”இந்த
ரெண்டு மாசமா நீ செஞ்ச சர்வீச விட இனிமே நீ செய்யப் போற சர்வீஸ்தான் ரொம்ப முக்கியமானது சிவகாமி. நல்லபடியா பாத்துக்கணும், என்ன?” என்றார் டாக்டர். “டியூபெல்லாம் எடுத்துட்டதால இனிமேல் சாப்பாடு, மருந்து எல்லாத்தயும்
நேரிடையாவே மேடத்துக்கு கொடுக்கலாம்”
டாக்டர் புறப்படும் நேரத்தில் மேடம் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்தார். அடிக்கடி படபடத்த அவர் கண்களில் சோர்வும் திகைப்பும் கலந்திருந்தன. இரண்டு மாதங்களாக சுயநினைவில்லாமல் படுத்திருந்தவருக்கு நேற்றுதான் விழிப்பு வந்தது. “நான் கெளம்பறேன் மேடம். ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பாக்கறேன். இடையில தேவைப்பட்டா எனக்கு ஒரு ஃபோன் பண்ண சொல்லுங்க. அர மணி நேரத்துல வந்துருவன்” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.