ஒரு
குடும்பத்தில் தலைவன் பொருள்வயின் பிரிவது தவிர்க்கமுடியாத ஒரு செயல். குடும்பம் நடத்தும் ஊரில் ஒரு தலைவனால் தொழில்செய்து
சம்பாதிக்கமுடியாத சூழல் சங்க காலத்திலிருந்து இன்றுவரை ஒரு வரலாற்றுச் சங்கிலியாக
நீண்டபடியே இருக்கிறது. தன் உழைப்பையும் அறிவையும்
திறமையையும் தாராளமாக வழங்கித்தான் ஒருவனால் பொருளைச் சம்பாதிக்கமுடியும். இப்படி எழுதிச்
செல்லும் அளவுக்கு பொருளும் உழைப்பும் எல்லா இடங்களிலும் ஓர் எளிய சமன்பாடாக இருப்பதில்லை. சில இடங்களில் சொல்லடி பட நேரலாம். சில இடங்களில்
கல்லடியும் பட நேரலாம். அத்தகு அவமானங்களை
உயிருக்குயிரான இல்லறத்துணை நேருக்குநேர் பார்ப்பதை எந்த ஆண்மனமும் ஏற்றுக்கொள்வதில்லை. எங்கோ கண்காணாத இடங்களில் படும் துன்பங்களையும்
அவமானங்களையும் பெரிதாக நினக்காத மனம் தன் உற்ற துணைவி அல்லது பெற்றறெடுத்த தாய் அல்லது
பிள்ளைகள் முன்னிலையில் அவற்றை எதிர்கொள்வதை மனம்கூசும் செயலாக நினைக்கிறது. இவற்றை முற்றிலும் தவிர்க்கவே ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான். எப்பாடு பட்டாவது பொருளிட்ட ஏதோ ஓர் ஊரும் துணைவியும்
பிள்ளைகளும் நிம்மதியாக வாழ இன்னொரு ஊருமாக தன்னுடைய வாழ்வை வடிவமைத்துக்கொள்வது பல
ஆண்களுக்கு தவிர்க்க இயலாத முடிவாகவே இருக்கக்கூடும். பிரிந்திருக்கும் காலத்தில் ஆண்கள் சம்பாதிக்கும்
பொருள் குறைந்த கால அளவுக்கே கஞ்சி குடித்து பசியாறும்படி இருக்கக்கூடும். மனைவி அல்லது
பிள்ளைகளின் பசியைக் காணப் பொறுக்காத தலைவன் மறுபடியும் பொருள்வயின் ஊரைவிட்டுச் செல்லக்கூடும். முடிவற்ற இத்தொடர்கதையின் அவலம் இலக்கிய வெளிமுழுக்க
அடர்ந்திருக்கிறது.