Home

Sunday 14 April 2024

பாகவதரின் பாடல்கள்

  

ஒருநாள் காலையில் என் அப்பாவை திடீரென நினைத்துக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லாமல் அவரைப்பற்றிய நினைவுகள் ஒன்றை அடுத்து ஒன்றென நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. அவருக்கு திரைப்பாடல்கள் மீது விருப்பம் அதிகம். குறிப்பாக தியாகராஜ பாகவதர் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஓய்வாக இருக்கும்போதும் தன் போக்கில் தனியாக தையல் எந்திரத்தில் மனமூன்றி தைத்துக்கொண்டிருக்கும்போதும் பாகவதர் பாடலை முணுமுணுத்தபடியே வேலை செய்வார்.

ஒருமுறை நான் கடைக்குச் சென்றிருந்தபோது, அவரும் பக்கத்துக் கடைக்காரர்களான தெய்வநாயகமும் தர்மலிங்கமும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அன்று அப்பா எந்த வேலையையும் செய்யவில்லை. வழக்கம்போல என்னிடம் உடனடியாகக் கொடுத்தனுப்ப அவரிடம் பணமில்லை என்பதை அச்சூழலே எனக்கு உணர்த்திவிட்டது. என்னிடம் ”சித்த நேரம் உள்ள போய் உக்காரு” என்றார். நான் அமைதியாக அவர்களைக் கடந்து உள்ளே சென்று ஸ்டூலில் அமர்ந்தேன்.

அப்போது மகுடி ஊதிக்கொண்டு ஒரு பாம்பாட்டி கடை வாசலில் வந்து நின்றார். தோளில் ஒரு பக்கம் ஓர் அழுக்குத்துணிமூட்டை தொங்கியது. இன்னொரு பக்கம் பாம்புக்கூடைகளைக் கொண்ட ஓர் அடுக்கு தொங்கியது. ஒரு துண்டுபோல அவர் கழுத்தைச் சுற்றி ஒரு பாம்பு தொங்கியது. அவர் ஒரே நொடியில் அப்பாம்பை எடுத்து தரையில் விட்டுவிட்டு மகுடி எடுத்து ஊதத் தொடங்கினார். அவர் நகர்ந்துபோகும் திசையில் பாம்பும் தன் தலையைத் தூக்கி அசைந்தது.

பாம்பாட்டி தன் மகுடியை நிறுத்தும்வரைக்கும் பொறுமையாக இருந்த தெய்வநாயகம் “முதல்ல அத எடுத்து உள்ள வை பெரியவரே. அழகா ஒரு பாட்டு பாடு. அது போதும்” என்று சொன்னார். கடையின் படிக்கட்டிலேயே தோள்சுமையை இறக்கிவைத்த அந்தப் பாம்பாட்டி கீச்சுக்குரலில் “ஆடு பாம்பே விளையாடு பாம்பே” என்று பாட்டைத் தொடங்கினார். நாலு வரிகள்தான் அவருக்குத் தெரிந்திருந்தன. அவற்றையே அவர் வெவ்வேறு தாளங்களில் இழுத்து இழுத்துப் பாடினார்.

தெய்வநாயகம் தன் சட்டைப்பையிலிருந்து ஏதோ சில்லறை நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அந்தப் பாம்பாட்டி சென்றுவிட்டார்.

”குரல் நல்லா இருக்குது. ஆனா பாம்பு தலையை அசைக்கறதுக்குத் தோதா இழுத்து இழுத்து பாடி பழகிட்டதால, வரியும் இழுத்துகிட்டு போவுது.” என்றார் தர்மலிங்கம்.

“டி.எம்.எஸ்.குரல்ல கொஞ்சம், பாகவதர் குரல்ல கொஞ்சம் ரெண்டயும் மனசு போன போக்குல கலந்து கட்டி பாடறாரு” என்றார் அப்பா.

“இதுல பாகவதர் எங்க வந்தாரு? கீச்சுக்குரல்ல பாடனத வச்சி சொல்றியா?” என்று கேட்டார் தெய்வநாயகம். “இல்லை. இல்லை. பாம்பாட்டி பாடின மெட்டுல பாகவதரும் ஒரு பாட்டு பாடியிருக்காரு. ஆனா பாம்பு பாட்டு இல்லை. பாப்பா பாட்டு” என்றார் அப்பா.

“பாப்பா பாட்டா? பாரதியாரு பாட்டுலதான் பாப்பா பாட்டு ஒன்னு வருது. பாகவதரு பாட்டுல எங்க வருது?” என்று இழுத்தார் தெய்வநாயகம். பிறகு அப்பாவிடம் “எங்க, அந்தப் பாட்டுல ரெண்டு வரி சொல்லு பார்ப்போம்” என்றார். அப்பா உடனே “சொல்லு பாப்பா சொல்லு பாப்பா சுகம்பெற வழி ஒன்னு சொல்லு பாப்பா” என்று அடங்கிய குரலில் பாடிக் காட்டினார். அதைக் கேட்டு தர்மலிங்கமும் தெய்வநாயகமும் “ஆகா. இது அருமையா இருக்குதே. இப்படி ஒரு பாட்ட நாங்க கேட்டதே இல்லையே.  பாகவதர் பாடிய பாட்டா இது? முழுசா பாடு பலராமா” என்றனர். அப்பாவும் உற்சாகத்தோடு அந்தப் பாட்டைப் பாடி முடித்தார்.

அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததும் அந்தப் பாட்டை உடனே ஒருமுறை கேட்கவேண்டும் போல இருந்தது. யுடியூபில் இருக்கிறதா என தேடிப் பார்த்தேன். கிடைத்துவிட்டது. உடனே அந்தப் பாடலைப் பாடவிட்டு கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. என் பால்ய காலத்துக்கே ஒருமுறை சென்று  திரும்பியதைப்போல இருந்தது. அடுத்தடுத்து இரண்டு முறை  கேட்டேன். அன்று முழுதும் அந்தப் பாடல் என் மனத்தில் மிதந்தபடியே இருந்தது. என் உதடுகள் என்னை அறியாமல் அதை முணுமுணுத்தபடியே இருந்தன.

அன்று மாலை நண்பர் விட்டல்ராவைச் சந்திக்கச் சென்றபோது அந்த நிகழ்ச்சியையும் அந்தப் பாடலையும் சொன்னேன். அதைக் கேட்டு அவர் முகம் மலர்ந்துவிட்டது. நான் ஒரு வரியைத்தான் சொன்னேன். அவர் உடனடியாக முழு பாட்டையும் உற்சாகமாகப் பாடத் தொடங்கிவிட்டார். ஒரு சொல்லுக்காகக்கூட அவர் தடுமாறவில்லை. அவ்வளவு வரிகளையும் என்னமோ நேற்று கேட்ட பாடல்போல அவர் நினைவிலிருந்து பாடினார். மகிழ்ச்சியாக இருந்தது.

“நான் இன்னைக்கு வந்தா பாடிக் காட்டணும்னு ஏற்கனவே முடிவு செஞ்சி வச்ச மாதிரி  பாடறீங்களே சார், ஏற்கனவே இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

விட்டல்ராவ் புன்னகைத்தார். “எனக்கு மட்டும் இல்ல பாவண்ணன். எனக்கு, எங்க அண்ணனுக்கு. எங்க அக்காக்களுக்கு. என் தங்கச்சிக்கு. எல்லாருக்குமே இந்தப் பாட்டு மனப்பாடம். ஏன் தெரியுமா? இது எங்க அப்பாவுக்கு ரொம்ப்ப புடிச்ச பாட்டு. சத்திய சீலன்ங்கற படத்துல பாகவதர் பாடற பாட்டு இது. அந்தக் காலத்துல அந்தப் பாட்டு ரொம்ப பிரபலம். நாங்க இந்தப் பாட்ட பாடினா, எங்க அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும். வெளியே கடைப்பக்கம் போயிட்டு திரும்பும்போது காராபூந்தி, பக்கோடா, முறுக்குன்னு எதையாவது ஆசையா வாங்கியாந்து கொடுப்பாரு” என்றார்.

“எங்க அப்பாவும் அப்படித்தான் சார். பாகவதர் பாட்டுன்னா அவருக்கு உயிரு”

“எங்க அப்பாவும் பாகவதரு பாட்டுன்னா அப்படியே உருகிடுவாரு பாவண்ணன். ராத்திரி நேரத்துல அவரு தூங்கும்போது நானும் எங்க அண்ணனும் அவருக்கு கால புடிச்சி விடுவோம். எங்களுக்கு அந்தக் காலத்துல அது ஒரு தினசரிக்கடமை. அவன் ஒரு பக்கம் உக்காந்து கால அமுக்கிவிடுவான். நான் இன்னொரு பக்கம் உக்கார்ந்து கால அமுக்கிவிடுவேன். நான் ஒரு பாட்டு, அண்ணன் ஒரு பாட்டுன்னு பாகவதர் பாட்ட பாடிகிட்டே கால புடிப்போம். அப்பா கண்ண மூடி அதைக் கேட்டுகிட்டே தூங்கறதுக்கு முயற்சி செய்வாரு. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அவர் உடம்புல அசைவு இருக்காது. சரி, தூங்கிட்டாரு போலன்னு நெனச்சி அண்ணன் மெதுவா பாடறத நிறுத்திட்டு கையை எடுப்பான். உடனே கண்ண மூடிகிட்டே அப்பா ஏன்டா நிறுத்திட்டீங்க. பாடுங்கடான்னு சொல்லுவாரு. அவரை நம்பவே முடியாது. மறுபடியும் ஒரு பாட்டத் தொடங்குவோம். அதுக்கப்புறம் அமைதியா இருப்பாரு. அப்புறம் ஏதோ ஒரு கட்டத்துல தூங்கிடுவாரு”

“அந்த சமயத்துல உங்களுக்கு என்ன வயசு இருக்கும் சார்?”

“நான் அப்ப எட்டாவது படிச்சிட்டிருந்தேன். அண்ணன், அக்கா, தங்கச்சிங்க எல்லாருமே படிச்சிட்டிருந்தாங்க. எல்லாருக்கும் ஸ்கூல் பீஸ் கட்டணும். பணத்துக்காக அங்க இங்க அலைஞ்சிகிட்டே இருப்பாரு அப்பா.  அங்க வாங்கி இங்க அடைப்பாரு இங்க வாங்கி அங்க அடைப்பாரு. ஒரு மாதிரி ரொட்டேஷன்லயே வண்டி ஓடிட்டிருந்த காலம் அது. அந்த அலைச்சலால அவருக்கு கால் வலி வந்துடும். பாட்டுதான் எல்லாத்துக்கும் மருந்து”

அதற்குப் பிறகு எங்கள் உரையாடல் எப்படியோ பாகவதரின் பக்கம் திரும்பிவிட்டது.

“பவளக்கொடிதான் பாகவதருக்கு முதல் படம். அவருக்கு அதுல அர்ஜுனன் நானடி மானேன்னு ஒரு பாட்டு. அந்தப் பாட்டக் கேட்டு கிறங்காத ஆளே அந்தக் காலத்துல தமிழ்நாட்டுல இல்லை. ஒரே படத்துல அவர் புகழ் உச்சிக்கு போயிட்டாரு. அவரு மொத்தமா நடிச்சதே பன்னெண்டு பதிமூனு படம்தான். அவரு நடிச்ச அம்பிகாபதி, சிந்தாமணி, திருநீலகண்டர், ஹரிதாஸ், அசோக்குமார் எல்லாமே மாசக்கணக்குல வருஷக்கணக்குல ஓடிய படங்கள். எந்தப் பக்கம் திரும்பனாலும் அந்தக் காலத்துல அவரு பாட்டுதான் கேக்கும். ஆனா எனக்கு அவருடைய பாட்டு மேல அந்த அளவுக்கு ஈர்ப்பு கிடையாது. எங்க தலைமுறையில வேற சி.எஸ்.ஜெயராமன் மாதிரி ஒரு செட் புதுப் பாடகர்கள் வந்துட்டாங்க”

பாகவதருடைய படங்கள் பற்றியும் பாடல்கள் பற்றியும் உற்சாகத்தோடு சொல்லிக்கொண்டே சென்றார் விட்டல்ராவ். இடையிடையில் அவருடைய புகழ்பெற்ற பல பாடல்களின் ஒன்றிரண்டு வரிகளையும் பாடிக் காட்டினார். அவருடைய ஏழெட்டு படங்களை நான் பார்த்திருப்பதாகச் சொன்னபோது, அதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “எங்க பார்த்தீங்க? தியேட்டர்ல பார்த்தீங்களா?” என்று ஆவலோடு கேட்டார்.

“பாண்டிச்சேரியில அந்தக் காலத்துல டிக்டாக்னு ஒரு சி.டி. கடை இருந்தது. பழைய படம், புதுப்படம் எல்லாத்துக்கும் அங்க சிடி கிடைக்கும். நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் அங்க போயி ஒரு பத்து பதினஞ்சி பழைய படம் சி.டி. வாங்கிட்டு வருவேன். பாகவதர் படம், சின்னப்பா படம்லாம் அப்படித்தான் பார்த்தேன்”

“இன்னும் இருக்குதா அந்தக் கடை?”

“இருக்குது சார். ஆனா இப்ப சி.டி. வியாபாரம் கிடையாது. பென் ட்ரைவ் எடுத்துட்டு போனா அதுல புதுப்படங்கள டெளன்லோட் செஞ்சி பதிஞ்சி குடுத்துடுவாங்க. ஆனா இப்ப நாலஞ்சி வருஷமா நான் அந்தக் கடைப்பக்கம் போகிறதில்லை. எல்லாமே புதுப்படங்கள வச்சிருக்காங்க. பழைய படங்களைக் கேட்டா இல்லை இல்லைன்னு சொல்லிடறாங்க.  எனக்கு புதுப்படங்கள் மேல பெரிய ஆர்வமெதுவும் இல்லை. அதனால போகிறதயே விட்டுட்டேன்”

“போதும்போதும்ங்கற அளவுக்கு இப்ப எல்லாமே யுடியூப்ல கிடைக்கும்போது, சி.டி.ய தேடிப் போகிற அவசியமே இல்லாம போயிட்டுது பாவண்ணன். தேவைப்படும்போது நானும் இப்ப சில படங்களை யூடியுப்லதான் பார்க்கறேன்”

“நீங்க பாகவதரை நேருல பார்த்திருக்கீங்களா சார்?” என்று உரையாடலை மீண்டும் பாகவதர் தொடர்பானதாக மடைமாற்றினேன்.

அந்தக் கேள்வி அவரை மீண்டும் உற்சாகமானவராக்கிவிட்டது. ஒரு சிறு கனைப்போடு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“பார்த்திருக்கேன் பாவண்ணன். பார்த்திருக்கேன். ரொம்ப பக்கத்துல பார்க்கிற தூரத்துல நின்னு திருப்தியா பார்த்திருக்கேன். அது மட்டுமில்லை, அவருடைய ஒரு முழு கச்சேரியையே முன்வரிசையில உக்காந்து கேட்டிருக்கேன்”

அந்தப் பதிலைக் கேட்டு நானும் உற்சாகம் கொண்டேன். “எப்ப சார் பார்த்தீங்க?  எங்க பார்த்தீங்க?” என்று கேள்விகளை அடுக்கினேன்.

“நாங்க கிருஷ்ணகிரியில இருந்த சமயத்துல, ஒரு கச்சேரிக்காக பாகவதர் வந்திருந்தாரு”

நான் வாய்பிளந்தபடி அவரையே பார்த்திருந்தேன்.

“கிருஷ்ணகிரியிலேர்ந்து சென்னைக்குப் போற வழியில காட்னாம்பட்டின்னு ஒரு ஊரு இருக்குது. நாங்க வாடகைக்கு குடியிருந்த இடத்துலேர்ந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர் தொலைவுதான் இருக்கும். அங்க ஒரு மலை உண்டு. அந்த மலையை ஒட்டி ஒரு முருகன் கோவில் உண்டு. சுத்துவட்டாரத்துல ரொம்ப புகழ் பெற்ற கோவில். பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் அந்தக் கோவிலுக்கு புரவலரா இருந்திருக்காங்க. எங்க அப்பாவுக்கு அடிக்கடி அந்தக் கோவிலுக்கு போகிற பழக்கம் இருந்திச்சி. அப்பப்ப எங்களயும் கதை சொல்லிகிட்டே அந்தக் கோவிலுக்கு அழச்சிகிட்டு போவாரு.”

நான் அந்தக் கோவிலைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. அதனால் “பெரிய கோவிலா சார்?” என்று கேட்டேன்.

“மைலம், திருப்பரங்குன்றம் மாதிரி பெரிய கோவில் கிடையாது. அதே சமயத்துல ரொம்ப சின்ன கோவிலும் கிடையாது. பார்க்கிறதுக்கு நல்ல உயரமான தோற்றமுண்டு அந்தப் பக்கம் போகிறவங்க யாரா இருந்தாலும் ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டுத்தான் போவணும். அந்த அளவுக்கு கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும்”

“சரி”

‘அந்தக் கோவில்ல வருஷாவருஷம் ரொம்ப தடபுடலா தைப்பூசம் கொண்டாடுவாங்க. மொத்தம் பதினஞ்சி நாள் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழா மாதிரி இருக்கும். ஊருக்காரங்க, வியாபாரிங்க எல்லாரும் பணம் போட்டு சேர்ந்து நடத்துவாங்க. ரொம்ப பிரமாதமா இருக்கும். அந்தச் சமயத்துல தெனமும் மதியானத்துல ஒரு வேளை அந்தக் கோவில்ல அன்னதானம்  நடக்கும். கோவிலுக்கு வரக்கூடிய எல்லாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லாம குடுப்பாங்க.”

“விருந்து சாப்பாடா?”

“அப்படிச் சொல்லமுடியாது. ரொம்ப எளிமையான சாப்பாடுதான். பெரிய பாத்திரத்துல சோறு வடிச்சி சாம்பார ஊத்தி நல்லா கிளறி வச்சிருப்பாங்க. துணைக்கு ஒரே ஒரு காய்ப்பொரியல். தைப்பூசம் நடக்கிற பதினஞ்சி நாள் வரைக்கும் தெனமும் கொடுப்பாங்க.”

“அன்னதானத்துக்குன்னு அங்க தனியா ஏதாவது மண்டபம் இருக்குதா? அல்லது பந்தல் மாதிரி ஏதாவது ஏற்பாடு இருந்ததா?”

“அப்படியெல்லாம் எந்த ஏற்பாடும் கிடையாது. கோவிலுக்குள்ள ஒரு தூணோரமா சாப்பாட்டு அண்டாவை வச்சிருப்பாங்க. இலைபோட்டு சாப்பாடு போடறதெல்லாம் கிடையாது. கரண்டியால எடுத்து கொடுப்பாங்க. தட்டு மாதிரி பாத்திரங்களை எடுத்தும் போயியும் வாங்கமுடியாது. போய் நின்னு கையிலதான் வாங்கிட்டு போவாங்க. மேல்துண்டு வச்சிருக்கிறவங்க, அந்தத் துண்டுலயே வேணும்ங்கற அளவுக்கு வாங்கிக்கலாம். பெண்கள் கூட்டம் அப்படியே முந்தானையில வாங்கி வச்சிகிட்டு சாப்புடுவாங்க. எப்படியா இருந்தாலும் அந்த இடத்துலயே மிச்சம் வைக்காம சாப்புடணும். வீட்டுக்கு எடுத்துட்டு போவக் கூடாது. அதான் ஒரே நிபந்தனை.”

”ஏன் சார் அப்படி?”

“அது அப்படித்தான் பாவண்ணன். அன்னதானம்னு சொன்னாலும் அது கோவில் பிரசாதம் மாதிரி. அங்கயே வாங்கி அங்கயே சாப்ட்டு முடிக்கணும். காலம்காலமா அப்படி ஒரு பழக்கம் அந்த ஊருல இருக்குது”

“நீங்க அங்க போனதுண்டா?”

“நான் மட்டுமில்லை. எங்க அப்பா, எங்க அண்ணன், அக்கா, தங்கச்சி எல்லாருமே அங்க போய் அன்னதானத்துல கலந்துக்குவோம். பணத்துக்கு கொஞ்சம் தட்டுப்பாடான நேரம் அது. அந்த அன்னதானம் எங்களுடைய ஒரு வேளைப் பசியைப் போக்கிக்க ஒரு வழியா இருந்தது. திருவிழா நடக்கற பதினஞ்சி நாளும் நாங்க அன்னதானத்தை தவறவிட்டதே இல்லை”

“அன்னதானம் ஒருவேளை மட்டும்தானா?”

“ஆமாமாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை. அவ்ளோதான். சாப்பாடு முடிஞ்சதும் திருவிழாவை சுத்திச்சுத்தி வந்து வேடிக்கை பார்த்துட்டு நின்னிட்டிருப்போம்.”

தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த விட்டல்ராவ் ஒரு நொடி நிறுத்தி ”பாகவதரைப் பத்தி அப்புறம் சொல்றேன். அன்னதானத்த நெனச்சிகிட்டதும் வேற ஒருத்தரு ஞாபகத்துக்கு வந்துட்டாரு. இப்ப அவரைப் பத்தி சொல்றேன் கேளுங்க. அந்த ஊருல அவரு ஒரு முக்கியமான ஆளு” என்றார்.

“முக்கியமானவரா? யாரு சார் அவரு?” என்று நான் அவர் முகத்தை ஆவலோடு பார்த்தேன்.

“சொல்றேன். சொல்றேன். அவரு பேரு சட்டிச் சாமியாரு.”

“என்னது? சட்டிச் சாமியாரா?”

“ஆமாம் பாவண்ணன். அப்படித்தான் அந்த ஊருல அவரை எல்லாரும் கூப்பிடுவாங்க. எல்லா நேரமும் தலையில தொப்பி மாதிரி ஒரு சட்டியை கவுத்து வச்சிட்டிருப்பாரு. அதனால அவருக்கு அந்தப் பேரு வந்துட்டுது”

“சரி சரி. சொல்லுங்க”

”அந்தச் சட்டிச் சாமியாருக்கு வாய் பேச வராது. வெறும் கைஜாடை கண்ஜாடை மட்டும்தான். வேட்டி சட்டையெல்லாம் கிடையாது. அவரு உடம்புல வெறும் கோவணம் மட்டும்தான் இருக்கும். வெயிலா இருந்தாலும் மழையா இருந்தாலும் அதுதான் அவருடைய உடை.”

அந்தச் சாமியாரைப்பற்றிய விவரணை ஆர்வமூட்டுவதாகவும் ஆச்சரியம் நிறைந்ததாகவும் இருந்தது.

”அன்னதானத்துக்கு பிரசாதம் தயாரானதும் நிர்வாகத்துல இருக்கிற பெரியவங்க அந்தப் பானையை எடுத்துவந்து  கோவில் வாசல்ல வச்சிடுவாங்க. அங்க சட்டி சாமியாரு தயாரா இருப்பாரு. தயாரா வச்சிருக்கிற நீளமான ஒரு தாம்புக்கயிறை எடுத்துவந்து அவருகிட்ட கொடுப்பாங்க. அவரு அந்தக் கயித்துடைய ஒருமுனையை அந்தப் பானையுடைய கழுத்துல கட்டிடுவாரு. இன்னொரு முனையை அவரு தன்னுடைய இடுப்புல கட்டிக்குவாரு.  பிறகு கோவில் கோபுரத்தைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு மெதுவா பானையை இழுத்துட்டு நடப்பாரு. கரணம் தப்பினா மரணம் கதைதான். ஒரே ஒரு நொடி கவனக்குறைவா இருந்தாலும் போச்சி. பானை உருண்டு கீழ கவுந்து பிரசாதம் மண்ணுல கலந்துடும். உடைஞ்சி போகிறதுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனா எந்த அசம்பாவிதமும் நேராம அந்தச் சட்டிச் சாமியாரு அங்குலம் அங்குலமா ஒரு தேரை நகர்த்திட்டு போகிறமாதிரி அந்தப் பானையை சமநிலையோடு இழுத்துகிட்டு போவாரு. அவரு பின்னாலயே ஜனங்க அரோகரா அரோகரான்னு சத்தம் குடுத்துகிட்டே போவாங்க. நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டே பின்னால போவேன். அடிஅடியா நடந்து கோவிலை சுத்தி வந்து மறுபடியும் வாசல்ல வந்து நிப்பாரு சாமியாரு. அங்க நின்னவாக்கிலயே கொடிமரத்தைப் பார்த்தபடி நெடுஞ்சாண்கிடையா தரையில  விழுந்து வணங்குவாரு. அதுக்கப்புறம் எழுந்து பிரசாதத்துலேர்ந்து ஒரு கை எடுத்து வாய்ல போட்டுக்குவாரு. இடுப்ப சுத்தி கட்டியிருந்த கயித்தை அவுத்து அங்கயே போட்டுட்டு திரும்பிப் பார்க்காம போயிடுவாரு. ஒவ்வொரு வருஷமும் அப்படி ஒரு சடங்கு நடக்கும்.”

அந்தச் சாமியாரின் கதை மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உலகில் நம் எளிய தர்க்கங்களால் புரிந்துகொள்ள முடியாதபடி எப்படியெல்லாம் விசித்திரமான  மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். “எப்பவாவது அந்தப் பானை சரிஞ்சி பிரசாதம் தரையில விழுந்ததுண்டா?” என்று சந்தேகத்தோடு கேட்டேன்.

விட்டல்ராவ் உதடுகளைப் பிதுக்கி இல்லை என்பதுபோல தலையசைத்தார். “நான் பார்த்த வரையில ஒருமுறை கூட சட்டிச் சாமியாரு இழுத்துட்டு போன பானை தரையில சரிஞ்சதே இல்லை.  ஏதோ ஒரு தெய்வ சக்தி அந்த சாமியாருகிட்ட இருந்ததுன்னுதான் ஊரு மக்கள் நம்பினாங்க. அந்தச் சாமியாரு கோவிலவிட்டு எங்கயும் போறதில்லை. அவர் வாழ்க்கையே கோவில் வாசல்தான். ஏதோ ஒரு சித்தர் மாதிரிதான் அவருடைய வாழ்க்கை இருந்தது. அவருக்கு பேச வராதுங்கறதால அவருகிட்ட விசாரிச்சி தெரிஞ்சிக்கவும் முடியலை”

விட்டல்ராவ் சொன்ன தகவல்களை இணைத்து அந்தச் சாமியாரைப்பற்றிய ஒரு சித்திரத்தை என் மனத்துக்குள் கொஞ்சம்கொஞ்சமாகத் தீட்டத் தொடங்கினேன்.

“அந்த சாமியாரைப்பத்தி இன்னும் ஒரு முக்கியமான தகவல் இருக்குது பாவண்ணன். அதையும் சொல்லி முடிச்சிடறேன். அதுக்கப்புறம் பாகவதரப் பத்தி பேசலாம்” என்றார் விட்டல்ராவ்.

”சொல்லுங்க சார்” என்றேன் நான்.

“ஒருமுறை திருவிழா சமயத்துல காட்னாம்பட்டி முருகன் கோவிலுக்கு ஒரு சிவாச்சாரியார் வந்திருந்தாரு. எந்த ஊரோ தெரியலை. முருகன் கோவில் பக்கமா வந்தாரு. அப்படியே கோவிலுக்குள்ள வந்திட்டாரு. தலையெல்லாம் திரிதிரியா முடி வளர்ந்து தொங்குது. உடம்பு முழுக்க பட்டைபட்டையா திருநீறு பூசியிருந்தாரு. நம்ம ஊரு திருவிழாவுக்கு வந்திருக்கிறார் போலன்னு நெனச்சிகிட்டு ஊருல இருந்தவங்களும் அவருக்கு மரியாதை செஞ்சி உக்கார வச்சிருந்தாங்க“

“சரி.”

“அந்த நேரத்துலதான் கோவிலுக்கு வெளிய கூட்டம்கூட்டமா சட்டிச்சாமியார் பின்னால மக்கள் அரோகரா அரோகரான்னு சொல்லிகிட்டு போறத அந்தப் பெரிய சாமியாரு பார்த்திருக்காரு. கொஞ்ச நேரம் அவரும் வேடிக்கை பார்த்தபடி சும்மா இருந்திருக்காரு. சட்டி சாமியாரு கோவில சுத்தி ஒரு முழு வட்டம் சுத்தி வந்து கோவில் வாசல்ல விழுந்து வணங்கிட்டு எழுந்து நின்னு இடுப்புல இருக்கிற கயித்த அவுத்து கீழ வைக்கிற சமயத்துல விறுவிறுன்னு நடந்து அவருக்கு பக்கத்துல போயிட்டாரு.”

“அப்புறம்?”

“ஜடாமுடியோடு ஒரு பெரிய சாமியாரு பக்கத்துல வந்து நிக்கறத பார்த்துட்டு சட்டி சாமியாருக்கு ஒன்னும் புரியலை. அவரைப் பார்த்து சிரிச்சாரு. ஆனா அந்தப் பெரிய சாமியாரால அந்தப் புன்னகையை ஏத்துக்கமுடியலை. தன்னுடைய கண்முன்னால சட்டி சாமியாருக்குக் கிடைச்ச கெளரவம் அவரை ஏதோ பண்ணிடுச்சின்னு நெனைக்கறேன். அவரால அதை சுலபமா எடுத்துக்க முடியலை.”

“சாமியார் உலகத்துக்குள்ளயும் ஊடுருவிப் போகிற சக்தி ஆணவத்துக்கு இருக்குது சார்”

“ஆமாம். முதல்ல வேகமா சட்டி சாமியாரைப் பார்த்து கோவணம் கட்டிகிட்டா பெரிய சாமியாராயிடலாம்னு நெனச்சிட்டியா நீன்னு  கேட்டாரு. ஊருக்காரங்க எல்லாரும் உன்ன சாமின்னு கூப்பிட்டா நீயும் உன்ன சாமின்னு நம்பிடுவியான்னு அடுத்தபடி  வேகமா கேட்டாரு. வாய் பேச முடியாத சட்டி சாமியாரால எப்படி பதில் சொல்லமுடியும்? அது அந்த ஜடாமுடி சாமியாருக்குப் புரியலை. ஒரு இடைவெளியே விடாம தொடர்ச்சியா ஏதேதோ கேள்விகள் கேட்டுகிட்டே இருந்தாரு. சட்டி சாமியாரால தாங்கமுடியலை. அவர் அந்த இடத்துலேர்ந்து ஓன்னு சத்தம் போட்டபடி கோவில சுத்திகிட்டு பின்பக்கமா ஓட ஆரம்பிச்சிட்டாரு. பின்பக்கம் ஒரு மொட்டைமலை. வேகமா அதும் மேல ஏறி ஓட ஆரம்பிச்சிட்டாரு. யாருக்குமே என்ன நடக்குதுன்னு புரியலை. அதுக்குள்ள ரொம்ப தூரம் மேல ஏறி போயிட்டாரு சட்டி சாமியாரு.”

“ஐயையோ”

“அந்த மலைக்குப் பின்பக்கமா ஒரு மொட்டைப்பாறை இருந்தது. அதும் மேல ஏறி நின்னு ஒரு நிமிஷம் ஊரப் பார்த்தாரு. கோவில பார்த்தாரு. அப்புறம் அங்கேயிருந்து தாவி கீழ விழுந்து அடிபட்டு செத்துட்டாரு. வாயில்லாத மனுஷன் என்ன சொல்ல நினைச்சாரோ தெரியலை. ஆயிரக்கணக்கான ஜனங்க பார்த்துட்டிருக்கும்போதே கண்ணு முன்னால தலை உடைஞ்சி செத்துப் போயிட்டாரு.”

அந்த முடிவு என்னைத் திகைக்கவைத்தது. ஒருகணம் என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

“அப்புறம்?”

“அப்புறமென்ன? ஊருகாரங்க அந்த சட்டிச்சாமியாருடைய உடலைத் தேடிக் கண்டுபுடிச்சி தகனம் செஞ்சாங்க. ஜடாமுடி சாமியார் அந்த ஊரைவிட்டே கெளம்பி போயிட்டாரு.”

எதார்த்த நிகழ்ச்சிகள் புனைவைவிட குரூரமானவை என்பதை ஆழ்மனம் உணர்ந்திருந்தாலும், விட்டல்ராவ் விவரித்த நிகழ்ச்சியின் குரூரம் உறையவைத்துவிட்டது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பத்தோடு அமர்ந்திருந்தேன்.

மேசை மீது வைத்திருந்த குவளையிலிருந்து தண்ணீரை ஊற்றி அருந்தினார் விட்டல்ராவ். பிறகு உதடுகளைத் துடைத்தபடி அவராகவே “இப்ப பாகவதர் கதைக்கு வரேன்” என்று தொடங்கினார். “காட்னாம்பட்டி கோவிலை பத்தி சொல்லத் தொடங்கியதுமே அந்த சாமியார் கதை ஞாபகத்துக்கு வந்துட்டுது. அதை சொல்லாம இருக்கமுடியலை” என்றார். அந்த உரையாடலையே பாகவதரிடமிருந்துதான் தொடங்கினோம் என்பது எனக்கு அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அளவுக்கு சட்டிச்சாமியாரின் கதையில் நான் கரைந்துபோயிருந்தேன்.

ஒரு பெருமூச்சோடு சாமியார் கதையை மனசுக்குள்ளேயே ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு “சொல்லுங்க சார்” என்று நானும் உற்சாகமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டேன்.

“பதினஞ்சி நாள் திருவிழா நடக்கும்னு சொன்னேனில்லையா? கோவில் வாசல்ல ஒரு பெரிய மேடை போட்டிருப்பாங்க. ஒவ்வொரு நாளும் சாயங்காலம் ஆறுமணிக்கு கோவிலுக்குள்ள விளக்கு போட்டதும் அந்த மேடையிலயும் விளக்கு எரியும். ஒரு பெரியவரு வந்து கந்தபுராணம் படிப்பாரு. நடுநடுவுல கதைகள் எல்லாம் சொல்வாரு. கேக்கறதுக்கு சுவாரசியமா இருக்கும். ஒரு ஏழு மணி வரைக்கும் அது ஓடும். இடைப்பட்ட நேரத்துல கொஞ்சம் கொஞ்சமா ஊருகாரங்க எல்லாரும் மேடைக்கு முன்னால இடம் புடிச்சி உக்காருவாங்க. தெருவே அடைஞ்சி போயிடும். அதுக்கப்புறம் ஒரு எள்ளு விழக்கூட இடம் இருக்காது”

“ஏன் அப்படி?”

“ஏழு ஏழரை மணி வரைக்கும்தான் அந்தக் கந்தபுராணம். அதுக்கப்புறம் இசைக்கச்சேரி. அது ஒரு ரெண்டுமூனு மணி நேரம் ஓடும். அதுக்குத்தான் மக்கள் முன்னாலயே வந்து இடம் புடிச்சிடுவாங்க. இசைக்கச்சேரி ஆரம்பிச்ச பிறகு போகலாம்ன்னு நெனைக்கறவங்க கடைசியிலதான் உக்காந்து கேக்கணும். மைக் இருக்கறதால பாடறவங்க குரல் மட்டும் நல்லா கேக்கும். ஆனா முகத்தைப் பார்க்கமுடியாது”

“சரி”

“காட்னாம்பட்டியில முதல் கச்சேரி எப்பவும் கே.பி.சுந்தராம்பாள் கச்சேரிதான். அருமையா பாடி ஆரம்பிச்சி வைப்பாங்க. அடுத்தநாள் லோகநாதன் கச்சேரி. அதுக்கப்புறம் சி.எஸ்.ஜெயராமன் பாடுவாரு. அதுக்கப்புறம் நம்ம தியாகராஜ பாகவதர் வருவாரு”

“அதுக்கப்புறம் ஆலந்தூரு பிரகாஷ், பித்துக்குளி முருகதாஸ்னு அன்னைக்கு பிரபலமா இருந்த எல்லாரும் வந்து பாடுவாங்க.”

“சரி”

“பாகவதர் முதல்ல கோவில் சன்னிதியில பாடவேண்டிய முருகன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். சிவனைப்பற்றிய பாடல்கள்னு வரிசையா ஒரு பத்து இருபது பாட்டு பாடுவாரு. அமுதமா இருக்கும். ஒவ்வொரு பாட்டு முடிஞ்சதும் ஜனங்க கைதட்டல்ல கோபுரமே இடிஞ்சி விழுந்துவிடற மாதிரி இருக்கும். ஒரு மணி நேரம் அப்படி சளைக்காம பாடுவாரு. அவரைச் சுத்தி உக்காந்திருக்கும் தாளக்காரங்க, பின்பாட்டுக்காரங்க எல்லாருமே ரொம்ப உற்சாகமா இருப்பாங்க.”

“அதுக்கப்புறம்?”

“அதுக்கப்புறம் முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிற பெரிய மனிதர்கள் தங்களுக்கு புடிச்ச பாட்டுடைய வரிகளை ஒரு துண்டு சீட்டுல எழுதி மேடைக்கு அனுப்புவாங்க. பாகவதர் அந்த வரியைப் படிச்சிட்டு உடனே அந்தப் பாட்டைப் பாடுவாரு. நீங்க எனக்கு அனுப்பி வச்சீங்களே, சொல்லு பாப்பா சொல்லு பாப்பான்னு ஒரு பாட்டு, அந்தப் பாட்டை அவர் பாடாத மேடையே இல்லை. எல்லாருமே அந்தப் பாட்டுக்காக சீட்டு அனுப்புவாங்க. பாரதியார் பாடிய ஓடி விளையாடு பாப்பா பாட்டுக்கு கிடைச்ச வரவேற்பு மாதிரி பாகவதருடைய பாப்பா பாட்டுக்கும் வரவேற்பு இருந்தது.”

“நேயர் விருப்பம் மாதிரியா சார்?”

“ஆமாம். அதே மாதிரிதான். மேடைக்கு சீட்டு குடுத்து அனுப்புறவங்க சின்னவங்களா பெரியவங்களா, ஆணா பெண்ணா அதை எதையுமே பாகவதர் பார்க்கமாட்டாரு. ஒவ்வொரு பாட்டையும் ரசிச்சி பாடுவாரு”

“நீங்க எங்க உக்காந்திருப்பீங்க?”

“நாங்கதான் சாயங்காலமே போய் இடம் புடிச்சி உக்காந்திடற ஆளாச்சே. பாடகர முழுசா பாக்கற அளவுக்கு சரியான இடத்துல நாங்க எல்லாருமே உக்காந்து கேப்போம். எங்க குடும்பத்துல எல்லாருக்குமே இந்தப் பாட்டுப்பைத்தியம் உண்டு.”

”எத்தனை மணி நேரம் பாடுவாரு?”

”ஒன்பது மணிக்கு முடிக்கணும். அதுதான் கணக்கு. அப்பதான் அடுத்து பத்து மணிக்கு தெருக்கூத்த ஆரம்பிக்கமுடியும். ஆனாலும் ரசிகர்கள் யாரும் ஏமாந்துடக்கூடாதுன்னு அவரு பத்துமணி வரைக்கும் பாடிகிட்டே இருப்பாரு. அவர் மேடையை விட்டு எறங்கி நடக்கும்போது ஜனங்க தரையில விழுந்து வணங்குவாங்க. அந்த அளவுக்கு அவரு மேல பக்தி வச்சிருந்தாங்க. அவருடைய குரலுக்கு அப்படி ஒரு வசீகரம் இருந்தது. அவர் பாடிய பாடல்கள் எல்லாமே கர்நாடக சங்கீதத்தின் ராக மெட்டுகளை அடிப்படையாகக் கொண்டவைதான். ஆனால் அதையெல்லாம் கூட மக்கள் ரசிக்கும் விதத்துல அவரால பாடமுடிஞ்சது. அதுதான் அவருடைய பெரிய சாதனை”

“உண்மைதான் சார்”

“அதைவிடவும் முக்கியமான ஒரு சாதனையையும் அவர் செஞ்சிருக்காரு பாவண்ணன். அதையும் தெரிஞ்சிக்கணும்”

“என்ன சார்? சொல்லுங்க.”

“பாகவதவருடைய பாட்டுக்கும் நடிப்புக்கும் மக்கள் நடுவுல இருக்கிற ஆதரவை தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கணும்ங்கற எண்ணத்தோடு அந்தக் காலத்துல இங்க்லீஷ் கவர்ன்மெண்ட் ஒரு நாடகம் போட்டாங்க. பாகவதாரல முடியாதுன்னு சொல்லமுடியலை. அரசாங்கத்து அதிகாரிகள் கோரிக்கையை மறுக்கமுடியாத நிலை. அவருதான் அந்த நாடகத்துல கதாநாயகன். நல்லபடியா நடிச்சி குடுத்தாரு. அதிகாரிகள் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு கூடுதலான பணம் வசூலாயிடுச்சி. அதனால அரசாங்க அதிகாரிகள் திருச்சிக்குப் பக்கத்துல திருவெறும்பூர்னு ஒரு கிராமத்தையும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் அவருக்கு அன்பளிப்பா கொடுத்தாங்க. பாகவதர் அந்தக் கிராமத்தை அரசாங்கத்துக்கே திருப்பிக் கொடுத்துட்டாரு. அந்தப் பணத்தை வாங்கி சுதந்திரப் போராட்ட  நிதிக்கு தன் பங்கா இருக்கட்டும்னு காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துட்டாரு. அந்த அளவுக்கு தாராள மனம் உள்ளவராதான் அவர் வாழ்ந்தார். பாகவதரைப்பத்தி சொல்ற எல்லாருமே அவருடைய பிற்கால வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுகளைத்தான் சொல்றாங்களே தவிர, இதையெல்லாம் சொல்றதே கிடையாது. எதுவா இருந்தாலும் நல்லது கெட்டது ரெண்டயும் சீர்தூக்கிப் பார்த்து பேசணுமில்லையா? அந்தக் குணம் நம்மகிட்ட கிடையவே கிடையாது பாவண்ணன்”

அவர் சொல்வது முற்றிலும் உண்மை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ’ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே’ என்ற ஒளவையின் பாடல் வரிகளை நினைத்துக்கொண்டேன். அந்தப் பாட்டுக்கு பாகவதரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது என்று தோன்றியது.

“ஏராளமான பாடல்களை அவர் சினிமாவுக்காக பாடினார் பாவண்ணன். அதுக்கெல்லாம் அழிவே கிடையாது. எப்பவும் இந்த மண்ணுல நிலைச்சி நிக்கும். எந்தப் படத்துலயும் இடம்பெறாத ரெண்டு பாட்டு அவரு பாடியிருக்காரு அவரு. அதுக்கு சினிமா பாட்டுகளைவிட கூடுதலான மதிப்பு உண்டு. அந்த ரெண்டு பாட்டையும் சேர்ந்து ஒரு  தனி இசைத்தட்டா அந்தக் காலத்துல அதை வெளியிட்டாங்க”

“என்ன பாட்டு சார் அது?”

“ரொம்ப முக்கியமான பாடல்கள். காந்தியடிகள் சுடப்பட்டு இறந்ததுமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா அஞ்சலி செலுத்தினாங்க. பாகவதர் தனக்கே உரிய விதத்துல ரெண்டு பாட்டு பாடி இசைத்தட்டா வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார்”

நான் அதுவரை அறிந்திராத செய்தியாக அது இருந்தது. அந்தப் பாட்டை உடனடியாகக் கேட்க வேண்டும் போல ஆர்வமெழுந்தது.

”அந்தப் பாட்டு எங்க அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும். எனக்கும் புடிக்கும். அடிக்கடி அந்தப் பாட்டுகளைப் பாட வச்சி கேட்பாரு”

“அந்தப் பாட்டின் வரிகள் ஞாபகம் இருக்குதா சார்” என்று கேட்டேன்.

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் ”பாட்டே ஞாபகம் இருக்குது பாவண்ணன்” என்றார் விட்டல்ராவ். அக்கணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “ஒரு தரம் பாடறீங்களா சார்?” என்று கேட்டேன்.

உடனே தொண்டையைச் செருமி பாட்டைத் தொடங்கினார் விட்டல்ராவ். “கைமாறு செய்வதுண்டோ – காந்திஜிக்கு கைமாறு செய்வதுண்டோ” என்று முதல் பாட்டைத் தொடங்கினார். மனத்தை உருக்கும் வரிகள். அது முடிந்ததுமே “காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பதும் எளிதாமோ” என்று இரண்டாவது பாட்டையும் பாடினார். இரண்டையும் அவர் மனப்பாடமாகவே பாடியதைக் கேட்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன்.

அவர் பாடி முடித்த பிறகு அந்தப் பாடல்களை நான் கைப்பேசி வழியாக இணையத்தில் தேடி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். “இன்னொரு தரம் இதே பாடல்களை பாகவதர் குரல்லியே கேக்கலாமா சார்?” என்று விட்டல்ராவிடம் கேட்டேன்.

“தாராளமா வைங்க பாவண்ணன். கேப்போம்” என்றார்.  அடுத்த கணம் நான் கைப்பேசியை இயக்கினேன். காந்தம்போன்ற பாகவதரின் குரலில் ”கைமாறு செய்வதுண்டோ – காந்திஜிக்கு கைமாறு செய்வதுண்டோ” என்னும் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

 

(அம்ருதா – ஏப்ரல் 2024)