ஸ்ரீலஸ்ரீ
அயோத்திதாஸ பண்டிதர் என்று பெளத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையாக விளிக்கப்பட்ட
க.அயோத்தி தாசர் மிகச்சிறந்த சிந்தனையாளர் . கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கும்
மேலாக வெளியுலகம் அறியவராத அவரது எழுத்துகள் அனைத்தும் ஞான.அலாய்சியஸ் என்பவரால்
பதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் தொகைநூல்களாக வெளிவந்தன. தாசரின் சிந்தனைகளும்
இலட்சியங்களும் சாதிமதமற்ற அற வாழ்க்கையையும் கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட
மனித உறவுகளையும் பற்றியவை. அவரது ஆய்வுகளை முன்வைத்து, தாசரின்
அணுகுமுறைகள், இலட்சியங்கள், ஈடுபாடுகள்,
கொள்கை உறுதி எனப் பலவிதமான உண்மைகளைக் கண்டறிந்து தொகுத்தளிக்கும்
முயற்சியை மேற்கொண்ட ராஜ்.கெளதமன் தமிழுலகின் பாராட்டுக்குரியவர். ஏற்கனவே
அ.மாதவையாவின் படைப்புகள், புதுமைப்பித்தன் சிறுகதைகளை
முன்வைத்து அவர் நிகழ்த்திக்காட்டிய ஆய்வுகளில் வெளிப்பட்ட கூர்மையும்
வாதநுட்பமும் வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் அவற்றை முன்வைக்கும் திறமும்
இந்நுாலிலும் காணப்படுகின்றன.