தூக்கம் கலையாமலேயே எழுந்து வாசலுக்கு வந்தபோது அவனுக்கு உடம்பெல்லாம் வலிக்கிறமாதிரி இருந்தது. தோள் பட்டையிலும், இடுப்பிலும் அளவு மீறி வலித்தது. கெட்டிப் போயிருந்த தொடையிலும் ஆடுகால் சதையிலும் வீட்டுக் கதவுக்கும் வாசலுக்குமான நாலடி தூர நடையிலேயே வீச்சோடு வலி தாக்கி விலகியதை உணர முடிந்தது. குனிந்து இடுப்பிலிருந்து நடுக்கால்வரை இரு கைகளாலும் அழுத்திவிட்டுக் கொண்டபோது இதமாய் இருந்தது. லேசாய் வலி கரைகிற மாதிரி உணர்வு தட்டியது. அழுத்தமாய் நின்றுகொண்டு காலை மாற்றி மாற்றி உதறியபோது இன்னும் கொஞ்சம் தேவலாம்போலிருந்தது. அந்த தினத்தை ஆரம்பிப்பதற்குரிய பலம் வந்தமாதிரி தோன்றியது. திரும்ப வந்து முகம் கழுவிக்கொள்கிற தருணத்தில் இன்னும் கொஞ்சம் பலம் கூடியது.