Home

Thursday 25 April 2019

திரெளபதை வஸ்திராபரணம் - கட்டுரை




பொதுவெளியில் பலர் கூடியிருக்கிற இடங்களில் வசைச்சொற்களை மீண்டும் மீண்டும் உதிர்த்தபடி உரையாடுகிற, சண்டை போடுகிற காட்சிகள் ஆழ்மனத்தில் அப்படியே தங்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட மனிதர்களைச் சகித்துக்கொள்வது மிகவும் சிரமம்.  பல நேரங்களில் அவர்களிடம் நேரிடையாகவே மோதிவிடுகிறேன். சிலர் வாய்க்குள் முணுமுணுத்தபடி அமைதியாகிவிடுவார்கள். சிலர் தன்னுடைய ஆணவம் சீண்டப்பட்டதாக நினைத்துக்கொண்டு இன்னும் சத்தமான குரலில் வசைகளை உதிர்த்தபடி சண்டைக்கு வருவார்கள். அசிங்கமாகப் பேசுவது தன்னுடைய உரிமை என்பதுபோல அவர்கள் வாதிப்பார்கள். சில சண்டைகள் வாய்ப்பேச்சோடு முடிந்துபோகும். ஒருசில சண்டைகள்  மோதலாக வளர்ந்து அடிபட்டதும் உண்டு.

செல்வகுமாருடன் சேர்ந்து பயணம் போன சமயங்களில் இப்படி இரண்டுமூன்று முறை நிகழ்ந்திருக்கிறது. செல்வகுமார் இருபதாண்டுகள் இராணுவத்தில் சேவை செய்து பணி ஓய்வு பெற்று எங்கள் அலுவலகத்தில் வேலையில் சேர்ந்திருப்பவர்.  மிடுக்கான உடற்கட்டு மிக்கவர். மற்றவர்களுடைய இருப்பை சிறிதுகூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து வசைச்சொற்களை உதிர்த்தபடி அலப்பறை செய்பவர்களைக் கண்டாலே அவருக்கு கோபத்தில் புருவம் துடிக்கும். உடனடியாக எழுந்து நின்று அவர்களை முறைத்து அதட்டி அடக்கிவிடுவார். அவர் தோற்றமும் குரலும் பல சமயங்களில் அதற்கு உதவியாக அமைந்திருக்கும். அதையும் மீறி வாய்ச்சண்டையாக வளர்ந்த தருணங்களும் உண்டு.
நானும் செல்வகுமாரும் மாரிமுத்துவும் ஒருமுறை மைசூருக்குச் சென்று  சுற்றிப் பார்த்துவிட்டு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம். ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரமுள்ள சாமுண்டி மலையை படியேறிச் சென்று பார்த்தோம். இடையில் குறுக்கிட்ட மாபெரும் நந்தி சிலை ஓர் அற்புதம்.  மலைஉச்சியில் ஆலயம். ஆலயத்துக்கு வெளியே ஒருகையில் வாளும் மறுகையில் பாம்பும் கொண்டு மகிஷாசுரன் நிற்கும் தோற்றத்தில் மாபெரும் சிலை வடிக்கப்பட்டிருந்தது. உள்ளே மகிஷாசுரனைக் கொன்ற சாமுண்டியின் கருவறை. சிவனைப்போல யோகநிலையில் அமர்ந்த தோற்றம். மலைமீது ஏறத் தொடங்கியதிலிருந்து இறங்கியதுவரை மாரிமுத்து தன் கேமிராவில் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்திருந்தான். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.
இரண்டு வரிசை தள்ளி உயரமான ஒருவர் சற்றே சத்தமாக கைபேசியில் பேசியபடி வந்தார். நேரம் செல்லச்செல்ல அவர் குரலின் வேகமும் அதிகரித்தது. சட்டென அவர் பேச்சில் மிகமோசமான வசைச்சொற்கள் வெளிப்பட்டன. பிறகு வசைச்சொற்களை மட்டுமே பேசத் தொடங்கினார். காட்டாற்று வெள்ளமென பொங்கிவந்த வசைச்சொற்களைக் கேட்டு பெட்டியில் இருந்தவர்கள் திகைத்து தலைகுனிந்துகொண்டார்கள். பெண்கள் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அந்த வசைபுராணத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் செல்வகுமார் எழுந்து அந்த மனிதரை அடக்கினான். அவரைப் பார்த்தால் அவ்வளவு எளிதாக அடங்குகிற ஆளாகத் தெரியவில்லை. இன்னும் மோசமான வசைகளை உதிர்த்தபடிஉன்னால் என்ன செய்யமுடியும்?” என்று அவனை ஒருமையில் திட்டத் தொடங்கினார்.  நானும் மாரிமுத்துவும் எழுந்துஇது பொது இடம் என்கிற அறிவுகூட இல்லையா? உங்கள் அம்மா, அக்கா, மகளிடம் இப்படித்தான் பேசுவீர்களா?என்று கேட்டோம். அவர் உடனே எங்களை அடிப்பதற்குத் தாவினார். அருகில் அமர்ந்திருந்த எல்லோரும் நமக்கென்ன என்பதுபோல மெளனமாக தலையைத் திருப்பிக்கொண்டார்கள்.
கதவோரமாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த ஒரு பெரியவர் வேகமாக வந்து அவரைக் கன்னடத்திலேயே திட்டினார். அதற்குப் பிறகுதான் அவர் அடங்கினார். எல்லோரையும் முறைத்தபடியே தன் இருக்கையில் உட்கார்ந்தார். பெரியவர் எங்கள் தோள்மீது கைவைத்து தன்னோடு வரும்படி கதவோரம் அழைத்துச் சென்றார்.
வெளியே நெல்வயல்கள் தெரிந்தன. கதிர்முற்றி சாய்ந்திருந்தன. வீசும் காற்று அதை உரசி அலையென நெளியவைத்தபடி கடந்து சென்றது. செல்வகுமாரின் தோளைத் தொட்ட பெரியவர்இந்த நாளை அவன் மிகவும் மோசமான நாளாக்கிவிட்டான், இல்லையா?” என்று கேட்டபடி சிரித்தார். “தாங்கமுடியலை, சத்தம் போட்டாலாவது அடங்கிப் போவான்னு நினைச்சிதான் நானும் பேசனேன்என்றான் செல்வகுமார்.
நீங்க தட்டிக் கேட்டதுல தப்பே இல்லைஎன்று புன்னகைத்தார் பெரியவர். வெளியே ஒரு பெரிய மாட்டுமந்தை போய்க்கொண்டிருந்தது. மாட்டின்மீது அமர்ந்தபடி ஒரு சிறுவன் ரயில் பெட்டிகளைப் பார்த்து கையை அசைத்தான். மாரிமுத்து அந்தக் காட்சியை படம் பிடித்தான்.
பெரியவர் மெல்ல திரும்பி செல்வகுமாரிடம்மனசுக்குள்ள   தாழ்வுணர்ச்சி உள்ள ஆட்கள் எல்லாருமே இப்படித்தான் நடந்துகொள்வார்கள்.  தனக்குள்ள மதிப்பு உண்மையான மதிப்பல்ல என்பதை அவர்கள் ஆழ்மனம் ஒவ்வொரு கணமும் உணர்த்தியபடி இருக்கிறது. அதை வெல்லத்தான் இப்படிப்பட்ட ஆட்கள் மதுவில் விழத் தொடங்கி, பிறகு அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள். கெட்ட வார்த்தைகளை ஒரு வேலியாக்கிவிட்டு, அதற்குள் வாழ்கிறார்கள். இந்தப் பெட்டியில் இவன் ஒருவன் இப்படி இருக்கிறான். எங்கள் கிராமத்துக்கு வந்து பாருங்கள். தெருவுக்கு பத்து பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் செவிடர்கள் மாதிரி வாழ்கிறார்கள் மற்றவர்கள்என்றார். அவர் அப்படியே பேச்சை தன் கிராமத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார். ஒவ்வொரு நாளும் தான் பார்த்து மனமுடைந்த காட்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.
சட்டப்படி இவர்களை அணுகுவதுபற்றி சில கேள்விகளை செல்வகுமார் கேட்டதுமே பெரியவர்போலீசைத்தானே சொல்றீங்க? சரியா போச்சுஎன்று கசப்பான புன்னகையை உதிர்த்தபடி கைவிரித்தார். தொடர்ந்துஇந்த மாதிரி ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு போலீஸ் இருப்பான் தம்பி. ஒன்னும் செய்ய முடியாது. எல்லாருக்கும் அவன் செலவு செய்வான், நம்மால முடியுமா?” என்றபடி ரயிலுக்கு வெளியே ஒருகணம்  பார்வையை நிறுத்தினார். பிறகுமீறி நீங்க ஏதாவது செய்யப்போனா சாதிய நடுவுல கொண்டாந்து நிறுத்திடுவாங்க. எவ்வளவு சின்ன அற்பமான விஷயத்தையும் இந்தியாவில சாதி பெயரை இழுத்து ஊதி பெரிசாக்கிடமுடியும்என்றார்.
தெளிவான குரலில் பெரியவர் பேசிக்கொண்டு வந்தார். தலை முழுதும் நரையோடியிருந்தாலும் முடியின்  அடர்த்தி குறையவில்லை. கன்னத்தசை மட்டும் சற்றே உள்வாங்கிச் சுருக்கம் விழுந்திருந்தது. பெங்களூரில் இறங்கும் வரையில் எண்ணற்ற கிராமத்துச்செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்.
சாதியில் என்ன இருக்கிறது என்று தள்ளிவிட்டுப் போகவே நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் நம்மைக் கண்காணித்தபடி இருக்கும் உலகம் நம்மையறியாமலேயே ஒவ்வொன்றையும் கணக்கெடுத்தபடியே இருக்கிறது. நாம் எங்கே ஏமாறுகிறோம் அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்பது கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத புதிராகவே எஞ்சி நிற்கிறது.
போன ஆண்டு சித்திரை மாதத்தில் மாரிமுத்துவின் கிராமத்துக்கு நானும் செல்வகுமாரும் சென்றோம். அவனுடைய ஊரில் திரெளபதை அம்மன் திருவிழா நடைபெற்றது. தீமிதியும் இருந்தது. அவனுடைய இரண்டு குழந்தைகளுக்கும் முடியிறக்கி காதுகுத்தி பொங்கலிட்டார்கள். அவர்கள் குடும்பத்தின் சார்பில் அன்றைய இரவு தெருக்கூத்து ஏற்பாடு செய்திருந்தார்கள். திரெளபதை வஸ்திராபரணம். கூத்து பார்க்கும் ஆசைதான் எங்களை இயக்கிய விசை.
முதலில் கட்டியங்காரன் வந்தான். பார்வையாளர்கள் விழுந்துவிழுந்து சிரிக்கும் வகையில் பாடல்களையும் கதைகளையும் சொன்னான். அடுத்து வரிசையாக தர்மன், பீமன், அர்ஜுனன், குந்தி, திரெளபதை, துரியோதனன், துச்சாதனன், கண்ணன் என ஒவ்வொரு பாத்திரமாக வந்து பாடி ஆடினார்கள்.
எதிர்பாராத கணத்தில் கோவில் வாசற்படியில் நின்றபடி ஒருவன் ஓங்கிய குரலில் கூத்துக்கதையை கேலி செய்து கெட்ட வார்த்தைகளால் வசைபாடினான். அவன் குரலும் தடுமாறும் கால்களும் அவன் மதுபோதையில் மூழ்கியிருப்பதை எடுத்துக்காட்டின.
உச்சக்குரலில் அவன் பேசிய கெட்டவார்த்தைகளை திடலில் அமர்ந்திருந்த அனைவருமே கேட்டார்கள். மேடையில் இருந்த கலைஞர்களும் கேட்டார்கள். கோவில் நிர்வாகிகளும் கேட்டார்கள். அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அனைவருக்கும் துகிலிழந்து நிற்பதுபோன்ற கூச்ச உணர்வை எழுப்பியது. நேரம் செல்லச்செல்ல எரிச்சல் முற்றியது. சட்டென ஒரு கணத்தில் எழுந்து நாங்கள் அவனை நோக்கிச் சென்றுஇப்ப இங்க கூத்து நடக்கணுமா, வேணாமா?” என்று வேகமாகக் கேட்டோம். அவன் சட்டென எங்களைப் பார்த்து முதுகை வளைத்து கும்பிடு போட்டுநடக்கட்டும், நடக்கட்டும் ஐயா, நீங்க பாருங்கஎன்றபடி பின்னாலேயே நகர்ந்துபோய் உட்கார்ந்தான்.
எல்லாமே ஒரு பத்து நிமிஷ நாடகம். அவ்வளவுதான். மீண்டும் சத்தமிட்டான். மறுபடியும் நாங்கள் போய் கேட்டதும் நடித்துப் பின்வாங்கி உட்கார்ந்தான். பாதுகாப்புக்கென வந்திருந்த காவலர் வேகமாகச் சென்று அவனுக்குப் பக்கத்தில் படிக்கட்டை லத்தியால் அடித்து மிரட்டினார். அவன் உடனே அடங்கினான். பத்து நிமிடத்திலேயே அவனுடைய சுய உருவம் வெளிப்பட்டது.
அதற்குப் பிறகு அங்கே அமர்ந்திருக்கவே எங்களுக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பிவிட்டோம். மாரிமுத்து பின்னாலேயே ஓடிவந்து வருத்தம் தெரிவித்தான்.
நாலு வருஷமா திருவிழாவே நடக்கலை. சாதிப்பிரச்சின. கலெக்டர் பர்மிஷனோடு இப்பதான் நடக்குது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிட்டுது. கூத்தும் நல்லா முடிஞ்சா போதும்ன்னு மடியில நெருப்ப கட்டிகிட்டிருக்காங்க. அலப்பற பண்றவன கண்டிக்க போயி, ஏடாகூடமாய்ட்டா என்ன பண்றதுன்னுதான் அமைதியா இருக்காங்க 
மறுநாள் காலையிலேயே ஊருக்குத் திரும்பிவிட்டோம். குழப்பமாக இருந்தது. குப்பைகளை வாரி இறைப்பதுபோல, சாணத்தைக் கரைத்து ஊற்றுவதுபோல நம்மை நோக்கி இறைக்கப்படும் கெட்டவார்த்தைகளை மிக இயல்பாக ஒவ்வொருவரும் சகித்துக்கொள்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு தருணத்திலும் கற்பித்துக்கொள்ளவும் அடங்கிச் செல்லவும் எண்ணற்ற காரணங்கள். பாண்டவர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்ட காரணங்களைக் கண்டறியும் கலையை நாமும் வளர்த்துவருகிறோம் என்று தோன்றியது.