Home

Showing posts with label இந்தியா டுட. Show all posts
Showing posts with label இந்தியா டுட. Show all posts

Tuesday, 27 October 2020

உப்பு - சிறுகதை

 முத்துக்கண்ணு விழுப்புரம் போகத் தொடங்கிவிட்டான். தரகுக்காரன் வீட்டுக்கும், வியாபாரி ரங்கசாமி வீட்டுக்கும் நடையாய் நடந்து மண்டியில் சேர்த்து விட்டாள் அம்மா.

முத்துக்கண்ணு கிளம்பும்போது குட்டிப்பாப்பா தூங்கிக் கொண்டிருந்தாள். எழுந்தபிறகு ஆடுவதற்குத் துணை இல்லாமல் அழுது ரகளை செய்தாள். ‘‘பெரியண்ணா எங்கம்மா, பெரியண்ணா எங்கம்மா’’ என்று அம்மாவைத் துளைத்தெடுத்தாள்.

குட்டிப்பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்ட முத்துக்கண்ணுவால்தான் முடியும். குட்டிப்பாப்பாவைச் சந்தோஷப்படுத்த புதுசுபுதுசாக விளையாட்டுகளைக் கண்டுபிடிப்பான் முத்துக்கண்ணு. சிரிக்கும்போது குட்டிப்பாப்பாவின் முகம் பூரித்துவிடும். பூ மாதிரியான அவள் கையை எடுத்து வைத்துக்கொண்டு ‘‘நண்டூறுது நரியூறுது’’ என்று விரல்களால் மெல்லமெல்லக் கையைத் தொடுவான். உடம்பெங்கும் கூச்சம் உண்டாகி அவள் சிரிக்கிற சிரிப்பில் வீடு குலுங்கும். கையைப் பிடுங்கிக்கொண்டு தப்பித்து ஓடுவாள் பாப்பா. பிடிப்பதற்காக பாசாங்கோடு துரத்துவான் முத்துக்கண்ணு. அகப்படாமல் சாமர்த்தியமாக வளைந்து வளைந்து சிரித்துக்கொண்டே ஓடுவாள் பாப்பா.