நின்றது.
வெள்ளத்துக்கு அஞ்சி இடுகாட்டிலேயே பாடையை வைத்துவிட்டு ஓடிவிட்ட அனைவரும்
மீண்டும் இடுகாட்டுக்கு வந்தனர். அங்கே சென்னாவும் சென்னவ்வாவும் மரத்தடியில்
அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர். பிறகு
அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் இருவரும் பொறுமையாக
விளக்கம் கொடுத்தனர். அரண்மனையிலிருந்து ஒரு புதிய வண்டியை வரவழைத்து, அதில் இளவரசன்
சென்னாவையும் சென்னவ்வாவையும் உட்காரவைத்து அரண்மனைக்கு ஓட்டிச் சென்றனர்.
வழிநெடுக அந்த ஊர்மக்கள்
நின்று அந்த மணமக்களை வாழ்த்தினர். அரண்மனை வாசலிலேயே நின்றிருந்த ராஜாவும்
ராணியும் அவ்விருவரையும் நெஞ்சோடு தழுவி மகிழ்ந்தனர். இறைவனின் கருணையே கருணை என
கைலாசம் இருக்கும் திசையை நோக்கி எல்லோரும் கையை உயர்த்தி வணங்கினர். பிறகு “வலது காலை வச்சி உள்ள வாங்க”
என உரைத்து, மணமக்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் ராணி.
(கிழக்கு டுடே – இணைய இதழ் 16.05.2025)