ஓர் இயந்திரம் மனித வாழ்வுக்குத் துணையானதா அல்லது எதிரானதா என்கிற
கேள்விக்கு வரையறுக்கப்பட்ட விடையைக் கூறுவது எளிதல்ல. வெறும் கைகளால் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்த
ஆதிமனிதன், வலிமையும் கூர்மையும்
பொருந்திய கல்லாலும் கட்டையாலும் வேகமாகவும் அதிகமாகவும் மண்ணை அகழ்ந்தெடுக்கமுடியும்
என்பதைக் கண்டறிந்த கணத்தில் அவன் நிச்சயமாக ஆனந்தக் கூத்தாடியிருப்பான். முரட்டுத்தனமான அந்த ஆயுதங்களை மெல்ல
உருமாற்றிஉருமாற்றி மண்வெட்டியாக வளர்த்தெடுத்தது அவனுடைய மாபெரும் சாதனை. அதன் தொழில்நுட்பம் மென்மேலும்
செழுமைப்படுத்தப்பட்டு மின்சாரத்தால் இயக்கப்படும் மண்நீக்கியாக இன்று மாபெரும்
உருவத்துடன் வடிவமைக்கப்பட்டதும் மானுடனின்
மதிநுட்பமே. தோற்றத்தில் மண்வெட்டி
ஒரு சின்ன ஆயுதமாக இருந்தாலும் அது மனிதக்கைகளின் நீட்சியாகவும் விரல்களாகவுமே
வேலை செய்கிறது. அக்கணத்தில் அவனுக்கு அது
அருந்துணை. நூறு மனிதர்களின் கைவிரல்கள்
ஒரே சமயத்தில் இணைந்து வேலை செய்வதுபோன்ற வேகத்தைக்கொண்டது இயந்திர
மண்நீக்கி. ஒருவகையில் நூறு மனிதர்களின்
உழைப்பை அது தன்னந்தனியாக ஈடு செய்கிறது. தன் உழைப்புக்குப் பதிலியாக வந்து
நிற்கிற ஓர் இயந்திர மண்நீக்கியை, உழைப்பையே நம்பியிருப்பவனின்
பார்வையில் எதிரியாகக் காட்சியளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று.