பால்கணக்கு எழுதுவது என்னுடைய காலைவேலைகளில் ஒன்று. அது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். ஆனால் அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. “படிக்கற புள்ளய இதுல இழுத்து உட்டு கெடுக்காதன்னு சொன்னா காதுல ஏறுதா? நாலு எழுத்து படிச்சாதான நல்ல வழிக்கு போவமுடியும்?” என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். உடனே சத்தமாக அப்பா ”வாய மூடிகிட்டு சாணிய அள்ளுடி போ. ஊரு உலகத்த சுத்தி பாத்தவளாட்டம் புத்தி சொல்லிகினே இருக்காத. எது நல்ல வழி, கெட்டவழின்னு எல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல்லி அடக்கிவிடுவார். அந்த உரையாடல்கள் எதுவுமே என் காதில் விழவில்லை என்பதுபோல வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றிவிட்டு கணக்கு எழுதுவதில் மூழ்கியிருப்பேன் நான்.