கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’
கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும்
முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை.
தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும்
வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின்
தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு
ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான
சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதும் இந்த அம்சமே.