Home

Thursday 25 April 2019

மூன்று கவிதைகள்:




1.பிறந்த ஊர் நினைவு



நரம்புச் சுள்ளிகளில் பொறி விழுந்து
பற்றி எரிகிறது ஞாபகம்
ஆயிரம் முகம் கலங்க
அலையும் நெருப்பினிடையே
அசைகிறது அந்தச் சித்திரம்

இரு வழிகள் - சிறுகதை




பேருந்து நிறுத்தத்தில் எலும்பும் தோலுமாக ஒரு பசு நின்றிருந்தது. வெள்ளைத்தாளில் திட்டுத்திட்டாக கரிய மையைச் சிந்தியமாதிரி இருந்தது அதன் நிறம். அதன் வாயிலிருந்து நூல்போல எச்சில் வழிந்தது. பசுவுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவன் அதன் கழுத்தின் இருந்த கயிற்றை இழுத்து அந்த இடத்திலிருந்து விலக்கி ஓட்டிச் செல்ல முயற்சி செய்தான். பசு அசைந்துகொடுக்காததால் நாக்கைத் தட்டி ஓசையெழுப்பியபடி கொம்பைப் பிடித்து இழுத்தான். பிறகு வாலை முறுக்கிவிட்டு பின்பக்கம் முதுகில் கைவைத்து தள்ளினான். ஆனால் பசு ஒரு அங்குலம் கூட நகரவில்லை. நின்ற இடத்திலேயே நின்றபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.

கருணையின் ஊற்று - கட்டுரை


பயணங்களில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் உரையாடுவது என்பது ஒரு கலை. அதில் சாமிநாதன் தேர்ச்சி மிக்கவர். உரையாடுவதில் ஒருவருக்கு ஆர்வம் உண்டா இல்லையா என்பதை அவர் ஒரு பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார். அதற்குப் பிறகுதான் பேச்சையே தொடங்குவார். பேசிப்பேசி அவர்களுடைய மனத்தில் இடம் பிடித்துவிடுவார்.

திரெளபதை வஸ்திராபரணம் - கட்டுரை




பொதுவெளியில் பலர் கூடியிருக்கிற இடங்களில் வசைச்சொற்களை மீண்டும் மீண்டும் உதிர்த்தபடி உரையாடுகிற, சண்டை போடுகிற காட்சிகள் ஆழ்மனத்தில் அப்படியே தங்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட மனிதர்களைச் சகித்துக்கொள்வது மிகவும் சிரமம்.  பல நேரங்களில் அவர்களிடம் நேரிடையாகவே மோதிவிடுகிறேன். சிலர் வாய்க்குள் முணுமுணுத்தபடி அமைதியாகிவிடுவார்கள். சிலர் தன்னுடைய ஆணவம் சீண்டப்பட்டதாக நினைத்துக்கொண்டு இன்னும் சத்தமான குரலில் வசைகளை உதிர்த்தபடி சண்டைக்கு வருவார்கள். அசிங்கமாகப் பேசுவது தன்னுடைய உரிமை என்பதுபோல அவர்கள் வாதிப்பார்கள். சில சண்டைகள் வாய்ப்பேச்சோடு முடிந்துபோகும். ஒருசில சண்டைகள்  மோதலாக வளர்ந்து அடிபட்டதும் உண்டு.

Friday 5 April 2019

மறைந்து நகரும் நதி - கட்டுரை





ஒருவரைச் சந்தித்துவிட்டுப் பிரிகிற நேரத்தில் அவர்களுடைய பெயர்களையும் தொடர்பு எண்ணையும் கேட்டு எழுதிவைத்துக்கொள்வது என் பழக்கம். என் குறிப்பேட்டில் அப்படி எழுதப்பட்ட எண்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் ஒருமுறை கூட அவர்களை அழைத்துப் பேச முற்பட்டதில்லை. மறுமுனையில் யார் அது? ஞாபகமில்லையேஎன்று ஒருவேளை கேட்டுவிட்டால் என்ன செய்வது என நானாகவே நினைத்துக்கொண்டு தவிர்த்துவிடுவேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரைக்கும் மட்டுமே அந்தப் பெயர்களும் எண்களும் நினைவில் இருக்கும். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல அவையும் மனசை விட்டு மறந்துவிடும். ஆனால் அந்த முகங்களையும் அனுபவங்களையும் ஒருநாளும் மறந்ததில்லை. ஏதோ ஒரு கணக்கில் அவை இணைந்து அப்படியே ஆழ்மனத்தில் தங்கிவிடும்.

பறவையின் படங்கள் - கட்டுரை




மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்று காடு, மலை, ஏரி, ஆறு என சுற்றியலைந்துவிட்டுத் திரும்பும் பழக்கமுள்ளவர் முத்துராமன். பறவைகளைத் தேடித்தேடிச் சென்று பார்ப்பதிலும் படமெடுப்பதிலும் ஆர்வமுள்ளவர் அவர். ஒவ்வொரு பயணத்திலும் அவர் எடுத்த படங்கள் ஐநூறு, அறுநூறைத் தாண்டும். அவை அனைத்தையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து அழியா மைப்பேனாவால் அதன் மீது பயணம் செய்த ஊரின் பெயர், பயணநாள், பறவையின் பெயர் என எல்லாத் தகவல்களையும் எழுதி உறையிலிட்டு வைத்துவிடுவார். என்றாவது ஒருநாள் மாலையில் அவரைச் சந்திக்கச் செல்லும் வேளையில் அந்தப் படங்களை நான் பார்ப்பதுண்டு.