Home

Thursday 29 October 2015

தாமரை இலையின் தத்துவம் - கட்டுரை



    கடந்த ஆகஸ்டு மாதத்தோடு நான் வேலைக்கு வந்து இருபத்தியேழு ஆண்டுகள்  கடந்துவிட்டன. தொடக்கத்தில் புதுச்சேரியில் ஓராண்டையும் பிறகு ஆந்திரத்தில் இரண்டு ஆண்டுகளையும் அதைத் தொடர்ந்து இருபத்திநான்கு ஆண்டுகளைக் கர்நாடகத்திலும் கழித்திருக்கிறேன். இந்த இடைவெளியில் பல ஊர்களில் பலவிதமான அதிகாரிகளிடம் வேலைபார்த்த அனுபவமுண்டு. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. சில அனுபவங்கள் மேன்மையானவை. சில அனுபவங்கள் மறக்கமுடியாத வடுக்களையும் வலியையும் தந்தவை. இன்னும் சிற்சில அனுபவங்கள் கசப்பையே பரிசாக வழங்கியவை. எழுதத் தொடங்கினால் ஒவ்வொன்றையும் ஒரு கதையாகச் சொல்லலாம்.

நெஞ்சை நிரப்பிய பாடல்கள் - கட்டுரை



    ஜெய்ப்பூரிலிருந்து தொடர்வண்டியில் திரும்பிக்கொண்டிருந்தேன்.  ஐந்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்த ராஜஸ்தானத்தின் இடங்களனைத்தும் சின்னச்சின்னக் காட்சிகளாக மனத்துக்குள் நகரத் தொடங்கின.  அரண்மனைகள், இடிந்த கோட்டைகள், பசுமை அடர்ந்த மலைச்சிகரங்கள், ஏரிகள், சமண ஆலயங்கள், பாலைவனம் என அனைத்துமே பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களாக மனத்தில் பதிந்துகிடந்தன.  அடுத்தடுத்து மலைச்சிகரத்தையும் பாலைவனத்தையும் பார்த்த அனுபவம் ஒரு கனவுக்காட்சியைப்போல இருந்தது. சிகரத்தை நினைத்தபோது அதன்மீது நெளிந்தலையும் துண்டுத்துண்டு வெண்மேகங்களும் அவற்றையொட்டிப் பரவி நீண்டு விரிவடையும் நீலவானமும் அவற்றின் ஆழமான பின்னணியும் மிதந்துவந்தன.  பாலைவனத்தை நினைத்தபோது மஞ்சளும் வெண்மையும் கலந்த மினுமினுப்பான நீண்ட மணற்பரப்பும் எங்கெங்கும் படர்ந்திருக்கும் வெறுமையும் மிதந்துவந்தன. ஆழமான வானமும் வெறுமையான மணற்பரப்பும் ஒரேவிதமான பரவசத்தையும் பீதியையும் ஒருங்கே ஊட்டுவதை அக்கணத்திலும் என்னால் உணரமுடிந்தது. என்னவென்று சொற்களால் வடிக்கமுடியாத ஒருவித வலியும் நெகிழ்ச்சியும் வேதனையும் கவிந்தன. கண்களை மூடியபடி வெகுநேரம் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.

Tuesday 13 October 2015

சந்திப்பு

பழைய சென்னைச்சாலை என்பது அல்சூர் எரியிலிருந்து தொடங்குகிறது. அதன் வெவ்வேறு இடங்களிலிருந்து கிளைப்பாதைகள் நீண்டு ஆதர்ஷா திரையரங்கின் முன்னால் சந்தித்துக்கொள்ளும். அந்தப் பாதைகளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தால் ஏறத்தாழ ஒரு முக்கோணத்தைப்போல இருக்கும். சென்னைச்சாலையிலிருந்து நினைத்த பாதையில் வாகனங்கள் பிரிந்து நினைத்த திசையில் பறந்துபோகும். சாலைப்போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் வசதிகள் அதிகமாக உள்ள இடம்தான் நாளடைவில்  நெரிசலில் பிதுங்கிக் குழம்பித் தடுமாறும் இடமாக மாறும் என்ற எழுதாத விதிக்கு ஆதர்ஷா சாலைகளும் ஒருநாள் பலியாகின. உடனடியாக அக்கிளைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டன.

சாவை வென்ற வீரர்

பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று விமானநிலைய வீதியில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனை. எட்டுமாடிக் கட்டிடம். எல்லா நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம். அதன் அவசர சிகிச்சைப் பிரிவின்முன் எப்போதும் ஐம்பது பேராவது கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ரத்த தானத்துக்காக மூன்றுமுறைகளும் நோய்வாய்ப்பட்டு அறுவை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்காக சில முறைகளும் அங்கு சென்றதுண்டு.  தற்செயலாக பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்த ஒரு தருணத்தில் நீண்ட விரிப்புகளையும் மெத்தென்ற இருக்கைகளையும் கொண்ட பெரிய கூடமொன்றைப் பார்த்தேன்.  சுவர்களில் ஆறேழு ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. பழைய காலத்துச் சிகிச்சை முறைகளைச் சித்தரிக்கும் காட்சிகள்.  எல்லாமே அறுவை மருத்துவம் தொடர்பானவை.  மயக்கமருந்தே இல்லாமல் நடக்கும் அறுவை சிகிச்சைகள் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.  ஒரு பல்லை எடுப்பதற்குக்கூட மயக்கமருந்து கொடுத்துவிட்டு சிகிச்சை செய்கிற காலம் இன்று. புதுமையின் விளிம்பில் நின்றுகொண்டு அந்தக் காலத்தை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க இயலவில்லை.