புதுச்சேரியிலிருந்து நண்பரொருவர் பெங்களூருக்கு வந்திருந்தார். கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்தவர் அவர். அவருடைய மகள் வீடு மாரதஹள்ளிக்கு அருகில் இருந்தது. வந்து இறங்கியதுமே கைப்பேசியில் அழைத்து ”நான் மூனு நாள் இங்க இருப்பேன். ஒருநாள் நான் கெளம்பிவந்து உங்களைப் பார்க்கட்டுமா? எந்த நேரம் உங்களுக்கு வசதியா இருக்கும்?” என்று கேட்டார். “அவசரப்படாதீங்க. வடக்கு தெற்கு புரியாத ஊருல உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? நானே வந்து பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு முகவரியை மட்டும் கேட்டு வாங்கிக் குறித்துக்கொண்டேன். ஆனால் புறப்படுவதற்கு உகந்ததாக அன்றைய பொழுது அமையவில்லை. மறுநாள்தான் புறப்பட முடிந்தது.