Home

Showing posts with label chitaralgal. Show all posts
Showing posts with label chitaralgal. Show all posts

Friday, 30 January 2015

’சிதறல்கள்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் நான் புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஆப்பரேட்டராக வேலை செய்துகொண்டிருந்தேன். தொலைபேசி நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்கள் வீடு. பெரும்பாலும் நான் மாலைநேரப்பணி அல்லது இரவுநேரப்பணியையே தேர்ந்தெடுத்துச் செய்துவந்தேன். அதிகாலையில் ஆறரைமணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே உள்ள தேநீர்க்கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, வீட்டுக்கு நடந்து செல்வதுதான் என் வழக்கம். அதிகாலைக்காற்று வீசியபடி இருக்க, ஊரையே மூடியிருக்கும் இருளின் போர்வையை விலக்கும் சூரியனின் கைவிரல்கள் பட்டதுமே மண்மீதிருந்த ஒவ்வொன்றின்மீதும் ஒளி சுடர்விடத் தொடங்கும். நடமாட்டம் குறைந்த தெருக்களின் வாசல்தோறும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் விதவிதமான வண்ணக்கோலங்களைப் பார்த்தபடியே நடப்பேன். அழகான கோலங்கள். அழகான செடிகள். அழகான மரங்கள். அழகான சாலைகள். காலைநேரம் அந்த அழகைப் பலமடங்காகப் பெருக்கி கண்களுக்கு விருந்தாக்கிவிடும்.
அந்த விருந்து அதிகநேரம் நிலைத்திருக்காது. ஒதியஞ்சாலையைக் கடந்து, கம்பன் கலையரங்கத்தை நெருங்கும்போது  மக்கள் நடமாட்டம் பெருகத் தொடங்கிவிடும். ஒரு காரணம் அருகில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம். இன்னொரு காரணம் ஆலைகளில் அது ஷிப்ட் மாறும் நேரம். எங்கெங்கும் மிதிவண்டிகள் காணப்படும். ஆலையின் சுற்றுச்சுவர்களை ஒட்டியிருந்த சின்னச்சின்ன பெட்டிக்கடைகளில் விதவிதமான வியாபாரம் நடக்கும். திருவிழாவுக்கு வந்த ஒரு பெரிய கூட்டத்தைப்போல எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதர்கள் தெரிவார்கள். பாட்டுச்சத்தம். பேச்சுச்சத்தம். சிரிப்புச்சத்தம். வசைகளின் சத்தம். வாகனங்களின் சத்தம்.  நெல்லித்தோப்பு திரும்பும்வரைக்கும் அந்தக் கோலத்தில் மாற்றமே இருக்காது. ஒவ்வொரு நாளும் அந்தச் சாலையைக் கடப்பது திருவிழாவுக்குள் புகுந்து வெளியே வருவதுபோல இருக்கும். நெல்லித்தோப்பைக் கடந்ததுமே, சாலைகளின் மெளன அழகு மறுபடியும் பார்வையில் விழத் தொடங்கும்.

சிதறல்கள்

சிதறல்கள் நாவல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நெசவாலைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் கதையமைப்பைக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை கையைவிட்டுப் போகும்போது, அவ்வேலையுடன் வெகுகாலம் வாழ்ந்து பழகிவிட்ட எல்லா வகையான தொழிலாளர்களின் வேதனையையும் அடிச்சரடாக இந்த நாவல் கொண்டிருந்தது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மறுபதிப்பு சாத்தியமானது. நாவலை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்துக்கு நன்றி.


புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.140