ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களின் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுக்கு இடையில் அவர்கள் ”ஒரு நல்ல கதை சொல்லுங்க பெரியப்பா” என்றனர். சில கணங்கள் யோசித்துவிட்டு “ஒரு ஊருல ஒரு ராஜா” என்று தொடங்கினேன். உடனே ஒரு சிறுமி என்னைத் தடுத்து “ராஜா கதையெல்லாம் வேணாம். வேற சொல்லுங்க” என்று தடுத்துவிட்டாள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு “ஒரு ஊருல ஒரு மந்திரவாதி” என்று தொடங்கினேன். “ஐயையோ, மந்திரவாதி கதை, பூதம் கதைலாம் வேணாம்” என்று வேறொரு சிறுமி தடுத்தாள். இப்படி நான் தொடங்கிய விலங்கு கதை, பறவை கதை, இளவரசி கதை, பாட்டி கதை எல்லாவற்றையும் முதல் வரியிலேயே ”வேணாம் வேணாம்” என்று தடுத்துவிட்டனர். “இதெல்லாம் எங்களுக்கே தெரியும், ஏதாச்சும் புது மாதிரி சொல்லுங்க” என்றனர்.