பிதுக்கித்
தள்ளப்பட்ட வேப்பங்கொட்டையைப்போல நிரம்பி வழிந்த பேருந்திலிருந்து இறங்கத்
தொடங்கிய கூட்டம் என்னையும் வெளியே தள்ளியது. ஆனால் புத்தகங்களும்
சாப்பாட்டுப்பெட்டியும் தண்ணீர்ப்புட்டியும் கொண்ட என் தோள்பை
மீட்டெடுக்கமுடியாதபடி படிக்கட்டில் நின்றிருந்த இருவருடைய இடுப்புக்குநடுவில்
அகப்பட்டுக்கொண்டதால் நிம்மதியாக மூச்சுவிடமுடியவில்லை. பை பை என்று நான் போட்ட
சத்தத்தை அந்தச் சந்தடியில் யாரும் பொருட்படுத்தவில்லை. அதற்குள் புதிய பிரயாணிகள் ஏறத்தொடங்கிவிட்டார்கள்.
"பள்ளிக்கூடப் பையன்மாதிரி ஏன்யா பையத் தூக்கிகிட்டு வந்து உயிர வாங்கறிங்க?"
என்று மேல்படிக்கட்டில் நின்றிருந்தவர் என்னைப் பார்த்து சத்தம்
போட்டார். ஆனாலும் எனக்காக மெனக்கிட்டு இருவருடைய இடுப்புகளையும் சற்றே விலக்கி
என்னுடைய பையை உருவிக்கொள்ள உதவி செய்தார். கிளம்பிவிட்ட வண்டியில் அவருடைய
முகத்தைப் பார்த்து அவசரமாக "ரொம்ப தேங்க்ஸ்" என்றேன். "ஒன் தேங்ஸ
கொண்டும்போயி ஒடப்புல போடு போ" என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார்
அவர். அந்த நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.