Home

Showing posts with label புலனுதிர் காலம். Show all posts
Showing posts with label புலனுதிர் காலம். Show all posts

Tuesday, 25 October 2016

சுடர்மிகுந்த வரிகள் - (கட்டுரை)


புத்தகக்கடைகளுக்குச் சென்று திரும்பும் ஒவ்வொருமுறையும் ஒருசில கவிதைத்தொகுதிகளை விருப்பத்தோடு வாங்குவது என் வழக்கம். கவிதைகள் எப்போதும் என் விருப்பத்துக்குரிய உலகம். அசைபோட்டபடி நடப்பதற்கு கவிதைவரிபோன்ற உற்ற துணை உலகத்திலேயே இல்லை என்று நினைப்பவன் நான். புதியவர்களின் கவிதைத்தொகுதிகளை விருப்பத்துடன் படிப்பதுமட்டுமன்றி, அவற்றைப்பற்றி ஒருசில வரிகளையாவது என் குறிப்பேட்டில் குறித்துக்கொள்வதையும் ஒரு பழக்கமாகக் கடைபிடித்து வருகிறேன். நாற்பது, ஐம்பது கவிதைகள் கொண்ட ஒரு தொகுதியில் பத்து கவிதைகள் சிறப்பானவையாக இருந்தால் போதும், அதை ஒரு நல்ல தொகுதி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. ஐந்து கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை ஒரு நல்ல முயற்சி என்றும் சொல்வேன். அதைக்கூட என் வாசிப்பில் கண்டுபிடிக்க முடியாமல் போகிற நிலையில்தான் என் மனம் ஏமாற்றமடைகிறது. கவிதை பற்றிய ஒரு தெளிவு கவிஞர்களிடம் இல்லை என்பதை அவர்களுடைய வரிகள் உணர்த்திவிடுகின்றன.