1957ஆம் ஆண்டில் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தலைப்பில்
ஒரு கட்டுரைத்தொடரை குமுதம் இதழில் க.நா.சு. எழுதினார். பிறகு அமுதநிலையம்
அக்கட்டுரைகளை ஒரு நூலாக வெளியிட்டது.
வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர்.ராஜம்
ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், எஸ்.எம்.நடேச
சாஸ்திரியின் தீனதயாளு, தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின்
கமலாட்சி ஆகிய நாவல்களை முன்வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அந்தக் காலத்தில்
நாவல் கலை என்பது தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தரமுயன்றவர்கள்
இந்த நாவல்களின் படைப்பாளிகள். இலக்கியத்திலே எந்த ஒரு முயற்சிக்கும் மரபு
என்பதுதான் ஆணிவேர். இன்று தமிழ்க்கலையுலகில் நாவல் என்னும் ஆலமரம் எல்லாத்
திசைகளிலும் விழுதுவிட்டு வேரூன்றி உறுதியாக நிற்கிறது. அதற்கு வழிசெய்து
கொடுத்தவர்கள் இந்த நாவல் முன்னோடிகள் என்கிற மதிப்புள்ளவராக இருந்தார் க.நா.சு.
அவர்களுடைய முயற்சிகளை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தோடு இந்தத்
தொடரை எழுதியதாக அந்தப் புத்தகத்துக்காக எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்
க.நா.சு.