மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்திருந்தால் மதுரைவீரன், தேசிங்குராஜா, கட்டபொம்மன் போல மக்களின் வாய்வழிப்பாடல்களிலும் கதைகளிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய மாபெரும் ஆளுமையாக வ.வே.சு.ஐயர் விளங்கியிருக்கக்கூடும். அதற்கு முற்றிலும் தகுதியானவராகவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. எங்கள் பள்ளிக்கூட நாட்களில் தேசவிடுதலைப் போராட்டவீரர்களைப்பற்றி உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமான குரலில் எங்களுக்கு எடுத்துச் சொன்ன கதைநேர ஆசிரியர்தான் முதன்முதலாக எங்களுக்கு வ.வே.சு.ஐயரைப்பற்றிச் சொன்னார். அவர் சொன்ன பல தகவல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையை சிறையில் அடைத்து செக்கிழுக்கவைத்த ஆங்கிலேய கலெக்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப்பயிற்சி கொடுத்தவர் வ.வே.சு.ஐயர் என்கிற தகவல் எங்கள் இளம்நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்துவிட்டது. அப்போதெல்லாம் அவர் பெயரைக்கூட எங்களால் சரியாக உச்சரிக்கத் தெரியாது. பாலாஜி ஐயர், மகாலிங்கம் ஐயர் என்பதுபோல வாவேசு ஐயர் என்றுதான் வெகுகாலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் அது வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய
ஐயர் என்கிற பெயரின் முதலெழுத்துகள் கூடி உருவான பெயர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.