Home

Showing posts with label கவிதைத் தொகுதி. Show all posts
Showing posts with label கவிதைத் தொகுதி. Show all posts

Friday, 18 September 2015

சப்தமும் நிசப்தமும் தேவதச்சனின் கவிதை

எல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை அனைத்தும் வெறும் ஒற்றையடிப்பாதையாகவே இருந்தன. அந்த நாட்களில் பூங்காவில் ஒரு பெரியவர் எனக்கு அறிமுகமானார்.எழுபதை நெருங்கிய வயது.மெலிந்த தோற்றம். படியப்படிய வாரிய அவருடைய வெளுத்த தலைமுடிக்கோலம் வசீகரமானது. இரண்டு அல்லது மூன்று சுற்றுகள்மட்டுமே நடப்பார். வேகநடையெல்லாம் கிடையாது. எல்லாத் திசைகளிலும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாகவே செல்வார். பிறகு, ஒரு மஞ்சட்கொன்றை மரத்தடியில் போடப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார். எதிரில் இறகுப்பூப்பந்து விளையாகிற சிறுமிகளையும் அருகில் இருக்கிற தோப்பையும் சுற்றுச்சுவரையும் சாலையையும் கடந்து செல்லும் வாகனங்களையும் மாறிமாறி வேடிக்கை பார்ப்பார். ஒரு குறிப்பிட்ட நேரம்வரை அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்வதன் அடிப்படையில் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு சிந்தி,வணக்கம் சொல்லி, பெயர் சொல்லி அறிமுகமாகி, நெருக்கமாகப் பேசத் தொடங்குவதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிடித்தன. பேசிப்பேசித்தான் அவருடைய மனதைப் புரிந்துகொண்டேன்.

எளிமையும் வலிமையும் தேவதச்சனின் "யாருமற்ற நிழல்"

சாதாரணமாக நம் கண்ணில் படுகிற பல காட்சிகளிலும் காதால் கேட்கிற சொற்களிலும் பொதிந்திருக்கிற நுட்பத்தை ஆழ்ந்த கவித்துவத்தோடு முன்வைக்கும் தேவதச்சனின் கவிதைகள் தமிழ்க்கவிதையுலகுக்கு வலிமை சேர்ப்பவை. பார்வைக்கு எளியவையாக தோற்றமளிக்கும் வரிகள் கவித்துவச் சுடருடன் ஒளிரும்போது நம் மனத்தில் இடம் பிடித்துவிடுகின்றன. தொகுப்பின் தலைப்பாக உள்ள "யாருமற்ற நிழல்" அழகான படிமமாக மலர்ந்து வாசகர்களை ஈர்க்கிறது. உண்மையில் இத்தலைப்பில் தொகுப்பில் ஒரு கவிதையும் இல்லை. மொத்தக் கவிதைகளுக்கும் பொருந்திவருகிற மாதிரி இத்தலைப்பு அமைந்துவிடுகிறது. அன்பின் நிழலா, வாழ்வின் நிழலா, நிம்மதியின் நிழலா, எதன் நிழல் இது? ஏன் யாருமற்ற நிழலாக உள்ளது? நிழலின் அருமையை ஏன் யாருமே உணரவில்லை? நிழலில் வந்து நிற்கக்கூட நேரமில்லாமல் எதை அடைவதற்காக இந்த வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்? ஒருவேளை அருகிலேயே இருக்கிற நிழலின் இருப்பை உணராமல் எங்கோ இருக்கிற நிழலைத் தேடித்தான் நாம் ஓடுகிறோமா? இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி ஓடுவதே மானுடனின் விதியா? இப்படி பல திசைகளiல் எண்ணங்கள் பயணமிட இத்தலைப்பு தூண்டுதலாக அமைகிறது.

Friday, 13 February 2015

உலகமும் நிகர் உலகமும் - பெரியசாமியின் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’


நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமும் மட்டுமே உள்ளது. கவிதைகளில் வெளிப்படும் உலகம், வெளியுலகத்தின் நேரடியான பிரதியல்ல. அதன் சாயலை உருவகமாகவும் படிமமாகவும் கட்டியெழுப்பவே கவிதை முயற்சி செய்கிறது. ஒரு சின்ன மரப்பாச்சியை குழந்தையாகவும் தாயாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் அரசனாகவும் சுட்டிக்காட்டி கதைசொல்வது  குழந்தையின் உலகத்தில் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். தன்னிச்சையான அந்தச் சொற்கோவையை உருவாக்க முடியும்போதுதான் கவிஞனுக்கும் அந்த வெற்றி சாத்தியமாகிறது. அந்தப் புள்ளியை தன் சொல்லால் தொடக்கூடிய ஒரு சில கவிஞர்களில் ஒருவர் பெரியசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த மதுவாகினி தொகுப்பில் அத்தகு அடையாளங்களைக் கொண்ட சில நல்ல கவிதைகள் இருந்தன. அதன் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் ’தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பில் காண முடிகிறது.