தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நுட்பமான உறவை மனிதன் புரிந்துகொள்கிறான். ஒரு படைப்பை மனதார வாசித்த பிறகு மானுட குலத்தின் துக்கம் அவனுடைய துக்கமாகவும் மானுட குலத்தின் ஆனந்தம் அவனுடைய ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் சிறுவனொருவனைப்பற்ற்iய சிறுகதையைக் கார்க்கி எழுதியிருக்கிறார். பத்து வயதில் குடும்ப பாரத்தைத் தாங்குவதற்காக எங்கோ இருக்கும் கல்கத்தா நகருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ரயில்பயணம் செய்யும் சிறுமியின் கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது நம் நெஞ்சம் கரைந்துவிடுகிறது. ஓர் இலக்கிய அனுபவம் நம்மீது செலுத்தும் ஆளுமைக்கு இந்த அடிப்படை உண்மைதான் அடையாளம். உலகம் முழுதும் இப்படிப்பட்ட எண்ணற்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒரு வாசகனுடைய கோணத்தில் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.