1930இல் நடைபெற்ற உப்புசத்தியாகிரகப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் மிகமிக முக்கியமானது. அதுவரை அரைகுறையாக எல்லோருடைய நெஞ்சங்களிலும் படர்ந்திருந்த அரசியல் உணர்வை இந்தப் போராட்டம் ஆழமாக வேரூன்றச் செய்து மரமாக வளர்த்தது. 12.03.1930 அன்று அதிகாலையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து இந்தப் போராட்டத்துக்கான தண்டி யாத்திரை தொடங்கியது. 79 சத்தியாகிரகிகளுடன் காந்தியடிகள் 23 நாட்கள் நடந்து 240 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து 05.04.30 அன்று தண்டி கடற்கரையை அடைந்தார். மறுநாள் காலையில் பிரார்த்தனைக்குப் பிறகு கடலோரத்தில் ஒரு பிடி உப்பை கையிலெடுத்து உயர்த்தி ”இது ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் நடவடிக்கை” என்று அறிவித்தார். தண்டியில் இருந்தபடியே அவர் தாராசனா போராட்டத் திட்டத்தை வகுத்தார்.