காட்டின் விளம்பில் எங்களை இறக்கிவிட்ட பேருந்து புகையுடன் கிளம்பிச் சென்றது. கைநழுவிப்போன துணிபோல அந்தரத்தில் மிதந்தது பனியின் வெண்புகை. மரங்களின் உச்சி சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிய தொலைநோக்கியைக் கண்களில் பொருத்தி காட்டுக்குள் பார்வையை ஓட்டினான் டேவிட். அதை உடனே அவனிடமிருந்து பிடுங்கிப் பார்க்கவேண்டும்போலத் துடித்தது மனம். பட்டத்தேர்வில் எண்பது விழுக்காடு மதிப்பெண் வாங்கியதற்காக அவன் அப்பா வாங்கித் தந்திருந்த பரிசு அது. தொலைவில் இருப்பதை வெகுஅருகில் தொட்டுவிடும் அருகாமையில் காட்டும் அதன் சக்தியின் வசீகரத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஏரியின் மறுகரையில் நீச்சலடித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அத்தொலைநோக்கி வழியாக அவன்தான் காட்டினான். ‘‘பக்கத்துல இருக்கற மாறி தெரியும்டா’’ என்கிற பரவசத்தில் காட்டுப் பயணத்தையும் அவன்தான் திட்டமிட்டிருந்தான். இயலாமை ஒரு பாரமாக மனசில் நிரம்ப நான் அவன் முகத்தையே வெறித்தபடி நின்றிருந்தேன். அவன் முகத்தில் செம்மை ஏறியபடி இருந்தது. சிரிப்பு. ஆனந்தம். பரவசம். ‘‘கொடுடா’’ என்று கேட்க தைரியம் இல்லை. நிராசையுடன் மலையின்மீது பார்வையைப் படரவிட்டேன்.