Home

Showing posts with label வாழ்க்கை: ஒரு விசாரணை. Show all posts
Showing posts with label வாழ்க்கை: ஒரு விசாரணை. Show all posts

Friday, 30 January 2015

’வாழ்க்கை: ஒரு விசாரணை’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எழுபதுகளின் இறுதியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து செகாவுடைய சிறுகதைத்தொகுப்பொன்றைப் படிப்பதற்காக எடுத்துவந்தேன். அத்தொகுப்பில் பச்சோந்தி என்னும் சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அக்கதையில் ஒரு பொது இடத்தில் ஒருவனை ஒரு நாய் கடித்துவிடுகிறது. தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு காவலர் அந்தச் சம்பவத்தை விசாரிக்கிறார். வெறிபிடித்த நாயை தெருவில் நடமாடவைத்ததற்காக அதன் உரிமையாளனை விசாரிக்கவேண்டுமென்றும் தண்டிக்கவேண்டுமென்றும் குரலையுயர்த்திச் சொல்கிறார். மாற்றிமாற்றி பலரும் அந்த இடத்தில் உரையாடியபடியே இருக்கிறார்கள். இடையில், அந்த நாய் அந்தத் தெருவில் வசிக்கக்கூடிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியின் வளர்ப்புநாய் என்கிற தகவலை ஒருவன் காவலரிடம் ரகசியமாகச் சொல்கிறான். உடனே காவலரின் தொனி மாறிவிடுகிறது. விறைப்பேறிய குரலில் கடிபட்டவன் ஏதேனும் சேட்டை செய்து நாயை வம்புக்கிழுத்திருக்கக்கூடும் என்றும் அதனால் நாய் கடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன வம்பு செய்தாய் என கடிபட்டவனிடமே விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒரே கணத்தில் மனம் மாறிவிடுகிற காவலரின் நடத்தை திகைக்கவைத்துவிட்டது. வழக்கம்போல தேநீர்க்கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி என் நண்பன் பழனியோடு இக்கதையைப் பகிர்ந்துகொண்டேன். அதே கடைத்தெருவின் வழியாக, பல தருணங்களில் விசாரணைக்காக கைவிலங்கிடப்பட்ட மனிதர்களை காவலர்கள் அழைத்துச் சென்ற  சம்பவங்களையும் கதையுடன் இணைத்துப் பேசிக்கொண்டோம். அவ்வழக்குகளில் எத்தனை உண்மையானவையாக இருக்குமோ, எத்தனை புனையப்பட்டவையாக இருக்குமோ என்று சொல்லி கசப்போடு சிரித்துக்கொண்டோம்.

வாழ்க்கை: ஒரு விசாரணை

’வாழ்க்கை: ஒரு விசாரணை’ என்னுடைய முதல் நாவல். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1987 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ புத்தகம் வெளிவந்து எனக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த ஆண்டில்தான் எங்களுக்கு மகன் பிறந்தான். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை வாங்கிப் படித்ததோடு மட்டுமின்றி, அதை வெளியிடுவதற்கான முயற்சியையும் முன்னெடுத்தவர் எழுத்தாளரும் என் நண்பருமான எஸ்.சங்கரநாராயணன். அவர் எப்போதும் என் நன்றிக்குரியவர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலின் மறுபதிப்பைச் சாத்தியமாக்கியவர் என்.சி.பி.எச். பொறுப்பில் உள்ள நண்பர் சரவணன். எல்லோரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.160