Home

Showing posts with label தேடுகிறேன். Show all posts
Showing posts with label தேடுகிறேன். Show all posts

Monday, 18 June 2018

தங்கப்பாவின் கவிதையுலகம் – துலக்கமும் ஒடுக்கமும்



தங்கப்பாவின் கவிதையுலகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கால நீட்சியையுடையது. பாரதியார், வள்ளலார், பாரதிதாசன் ஆகிய மாபெரும் ஆளுமைககளின் தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிய சக்தியாக அவரை அடையாளப்படுத்தலாம். யாப்புவடிவில் அவர் சொற்கள் ஓர் அருவியைப்போல விழுந்துகொண்டிருப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அதன் பாய்ச்சலில் ஒரு தடையுமில்லை. சீரான வேகத்துடனும் தாளலயத்துடனும் சொற்கள் உற்பத்தியானபடி இருக்கின்றன. எடுத்துரைப்பில் அவருடைய பாடல்களில் ஒரு சின்னப் பிசகுகூட இருப்பதில்லை. அவர் பாடல்களை மனமொன்றிப் படிக்கும்போது அச்சொற்களின் கதகதப்பு நம் மனத்தில் மெல்லமெல்லப் படியத் தொடங்குகிறது. அந்த வெப்பம் பெருகப்பெருக அச்சொற்கள் ஏதோ ஒரு புள்ளியில் நம் நெஞ்சிலிருந்து பெருகுவதைப்போல ஓர் உணர்வு உருவாகத் தொடங்குகிறது. அந்த அனுபவத்தை நம் அனுபவமாக எண்ணும் விருப்பமும் ஏற்படுகிறது. அவருடைய அரைநூற்றாண்டுக்காலக் கவிதைகளில் அத்தகு விருப்பத்தை உருவாக்குபவையே மிகுதி. அது அவருடைய தனிப்பட்ட வெற்றி.