கடந்த ஆகஸ்டு மாதத்தோடு நான் வேலைக்கு வந்து இருபத்தியேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கத்தில் புதுச்சேரியில் ஓராண்டையும் பிறகு ஆந்திரத்தில் இரண்டு ஆண்டுகளையும் அதைத் தொடர்ந்து இருபத்திநான்கு ஆண்டுகளைக் கர்நாடகத்திலும் கழித்திருக்கிறேன்.
இந்த இடைவெளியில் பல ஊர்களில் பலவிதமான அதிகாரிகளிடம் வேலைபார்த்த அனுபவமுண்டு. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. சில அனுபவங்கள் மேன்மையானவை. சில அனுபவங்கள் மறக்கமுடியாத வடுக்களையும் வலியையும் தந்தவை. இன்னும் சிற்சில அனுபவங்கள் கசப்பையே பரிசாக வழங்கியவை. எழுதத் தொடங்கினால் ஒவ்வொன்றையும் ஒரு கதையாகச் சொல்லலாம்.
Thursday, 29 October 2015
நெஞ்சை நிரப்பிய பாடல்கள் - கட்டுரை
ஜெய்ப்பூரிலிருந்து தொடர்வண்டியில்
திரும்பிக்கொண்டிருந்தேன். ஐந்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்த ராஜஸ்தானத்தின்
இடங்களனைத்தும் சின்னச்சின்னக்
காட்சிகளாக மனத்துக்குள் நகரத் தொடங்கின. அரண்மனைகள், இடிந்த கோட்டைகள், பசுமை அடர்ந்த மலைச்சிகரங்கள், ஏரிகள், சமண ஆலயங்கள், பாலைவனம் என அனைத்துமே பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக மனத்தில் பதிந்துகிடந்தன. அடுத்தடுத்து மலைச்சிகரத்தையும் பாலைவனத்தையும்
பார்த்த அனுபவம் ஒரு கனவுக்காட்சியைப்போல இருந்தது. சிகரத்தை நினைத்தபோது அதன்மீது நெளிந்தலையும் துண்டுத்துண்டு
வெண்மேகங்களும் அவற்றையொட்டிப்
பரவி நீண்டு விரிவடையும் நீலவானமும் அவற்றின் ஆழமான பின்னணியும் மிதந்துவந்தன. பாலைவனத்தை நினைத்தபோது மஞ்சளும் வெண்மையும் கலந்த மினுமினுப்பான நீண்ட மணற்பரப்பும் எங்கெங்கும் படர்ந்திருக்கும் வெறுமையும் மிதந்துவந்தன. ஆழமான வானமும் வெறுமையான மணற்பரப்பும் ஒரேவிதமான பரவசத்தையும் பீதியையும் ஒருங்கே ஊட்டுவதை அக்கணத்திலும் என்னால் உணரமுடிந்தது. என்னவென்று சொற்களால் வடிக்கமுடியாத ஒருவித வலியும் நெகிழ்ச்சியும் வேதனையும் கவிந்தன. கண்களை மூடியபடி வெகுநேரம் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
Tuesday, 13 October 2015
சந்திப்பு
பழைய சென்னைச்சாலை என்பது அல்சூர் எரியிலிருந்து தொடங்குகிறது. அதன் வெவ்வேறு இடங்களிலிருந்து கிளைப்பாதைகள் நீண்டு ஆதர்ஷா திரையரங்கின் முன்னால் சந்தித்துக்கொள்ளும். அந்தப் பாதைகளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தால் ஏறத்தாழ ஒரு முக்கோணத்தைப்போல இருக்கும். சென்னைச்சாலையிலிருந்து நினைத்த பாதையில் வாகனங்கள் பிரிந்து நினைத்த திசையில் பறந்துபோகும். சாலைப்போக்குவரத்தைப் பொறுத்தமட்டில்
வசதிகள் அதிகமாக உள்ள இடம்தான் நாளடைவில் நெரிசலில் பிதுங்கிக் குழம்பித் தடுமாறும் இடமாக மாறும் என்ற எழுதாத விதிக்கு ஆதர்ஷா சாலைகளும் ஒருநாள் பலியாகின. உடனடியாக அக்கிளைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக
அறிவிக்கப்பட்டன.
Labels:
Paavannan,
short story,
சந்திப்பு,
சிறுகதை
சாவை வென்ற வீரர்
பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று விமானநிலைய வீதியில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனை. எட்டுமாடிக் கட்டிடம். எல்லா நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம். அதன் அவசர சிகிச்சைப் பிரிவின்முன் எப்போதும் ஐம்பது பேராவது கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ரத்த தானத்துக்காக மூன்றுமுறைகளும்
நோய்வாய்ப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்காக சில முறைகளும் அங்கு சென்றதுண்டு. தற்செயலாக பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்த ஒரு தருணத்தில் நீண்ட விரிப்புகளையும்
மெத்தென்ற இருக்கைகளையும்
கொண்ட பெரிய கூடமொன்றைப் பார்த்தேன். சுவர்களில் ஆறேழு ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. பழைய காலத்துச் சிகிச்சை முறைகளைச் சித்தரிக்கும் காட்சிகள். எல்லாமே அறுவை மருத்துவம் தொடர்பானவை. மயக்கமருந்தே இல்லாமல் நடக்கும் அறுவை சிகிச்சைகள் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஒரு பல்லை எடுப்பதற்குக்கூட மயக்கமருந்து கொடுத்துவிட்டு சிகிச்சை செய்கிற காலம் இன்று. புதுமையின் விளிம்பில் நின்றுகொண்டு அந்தக் காலத்தை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க இயலவில்லை.
Labels:
கட்டுரை,
சாவை வென்ற வீரர்
Monday, 28 September 2015
ஆறுதல்
சில அபூர்வமான காட்சிகள் கண்ணால் பார்க்கநேரும் கணத்திலேயே மனத்தில் பதிந்துவிடுகின்றன.
பத்துப் பேரிடமாவது உடனடியாக அக்காட்சிகளைப்பற்றி மீண்டும்மீண்டும் சொன்னால்தான் மனத்தின் பரபரப்பு அடங்குகிறது. பைக்காரா நிர்வீழ்ச்சிக்கு
அருகே ஒரு வெட்டவெளியில் தன்னந்தனியாக உயரமாக வளர்ந்து நின்றிருந்த தைல மரத்தின் உச்சியில் தனிமையில் கூவிக்கொண்டிருந்த
ஒரு ரெட்டைவால்குருவி, உச்சிவெயில் சுட்டுப்பொசுக்கும் ஒரு கோடையில் பறவைகளேயற்ற வானத்தில் கொஞ்சம்கூட இறகுகளை அசைக்காமல் வட்டமிட்டபடி பறந்த ஒரு கழுகு, மேய்ச்சல் இடத்திலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் மாடுகளுக்கு நடுவே ஒரு எருமையின் முதுகில் ஆனந்தமாக பாடியபடி சென்ற ஒரு சிறுவன், பள்ளிக்கூடப்பையை
ஒரு தாழ்ந்த மரக்கிளையில் தொங்கவைத்துவிட்டு
வேலியில் உட்கார்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பதற்காக ஓசையில்லாமல் அடிமேல் அடிவைத்துப் பின்தொடர்ந்து சென்ற இரட்டைச்சடைபோட்ட
ஒரு சிறுமி, கொல்லிமலையிலிருந்து திரும்பிவர பேருந்து கிடைக்காமல் ஒரு பெருங்கூட்டமே அலைமோதிக் கொண்டிருந்தபோது, எவ்விதப் பரபரப்பும் காட்டாமல் தன் கணவரான கிழவர் தலைசாய மடியில் இடம்கொடுத்துவிட்டு, மடித்த தாள்களையே விசிறியாக்கி அவருக்கு விசிறிக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி எனப் பல காட்சிகளைச் சொல்லிக்கொண்டே
செல்லலாம். இச்சித்திரங்களின்
வரிசையில் இந்திரா நகர் பூங்காவில் பார்க்கநேர்ந்த ஒரு நிலக்கடலை விற்பனையாளரின்
சித்திரமும் முக்கியமான ஒன்று. வழக்கமாக நிலக்கடலை விற்பவர்கள் எப்படி இருப்பார்களோ, அப்படி இல்லாமலிருந்தார்
அவர். அதுவே அவருடைய தோற்றம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோனதற்குக்
காரணம்.
Labels:
ஆறுதல்,
கட்டுரை,
கட்டுரைத்தொகுதி
அருவி என்னும் அதிசயம்
கர்நாடகத்தின் வற்றாத முக்கியமான நதிகளில் ஒன்று ஷராவதி. மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள தீர்த்தஹள்ளிக்கு
அருகே உள்ள அம்புதீர்த்தத்தில் பிறந்து ஏறத்தாழ நு¡ற்றிஇருபத்தைந்து கிலோமிட்டர் தொலைவு ஷிமோகா, வடகன்னடப் பகுதிகளில் ஓடிப் பாய்ந்து ஹொன்னாவர் என்னும் இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பாதிக்கும் மேல் நிறைவேற்றி வைக்கிற மின்உற்பத்தி நிலையம் இந்த நதியின் குறுக்கில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் இன்றும் நினைத்துப் பெருமை பாராட்டுகிற பொறியியலாளரான விஸ்வேஸ்வரய்யாவின் மேற்பார்வையில் கட்டப்பட்ட லிங்கனமக்கி அணைக்கட்டும் இந்த நதியின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டது. (அவருடைய பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இன்னொரு அணைக்கட்டு காவிரியின் குறுக்கில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு.) இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் அருவி ஷராவதி நதியின் கொடையாகும். ஏறத்தாழ எண்ணு¡று அடிகள் உயரத்திலிருந்து இந்த அருவி பொங்கி வழிவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
Friday, 18 September 2015
சப்தமும் நிசப்தமும் தேவதச்சனின் கவிதை
எல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை அனைத்தும் வெறும் ஒற்றையடிப்பாதையாகவே இருந்தன. அந்த நாட்களில் பூங்காவில் ஒரு பெரியவர் எனக்கு அறிமுகமானார்.எழுபதை நெருங்கிய வயது.மெலிந்த தோற்றம். படியப்படிய வாரிய அவருடைய வெளுத்த தலைமுடிக்கோலம் வசீகரமானது. இரண்டு அல்லது மூன்று சுற்றுகள்மட்டுமே நடப்பார். வேகநடையெல்லாம் கிடையாது. எல்லாத் திசைகளிலும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாகவே செல்வார். பிறகு, ஒரு மஞ்சட்கொன்றை மரத்தடியில் போடப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார். எதிரில் இறகுப்பூப்பந்து விளையாகிற சிறுமிகளையும் அருகில் இருக்கிற தோப்பையும் சுற்றுச்சுவரையும் சாலையையும் கடந்து செல்லும் வாகனங்களையும் மாறிமாறி வேடிக்கை பார்ப்பார். ஒரு குறிப்பிட்ட நேரம்வரை அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்வதன் அடிப்படையில் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு சிந்தி,வணக்கம் சொல்லி, பெயர் சொல்லி அறிமுகமாகி, நெருக்கமாகப் பேசத் தொடங்குவதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிடித்தன. பேசிப்பேசித்தான் அவருடைய மனதைப் புரிந்துகொண்டேன்.
Subscribe to:
Posts (Atom)