தென்னாப்பிரிக்காவிலிருந்து
புறப்பட்ட காந்தியடிகள் 09.01.1915 அன்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய் துறைமுகத்துக்குத் திரண்டு வந்த மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்றனர். அன்று அவரைச் சந்தித்த ஆங்கில நாளேடுகளின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு காந்தியடிகள் விடையளித்தார். இனி தன் வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுதும் இந்திய தேசத்துக்காக உழைக்கவிருப்பதாக அவர்களிடம் அறிவித்தார்.
அகமதாபாத்தில் கோச்ரப் என்னும் இடத்தில் அவர் தமக்கென ஓர் ஆசிரமத்தை நிறுவிக்கொண்டார். ஒரு தேசியப்பள்ளியை நிறுவும் திட்டமொன்றும் அவர் மனத்தில் இருந்தது. அதைப்பற்றி பல கூட்டங்களில் அவர் தொடர்ந்து பேசி மக்களின் கருத்தை அறிய முனைந்தார். அப்போது அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் வல்லபாய் படேல். அவருக்கு காந்தியடிகள்மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லாத காலம் அது.