விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய
சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில்
எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள்
ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால் அந்தப் பள்ளி செயல்படாத
பள்ளியாகவே இருக்கிறது. அந்தச் சூழலில் சுகவனம் என்னும் இளைஞர் பயிற்சி பெற்ற ஆசிரியராக
அந்தப் பள்ளிக்கு வருகிறார். மாணவமாணவிகளுக்கு பேச்சில் இருக்கிற ஆர்வம் படிப்பதிலோ
எழுதுவதிலோ இல்லை. வகுப்பறை எப்போதும் சத்தமாகவே இருக்கிறது. அவர்களுக்கு எப்படி கற்பிப்பது
என்பது தெரியாமல் தொடக்கத்தில் திணறும் சுகவனம், இக்கட்டான ஒரு தருணத்தில் தானாகவே
ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.