Home

Showing posts with label இயல் விருது. Show all posts
Showing posts with label இயல் விருது. Show all posts

Sunday, 18 June 2023

இயல் விருது ஏற்புரை

  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இலக்கிய விழாவுக்கு வந்திருக்கும் இலக்கிய ஆளுமைகளே. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விருதாளர்களே. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து வந்து அரங்கில் நிறைந்திருக்கும் நல்லிதயங்களே. அன்பார்ந்த நண்பர்களே. நம் அனைவரையும் இந்த இடத்தில் ஒன்றிணைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் அவர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

Thursday, 22 January 2015

வாழ்த்துகள் ஜெயமோகன்



ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா இடங்களுக்கும் அவை வருகின்றன. படுத்திருப்பவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொள்வதிலோ, அல்லது படுத்திருப்பவன் மேலேயே ஏறி ஓடுவதிலோ அவற்றுக்கு கொஞ்சம்கூட தயக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு சுதந்திரமான எலிகள். கதையில் முழுக்கமுழுக்க அந்த எலிகளின் நடமாட்டத்தைப்பற்றிய சித்தரிப்புகளே இடம்பெற்றிருந்தன. உயிரோட்டம் மிகுந்த அந்த விவரணைப்பகுதிகளை நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கதையைப் படித்துமுடித்த பிறகுதான் அந்த எலிகள் அக்கதையில் இடம்பெற்றிருந்த ஒரு பாத்திரத்தின் அலைமோதும் நினைவுகளின் குறியீடாக இருப்பதை அறிந்தேன். இருட்டு அறையில் சுதந்திரமாகத் திரிந்தலையும் எலிகள் ஒருபுறம். குழம்பிய
மனத்தில் திக்குதிசை தெரியாமல் அலைகிற நினைவுகள் மறுபுறம். அந்த எழுத்துமுறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ரஷ்யக்கதையைப் படித்ததுபோல சந்தோஷமாக இருந்தது.