Home

Showing posts with label சூஃபி ஞானியர். Show all posts
Showing posts with label சூஃபி ஞானியர். Show all posts

Wednesday, 26 October 2016

நம்பிக்கைத் தடங்களைத் தேடும் பயணம் - (புத்தக அறிமுகம்)



‘மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன. சண்டை போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்கின்றன’ என்னும் வாக்கியத்திலிருந்து தல்ஸ்தோயின் ‘அன்னா கரினினா’ நாவல் தொடங்குகிறது. இது குடும்பத்துக்கு மட்டுமல்ல, எல்லா அமைப்புகளுக்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மை. முக்கியமாக மதம். ஒவ்வொரு மதமும் மோதலுக்கான காரணத்துக்காகக் காத்திருக்கிறது. நெருக்கடி மிகுந்த நவீன வாழ்வில் பொருளாதாரம், அரசியல், வசிப்பிடம், சமூகம், குடும்பம், தேசம், பாலியல், தன்னலம் எனப் பல்வேறு காரணங்களால் தனிமனிதனின் மனத்திலும் சமூக மனத்திலும் வன்முறை சிறுகச்சிறுக உருவாகி வளர்ந்து பெருகிப் பொங்கியபடி இருக்கிறது. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் இந்த வன்முறை மோதலாக உடனடியாக வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் பெருகி வரும் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மதமோதல்களுக்கும் கலவரங்களுக்கும் கூடுதலான முக்கியத்துவத்தை வழங்குகின்றன. அவ்வப்போது நிகழும் வெடிகுண்டுத் தாக்குதல்களும் தற்கொலைப்படைத் தாக்குதல்களும் அந்த முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க செய்கின்றன. இதன் விளைவாகத் தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் மதத்தின்மீது, தீவிரவாத முத்திரை விழுந்துவிட்டது. இதில் திரைப்படங்களின் பங்கு ஒரு முக்கியமான அம்சம். திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்க்கக்கூடிய இந்தியா போன்ற நாடுகளில் எல்லாத் திரைப்படங்களிலும் தீவிரவாதிகளை முஸ்லிம் பிரிவினராகத் தொடர்ச்சியாகச் சித்தரிப்பதன் வழியாக, முஸ்லிம்கள்மீது தீவிரவாத முத்திரை அழுத்தமாகவே விழுந்துவிட்ட சூழலில் நாம் வசிக்கிறோம். தம்மிடையே வாழும் முஸ்லிம்களை அவநம்பிக்கையோடும் கசப்போடும் பார்க்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.