Home

Wednesday 24 April 2024

எஞ்சுதல் - சிறுகதை

 க்கிரமே விழிப்பு வந்துவிட்டாலும் எழுந்திருக்காமலேயே அவர் படுத்தபடி இருந்தது சுக்குக்காப்பிக்காரன் வரட்டும் என்றுதான். ரொம்ப சுலபமாய் உணரும்படியாகவே இருக்கும் அவன் வருகை. கிளங் கிளங் என்று வருகிற தள்ளுவண்டி மணியோசை. ‘சுக்காப்பிஎன்று வார்த்தையை நறுக்கி இழுத்து வீசுகிற குரல். பக்கம்வர  பக்கம்வர  ஸ்ஸ்  என்று ஜாஸ்தியாகிக் கொண்டே போகிற ஸ்டவ் சத்தம். பஸ் சத்தம், லாரி சத்தம், மனிதர்கள் சத்தம் என்று வெறும் சத்தங்களாகிப் போய்விடுகிற பகல் பொழுதுகளிலாவது அடையாளங்கள் தவறிப்போகும். ஆனால், இழுத்துப் போர்த்திய மாதிரி இருக்கிற கருக்கிருட்டில் காப்பிக்காரனின் வருகை அடையாளங்களை வைத்து உணர சாத்தியமான விஷயம்தான். ராத்திரி கடை போட்டு தீபாவளி வாடிக்கைகள் தைக்கிற ஜாபர், கோதண்டம், உஸ்மான்சேட் கடைகளின் மிஷின்கள் எழுப்புகிற சின்ன சத்தத்தையும் மீறி.

மாறாத புன்னகையும் மனவிரிவும்

 

கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி, தனித்தன்மையுடைய சிறுகதைகளை அளித்து, தமிழ்ச்சூழலின் கவனம் பெற்ற இளைய சிறுகதையாளர்கள் என ஒரு பத்து பேரையாவது உடனடியாகச் சொல்லிவிடமுடியும். செந்தில் ஜெகன்னாதன், சுஷில்குமார், மயிலன்.ஜி.சின்னப்பன், ரா.செந்தில்குமார், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், ஐ.கிருத்திகா, கமலதேவி, வைரவன், லோகேஷ் ரகுராமன், அமுதா ஆர்த்தி, பொன்.விமலா என நீளும் அந்தப் பட்டியலில் புதிய இளைய எழுத்தாளராக அஜிதன் தன் முதல் சிறுகதைத்தொகுதி வழியாக இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே மைத்ரி, அல்கிஸா ஆகிய இரு சிறிய நாவல்கள் வழியாக அவர் ஈட்டிவைத்திருக்கும் இடத்தை, மருபூமி என்னும் புதிய சிறுகதைத்தொகுதி உறுதி செய்திருக்கிறது.

Sunday 14 April 2024

தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் மாயக்கலை

  

நாம் சாலையில் நடந்து செல்கிறோம். நம் காலடியிலேயே நம் நிழல் விழுகிறது. நம்மோடு சேர்ந்து அதுவும் நடந்து வருகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள் , பாலங்கள் எல்லாவற்றுக்கும் நிழல்கள் இருக்கின்றன. நாம் அதையெல்லாம் பெரும்பாலும் கவனிப்பதே இல்லை. அது வெறும் நிழல்தானே, வேறென்ன என்றபடி கடந்துவிடுகிறோம்.

பாகவதரின் பாடல்கள்

  

ஒருநாள் காலையில் என் அப்பாவை திடீரென நினைத்துக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லாமல் அவரைப்பற்றிய நினைவுகள் ஒன்றை அடுத்து ஒன்றென நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. அவருக்கு திரைப்பாடல்கள் மீது விருப்பம் அதிகம். குறிப்பாக தியாகராஜ பாகவதர் பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஓய்வாக இருக்கும்போதும் தன் போக்கில் தனியாக தையல் எந்திரத்தில் மனமூன்றி தைத்துக்கொண்டிருக்கும்போதும் பாகவதர் பாடலை முணுமுணுத்தபடியே வேலை செய்வார்.

Sunday 7 April 2024

மாணிக்கங்களும் கூழாங்கற்களும்

  

ஒரு தொலைபேசி நிலையம் நகரத்தில் வெவ்வேறு மூலைகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களுடைய வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைபேசிகளை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது. எண்ணற்ற கம்பங்கள் வழியாக நீண்டு செல்லும் கம்பிகள் வழியாகவும் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாகவும் அந்த ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.

நினைவுப்பெட்டகமும் ஒளிவிளக்கும்

  

ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என எச்சரிக்கைக்குரல் கொடுத்துத் தடுக்கிறார் வீட்டுத்தலைவி. அதே வீட்டின் தோட்டத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அவ்வப்போது பச்சைக்கிளிகள் அந்த மரங்களில் அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. இளைப்பாறும் பச்சைக்கிளிகளுக்காக பார்வை படும் இடத்தில் கிண்ணத்தில் தண்ணீரும் தட்டில் அரிசியும் வைத்திருக்கிறார் அவர். அந்த வீட்டு வாசலில் ஒரு பெரிய மாமரமும் இருக்கிறது. ஒரு வண்டியில் ஏற்றும் அளவுக்கு அந்த மரத்தில் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. பறிக்கும் பழங்களை அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறார் அவர். பறிக்காத பழங்களை அந்த ஊர்க் குரங்குகள் கூட்டமாக வந்து தினந்தினமும் கும்மாளம் போட்டுத் தின்றுவிட்டுச் செல்கின்றன. இன்று, அந்த அணில்கூடு அப்படியே இருக்கிறது. அந்தக் கிளிகளும் தினமும் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. குரங்குகளும் வந்து பழம் தின்றுவிட்டுச் செல்கின்றன. ஆனால் அந்த வீட்டுத்தலைவிதான் இல்லை. அவர் புற்றுநோய்க்கு இரையாகி மறைந்துவிட்டார். அவர் பெயர் சித்ரா.

Sunday 31 March 2024

உறவு - சிறுகதை


கடைசியாய் ஆப்பம் வாங்கித் தின்றவனையே கூடையைத் தூக்கிவிடச் சொல்லித் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் கிழவி.

ஏரிக்கு இந்தப் பக்கம் சாலையாம்பாளையம். அந்தப் பக்கம் வளவனூர். வனாந்தரமாய் நடுவில் வெடித்துக் கிடந்தது பூமி. வருஷத்தில் இரண்டு மாசமோ மூணு மாசமோதான் தண்ணீர் இருக்கும். அதுவும் எவனாவது புண்ணியவான் மனசுவைத்து சாத்தனூர் அணையைத் திறந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. வெறும் மழைத்தண்ணீர்தான் தேங்கி நிற்கும்

புதிய தலைமுறையினருக்கு உதவும் கையேடு

 

1764ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களில் முதன்முதலாக அஞ்சல் நிலையங்களைத் தொடங்கியது. அப்போது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் அதனுடைய முதன்மை நோக்கமாக இருந்தது.  நாளடைவில் அஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதன் வழியாக ஒரு சிறு தொகையை வருமானமாக ஈட்டமுடியும் என்பதை அரசு புரிந்துகொண்டது. உடனடியாக பணமதிப்புக்கு இணையாக பலவிதமான அஞ்சல்தலைகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அனுப்பும் கடிதத்தின் எடைக்குத் தகுந்தபடி கட்டணம் முடிவுசெய்யப்பட்டு, அக்கட்டணத்துக்கு இணையான அஞ்சல்தலைகள் வழங்கப்பட்டன.  அந்த அஞ்சல் தலைகளில், புராதனச்சின்னங்களின் படங்களும் மாநகரத்தோற்றத்தின் படங்களும் லண்டன் அரசர்களின் படங்களும் அச்சிடப்பட்டன.

Sunday 24 March 2024

அடையாளம் - சிறுகதை

 இரண்டரை வருஷம் ஜெயில்வாசம் மாதிரி துபாயில் கழித்துவிட்டு ஆசை ஆசையோடு வந்திருந்த ராகவனை அப்பா என்று கூப்பிடாமல் குழந்தை ராணி மாமா என்று கூப்பிட்டதுதான் பிரச்சனை. ஆனமட்டுக்கும் முயற்சி செய்து பலிக்காமல் மிகவும் மனம் உடைந்த ராகவனை சமாதானம் செய்து, தான் குழந்தையை எப்படியும் அப்பாவென்று கூப்பிட வைப்பது உறுதியென்றும் இதெல்லாம் அற்ப விஷயம் என்றும் இதற்கெல்லாம் மனம் உடைந்து தளரலாகாது என்றும் சொன்னாள் கல்பனா.

உபயத்துல்லா : நல்லாற்றின் நின்ற துணை

  

முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் துருக்கி தேசத்துக்கு எந்தப் பாதிப்பும் நேராதவகையில் பாதுகாக்கப்படும் என்று பிரிட்டன் அரசு முதலில் அறிவித்தது. ஆனால் போர் முடிவடைந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்து  துருக்கியின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கியது. மேலும்  துருக்கியின் ஆசியப்பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டன.

Sunday 17 March 2024

நான்கு கணங்கள்

  

அதீதம் என்பதற்கான வரையறையை வகுத்துக்கொண்டால் ஸ்ரீராமின் குறுநாவலை வாசிப்பது எளிதாகிவிடும். இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டது என்பது அதீதத்தின் முதல் குணம். அரைக்கணமோ ஒரு கணமோ மட்டும் நீடித்து உச்சத்தைத் தொட்டு மறைந்துபோவது என்பது இரண்டாவது குணம். உண்மையிலேயே அப்படி ஒரு கணம் நிகழ்ந்ததா என எண்ணித் துணுக்குறும் அளவுக்கு கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் நிகழ்ந்து முடிந்து இயல்பான நிலைக்குத் திரும்பி நிற்பது என்பது மூன்றாவது குணம். அதீதத்தால் நேர்ந்தது என சுட்டிக்காட்டிச் சொல்லத்தக்க வகையில் ஒரு விளைவை நம் கண் முன்னால் பார்க்கும்போது அதை நம்மால் முற்றிலும் மறுக்கவும் முடியாமல் முற்றிலும் ஏற்கவும் முடியாமல் தடுமாறி நின்றுவிடுகிறோம். அந்த மாயநிலை அதன் நான்காவது குணம். அத்தகு மாயத்தன்மை பொருந்திய ஒரு தருணமே மாயாதீதமான கணம். ஸ்ரீராம் தன் குறுநாவலில் அத்தகு ஒரு மாயாதீதமான கணத்தையும் அதன் தொடர்விளைவுகளையும் நிகழ்த்திக்காட்டுகிறார்.

காட்சிப்படுத்தும் கலை

  

கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஹொஸபேட்டெ என்னும் ஊரில் நான் சில ஆண்டுகள் இளநிலை பொறியாளராகப் பணிபுரிந்தேன்.  அங்கிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் வரலாற்றுச் சின்னமான ஹம்பி இருக்கிறது.  பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக இருந்த புகழ்பெற்ற நகரம். சிற்பக்கலைக்குப் பேர்போன இடம்.

Sunday 10 March 2024

தாய்ப்பாசம் என்னும் விழுது

 

பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு மட்டுமே அந்தப் பெண் குழந்தைக்குக் கிடைத்தது. பன்னிரண்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அவரை மணந்துகொண்டவர் சிவசங்கரராயர் என்னும் இளைஞர். அவர் அதுவரை செய்துவந்த வேலையை உதறிவிட்டு காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். கதராடைகள் உடுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றார். விடுதலை பெற்ற பிறகு தினமும் நூல் நூற்றார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் பத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்துநராக வேலை செய்து பனமீட்டினார். கட்டுரைகளை எழுதினார்.  நிரந்தரமான ஒரு வேலை இல்லை. பதினாறு வயதில் அந்தப் பெண் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

ஒரு புதிய தொகுப்புக்கான கனவு

  

ஜெயகாந்தன் எழுதிய ரிஷிமூலம் என்னும் நெடுங்கதை எழுபதுகளில்  தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. நான் அப்போது உயர்நிலைப்பள்ளி மாணவன். எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன் எங்கள் ஊர் நூலகத்தில் பணியாற்றிவந்தார். அந்த நெருக்கத்தின் விளைவாக நீண்ட நேரம் நூலகத்திலேயே உட்கார்ந்து எல்லா வார, மாத இதழ்களையும் எடுத்துப் படிப்பேன்.

Saturday 2 March 2024

மகாதேவ தேசாய் : முடிவுறாத பக்திப்பாடல்

  

எல்.எல்.பி. தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து சூரத் நகரத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு தொழிலைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அங்கே போதிய வருமானம் கிடைக்கவில்லை. அவருக்கு சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் பயிற்சி இருந்தது. அதனால் வழக்கறிஞர் வேலையைத் துறந்துவிட்டு ஒரு நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களில் அந்த வேலையிலும் சலிப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். திடீரென வங்கி நிர்வாகம் அவரை பம்பாய் நகரத்துக்கு மாற்றியது. அங்கு செல்ல விருப்பமில்லாத அவ்விளைஞர் அந்த வேலையையும் துறந்து கூட்டுறவுத்துறையில் உதவி இயக்குநராக இணைந்து பணிபுரியத் தொடங்கினார்.

வழிகாட்டிகள் - சிறுகதை


நிரந்தரமற்ற வேலையாய் இருந்தாலும் சரி, கிடைத்தால் போதும் என்று விண்ணப்பங்களைச் சராமாரியாய்ப் போட்டுக் கொண்டே இருந்த காலம் அது. ஓர் இடத்தில் நாலு மாதமோ ஐந்து மாதமோ இருப்பேன். அப்புறம் நீக்கிவிடுவார்கள். அல்லது நானாக நின்று கொள்வேன். ஐம்பது ரூபாய் அதிகமாக சம்பளம் கொடுக்கும் மற்றோர் வேலைக்கான ஆணை வந்து விட்டிருக்கும். இப்டித் தாவிக்கொண்டே இருந்தது எனக்கும் ஒரு வகையில் பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். பெற்றோரும் உற்றார் உறவினர்களும் நண்பர் வகையறாக்களும் என் போக்கைச் சதாகாலமும் கண்டித்துக்கொண்டே இருந்தார்கள். எங்காவது நிரந்தரமாக இரு என்று போதித்தார்கள். போதனைகளுக்கும் புத்திமதிகளுக்கும் செவிமடுக்காத பச்சை ரத்தம் எனக்கு. என் இஷ்டம் போலவே இருந்தேன். ‘‘நிரந்தர உத்தியோகம் என்றால்தானே ஏதாவது பெண்ணைப் பார்த்து கட்டிவைக்கமுடியும்”  என்று அம்மா எப்போதும் ஒரு பாட்டம் அழுவாள். இந்தக் கல்யாணத்தில் இருந்து தப்பிக்கவே நான் காலம் முழுக்க தாவிக் கொண்டிருந்தேன்.

Sunday 25 February 2024

சுஜாதா - நம்பமுடியாத விசித்திரம்

 

சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். நாற்பத்தைந்து-நாற்பத்தாறு ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது.

கோட்டை - சிறுகதை

 


கோட்டையில் பதவிப் பிரமாணவிழாவாம். தொழிலாளர்களின் கோரிக்கையை மதித்து பகல் பொழுது வேலையை ரத்து செய்திருந்தது கம்பெனி.

மதியச்சாப்பாட்டை வேண்டுமென்றே இரண்டு மைல் தள்ளி இருக்கிற ஓட்டலுக்கு நடந்துபோய் முடித்தேன். உச்சிப்பொழுதில் கூட குளுகுளுவென்று காற்றடிக்கிற நகரம் இது. மனசில் பொங்கும் எரிச்சல் தணியத்தணிய வீசுகிற காற்றை என்ன செய்வது. எரிந்துகொண்டே இருக்கும் நெருப்புக்குப் பக்கத்தில் போய் உட்காரலாமா என்று தோன்றியது

Sunday 18 February 2024

மரங்களின் கதை

 ஹம்பி எக்ஸ்பிரஸில் பிரயாணம் செய்த போது சந்தித்த நபரின் முகம் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர்தான் எனக்கு இக்கதையைச் சொன்னார். சுவாரஸ்யமாகவும், தெளிவான குரலிலும் அக்கதையை விவரித்தார் அவர். சதாகாலமும் என்னை அரிக்கும் குழப்பம் எதுவும் அவரிடம் இல்லை. மரங்களைப் பற்றித்தான் அவருக்கு எத்தனை ஞானம் எத்தனை அனுபவம். எத்தனை வருஷங்கள் பாடுபட்டுச் சேகரித்த அனுபவமோ, அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முத்துக்குச் சமம். அவர் சொன்ன கதையின் பிரமிப்பு என்னைவிட்டுச் சற்றும் அகலவில்லை. முதன்முதலில் அந்தக் கதையை என் மனைவியிடம்தான் பிரஸ்தாபித்தேன். அவளோ சிரித்துவிட்டாள். நம்பிக்கையற்ற அவள் பார்வை என்னை நிலைகுலைய வைத்தது. அன்றைய தேதியில் நான் எங்கும் பிராயணமே செய்யவில்லை என்றும் யாரையும் சந்திக்கவே இல்லை என்றும் ஆணித்தரமாய்ச் சொன்னாள். அவள் சொன்ன பிறகு நம்பத்தான் வேண்டியிருந்தது. நீங்கள் வேண்டுமானால் சந்தேகிக்க இடமுண்டு என்ற வகையில் இதை எடுத்துக் கொள்ளலாம்.