Home

Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

Sunday, 22 May 2022

எட்டுத் திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்

 

“அங்க பாருங்க சார் வானவில். என்ன அழகு. என்ன வர்ணம். நம்பவே முடியாதபடி நமக்கு வேண்டப்பட்ட ஒருத்தவங்க திடீர்னு வாசல்ல வந்து நின்னு சிரிக்கற மாதிரி இருக்குது பாருங்க. மழைச்சாரல்தான் உலகத்துலயே சந்தோஷம்னா, அந்தச் சாரல் நேரத்துல இப்படி வானவில் பாக்கறதுதான் ரொம்பரொம்ப சந்தோஷம், என்ன சொல்றீங்க நீங்க?”

“உண்மைதான், வானவில்ல எப்பப் பாத்தாலும் ஒடனே வயசு கொறஞ்சி சின்னப் புள்ளயா மாறிடுது மனசு, ரொம்ப உற்சாகமா இருக்குது.”

Sunday, 3 April 2022

கல்தொட்டி - சிறுகதை

 

பால்கணக்கு எழுதுவது என்னுடைய காலைவேலைகளில் ஒன்று. அது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். ஆனால் அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. “படிக்கற புள்ளய இதுல இழுத்து உட்டு கெடுக்காதன்னு சொன்னா காதுல ஏறுதா? நாலு எழுத்து படிச்சாதான நல்ல வழிக்கு போவமுடியும்?” என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். உடனே சத்தமாக அப்பா ”வாய மூடிகிட்டு சாணிய அள்ளுடி போ. ஊரு உலகத்த சுத்தி பாத்தவளாட்டம் புத்தி சொல்லிகினே இருக்காத. எது நல்ல வழி, கெட்டவழின்னு எல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல்லி அடக்கிவிடுவார். அந்த உரையாடல்கள் எதுவுமே என் காதில் விழவில்லை என்பதுபோல வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றிவிட்டு  கணக்கு எழுதுவதில் மூழ்கியிருப்பேன் நான்.

Monday, 30 March 2015

பள்ளிக்கூடம்


முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் வாழ்ந்திருந்த ஊரோடு மறுபடியும் ஓர் உறவு துளிர்க்கும் என்று நினைத்ததே இல்லை. அப்பாவோ அம்மாவோ இருந்திருந்தால் என்னைவிட மிகவும் அதிகமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். என் மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளையுடைய குலதெய்வம் அந்த ஊரில் இருந்தது. அவருடைய தாய்வழி உறவினர்களும்கூட அந்த ஊரில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு என்னால்தான் யாரையும் நினைவுக்குக் கொண்டுவரமுடியவில்லை. நான் சொன்ன விவரங்கள்மூலமாக அவர்களாலும் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஊரோடு புதிதாக ஓர் உறவு என நினைப்பதே எனக்கு ஆனந்தமாக இருந்தது.
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பிறகுதான் மற்ற கடமைகளைக் கவனிக்கமுடியும் என்று சம்பந்தி கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். மூன்று கார்களில் கிளம்பி இரவே வந்து தங்கிவிட்டோம். காலையில் வழிபாடு முடிந்து மதிய விருந்து உறவினர் வீட்டிலேயே தடபுடலாக நடந்துமுடிந்தது. ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு நான் மட்டும் கிளம்பினேன். மனைவியையும் அழைத்துச் சென்று காட்டவேண்டும் என ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு அடிக்கடி மூட்டுகள் வீங்கும் பிரச்சினை இருந்ததால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
மாறியிருந்த ஊரின் அமைப்பு ஒருகணம் குழப்பி திகைக்கவைத்தது. பல இடங்களில் புரியாமல் நின்றுவிட்டேன். தோப்புபோல இருந்த மரங்கள் எதுவும் இல்லை. மாட்டுவண்டிப் பாதைகள் சிமெண்ட் சாலைகளாக மாறியிருந்தன. ஏராளமான கடைகள். வாகனங்கள். நடமாட்டம். உணவு விடுதிகள். மூன்று ஏ.டி.எம்.கள். நான்கு வங்கிகள். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கவாட்டில் இருந்த பிள்ளையார் கோயிலை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முதலில் கோயிலைத் தேடி, அதற்குப் பிறகு தெருவைக் கண்டுபிடித்தேன். முன்பக்கமும் பின்பக்கமும் தென்னந்தோப்பும் மாந்தோப்புமாக இருந்த எங்கள் வீட்டுப்பகுதியில் நிழலுக்குக்கூட ஒரு மரம் இல்லை. எங்கெங்கும் வீடுகள் அடைத்துக்கொண்டிருந்தன.

Thursday, 8 January 2015

பாக்குத்தோட்டம் தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை




நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் முதலாவது மாடி வாசலில் ஒரு ஆள் தனியாக நடக்கும்போது தாராளமாகவும் இரண்டு ஆட்கள் இணைந்து நடக்கும்போது நெருக்கிக்கொண்டும் நடக்கிற அளவுக்குத்தான் இடம் இருக்கிறது. இடம் சின்னதாக இருக்கிறதே என்பதற்காக, செடி வளர்க்கிற ஆசையையும் கனவையும் ஒதுக்கித் தள்ளிவிடவா முடியும்?  எங்கெங்கோ தேடி, இறுதியாக மொட்டை மாடியில் துவைத்த துணிகளை உலர்த்துகிற கொடிக்குக் கீழே சுவரோரமாக  தொட்டி வைக்க ஒரு சின்ன இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாள் என் மனைவி.  ரோஜாவுக்கு இரண்டு தொட்டிகள், கற்பூரவல்லிக்கு ஒரு தொட்டி, சோற்றுக்கற்றாழைக்கு ஒரு தொட்டி, துளசிக்கு ஒரு தொட்டி என மொத்தமாக ஐந்து மண்தொட்டிகள். தண்ணீர் ஊற்றப் போன ஒரு நாள் மாலை நான் அவற்றுக்கு பஞ்சபாண்டவர் தொட்டி என்று பெயர் சூட்டினேன்.  அதைக் கேட்டு “ரொம்ப நல்லா இருக்குதே” என்று அவள் சிரித்துக்கொண்டே  சுவரையொட்டி சாய்ந்தபடி காதுத் தொங்கட்டான்கள் அசைய நின்ற கோலம் என் மனத்தில் அப்படியே ஒரு புகைப்படம்போல பதிந்துவிட்டது. தொட்டியை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம்  அந்தக் காட்சியும் ஒரு கணம் நெஞ்சில் மின்னி மறைகிறது.

Wednesday, 7 January 2015

பாக்குத்தோட்டம்



03.01.2015 அன்று மாலை சென்னை புக்பாயிண்ட் அரங்கில் உயிர்மை பதிப்பகம் பத்து நூல்களை வெளியிடும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்தப் பட்டியலில் என்னுடைய புதிய சிறுகதைத்தொகுதியான ’பாக்குத்தோட்டம்’ தொகுதியும் ஒன்று. வெளியிட்டவர் நீதியரசர் சந்துரு. பெற்றுக்கொண்டவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். தொகுதியை அறிமுகப்படுத்தி அ.ராமசாமி உரையாற்றினார். பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் வசித்துவந்தபோது நாடகத்தன்மை உள்ள சிறுகதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை நாடகமாக அரங்கேற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பாக்குத்தோட்டம் தொகுதியில் நாடகமாக மாற்றக்கூடிய சில கதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தலைப்புக்கதையான பாக்குத்தோட்டம் பற்றி பார்வையாளர்களுடன் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். வாழ்த்துரை வழங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பில் உள்ள கல்தொட்டி, சைக்கிள் ஆகிய சிறுகதைகளை முன்வைத்து, அவை தனக்கு வழங்கிய வாசிப்பனுபவங்கள்பற்றி நெகிழ்ச்சியுடன் மிகவிரிவாகப் பேசினார்.