Home

Sunday, 6 September 2020

எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் - முன்னுரை

  

2020 பிறந்ததும் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் நான் எழுதிய சத்தியத்தின் ஆட்சி என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவந்தது. காந்தியடிகளின் பாதையில் மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளின் கதைகளை அதில் எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் இன்னும் எழுதப்பட வேண்டியவரின் கதைகள் மனத்தில் விரிந்தன. பல ஆளுமைகளுடைய பெயர்களும் மிகவும் குறைவான தகவல்களும் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னிடம் உரையாடும் எல்லா நண்பர்களிடமும்உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பத்து பேர்களிடம் கேட்டால் ஒருவரிடமிருந்தாவது ஏதேனும் பயனுள்ள தகவல்கள் கிடைக்காதா என்ற ஏக்கமே அதற்குக் காரணம்.

முடிவு - சிறுகதை

 

காட்டின் விளம்பில் எங்களை இறக்கிவிட்ட பேருந்து புகையுடன் கிளம்பிச் சென்றது. கைநழுவிப்போன துணிபோல அந்தரத்தில் மிதந்தது பனியின் வெண்புகை. மரங்களின் உச்சி சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிய தொலைநோக்கியைக் கண்களில் பொருத்தி காட்டுக்குள் பார்வையை ஓட்டினான் டேவிட். அதை உடனே அவனிடமிருந்து பிடுங்கிப் பார்க்கவேண்டும்போலத் துடித்தது மனம். பட்டத்தேர்வில் எண்பது விழுக்காடு மதிப்பெண் வாங்கியதற்காக அவன் அப்பா வாங்கித் தந்திருந்த பரிசு அது. தொலைவில் இருப்பதை வெகுஅருகில் தொட்டுவிடும் அருகாமையில் காட்டும் அதன் சக்தியின் வசீகரத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஏரியின் மறுகரையில் நீச்சலடித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அத்தொலைநோக்கி வழியாக அவன்தான் காட்டினான். ‘‘பக்கத்துல இருக்கற மாறி தெரியும்டா’’ என்கிற பரவசத்தில் காட்டுப் பயணத்தையும் அவன்தான் திட்டமிட்டிருந்தான். இயலாமை ஒரு பாரமாக மனசில் நிரம்ப நான் அவன் முகத்தையே வெறித்தபடி நின்றிருந்தேன். அவன் முகத்தில் செம்மை ஏறியபடி இருந்தது. சிரிப்பு. ஆனந்தம். பரவசம். ‘‘கொடுடா’’ என்று கேட்க தைரியம் இல்லை. நிராசையுடன் மலையின்மீது பார்வையைப் படரவிட்டேன்.

Sunday, 30 August 2020

தி.ஜானகிராமன் சிறுகதைகள் - வெள்ளத்தின் வேகம்


சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை செய்துவந்தேன். வெள்ளக்காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த என் கண்கள் முதன்முதலாக வெள்ளத்தை நேருக்கு நேர் பார்க்க விழைந்தன. நண்பர்களிடம் என் விருப்பத்தைச் சொன்னதும் அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்.

உயிர்பெற்ற சிற்பங்கள் - நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரை

 

கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்தோடு மனப்பாடமாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் கவிதைத்தளத்திலிருந்து ஏதோ ஓர் உணர்வு அவரை உரைநடையின்பால் செலுத்த, குன்றாத மனஎழுச்சியோடு வரிசையாக நாற்பத்தொன்பது கட்டுரைகளை எழுதிவிட்டார். புதிதாக உருவாகிவரும் இணையதளயுகம் அவரை வரவேற்று அணைத்துக்கொண்டது. அந்திமழை என்னும் இணையதளம் இக்கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றி வெளியிட்டது. அச்சு ஊடகத்தில் அவருக்குக் கிடைத்த அதே அளவு வாசக ஆதரவு, இணைய ஊடகத்திலும் கிடைத்தது என்றே சொல்லவேண்டும். எந்த முன்திட்டமும் இல்லாத ஒரு மனம் உத்வேகத்தின் காரணமாக, தன் நினைவிலிருக்கும் மனிதர்களைப்பற்றியும் நிகழ்ச்சிகளைப்பற்றியும் தன்னிச்சையாக எழுதியவையாகவே இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. பெரிதும் தன்வரலாற்றுச்சாயல் பொருந்திய இக்கட்டுரைகளில் ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள்வரையிலான முப்பதாண்டுகால இடைவெளியில் காலமும் மனிதர்களும் மாற்றமடைந்த விதத்தின் தடம் அழுத்தமாகப் பதிந்திருப்பதைப் பார்க்கலாம்.

காலமும் கனவுகளும் - சென்னையின் கதை (1921) - கட்டுரை

 

நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழக்கிந்தியக்கம்பெனியால் வணிக விரிவாக்கத்துக்காக முதன்முதலாக வாங்கப்பட்டது. சிறுகச்சிறுக அக்கிராமத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உருவாகி அதிகாரமையமாக வளர்ந்தது என்பது வரலாறு. இந்தப் புத்தகம் அந்த வரலாற்றை காலவரிசை முறையில் முன்வைக்கிற புத்தகமல்ல. மாறாக, கிராமம் நகரமாகவும் மாநகரமாகவும் வளர்கிற போக்கில், உருவாக்கப்பட்ட கோட்டைகள், தேவாலயங்கள், காப்பகங்கள், அரண்மனை, பள்ளிகள் ஆகியவற்றைப்பற்றிய பதிவுகளைக் கொண்ட புத்தகம். அவற்றின் ஊடாக நகரம் உருமாறிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உருவாக்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பிருப்பதால் வரலாற்றை வேறொரு கோணத்திலிருந்து அணுகுவதற்கு இந்தப் புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தனிமனித அனுபவப்பதிவாக 1921 ஆம் ஆண்டில் இதை எழுதியவர் கிளின் பார்லோ என்னும் ஆங்கிலேயர். இப்போது இதன் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் ப்ரியாராஜ். வேகமான வாசிப்புக்கேற்ற மொழிபெயர்ப்பு.

Monday, 24 August 2020

அகத்தில் நிகழும் விளையாட்டு - கல்யாண்ஜி கவிதைகள்

 

கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை. ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை. உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள் அவை. அக்காட்சிகள் தன்னளவில் தீர்மானமான எந்தப் பொருளையும் சுட்டவில்லை. இனிப்பை விழுங்கிய பிறகு நாக்கைக் குழைத்துக்குழைத்து அசைபோட்டு, இனிப்பின் சுவையில் திளைப்பதுபோல கல்யாண்ஜி தீட்டிவைத்திருக்கும் காட்சிச்சித்திரங்களும் அசைபோட்டு திளைக்கத்தக்கவை. திளைக்கும்தோறும் அக்கவிதைகள் புதுப்புது அனுபவங்களையும் அர்த்தங்களையும் வழங்கிக்கொண்டே இருக்கின்றன.

ஓவியத்திலிருந்து இலக்கியம்வரைக்கும் - விட்டல்ராவ் நேர்காணல்

 பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர் விட்டல்ராவ். நல்ல சிறுகதையாசிரியர். நாவலாசிரியர். ஓவியர். திரைப்பட விமர்சகர். வரலாற்று ஆர்வலர். எல்லாத் தளங்களிலும் எழுபதுகளிலிருந்து தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துவருபவர். போக்கிடம், நதிமூலம், வண்ண முகங்கள் ஆகிய மூன்றும் அவருடைய எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டான நாவல்கள். தமிழகக்கோட்டைகள் அருமையான ஒரு வரலாற்று ஆவணம். சமூக வரலாற்றையும் மனித உறவுகளையும் இணைத்து தன்வரலாற்றுச் சாயலோடு விட்டல்ராவ் முன்வைத்திருக்கும் வாழ்விலே சில உன்னதங்கள்கட்டுரைத்தொகுப்புக்கு தேசிய அளவில் குசுமாஞ்சலி விருது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பதாண்டு கன்னட கலைப்பட வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சுட்டிக்காட்டும் மிக முக்கியமான ஆவணநூலானகன்னட நவீன சினிமாகடந்த ஆண்டு வெளிவந்தது. ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் தன் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் விட்டல்ராவ்.  ’பாரத சஞ்சார் நிகம்நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது பெங்களூரில் வசித்துவருகிறார். மாதத்தில் ஒருநாள் அவரை நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நடமாடும் தகவல் களஞ்சியம் என்றே அவரைச் சொல்லலாம். ஒவ்வொரு விஷயம்சார்ந்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்ள அவரிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. அபாரமான அவர் நினைவாற்றலைக் கண்டு பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியங்களில் மூழ்கியிருக்கிறோம். வழக்கம்போல ஒருநாள் நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அது ஒரு நேர்காணலின் சாயலில் இருப்பதை தற்செயலாக உணர்ந்தோம். உடனே தனி நேர்காணலாகவே அமையும் விதமாக மேலும் பல கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றோம். தன் நெஞ்சிலும் நினைவிலும் சென்னை மாநகரத்தைச் சுமந்துகொண்டிருக்கும் அவருக்கு பெங்களூர்வாசம் ஒரு பெரிய சுமையாக இருப்பதை எங்களால் புரிந்துகொள்ளமுடிந்தது. சென்னையைப்பற்றி பேசத்தொடங்கினாலே அவர் முகத்தில் படரும் புன்னகையும் வெளிச்சமும் அவருடைய நேசத்தை உணர்த்தும் சான்றுகள். எழுபது வயதைக் கடந்த அவருக்கு, அவருடைய சென்னை நினைவுகளே அருந்துணையாக உள்ளன. இந்த நேர்காணலை 2017 ஆம் ஆண்டு நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் அவருடைய வீட்டில் உரையாடி பதிவு செய்தோம். அந்த நேர்காணல் தீராநதி இதழில் வெளியானது. தற்செயலாக என் சேமிப்பில் வேறு ஒரு கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பதிவைக் கண்டுபிடித்தேன். நண்பர்கள் வாசிப்புக்காக இங்கு மீள்பதிவு செய்துவைக்கிறேன்.